சற்று முன்
’புஷ்பா 2 : தி ரூல்’ விமர்சனம்
Directed by : Sukumar
Casting : Allu Arjun, Rashmika Mandanna, Fahadh Faasil, Sree Leela, Rao Ramesh, Sunil, Anasuya Bharadwaj
Music :Devi Sri Prasad
Produced by : Mythri Movie Makers - Naveen Yerneni and Y. Ravi Shankar
PRO : DOne
Review :
"புஷ்பா 2 : தி ரூல்" சுகுமார் திருமாறன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் – நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், ராவ் ரமேஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பா, தனது தைரியம் மற்றும் அதிரடியால் செம்மரக் கடத்தல்காரர்கள் சிண்டிகேட்டின் தலைவராக உருவெடுப்பதோடு முடிந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில், செம்மரக் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவன் என்பதையும் தாண்டி, தனக்கான ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி புஷ்பா கெத்தாக வலம் வருகிறார். அவரை எபப்டியாவது வீழ்த்த வேண்டும் என்று போலீஸ் எஸ்.பி.பகத் பாசில் திட்டம் போட, அதற்கு புஷ்பா தனது பண பலத்தால் பதிலடி கொடுக்கிறார்.
காவல்துறை மட்டும் இன்றி அரசியல் துறையையும் தனது பண பலத்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புஷ்பாவுக்கு ஆந்திர மாநில முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது அவரது மனைவி ராஷ்மிகா புஷ்பா முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும், அதை வீட்டில் மாட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மனைவியின் ஆசைப்படி முதல்வருடன் புஷ்பா புகைப்படம் எடுக்க நினைக்கும் போது, என்னதான் கட்சிக்கும், தனக்கும் பணத்தை வாரிக்கொடுத்தாலும், புஷ்பா ஒரு கடத்தல்க்காரன் என்பதால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முதல்வர் மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
தன்னிடம் இதுவரை எதையும் கேட்காத தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் புஷ்பா, தான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தயாராக இருப்பவரை ஆந்திர மாநில முதல்வர் இருக்கையில் உட்கார வைக்க முடிவு செய்கிறார். அதற்கான முயற்சியில் ஈடுபடும் அவர், பணத்திற்காக தனது செம்மரக் கடத்தல் வியாபாரத்தை சர்வதேச அளவில், தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை முதல் பாகத்தைப் போலவே மாஸ், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்து மசாலாவையும் அளவாக சேர்த்து சொல்வது தான் ‘புஷ்பா 2 : தி ரூல்’.
படத்தின் ஆரம்பத்திலேயே மூன்றாம் பாகம் நிச்சயம் உண்டு, என்பதை உறுதிப்படுத்துவது போல் ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் புஷ்பாவின் அறிமுகம் மற்றும் சண்டைக்காட்சியை வைத்திருக்கிறார்கள். அந்த சண்டைக்காட்சியின் நீளம் மற்றும் அதில் ஒருவரை தூக்கிக்கொண்டு புஷ்பா அந்தரத்தில் பறப்பது போல் படமாக்கப்பட்டதை பார்க்கும் போது, ”சோலி முடிந்துவிட்டது” என்று நினைக்க வைக்கிறது. ஆனால், அடுத்த காட்சியில் மீண்டும் ஆந்திர வனப்பகுதி, செம்மரக் கடத்தல், அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போலீஸ் எஸ்.பி, அவரது திட்டத்தை முறியடிக்கும் புஷ்பாவின் ரூல், ஆகியவை மூலம் பார்வையாளர்களை புஷ்பாவின் உலகத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றுவிடுகிறார் இயக்குநர் சுகுமார்.
அல்லு அர்ஜுன் வழக்கமான தனது புஷ்பா உடல் மொழியுடன் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டிருக்கும் பெண் வேடம், அதைச் சார்ந்து இடம்பெறும் நடனக் காட்சி மற்றும் சண்டைக்காட்சி இரண்டும் அவரது ரசிகர்களையும், புஷ்பாவின் ரசிகர்களையும் கொண்டாட வைக்கிறது. ஸ்டைல், மாஸ், ஆக்ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கும் அல்லு அர்ஜுன் செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் நடிப்பிலும் ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு மனைவியான பிறகு பெரியதாக வேலை இருக்காது என்று எண்ணும் நிலையில், அல்லு அர்ஜுனுக்காக அவர் பேசும் வசனங்கள் மற்றும் அவருடனான மூட் கெமிஸ்ட்ரி ஆகியவை மூலம் தனது திரை இருப்பை அமர்க்களமாக நிரூபித்திருக்கிறார்.
முதல் பாகத்தில் வில்லனாக அறிமுகமாகி அட்ராசிட்டி செய்த பகத் பாசில், இதிலும் அட்ராசிட்டியோடு அறிமுகமாகி நடிப்பில் அசத்துகிறார். புஷ்பாவை ஜெயிக்க வேண்டும் என்ற அவரது முயற்சி தோற்றுப் போனாலும், அந்த இடத்தில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அவரை மிகச்சிறந்த நடிகராக வெற்றி பெற செய்து விடுகிறது.
அரசியல்வாதியாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ், முதல் பாகத்தின் வில்லன் சுனில், அவரது மனைவியாக நடித்த அனுஷ்யா பரத்வாஜ் ஆகியோர் இந்த பாகத்தில் மட்டும் அல்ல மூன்றாம் பாகத்திலும் பயணிக்கும் வகையில் அவர்களது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைப்பது போல் இருந்தாலும், முதல் பாகத்தின் அளவுக்கு இல்லை என்பதை மறுக்க முடியாது. பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக்கின் கேமரா புஷ்பாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் வலம் வந்ததோடு, அனைத்துக் காட்சிகளையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
ரூபன் மற்றும் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆகியோரது படத்தொகுப்பு காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றாலும் 3 மணி நேரம் 20 நிமிடம் என்ற படத்தின் அதிகப்படியான நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
இயக்குநர் சுகுமார், புஷ்பா என்ற கூலித்தொழிலாளியை செம்மரக் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக உருவெடுக்க செய்ததோடு, அவரது அடுத்த நிலைகளைக் கொண்டு இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி இருந்தாலும், அவரது மனைவி செண்டிமெண்ட் மற்றும் அப்பா பெயரை பயன்படுத்த முடியாத சோகம் இரண்டையும் திரைக்கதையுடன் அழுத்தமாக பயணிக்க வைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
சீரியஸான காட்சிகளில் கூட பார்வையாளர்கள் சிரித்து மகிழும்படியாக சில காட்சிகளை நையாண்டியாக சித்தரித்திருப்பது, அரசியல்வாதிகள் பற்றிய வசனங்கள் மற்றும் அவர்கள் தங்களுக்காக எந்த நிலைக்கும் செல்வார்கள், என்பதை எளிமையான காட்சியின் மூலம் விவரித்திருப்பது, அல்லு அர்ஜுனை மாஸாகவும், ஸ்டைலாகவும் காட்டுவது மட்டும் அல்லாமல், மனைவி தாசனாகவும், குடும்பத்திற்காக எதையும் செய்பவராகவும் காட்டுவது உள்ளிட்ட பல விசயங்கள் படத்தின் பலமாக பயணிப்பதோடு, அல்லு அர்ஜுன் என்ற நடிகரை மொழி கடந்து ரசிக்கவும் வைக்கிறது.
எல்லாம் நன்றாக தான் இருக்கிறது, ஆனால் காலை 10 மணிக்கு தொடங்கும் படம், பிற்பகல் 1.30 மணிக்கு முடிவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அட இந்த நேர அளவை குறைப்பதற்கான வாய்ப்புகள் படத்தில் இருந்தும் அதை செய்யாமல் விட்டது படத்திற்கு நிச்சயம் பலவீனமாக அமைந்து விடும். அந்த பலவீனத்தில் இருந்து படம் தப்பிக்க வேண்டும் என்றால், ஆரம்பத்தில் காட்டப்படும் ஜப்பான் சண்டைக்காட்சி மற்றும் பழைய கோட்டையில் நடக்கும் சண்டைக்காட்சி ஆகியவற்றின் நீளத்தை குறைப்பதோடு, சில பாடல் காட்சிகளின் நீளத்தையும் குறைக்கலாம்.
"புஷ்பா 2 : தி ரூல்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA