சற்று முன்

’லைசென்ஸ்’ விமர்சனம்
Directed by : Ganapathy Balamurugan
Casting : Rajalakshmi Senthil, Radhravi, N.Jeevanandam, Abi Nakshatra, Vaiyapuri, Namo Narayanan, Geetha Kailasam, Pazha Karuppaiah
Music :Baiju Jacob
Produced by : JRG Productions - N Jeevanandam
PRO : KSK Selva
Review :
"லைசென்ஸ்" கணபதி பாலமுருகன் இயக்கத்தில் JRG புரொடக்ஷன்ஸ் - N ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பைஜூ ஜேக்கப். இந்த படத்தில் ராஜலக்ஷ்மி செந்தில், ராதாரவி, N.ஜீவானந்தம், அபி நட்சத்திரா, கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியையான ராஜலெட்சுமி, தன் கண் முன் நடக்கும் தவறை தட்டி கேட்கும் சுபாவம் கொண்டவர். அதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டால் கடும் கோபமடைவதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கிடையே, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிக்காக போராடும் ராஜலெட்சுமிக்கு எதிரிகள் அதிகரிக்க, அவர்களிடம் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அவருடைய முன்கோபத்தை காரணம் காட்டி, அவருக்கு லைசென்ஸ் மறுக்கப்படுகிறது. ஆனால், லைசென்ஸ் பெற்றே தீருவேன் என்ற உறுதியுடன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரும் ராஜலெட்சுமிக்கு, துப்பாக்கி லைசென்ஸ் கிடைத்ததா?, இல்லையா? என்பதை விறுவிறுப்பான வாதங்கள் மூலம் சொல்வது தான் ‘லைசென்ஸ்’.
பாடகி ராஜலெட்சுமி கதையின் நாயகியாக நடித்து வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் அதிகப்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உணர்ச்சிகரமான வேடம் என்பதால் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு நடித்திருக்கும் ராஜலெட்சுமி, பாடலைப் போல் நடிப்பையும் சூழலுக்கு ஏற்றபடி சரியான முறையில் கையாண்டால் நிச்சயம் நல்ல குணச்சித்திர நடிகையாக வெற்றி பெறுவார். முதல் படம் என்பதால் அவருடைய குறைகளை மறந்துவிட்டு நிறைகளை மட்டும் பார்த்தால் பாரதி என்ற கதாபாத்திரத்தில் அனல் தெறிக்க நடித்து நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
ராஜலெட்சுமியின் தந்தையாக நடித்திருக்கும் ராதாரவி, தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சர்வசாதாரணமாக கையாண்டு ரசிகர்களை வியக்க வைக்கும் ராதாரவி, இந்த படத்திலும் அந்த பணியை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார்.
அபி நட்சத்திரா, என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அவர்களின் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் இசையும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையமாக கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் கணபதி பாலமுருகன், நேர்த்தியான திரைக்கதை மூலம் படத்தை ரசிக்க வைப்பதோடு, மக்களை சிந்திக்கவும் வைக்கிறார்.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் கணபதி பாலமுருகன், பாரதி என்ற கதாபாத்திரம் மூலம் பலருக்கு பாடம் எடுத்திருப்பதோடு, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வேகமான காட்சிகள் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்.
முதல் பாதி படத்தில் சில இடங்களில் ஏற்படும் தொய்வு படத்தின் சிறு குறையாக இருக்கிறது. அந்த குறையை நீக்கி விட்டு பார்த்தால், படம் துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டா போல் படு வேகமாக நகர்வதோடு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த ஒரு அதிரடியான தீர்வை கொடுத்திருக்கிறது.
"லைசென்ஸ்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : பெண்களுக்கான படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA