சற்று முன்
‘ல்தகா சைஆ’ விமர்சனம்
Directed by : Sadha Nadar and Monica Salena
Casting : Sadha Nadar, Monica Salena
Music :Johnson
Produced by : Couple Creations - Sadha Nadar and Monica Salena
PRO : Sakthi Saravanan
Review :
"ல்தகா சைஆ" சதா நாடார், மோனிகா சலினா இயக்கத்தில் கப்பில் கிரியேசன்ஸ் - சதா நாடார், மோனிகா சலினா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜான்சன். இந்த படத்தில் சதா நாடார், மோனிகா சலினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தம்பதியினரான நாயகன் சதா நாடார், நாயகி மோனிகா சலினா வசதியான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். சதா நாடார் கனவில் நடக்கும் சம்பவங்கள் அப்படியே நிஜத்திலும் நடக்க தொடங்குகிறது. இதனால், மனரீதியாக பாதிப்படையும் அவரைப் பார்த்து மோனிகா சலினா அச்சம் கொள்கிறார். அவரது இந்த திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன?, அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ல்தகா சைஆ’.
‘ல்தகா சைஆ’ என்ற வார்த்தை தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தாலும் இந்த படத்திற்கு அந்த தலைப்பு பொருத்தமாக இல்லை என்பது தான் உண்மை. படத்தின் தலைப்பை திருப்பி போட்டால் ‘காதல் ஆசை’ என்று அர்த்தம் வரும், ஆனால் இந்த படத்தின் கதைக்கு ‘காம ஆசை’ என்பது தான் பொருத்தமான தலைப்பு.
நாயகனாக நடித்திருக்கும் சதா நாடாரும், நாயகியாக நடித்திருக்கும் மோனிகா சலினாவும் உண்மையிலேயே தம்பதி தான். ரியல் தம்பதி ரீல் தம்பதியாக நடித்திருப்பது மட்டும் அல்ல இந்த படத்தை இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.
சதா நாடாருக்கு நடிகருக்கான முக சாயல் இல்லை. அதாவது, அவருக்கு புகைப்படத்துக்கான முகமும் இல்லை, நடிப்பும் வரவில்லை என்பதால் ஒரு நடிகராக அவர் படத்திற்கு பலவீனமாகவே பயணித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மோனிகா சலினாவுக்கு நடிகைக்கான அத்தனை அம்சங்களும் அமைந்திருப்பதோடு, முகத்தில் கவர்ச்சி வழிந்தோடுகிறது. அவரும் காட்சிகளை சரியாக கணித்து அதற்கு ஏற்ப எக்ஸ்பிரஷன்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். மோனிகாவுக்கு நடிகையாக நல்ல எதிர்காலம் உண்டு.
சதா நாடார் மற்றும் மோனிகாவை தவிர படத்தில் சொல்லும்படியான நடிகர்கள் யாரும் இல்லை. சிறு சிறு வேடத்தில் புதிய முகங்கள் வந்து போகிறார்கள்.
இசையமைப்பாளர் ஜான்சன் மற்றும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோகுமார் கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை விட பட்ஜெட்டுக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தொகுப்பாளர் பரணி செல்வம், கனவில் நடக்கும் கதையை கண்டபடி தொகுத்து பார்வையாளர்களை குழப்பமடைய செய்திருக்கிறார்.
நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் சதா நாடார், எதையோ சொல்ல வந்து, எதை எதையோ படமாக்கி, இறுதியில் அனைத்தும் கனவே, என்ற ரீதியில் படத்தை முடித்திருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தொடங்கும் படத்தின் கதை ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை பதம் பார்த்து விடுகிறது.
இயக்குநரும் தயாரிப்பாளருமான சதா நாடார், தனது சினிமா கனவை நினைவாக்க நினைத்தது தவறில்லை, அதற்காக இனி கனவே காண கூடாது என்ற மனநிலைக்கு வரும் அளவுக்கு ரசிகர்களை படுத்தி எடுக்காமல் இருந்திருக்கலாம்.
"ல்தகா சைஆ" படத்திற்கு மதிப்பீடு 2/5
Verdict : சுமாரான கதை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA