சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

பி. சுசீலா அவர்களால் இந்தியாவிற்கு பெருமை: வைரமுத்து புகழாரம்
Updated on : 01 April 2016

தமிழில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் இதுவரை 17,695 பாடல்களைப் பாடியுள்ள  பி. சுசீலா அவர்களின் இந்த சாதனை கின்னஸில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் பி. சுசீலா அவர்களை நேரில் சந்தித்து கவிபேரரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இதன்போது அவருக்குப் புத்தர் சிலையை கவிஞர் வைரமுத்து பரிசளித்துள்ளார்.



 



இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், "கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களைப் பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ்ப் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.



 



எத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளைத் தாய்மொழிகளாக கொண்டதைப் போல் பாடுபவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள். 1953ல் தனது முதல் பாடலைப் பாடினார், அந்த ஆண்டுதான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னைப் போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்கவேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது. அவரது தமிழ்ப் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்துக்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பைக் கூட பாடியிருக்கிறார், விசும்பலைப் பாடியிருக்கிறார்.



 



எனக்கும் மிகவும் பிடித்த ‘என்னை நினைத்து என்னை அழைத்தாயோ’ என்ற பாடல், படத்தோடு பார்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்தப் பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை  வரும், அப்படியென்றால் சுசிலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்குப் புகழைச் சேர்த்தவர் பாடகி பி.சுசிலா அம்மையார்.



 



எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மற்றொன்று ‘கண்ணுக்கு மை அழகு’ பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் பாடலை யார் வைத்து பாட வைக்கலாம் என்று கேட்டார். அதற்கு நான், உங்களது இசையில் பாடகி சுசிலா அம்மையார் பாடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்குப் பொருத்தமான பாட்டு இதுதான் என்றேன். ஏன் இந்தப் பாட்டு பொருத்தம் என்று அவர் கேட்டார். தமிழுக்கு சிறப்பான ‘ழ’ எழுத்து இப்பாட்டில் அதிகம் வருகிறது, அந்த ‘ழ’ எழுத்தை உச்சரிப்பதில் பாடகி சுசிலா அம்மையார் அவர்களுக்கு இணை அவர் மட்டுமே என்றேன். தமிழுக்குச் சிறப்பு ‘ழ’கரம், இசைக்குச் சிறப்பு பாடகி சுசிலா அம்மையார்.



 



பாடகி சுசிலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசிலா. பல இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்தும் மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசைப் பங்களிப்பை செய்தவர் சுசிலா அம்மையார்.



 



இசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்க்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் பயன்படுத்தி இருக்கிறார்.



 



இவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரைக் காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசிலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்தச் சமுகத்துக்குச் செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிறது என்று சொல்லவேண்டும்.  சுசிலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.



 



பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும், உயர்ந்த புகழைப் பெற வேண்டும், இவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெரிய பெருமை. வாழும் காலத்திலேயே பெருமை எல்லோரையும் தேடி வராது, அந்தப் பெருமை பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவரால் இந்தியாவின் பெருமை பெறுகிறது. தமிழ்க் கலை பெருமை பெறுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரசிகப் பெருமக்கள் என் மூலமாக அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா