சற்று முன்

'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |    தசரா பண்டிகை முன்னிட்டு, மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' பட டீசர் வெளியானது!   |    BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்!   |    அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள்; பிக்பாஸ் சீசன் 8!   |    சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது குளோபல் ஸ்டார் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'   |    'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்   |    பிரைம் வீடியோ வெளியிட்ட ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லர்   |    வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம் 'விடுதலை பார்ட்2' பட டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!   |    PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ 'மஹாகாளி'   |    தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’   |    பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’   |    அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |   

croppedImg_50568241.jpeg

’எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ விமர்சனம்

Directed by : Se.Hari Uthra

Casting : Sharath, Madhan Dakshinamoorthy, Aira, Kanja Karuppu, Naren, Ilayaraja.S, Muthu Veera,

Music :AJ Alimirzaq

Produced by : Se.Hari Uthra, Dr.S.Preethi Shankar, R.Usha

PRO : DOne

Review :

 

 

"எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு" ஹரி உத்ரா இயக்கத்தில் செ. ஹரி உத்ரா, Dr.S.ப்ரீத்தி ஷங்கர், R.உஷா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை ஏ.ஜே.அலிமிர்ஸாக். இந்த படத்தில் குஷரத், அய்ரா, மதன் தட்சிணாமூர்த்தி, நரேன், கஞ்சா கருப்பு, இளையராஜா.எஸ், முத்து வீரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

கால்பாந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் அந்த விளையாட்டு திறமையால் முன்னுக்கு வர என்ற லட்சியதோடு இருக்கிறார்கள். அதற்க்கு உறுதுணையாக இருந்து தனக்கு தெரிந்ததை ஏழை இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களின் நிலையை மாற்றும் பணியில் ஈடுபடுகிறார் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான மதன் தட்சிணாமூர்த்தி. அவரின் முயற்சியால் தனது இலட்சியத்தை அடையும் ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் சிறப்பான கால்பந்தாட்ட வீரர்களாக உருவானதோடு, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் விளையாடும் வாய்ப்பையும் அடைகின்றனர். அவர்களின் வளர்ச்சி பிடிக்காத பணம் படைத்த முதலாளி வர்க்கத்தினர் அவர்களின் முன்னேற்றத்திற்கு எதிராக சதிசெயல் செய்கிறார்கள். அந்த சதியை முறியடித்தார்களா?  சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் பங்கெடுத்தார்களா? அதன் பிறகு அவர்களது வாழ்க்கை தரம் மாறியதா? என்பதுதான்  ‘எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தின் கதை. 

 

நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம ஷரத், கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருப்பதோடு, எந்த இடத்திலும் தடுமாற்றம் இன்றி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் நடித்து கவர்கிறார். கால்பந்தாட்ட போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடுபவர், தனது கனவு சிதைந்ததற்கு காரணமானவர்களை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போதும் அதே ஆக்ரோஷத்தோடு அமர்க்களப்படுத்துகிறார். காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கும் ஷரத், நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தன்னை நல்ல நடிகராக நிரூபிப்பார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அய்ராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு பாடலில் வழக்கம் போல் தனது அழகான நடனத்தின் மூலமும், உடல் மொழி மூலமும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

 

கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் மதன் தட்சிணாமூர்த்தி, வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். 

 

வில்லனாக நடித்திருக்கும் நரேன், கஞ்சா கருப்பு, இளையராஜா.எஸ், போலீஸாக நடித்திருக்கும் முத்து வீரா என மற்ற வேடங்களில் நடித்திருபவர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா, ஆரம்ப காட்சியிலேயே நம்மை கதையோடு ஒன்றிவிட செய்யும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுவதையும் ஆக்‌ஷன் மனநிலையோடு பயணிக்க வைப்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். குறிப்பாக வெளிச்சம் குறைவான காட்சிகளை கூட மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர்,  நட்சத்திரங்களின் இயல்பான நடிப்பையும், அவர்களின் உணர்வுகளையும் ரசிகர்களிடத்தில் கடத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

 

இசையமைப்பாளர் ஏ.ஜே.அலிமிர்ஸாக்கின் இசையில் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசைக்கு அதிக மெனக்கெட்டிருப்பவர் அளவாக கையாண்டு அசத்தியிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் கிஷோர்.எம், தனது பணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் ஒரே வசனம் திரும்ப திரும்ப வருவது போல் இருக்கும் காட்சிகளில் இரக்கம் இல்லாமல் கத்திரி போட்டிருந்தால் படம் இன்னும் வேகமாக பயணித்திருக்கும்.

 

ஆதிக்க முதலாளிகள் தங்களுக்கு கீழே இருப்பவர்களை முன்னேற்றம் அடையவிடாமல் எப்படி தடுக்கிறார்கள், அவர்களுடைய அரசியல் எங்கு, எப்படி எல்லாம் வேலை செய்கிறது, என்பதை விரிவாக பேசியிருப்பதோடு, விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் பற்றியும் அளவாக பேசியிருக்கும் இயக்குநர் செ.ஹரி உத்ரா, அதை நிறைவான கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

நாயகனின் அதிரடியான காட்சி மூலம் படத்தின் துவக்கத்திலேயே நம்மை கதையோடு ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர், அதன் பிறகு படம் முழுவதையும் பரபரப்பாக நகர்த்தி சென்றாலும்,  ஒரே வசனத்தை பலர் சொல்வது போல் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் செயல்களை விட, வசனங்கள் சற்று அதிகமாக இருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், அந்த குறையை ரசிகர்கள் மறக்கும் விதத்தில் சண்டைக்காட்சிகள் மிக இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


தனக்கு கிடைத்த சிறிய பட்ஜெட்டை வைத்துக்கொண்டு, மிகப்பெரிய ஆக்‌ஷன் படத்தை பார்த்த உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் ஹரி உத்ராவின், சிறப்பான மேக்கிங் பாராட்டும்படி இருக்கிறது. 

 

"எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : யதார்த்தமான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA