சற்று முன்
சினிமா செய்திகள்
உறுதி செய்யப்பட்ட கபாலி வெளியீட்டு தேதி
Updated on : 14 May 2016
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "கபாலி", ஜூலை 1-ஆம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே ரம்ஜான் பண்டிகை தினத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஜூலை 1-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கபாலி படத்தில் ரஜினியோடு ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு இதனை தயாரித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது .உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்' என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.உன்னி நம்பியார் இசையமைத்துள்ளார். அச்சு விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீமோன் என். எம்.கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார்.
இந்தப் படத்தில் இந்திரன்,ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ. என். விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ், நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான அந்த 10 வயது சிறுமியாகத் தயாரிப்பாளரின் மகள் காஷ்மீரா நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
படத்தின் கதை பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது,
"அந்த பத்து வயதுக் குழந்தையை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் . எப்போதும் துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலின் வடிவமாக அந்தச் சிறுமி காணப்படுவாள்.வயது பத்து தான் என்றாலும் இருபது வயதுக்குடைய முதிர்ச்சியோடு பேசுவாள்,மனிதர்களைப் புரிந்து கொள்வாள். யாருடைய தோற்றத்தைப் பார்த்தும் அவர்களுடைய குணத்தைக் கண்டுபிடித்து விடுவாள். ஒருவருடைய முக அசைவைப் பார்த்தே அவர்களது மனத்தைக் கணித்து விடுவாள்.குடித்துவிட்டு வருபவரையும் கண்டுபிடித்து விட்டு திட்டுவாள். அம்மா, அப்பா, அந்தக் குழந்தை என்று இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது.பல சிக்கலில் இருந்து குழந்தை மீண்டு வந்ததா இல்லையா என்பது படத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்த 'துணிந்தவன்' படத்தின் கதை.
உன்னி நம்பியார் இசையில் விஜய் ஜேசுதாஸ் வைக்கம் விஜயலட்சுமி, சித்தாரா கிருஷ்ணகுமார் பாடல்களைப் பாடியுள்ளனர்.பாடல்களை நியூ மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முற்றிலும் புதிய தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்தைத் தங்கள் படமாக எண்ணி உழைத்திருக்கிறார்கள்.
இப்படத்தை 'எஸ் எஃப் சி' எனப்படும் சாகரம் பிலிம் கம்பெனி ஆட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது ''என்கிறார் இயக்குநர்.
இப்போது மலையாளத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்காத நல்ல முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் 'சூட்சும தர்ஷினி', 'மார்கோ' போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன .அந்த நிலையில் இந்தப் படம் மலையாளத்தில் துணிந்தவன் என்ற பொருள் படும்படி 'ஒறும்பேட்டவன்' என்ற பெயரில் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது.
அதனைத் தொடர்ந்து தமிழில் 'துணிந்தவன் ' என்கிற பெயரில் 2025 ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.Orumbettavan ഒരുമ്പെട്ടവൻ ஒறும்பேட்டவன்) 'துணிந்தவன்'January 3rd worldwide release.
அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய " ஒன்வே" என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- " எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன். " என்று இயக்குனர் ராஜாபரணிதரபிரபு கூறினார்.
படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது.
ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.
ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.
முன்னணி இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பயின்ற ராஜா பரணிதரபிரபு இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்
'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ' கரவாலி ' படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் 'கரவாலி' படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய டீசர் - முக்கியத்துவம் வாய்ந்த நாற்காலியை முதன்மைப்படுத்துகிறது. 'இது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம் ' என்ற பின்னணி குரலுடன் டீசர் தொடங்குகிறது. நடிகர் மித்ராவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், 'இந்த கௌரவம் மிக்க நாற்காலியை உரிமை கொண்டாட துணிபவர்கள் தப்ப மாட்டார்கள்' என்பதையும் வலியுறுத்துகிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தையும், அற்புதமான தோற்றத்தையும் பார்வையாளர்களிடத்தில் உருவாக்குகிறது.
'கரவாலி' என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். இதற்கு முன் வெளியான டீசரில் ..ஒரு குழந்தை பிறக்கும் போது கன்று ஒன்று பிறந்ததை உருவகப்படுத்தியது. இந்த புதிய டீசரில் அதன் தொடர்ச்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் வளர்ந்து கௌரவத்தின் நாற்காலியை பார்த்துக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. மேலும் அது பலரின் ஆசைக்கும் ஆளாகிறது. டீசரில் மித்ராவின் கட்டளையிடும் குரலுடன் கூடிய தோற்றம்.. ரமேஷ் சந்திராவின் அச்சுறுத்தும் தோற்றம்.. மற்றும் இறுதி காட்சியில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜின் கூர்மையான பார்வை ஆகியவை இடம் பிடித்திருக்கிறது.
பிரஜ்வல் தேவராஜின் மூன்று விதமான தோற்றங்களும் போஸ்டர்களாக இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. இதில் யக்ஷகானா - கம்பளா மற்றும் மகிஷாசுரன் -என ஈர்க்கப்பட்ட அவதாரங்களை கொண்டிருந்தது. இந்த வித்தியாசமான தோற்றம் பிரஜ்வல் தேவராஜ் ஒரு யக்ஷகானா கலைஞராக நடிக்கிறாரா ? அல்லது கம்பளா பந்தய வீரராக நடிக்கிறாரா? அல்லது 'டைனமிக் பிரின்ஸ்' ஆக அதாவது அவரது கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சூழ்ச்சியை மையப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!
குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான "கேம் சேஞ்சர்" படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த உயரமான கட்-அவுட் சர்வதேச அதிசய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தில் ராஜு...,
"என்னுடைய ஃபோனில் இப்போது படத்தின் டிரெய்லர் உள்ளது. ஆனால் அது உங்களுக்கு வந்து சேர, நாங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த நாட்களில் படத்தின் தலைவிதியை டிரெய்லர் தான் தீர்மானிக்கிறது. ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில், நீங்கள் டிரெய்லரைப் பார்க்கலாம். விஜயவாடா தெலுங்கு திரையுலகின் தாய்வீடு, இங்கு மெகா ரசிகர்கள், பவர் ஸ்டார் ரசிகர்கள் மற்றும் மெகா பவர் ஸ்டார் ரசிகர்கள் இணைந்து, ராம் சரணுக்காக இந்த 256 அடி கட்-அவுட்டை அமைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் கலந்துகொள்ளும் வகையில், கேம் சேஞ்சரின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஜனவரி 4 அல்லது ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று தில் ராஜு கூறினார். மேலும் அவர் கூறுகையில்.., "நாங்கள் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதுபோன்ற ஒரு வெற்றிகரமான நிகழ்விற்குப் பிறகு, எங்கள் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொள்வதால், நாங்கள் மீண்டும் ஒரு பெரிய நிகழ்வை நடத்த விரும்பினோம். இந்நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும்.
படம் குறித்து சிரஞ்சீவியின் கருத்தைப் பற்றிப் பேசிய தில் ராஜு...,
"இன்று மதியம் 1 மணிக்கு சிரஞ்சீவிக்கு போன் செய்து, படம் பார்க்கச் சொன்னேன். மதியம் 2:45 மணிக்குப் பார்க்கத் தொடங்கினார். அவருடைய கருத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். ஜனவரி 10 ஆம் தேதி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறப்போகிறோம் என அவரிடம் இருந்து எனக்குச் செய்தி வந்தது.
தில் ராஜு மேலும் கூறுகையில், குளோபல் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தி பிரமாண்டமான விருந்தாக இருக்கும் என்றார். "நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் என்னிடம் கதை சொன்னபோது, நான் உணர்ந்ததைத்தான் இன்று படத்தைப் பார்த்த சிரஞ்சீவியும் உணர்ந்தார். ஐஏஎஸ் அதிகாரியாக, போலீஸ் அதிகாரியாக இரட்டை வேடத்தில் ராம்சரணின் முழுத்திறமையை, அதிரடி நடிப்பை நீங்கள் பார்க்கலாம். ஷங்கரின் பாடல்களை நீங்கள் கொண்டாடுவீர்கள், 10 முதல் 12 நாட்கள் வரை அவர் பாடல்களைப் படமாக்குவார், அதே போல் படமும் 2 மணி நேரம் 45 நிமிடம் தாருங்கள் என்றேன், சொன்ன நேரத்தில் கமர்ஷியல் ரீதியிலான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, ஒரு அற்புதமான ப்ளாக்பஸ்டர் படத்தைத் தந்துள்ளார்."
இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில், தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை, ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.
8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
ஜில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மிதுன் வேம்பலக்கல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஏ.ஜி.ஆர் இயக்குகிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஜெ பப்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் படத்தின் தயாரிப்பாளர் மிதுன் வேம்பலக்கல் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் சுகன்யா, சங்கர பாண்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இத்தொடரின் துவக்க விழா பூஜையுடன் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில், திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு ‘ராகவன் : Instinct’ இணையத் தொடர் குழுவினரை வாழ்த்தினார்கள்.
8 எப்பிசோட்களாக உருவாகும் இத்தொடர் 1980-ம் காலக்கட்டத்தில் நடக்கும் மிஸ்டரி திரில்லர் வகை கதையாகும். கதாநாயகனின் உள்ளுணர்வு அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்தொடர் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் இருக்கும், என்று இயக்குநர் ஏ.ஜி.ஆர் தெரிவித்தார்.
தொடரின் தலைப்பு குறித்து கூறிய இயக்குநர் ஏ.ஜி.ஆர், ”படத்தின் மையக்கரு நாயகனின் உள்ளுணர்வு தான். அவர் ஒன்றை தேடிச் செல்லும் போது, அவருக்குள் சொல்லும் உள்ளுணர்வு அடுத்தக்கட்டத்திற்கு அவரை அழைத்துச் செல்லும். அதற்கு ஏற்ற தலைப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் ரசிகர்களை ஈர்க்க கூடிய தலைப்பாக இருக்க வேண்டும் என்று யோசித்த போது தான், உலக நாயகன் நடித்த ராகவன் கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. அதனால் தான் ‘ராகவன் : Instinct’ என்று வைத்தோம்.” என்றார்.
தயாரிப்பாளர் மிதுன் கூறுகையில், “இயக்குநர் ஏஜிஆர் கூறிய கதை மிகவும் பிடித்தது. திரைப்படம் எடுக்கும் யோசனையில் இருந்தோம், ஆனால் அவரது கதை எங்களை கவர்ந்துவிட்டதால் வெப் சீரிஸ் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். இதை தயாரிப்பதோடு முக்கிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறேன், உங்களுடைய ஆதரவு வேண்டும்.” எண்றார்.
நாயகன் விஜே பப்பு கூறுகையில், “இயக்குநர் ஏஜிஆர் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். மிஸ்டரி திரில்லர் ஜானர் கதை என்பதால் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது தான் தொடங்கியிருக்கிறோம், விரைவில் மற்ற விபரங்களை அறிவிப்போம்.” என்றார்.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!
நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு ' ரெட்ரோ' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். லவ் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதாலும், காட்சிகள் விறுவிறுப்பாகவும் இருப்பதாலும், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'
பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர்.
சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
'பயாஸ்கோப்' குறித்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், "ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான் 'வெங்காயம்' திரைப்படத்தை எப்படி எடுத்தேன், அதில் சந்தித்த சவால்கள் என்ன, அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை என்பதை வெளிப்படுத்தும் படம் தான் 'பயாஸ்கோப்'. 'வெங்காயம்' திரைப்படம் உருவான கதையை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர். அதன் விளைவாக 'பயாஸ்கோப்' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்," என்றார்.
தொடர்ந்து பேசிய சங்ககிரி ராஜ்குமார், "பயாஸ்கோப் திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. சினிமாவைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாகவும் படம் முழுக்க நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இப்படத்தை எடுத்த அனுபவம் அலாதியானது," என்றார்.
'பயாஸ்கோப்' திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்காக புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமார் கைகோர்த்துள்ளார். படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஆஹா பெற்றுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில் 'எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்' மெண்டல் மனதில் 'எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஆர். கே. விஜய் முருகன் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பாலாஜி மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. வண்ணத்துப்பூச்சி பின்னணியில் கதையின் நாயகனான ஜீ.வி. பியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ' 7 ஜி ரெயின்போ காலனி ', 'ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள' ( தமிழில் யாரடி நீ மோகினி) ஆகிய காதலை மையப்படுத்திய படைப்புகளைத் தொடர்ந்து காதலை உரக்க பேசும் 'மெண்டல் மனதில்' படத்தில் இயக்குநர் செல்வராகவனும், 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமாரும் இணைந்திருப்பதால்..' இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படம் 'பரோஸ்'
Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான " பரோஸ்", திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.,
இந்நிகழ்வினில்…
வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது…
மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரிந்த பிறகு தான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக்கு முன்னால், பின்னால் என்றே சொல்லலாம். அவரில்லாமல் நான் இல்லை. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். பரோஸ் என்னுடைய அறிமுகத் திரைப்படம், இது மோகன்லால் சாரின் முதல் படைப்பு. அவர் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார் வாழ்த்துகள். 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் சார் தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப்படம் பற்றிச் சொல்லி, இசையமைக்க வேண்டும் என்றார். மிகப்பெரிய சந்தோசம். கோவிட் வந்தது, அந்த தடைகளைத் தாண்டி, இப்போது படம் வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் நிறைய இசை கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லால் சாருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.
கிரியேடிவ் ஹெட் ராஜிவ் குமார் பேசியதாவது…
நான் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது ஏதேச்சையான ஒரு அதிசயம். இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்து, முழுமையான 3டி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் எனக்கு இனிய நண்பராக இருந்து வருகிறார். அவருடைய கற்பனையை உருவாக்கும் இந்தப் படத்தில் பணிபுரிந்தது, நல்ல அனுபவமாக இருந்தது. மோகன்லால் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார். முக்கியமாக டெக்னாலஜுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் நிறைய டெக்னாலஜு இருக்கிறது, ஆனால் அதைத்தாண்டி நடிகர்களின் நடிப்பு தான் உங்களைக் கவரும். இந்தப்படம் பார்க்கும் போது நீங்கள் 3டி என்பதை மறந்து விடுவீர்கள். மோகன்லால் மிகச்சிறந்த நடிகர், அவர் உருவாக்கிய ஃபேண்டஸி கதாப்பாத்திரங்களுடன் அவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். லிடியன் இத்தனை இளம் வயதில் முதிர்ச்சியான இசையைத் தந்துள்ளார். பாலா மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பல மொழிகளில் அவர் தான் டயலாக் தந்துள்ளார். இப்படம் மிக அர்ப்பணிப்புடன் மிகப்பெரிய உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.
நடிகர், இயக்குநர் மோகன்லால் பேசியதாவது…
47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். 2 நடிகர்கள் தான் இந்தியா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிடிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்கள் வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம். மிகப்பெரிய உழைப்பு. பாலா, அவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நன்றி. ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.
'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும் அதுபோல கேம் சேஞ்சர்...
குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது. இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது.
குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார்.
டல்லாஸ் ரசிகர்களின் அமோக அன்பு மற்றும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து குளோபல் நட்சத்திரம் ராம் சரண் பேசியதாவது…
"நாங்கள் இந்தியாவை விட்டுப் போகவே இல்லை என்பது போல் இருக்கிறது. அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ் புரம் என்று அழைக்கப்படுகிறது. நான் ஷங்கர் சாரின் படத்தில் நடித்துள்ளேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரை ஒரு தெலுங்குப் படத்தை இயக்கச் சொல்ல வேண்டும் என்று நான் நெடுநாட்களாகக் கனவு கண்டேன், ஆனால் அது நடக்குமென நான் நினைக்கவே இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றிய, இந்த மூன்று வருடமும் நான் நிறையக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக ஒரு அழகான பயணமாக அமைந்தது. மேலும், "என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டில் சச்சின் எப்படிப்பட்டாரோ, அதே போல் தான் இந்திய சினிமாவுக்கு ஷங்கர் சார். அவர்தான் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குநர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் தனியாக நடித்து வெளியாகும் முதல் படம், என்பது ஒரு சிறப்பு. அதை தில் ராஜு சாரின் பாணியில் சொல்வதென்றால்.. , "உங்களுக்கு எண்ண வேணுமோ, அது எல்லாமும் இருக்கு.' ராஜு சாருவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது." என்றவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இயக்குநர் சுகுமாருக்கு நன்றி தெரிவித்த சரண், புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த கொண்டாட்ட நிகழ்வு, தெலுங்கு மாநிலத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக இயக்குநர் சுகுமார் குறிப்பிட்டார். வெளிநாட்டில் வசிக்கும் போது கூட தெலுங்கு சினிமாவுக்கு என்ஆர்ஐ பார்வையாளர்கள் அளிக்கும் மிகப்பெரும் ஆதரவிற்காக அவர் நன்றி தெரிவித்தார். தில் ராஜுவுக்கு என் வாழ்நாளில் நன்றி சொல்ல முடியாது. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கும் காலகட்டத்தில், என் முதல் படமான ஆர்யா படத்தில் அவர் என்னை நம்பினார். ஷங்கர் சாரிடம் தான் என் முதல் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றேன். சிரஞ்சீவி ரசிகனாக இருந்த நான். அவர் ஏன் ஷங்கர் சாருடன் பணிபுரியவில்லை என்று எப்போதும் ஆச்சரியப்பட்டேன், ஆனால் அவர் என்னுடன் படம் செய்கிறார் என்று ராம்சரண் பகிர்ந்துகொண்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யா சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் இயக்குநராவதற்கு முன், குஷி படத்தை எனது ரெஃபரன்ஸ் படங்களில் ஒன்றாக வைத்திருந்தேன். ராம் சரண் பற்றி சுகுமார் மேலும் கூறுகையில், "சரண் எனது சகோதரர் போன்றவர், அவருடன் பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சி தான். சிரஞ்சீவி சாருடன் படத்தைப் பார்த்தேன், அதனால் நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்: முதல் பாதி - அருமை, இடைவெளி - பிளாக்பஸ்டர் மற்றும் பிளாஷ்பேக் எபிசோட் அட்டகாசம். ஷங்கர் சாரின் ஜென்டில்மேன் மற்றும் பாரதியுடு போன்ற படங்களுக்குப் பிறகு, சரணின் இந்த படத்தை மிகவும் ரசித்தேன். ரங்கஸ்தலம் படத்திற்காகத் தேசிய விருதை வென்றார், ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்த பிறகு, இந்த முறை அவர் கண்டிப்பாக மீண்டும் வெல்வார் என்று நான் நம்புகிறேன்."
தயாரிப்பாளர் தில் ராஜு, தனது 50 வது படத்தை ராம் சரண் மற்றும் ஷங்கர் போன்ற பிரமாண்டங்களுடன் இவ்வளவு பெரிய அளவில் தயாரிப்பது குறித்து, தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். ஷங்கர் சாருடன் எனது பயணம் 1999 ஆம் ஆண்டு ஓகே ஒக்கடு படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது அவரை முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் தனது தயாரிப்பான ஈரம் படத்தைத் தெலுங்கில் வைஷாலியாக வெளியிட என்னை நம்பினார். இப்போது அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது முதல் நேரடியான தெலுங்குப் படமான கேம் சேஞ்சரைத் தயாரிக்க, என்னை நம்பி, எங்கள் பேனரின் இணை இயக்குநர் மூலம், ஷங்கர் எங்களின் கீழ் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிக்க விரும்புவதாகத் தெரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் ராம் சரண் படப்பிடிப்பிலிருந்தபோது, ஷங்கர் சாரின் ஐடியாவைப் பற்றிச் சொன்னேன். இப்படித்தான் எங்களின் இந்த பிரம்மாண்ட படைப்பு துவங்கியது. COVID-19 காரணமாகத் தயாரிப்பு தாமதமானது, ஆனால் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில், பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளோம். நான் மொபைலில் இப்படத்தின் 'Dhop' பாடலைப் பார்த்தேன், என் கண்களில் கண்ணீர் சுரந்தது. உங்கள் அனைவரையும் இப்படம் மகிழ்விக்கும்.
ராம் சரண் உடனான உறவு குறித்து தில் ராஜு கூறுகையில், "சரண் என்றாலே எனக்கு கல்யாண் சாருதான் நினைவுக்கு வருகிறார். தோலி பிரேமா, குஷி, கப்பர் சிங் போன்ற படங்களை விநியோகித்ததிலிருந்து மெகாஸ்டார் குடும்பத்துடனான எனது பயணம் தொடங்கியது. நான் முன்பு சங்கராந்தியின் போது வெளியான சரணின், எவடு படத்தைத் தயாரித்தேன். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படம் நம் தெலுங்கு மாநிலங்களின் தற்போதைய நிகழ்வுகளைக் காட்டுகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் துவங்கிய கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்.
