சற்று முன்
’ஸ்டார்’ திரைப்பட விமர்சனம்
Directed by : Elan
Casting : Kavin, Lal, Aaditi Pohankar, Preethi Mukundhan, Geetha Kailasam, Maran, Kadhal Sukumar, Niveditha Rajappan, Raja Rani Pandiyan, Sanjay Swaroop, Dheeraj
Music :Yuvan Shankar Raja
Produced by : Rise East Entertainment & Sri Venkateswara Cine Chitra
PRO : Yuvaraj
Review :
"ஸ்டார்" இளன் இயக்கத்தில் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா மற்றும் வில்லியம் பிரான்சிஸ். இந்த படத்தில் கவின், ப்ரீத்தி முகுந்தன், ஆதித்தி பொஹங்கர், லால், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், தீப்ஸ், நிவேதிதா ராஜப்பன், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பள்ளி பருவத்தில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின் பயணிக்கிறார். தன்னால் முடியாததை தன் மகன் செய்வான், என்ற நம்பிக்கையில் அவரது கனவுக்கு துணை நிற்கிறார் தந்தை லால். ஆனால், அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவரது ஆசைக்கு பொறியியல் படித்து முடிக்கும் கவின், தனது நடிப்பு கனவடோடு தொடர்ந்து பயணிக்கிறார். அவரது கனவை நினைவாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் போது, காலம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.
இனி நடிகராவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக, அதனை மாற்றியமைத்து தான் நடிகராக ஜெயித்துக் காட்டுவேன், என்று மீண்டும் தனது கனவு பயணத்தை தொடரும் கவின் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் சொல்வது தான் ‘ஸ்டார்’.
சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் பயணிக்கும் கலையரசன் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் கவின், அதில் உணர்வுப்பூர்வமாக நடித்து திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார். கல்லூரி காலங்களில் நடனம், காதல் என்று அசத்துபவர், வாய்ப்புகளுக்காக காத்திருந்து ஏமாந்து போகும் காட்சிகளிலும், கையில் பணம் இல்லாமல் மும்பை வீதிகளில் வாழ்ந்து வாழ்க்கையோடு போராடும் காட்சிகளிலும், கனவுகளுக்காக கஷ்ட்டப்பட்டும் இளைஞர்களின் பிரதிபலிப்பாக வலம் வருகிறார். இனியும் தன்னால் சந்தோஷமாக இருப்பது போல் நடிக்க முடியாது, என்னை விட்டு போய்விடு என்று தன் மனைவியிடம் கதறும் காட்சிகளில், குடும்ப சூழ்நிலையால் கனவுகளை தொலைத்தவர்களின் நினைவுகளை தட்டி எழுப்பும் கவின், தனது மொத்த வித்தையையும் இறக்கிவிட்டு அசரடித்திருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஆதித்தி பொஹங்கர் இருவருக்கும் திரைக்கதையில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி திரையில் தங்களது இருப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
கவினின் தந்தையாக நடித்திருக்கும் லால் இயல்பான நடிப்பு மூலம் கவர்ந்தாலும், வசன உச்சரிப்பில் சற்று தடுமாறுகிறார். அதிலும், அவர் பேசும் தமிழ் வார்த்தைகள் சில சரியாக புரியாதபடி இருக்கிறது. கவினின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் சில இடங்கலில் அதீத நடிப்பை வெளிப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. அதிலும், 80-ஸ் காலத்து ஸ்டைலில் போடப்பட்ட பாடல்கள் செம. பின்னணி இசை சில இடங்களில் தடுமாறினாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு உயிர்நாடியாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே-வின் கேமரா, கவின் என்ற நடிகரின் பல பரிணாம நடிப்பை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். 80-களின் இறுதியில் தொடங்கும் கதையை படிபடியாக தற்போதைய காலக்கட்டத்திற்கு நகர்த்தி வரும் ஒளிப்பதிவாளர் எழில் அரசின் கோணங்களும், வண்ணங்களும் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் இயக்குநரின் சுவாரஸ்யங்களை நேர்த்தியாக தொகுத்திருந்தாலும், திரைக்கதையை மெதுவாக நகர்த்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம். கலை இயக்குநர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரின் பணி கவனம் ஈர்க்கிறது.
கனவுகளுக்காக இறுதி வரை போராடும் அனைவரும் ஸ்டார் தான் என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் இளனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், கல்லூரி வாழ்க்கையை மட்டுமே வைத்துக்கொண்டு முதல்பாதி படத்தை நகர்த்தியிருப்பவர் எந்தவித விறுவிறுப்பும் இல்லாத திரைக்கதையால் ரசிகர்களை சற்று சலிப்படைய செய்துவிடுகிறார். இருந்தாலும், இடைவேளையின் போது வரும் திருப்புமுனை படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
இரண்டாம் பாதியில் மற்றொரு காதல், மீண்டும் கனவு பயணம் என்று முதல்பாதி வேறு ஒரு பாணியில் திரும்ப வருவது போல் தோன்றினாலும், கவின் மற்றும் ஆதித்தி பொஹங்கர் ஆகியோரது நடிப்பு அந்த எண்ணத்தை மாற்றி, குறைகளை மறக்கடித்து படத்தை கொண்டாட வைத்துவிடுகிறது.
"ஸ்டார்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : "ஸ்டார்" ஒருமுறை பார்க்கலாம் இருந்தாலும் ஜொலிப்பு குறைவு தான்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA