சற்று முன்

’சுமோ’ விமர்சனம்
Directed by : SP Hosimin
Casting : Shiva, Priya Anand, Yoshinori Tashiro, ‘Yogi’ Babu, Satish, ‘VTV’ Ganesh, ‘Nizhalgal’ Ravi, Suresh Chakravrthy, Chetan, Sreenath, Besant Ravi
Music :Nivas K Prasanna
Produced by : Vels Film International Limited - Ishari K Ganesh
PRO : Riaz K Ahamed
Review :
"சுமோ" எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் – ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை நிவாஸ் கே.பிரசன்னா. இந்த படத்தில் சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, சதிஷ், யோஷினோரி தாஷிரோ, டிவிவி கணேஷ், சேத்தன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டு வீரரான சிவா, வழக்கும் போல் அலைச் சறுக்கு விளையாட கடலுக்கு செல்லும் போது, ஒருவர் கரை ஒதுங்கியிருக்கிறார். அவரை மீட்டு சிவா காப்பாற்றுகிறார். வேறு நாட்டவரான அவர் எந்த நாட்டவர் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாததோடு, தான் யார்? என்பதும் அந்த நபருக்கு நினைவுக்கு வராததால், அவரை சிவாவே பராமரிக்கிறார்.
இதற்கிடையே, கரை ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அந்நாட்டில் அவர் மிகப்பெரிய சுமோ மல்யுத்த வீரர் என்பதும் சிவாவுக்கு தெரிய வருகிறது. அவரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பும் முயற்சியில் சிவா ஈடுபடுகிறார். ஆனால், சுமோ வீரர் மீண்டும் ஜப்பானுக்கு வருவதை விரும்பாத ஒரு கும்பல், அவரை அங்கு வரவிடாமல் தடுக்க முயற்சிக்க, அவர்களது முயற்சிகளை முறியடித்து, சுமோ வீரரை மீண்டும் ஜப்பானுக்கு சிவா அழைத்துச் சென்றாரா?, அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கும் கும்பல் யார்? எதற்காக தடுக்கிறார்கள், என்பதை கமர்ஷியலாக சொல்வது தான் ‘சுமோ’.
அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தனக்கு தானே கொடுத்துக் கொண்டு, தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ளும் சிவா, வழக்கம் போல் நடிக்காமல் பேசிக்கொண்டு காட்சிகளை கடத்தியிருக்கிறார். நடிக்க தான் தெரியாது என்றால், மனுஷனுக்கு காதல் கூட செய்யத் தெரியவில்லை. அதனால், தான் அவருக்கும், ஹீரோயினுக்கு பெரிய அளவில் ரொமான்ஸ் காட்சிகள் வைக்கவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த், அழகு மற்றும் கவர்ச்சி நிறைந்த நடிக்க கூடிய நடிகை என்றாலும், அவரது சிறப்பம்சங்களை சரியாக பயன்படுத்தாமல் அவரை வீணாக்கியிருக்கிறார்கள்.
யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் ஆகியோர் செய்யும் காமெடி போதாது என்று, நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களையும் காமெடியர்களாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தாலும், கடி தான் அதிகம்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பிள்ளையார் பற்றிய பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். மற்ற பாடல்கள் திரைக்கதையை நிரப்ப மட்டுமே பயன்பட்டிருக்கிறது. பின்னணி இசை அளவு.
ஒளிப்பதிவு ராஜீவ் மேனன் என்பது டைடில் கார்டில் மட்டும் தான் தெரிகிறது. அவரது கேமராவுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை.
நடிப்பதோடு, படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கும் சிவா, காமெடி வசனங்கள் பற்றாக்குறையால் தவித்திருக்கிறார். எப்படியாவது யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களை வைத்து சமாளித்து விடலாம் என்று முயற்சித்திருப்பவர் அங்கேயும் திரைக்கதையாசிரியராக பெரும் தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமின் ஒரு கமர்ஷியல் படத்தை, கமர்ஷியல் அம்சங்களே இல்லாமல் இயக்கியிருக்கிறார். காமெடி தான் திரைக்கதையின் பலம் என்றாலும், அதை சரியாக கையாளாமல் திணறியிருக்கிறார். குறிப்பாக பிரியா ஆனந்த் போன்ற ஒரு ஹீரோயினை வைத்துக் கொண்டு படம் முழுவதையும் வறட்சியாகவே நகர்த்திச் செல்வது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது.
சுமோ மல்யுத்த வீரரை சுற்றி கதை நகர்ந்தாலும், அந்த வீரருக்கான பின்னணி கதை வழக்கமானதாகவும், சுமோ விளையாட்டு போட்டி பற்றிய கூடுதல் மற்றும் யாரும் அறிந்திராத தகவல்கள் படத்தில் இல்லாததும், திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.
"சுமோ" படத்திற்கு மதிப்பீடு 2.5/5
Verdict : சுமாரான கதை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA