Sports News

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா? இன்று மீண்டும் மோதல்
Updated on : 12 March 2018

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ரவுண்ட் முடிந்து விட்டது.

இலங்கை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை பதம் பார்த்தது. வங்காளதேச அணியோ 215 ரன்கள் இலக்கை சேசிங் செய்து, இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஆக, மூன்று அணிகளும் தலா ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்று சமநிலை வகிப்பதால் இந்த போட்டித் தொடர் இப்போது கூடுதல் சுவாரஸ்யத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 4-வது லீக்கில் இந்திய அணி, மறுபடியும் இலங்கையை சந்திக்கிறது. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, இலங்கையை பழிதீர்ப்பதற்கு இந்திய அணிக்கு இது அருமையான வாய்ப்பாகும். அது மட்டுமின்றி இதில் வெற்றி பெற்றால், நெருக்கடியும் ஓரளவு தணியும்.

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் இந்திய அணியை வழிநடத்தும் ரோகித் சர்மா பார்ம் இன்றி தவிப்பது தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. கடைசியாக அவர் விளையாடிய ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் 21, 0, 11, 0, 17 ரன் வீதமே எடுத்துள்ளார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அட்டகாசப்படுத்தி வரும் நிலையில் (கடைசி 5 ஆட்டத்தில் 72, 24, 47, 90, 55 ரன்) ரோகித் சர்மாவும் மிரட்டினால் அணி வலுவான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே ஆகியோரின் பங்களிப்பை அணி நிர்வாகம் அதிகம் எதிர்பார்க்கிறது.

இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறது. குசல் பெரேரா தொடர்ச்சியாக இரு அரைசதங்களை விளாசியுள்ளார். எல்லா வகையிலும் சவால் கொடுக்க இலங்கை அணி தயாராக இருப்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் மூன்று ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்த அணியே வெற்றி கண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட் அல்லது லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ஜெய்தேவ் உனட்கட், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: குணதிலகா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஷனகா, திசராபெரேரா (கேப்டன்), தரங்கா, ஜீவன் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, சமீரா, நுவான் பிரதீப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 


Latest News