"பாடல் வேணுமா பாட்டு இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, சங்கராந்திகி ஹிட் வேணுமா, ஹிட் இருக்கு" என்று தில் ராஜு தனது டிரேட்மார்க் வைரல் டயலாக் மூலம் மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்வை இவ்வளவு பெரிய அளவில் ஏற்பாடு செய்து மாபெரும் வெற்றியடைய செய்த ராஜேஷ் கல்லேபள்ளிக்கு நன்றி தெரிவித்தார். "
இயக்குநர் ஷங்கர் தனது 30 ஆண்டுகால திரை வாழ்க்கையில் தெலுங்கு ரசிகர்கள் அளித்து வரும் அன்பிற்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அதன் விளைவுதான் கேம் சேஞ்சர். கடந்த மூன்று தசாப்தங்களாக நான் தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். நான் முன்பு மற்ற ஹீரோக்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்தேன். ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அப்பண்ணாவாக அவர் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்."
ஷங்கர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் பணிபுரியும் பாக்கியத்தைப் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் தமன் கூறுகையில்..,
"சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும். அப்படித்தான் கேம் சேஞ்சரைப் பற்றி நான் உணர்ந்தேன். ராம் சரண் சாரும் ஷங்கர் சாரும் இணையும் இந்த அற்புதமான படத்தில் பணிபுரிவேன் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கேம் சேஞ்சர், பாலய்யா பாபுவின் டாக்கு மகராஜ் மற்றும் ராஜு சாரின் சங்கராந்திகி வஸ்துன்னம். மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்.
பிரபல தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறுகையில், டல்லாஸில் தெலுங்கு திரைப்பட விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. "டல்லாஸுக்கு வருகை தந்த ராம் சரண் இங்குள்ள ரசிகர்கள் மீதான அன்பையும் பாசத்தையும் காட்டுகிறார். இனிமேல், டல்லாஸில் பல திரைப்பட நிகழ்வுகளைப் பார்ப்போம். இந்த நிகழ்வு இந்த டிரெண்டைத் தொடங்கும். சுகுமார் சார் புஷ்பா 2 மூலம் நம்மைப் பெருமைப்படுத்தினார். நாம் அனைவரும் ஷங்கர் சாரின் ரசிகர்கள் என்பதை இப்பட வெற்றி மூலம் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்துவோம்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பன்முக நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், "பவன் கல்யாண் அவர்களுக்குக் கதை சொல்ல முதல்முறையாக ஹைதராபாத் வந்தேன். ராம் சரண் மிகவும் உண்மையான ஆத்மா. அவருடைய தொலைபேசி எண்ணை 'ஆர்.சி-யாக சேமித்து வைத்துள்ளேன். அவர் தான் உண்மையான ராஜா. நடத்தை, நடனம், நடை, நடிப்பு என அனைத்திலும் மன்னன். கேம் சேஞ்சர் நிச்சயமாக அனைவரையும் மகிழ்விக்கும்."
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி, அமெரிக்காவில் ஒரு தெலுங்கு படத்தின் முதல் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்த டல்லாஸ் தான் சரியான தேர்வு என்று கூறி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். "கேம் சேஞ்சரில் நான் நடித்த கதாபாத்திரம் எனது கேரியரில் சிறந்ததாக இருக்கும். அது எனக்கு 'கேம் சேஞ்சருக்கு முன்பும் கேம் சேஞ்சருக்குப் பிறகும்' என்ற படமாக இருக்கும். படத்தில் ராம் சரணின் புதிய பரிமாணத்தை நீங்கள் காண்பீர்கள். அவருடைய அப்பண்ணா கேரக்டரை முழுவதுமாக ரசித்தேன் என்றார்."
கேம் சேஞ்சர் திரைப்படத்தை, தமிழில் எஸ்விசி மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்தியில் ஏஏ பிலிம்ஸ் அனில் ததானி வெளியிடுகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அரசியல் அதிரடி திரைப்படத்தின் இசையை சரிகமா வழங்குகிறது.
கேம் சேஞ்சரில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். சு.வெங்கடேசன், விவேக் ஆகியோர் எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். படத்தின் இணை தயாரிப்பாளராக ஹர்ஷித் பணியாற்றியுள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார், எஸ் தமன் இசையமைத்துள்ளார், எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.நரசிம்மராவ் மற்றும் எஸ்.கே.ஜபீர் ஆகியோர் லைன் புரொடியூசர்களாக பணியாற்றியுள்ளனர். அவினாஷ் கொல்லா மற்றும் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்ட்டின், ஜானி மற்றும் சாண்டி ஆகியோர் நடன அமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா