சற்று முன்

இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |   

சினிமா செய்திகள்

நல்லதாக நினைத்துக்கொண்டு நான் செய்தவை விஜய்யைப் போய்ச் சேரவில்லை... எஸ்.ஏ.சந்திரசேகர்
Updated on : 02 October 2021

சட்டமன்றத் தேர்தலையொட்டி, நடிகர் விஜய் பெயரில் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஒன்றை ஆரம்பிக்க, இது பிடிக்காமல் விஜய் தன் தந்தையுடன் கோர்ட், கேஸ் என்று மல்லுக்கட்டியது தனிக்கதை. இந்தநிலையில், `உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது’ என்று வெளியான செய்தி பரபரப்பைக் கூட்டியது.



 



இப்போது அடுத்த அதிரடியாக, `விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டேன்' என எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பும், `விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை' என்று விஜய் தரப்பும் மாறி மாறிச் சொல்லிவருகின்றனர். நடிகர் விஜய்யை முன்வைத்து அரங்கேறிவரும் இந்த அரசியல் குறித்துப் பேசுவதற்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்துப் பேசியபோது:



 



``விஜய்யை, நடிகர் விஜயாக உருவாக்கியதில் உங்கள் பங்கு என்ன?''



 



''திரைப்படங்கள் பார்க்கக்கூட அனுமதிக்காத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பின்னாளில் திரைப்பட இயக்குநராகவே வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவன் நான். அந்தக் காலகட்டத்தில், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி 'பராசக்தி', 'மனோகரா' என நான் பார்த்த திரைப்படங்கள், திராவிட மேடைகளில் நான் கேட்ட தலைவர்களின் பேச்சுகள் இயல்பாகவே எனக்குள், சமூக அக்கறையையும் திரைத்துறை ஆசையையும் ஒருசேர வளர்த்துவிட்டன.



 



என்னுடைய ஜீன், என் மகன் விஜய்க்கும் இருக்கும் அல்லவா... எனவே, அவருக்கும் இயல்பாகவே நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது. ஒரு தகப்பனாக நானும் பல்வேறு சிரமங்கள், அவமானங்களைக் கடந்து விஜய்யை ஒரு நடிகராக வளர்த்துவிட ரொம்பவே சிரமப்பட்டேன்!''



 



''தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகரான விஜய், இப்போது ஏன் அரசியலுக்குள் வர வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?''



 



''தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம்வரும் விஜய், இப்போது அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தால், அவரது திரை வாழ்வு கெட்டுப்போகும்தான். ஏனெனில், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்ததுபோல் இன்றைக்கு மக்கள் இல்லை... ' அரசியலுக்கு வந்தால், சினிமாவை விட்டுவிட்டு வா' என்று நிச்சயம் கேள்வி கேட்பார்கள். 'நடித்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அரசியலுக்கு வருகிறீர்கள்... அப்புறம் `பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்... மறுபடியும் அரசியல் பேசுகிறீர்கள்' என்றெல்லாம் கமல்ஹாசனை மக்கள் கேட்டார்கள்தானே!



 



அதனால்தான், 'விஜய் மக்கள் இயக்க'த்தை அரசியல் கட்சியாக நான் அறிவித்தபோது, இது குறித்து யாரேனும் கேட்டால்கூட, 'அப்பா ஆரம்பித்து நடத்துகிறார்.... மற்றபடி எனக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று கூறிவிட்டு விஜய், தனது திரைவாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; அரசியல் இயக்கத்தை நாம் நடத்திச் செல்ல வேண்டும் என்றெல்லாம்தான் நானும் நினைத்தேன். எப்படியும் 2026 அல்லது அதற்கடுத்த தேர்தலில் விஜய் அரசியலுக்கு வரத்தான் போகிறார். எனவே, இப்போதே விஜய்க்கான ஒரு வலுவான அடித்தளத்தை அரசியலில் அமைத்துவிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.... அவ்வளவுதான்!''



 



''ஆனால், உங்களுக்கு எதிராகவே விஜய், வழக்கு தொடுத்துவிட்டாரே?''



 



''தாய், தந்தைக்கு ரொம்பவும் மரியாதை கொடுக்கக்கூடியவர் விஜய். எனவே, அவராக இந்த வழக்கைத் தொடுத்திருக்க மாட்டார். அவரைச் சுற்றியிருந்தவர்கள்தான் அவரைத் தூண்டிவிட்டு வழக்கு தொடுக்கவைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே கோபத்தில் இருந்த விஜய்யும் கையெழுத்து மட்டும் போட்டியிருப்பார். மற்ற விஷயங்களையெல்லாம் வழக்கறிஞர்களே எழுதிக்கொண்டிருப்பார்கள். விஜய் முழு மனசோடு எங்கள் மீது வழக்கு தொடுத்திருக்க வாய்ப்பில்லை. எனவே நாங்களும் இது குறித்துப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.''



 



''உங்களது நல்ல நோக்கத்தை, விஜய் புரிந்துகொள்ளவில்லையா?''



 



''ஆரம்பத்தில், ஒரு நடிகனாக விஜய் மிளிர்வதற்கு ஒரு தகப்பனாக நான் என்னென்ன முயற்சிகளைச் செய்தேனோ... அதேபோல், அடுத்தகட்டமாக அரசியலிலும் விஜய் அடியெடுத்து வைப்பதற்கான என் கடமையைச் செய்துவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அந்தவகையில், 'நம்ம பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்' என்ற ஆசையில், ஒரு தந்தையாக உரிமை எடுத்துக்கொண்டுதான் அரசியல் இயக்க அறிவிப்பை வெளியிட்டேன்!



 



ஆனால், நல்லதாக நினைத்துக்கொண்டு நான் செய்தவை விஜய்யைப் போய்ச் சேரவில்லை... அல்லது அவருக்கே இது புரியவில்லையா என்பதும் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாகிறது என்று நான் அறிவிப்பதே அவரது பெயரை பாதிப்பதாக நினைத்துக்கொண்டு மறுப்பு அறிக்கை வெளியிட்டுவிட்டார். அடுத்து அம்மா, அப்பா உட்பட கட்சியின் நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்கும் தொடர்ந்துவிட்டார்!''



 



''இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன?''



 



''எனக்கு இப்போது அரசியலில் ஆர்வமே இல்லை. ஏனெனில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க - அ.தி.மு.க என இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் மீதும் மக்களிடையே ஒருவித வெறுப்பு இருந்தது. எனவே, யாராவது ஒரு புதிய நபர் சமூக நோக்கத்தோடு அரசியலுக்கு வர மாட்டாரா என்று மக்களும் எதிர்பார்த்திருந்தனர். இதைத்தான் 'வெற்றிடம்' என்றும் சொல்லிக்கொண்டேயிருந்தனர்.



 



இன்றைக்கு வரை நான் அரசியல் பேசிவந்தாலும், நான் அரசியல்வாதி இல்லை. ஆனால், எனக்கும் ஓரளவு அரசியல் தெரியும். அதனால்தான் இதுதான் சரியான சமயம் என்றெண்ணி கட்சியை ஆரம்பித்தேன். அன்றைக்கு விஜய் மறுப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், அதனுடைய பலன் வேறுவிதமாக இருந்திருக்கும். தைரியமாகவே சொல்கிறேன்... 'விஜய் மக்கள் இயக்கம்' இன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்கும். அந்த அளவுக்கு கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை தயார் செய்துவைத்திருந்தேன்.



 



ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய இன்றைய சூழலில், எல்லாமே மாறிவிட்டன. 'தி.மு.க பழையநிலையிலேயே ஆட்சி செய்வார்கள்' என்ற நமது நினைப்பையெல்லாம் பொய்யாக்கிவிட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின், ரொம்பவும் மெச்சூர்டாக, பக்குவப்பட்ட அரசியல்வாதியாக திறம்பட ஆட்சி செய்துவருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அரசியல் நிர்வாகத் திறனில், கலைஞரையும்விட ஒருபடி விஞ்சிவிட்டார் ஸ்டாலின் என்றே சொல்ல வேண்டும். இப்படி எல்லாமே நல்லபடியாக நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், 'இன்னொரு புதிய கட்சி தேவையா..?' என்று நினைக்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். பசியோடு இருக்கும்போது, பழைய கஞ்சி சாப்பிட்டால்கூட பிரியாணி சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ஆனால், இன்றைக்கு வயிறு நிறைய பிரியாணி சாப்பிட்ட திருப்தியில் மக்கள் இருக்கும்போது, பழைய கஞ்சியை யார் விரும்புவார்கள்?''



 



''விஜய், பேரன், பேத்திகளுடனான உங்கள் குடும்ப உறவு எப்படியிருக்கிறது?''



 



''இன்றைக்கும் விஜய்யோடு நான் அரசியல் விஷயங்களைப் பற்றித்தான் பேசிக்கொள்வதில்லையே தவிர, எங்கள் பேரன் - பேத்தியுடனான எங்கள் குடும்ப உறவு நன்றாகத்தான் இருக்கிறது. சிறுவயதுப் பிள்ளைகளாக இருந்தபோது கொஞ்சி விளையாடுவோம். இப்போது என் பேரன், விஜய்யைவிடவும் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டான். லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறான். அதனால், போனில்தான் பேசிக்கொள்கிறோம். பேத்தி மட்டும் சென்னையில் இருக்கிறாள். எனக்கும் விஜய்க்கும் இடையேயுள்ள பிரச்னையில், பேரன், பேத்திக்கு எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது என்பதால், எங்கள் உறவு நன்றாகத்தான் இருக்கிறது.



 



எங்களுடைய கல்யாண நாள், விஜய்யின் கல்யாண நாள் போன்ற நல்ல நாள்களில் ஏதாவதொரு ஹோட்டலில் குடும்பத்தோடு எல்லோரும் ஒன்றுகூடி கொண்டாடுவோம். ஆனால், அதுவும்கூட இப்போது இல்லை...''



 



''அரசியலில் ஈடுபடுவதற்கு விஜய்க்கு ஆர்வம் இல்லையா அல்லது அவரது பார்வையில் 'இப்போது அரசியல் தேவையில்லை' என்று நினைக்கிறாரா....?''



 



''விஜய்க்கு சமூக அக்கறை இருக்கிறது. அதனால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிறைய உதவிகள் செய்கிறார். சமூக நடப்புகளை உன்னிப்பாக கவனிக்கிறார். ஆனால், அரசியல் அக்கறை அவருக்கு இருக்கிறதா, இல்லையா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனவே, இதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்!



 



அதேசமயம், என்னைப் பொறுத்தவரையில் நான் நடிகர் விஜய்யின் அப்பா மட்டுமில்லை. 80-92 வரையிலாக இந்தி உட்பட பல மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறேன். புரட்சி இயக்குநர் என்ற பெயரும் இருக்கிறது. இந்தச் சூழலில், எனக்கென்றும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டுதானே. அந்த உணர்வுகளுக்கு விஜய்யும் மதிப்பு கொடுக்க வேண்டும்தானே?



 



விஜய்க்குத் திருமணம் முடிந்தவுடனேயே, அவரது அடையாளம், அங்கீகாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தனிக்குடித்தனம் வைத்தேன். இதேபோல், `அப்பாவுக்கும் தனிப்பட்ட அபிப்ராயங்கள் இருக்கின்றன... அதை அவர் சொல்லலாம்' என்று விஜய்யும் நினைத்திருக்க வேண்டும், நினைக்க வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்பட்டேன்!''



 



''விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், நீங்கள் பணம் வசூல் செய்ததாகவெல்லாம் ஊடகச் செய்திகள் வெளியாகினவே?''



 



''இது அப்பட்டமான பொய்ச் செய்தி. விஜய் பெயரைச் சொல்லி இத்தனை கோடிகளை வாங்கிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு என் மீது உண்டா? என்னுடைய கடின உழைப்பால்தான் நான் இன்றைக்கு இந்த இடம்வரைக்கும் உயர்ந்திருக்கிறேன்.



 



இன்றைய சமூக ஊடக உலகில், யார் வேண்டுமானாலும் எந்தப் பொய்யை வேண்டுமானாலும் ஒரு நொடியில் பரப்பிவிட முடியும் சார்... இதெல்லாம் வதந்தி! சந்திரசேகர் கோபக்காரன், நியாயமானவன், நேர்மையானவன், யாரையும் ஏமாற்றாத நல்ல வியாபாரி. 50 ஆண்டுக்கால திரை வாழ்க்கையில் நான் சம்பாதித்துள்ள சொத்து இவை மட்டும்தான். எனவே, நான் பணம் வாங்கியதாக நீங்கள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். விஜய் ரசிகர்களே நம்ப மாட்டார்கள்!



 



இன்றைக்கு யார் நினைத்தாலும் உடனே ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்துவிட முடியும். எனவே, என்னைப் பிடிக்காத ஒருசிலர், இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்பிவிடுகிறார்கள்.''



 



''விஜய்யுடன் உங்களுக்கு முரண் ஏற்படுகிற நிலையை யார் ஏற்படுத்தியதாக நினைக்கிறீர்கள்?''



 



''விஜய்யும் நானும் நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் சூழலிலேயே, வாரத்துக்கு ஒருமுறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறைதான் நேரில் பேசிக்கொள்வோம். மற்ற நேரங்களில் தொலைபேசி வழியே மட்டும்தான் பேசிக்கொள்வோம். ஆனால், 12 மணி நேரமும் விஜய்யுடனேயே சுற்றியிருப்பவர்கள் ஒருசிலர்.... அவர்கள்தான் விஜய்யை தவறாக வழிநடத்திவிட்டனர்.



 



குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்துக்குள் என்னால் அழைத்துவரப்பட்ட புஸ்ஸி ஆனந்த், அரசியவாதிகளுக்கே உரிய பண்பை வெளிக்காட்டிவிட்டார். அவரது அந்த நியாயமான பண்பை எப்படிச் செயல்படுத்த வேண்டுமோ அப்படிச் செயல்படுத்திவிட்டார்.



 



ஆனால், தகப்பன்களுக்கு எப்போதுமே `ஜால்ரா' போடத் தெரியாது. அதனால், விஜய் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாகச் சுட்டிக்காட்டி திருத்தம் சொல்வோம். 'இல்லப்பா... நீ செய்தது தவறு' என்று அக்கறையோடு எடுத்துச்சொல்வோம். ஆனால், விஜய்யைச் சுற்றி இருப்பவர்களோ, தங்கள் சுயநலத்துக்காக விஜயை எப்போதும் பாராட்டிக்கொண்டே மட்டும் இருப்பார்கள்.



 



இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதாவது, மேலும் மேலும் வெற்றிமேல் வெற்றி கிடைத்துவரும்போது, மனிதனுக்கு ஒருவித மயக்கம் வரும்! இது விஜய்க்கு மட்டுமல்ல.... மனிதர்கள் எல்லோருக்குமான பொதுவான விதி! ஆனால், 'இதெல்லாம் தவறு' என்று விஜய் மயக்கம் தெளிந்து உணர்ந்து தெரிந்துகொள்வதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, 'என் தந்தை எனக்குத் தவறு செய்ய மாட்டார்' என்ற புரிதல் இப்போது விஜய்க்கு வராது... அப்படியொரு புரிதல் ஏற்படும் வாய்ப்பையும் அவரைச் சுற்றியிருப்பவர்கள் தர மாட்டார்கள். அதனால்தான் தந்தை - மகன் இடையேகூட இந்த இடைவெளி!''



 



''இந்த வேதனையிலிருந்து எப்படி மீண்டுவரப் போகிறீர்கள்?''



 



''இது வலியே இல்லை சார்.... நானும் என் மனைவியும் எப்போதுமே மகிழ்ச்சியான ஆட்கள். 'என் மகன் விஜய், என் சொல்பேச்சு கேட்கவில்லையே' என்று ஏங்குவதைவிட `இது யதார்த்தம்' என்று ஏற்றுக்கொண்டு போய்விடுவேன். காரணம், இது எல்லோரின் வீடுகளிலும் நடப்பதுதான். 50,000 ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டாலே, அப்பன் பேச்சைக் கேட்காமல் அப்படியே தூக்கிப் போட்டுவிடுகிற பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள்தானே!



 



அத்தனை மொழிகளிலுள்ள சூப்பர் ஸ்டார்களையும் வைத்து நான் படம் பண்ணிவிட்டேன். போதும் என்ற அளவுக்கு சம்பாதித்துவிட்டேன்... இப்போதும்கூட படம் இயக்குகிறேன், நடிக்கிறேன். எனவே, இன்று வரையிலும் பொருளாதார உதவி என்று யாரையும் நம்பி நான் இல்லை! எனவே, எனக்கு இது பற்றியெல்லாம் ஒருதுளி வலிகூட இல்லை!''

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா