சற்று முன்
சினிமா செய்திகள்
“லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!
Updated on : 16 August 2025

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்திய செய்திகள்
நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்," என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. 'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறள் தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ எல் உதயா தான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர்களையும், ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார். ரசிகர்கள் அனைவரும் 'கணக்கு எப்படி இருக்க?' என்ற அளவிற்கு நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் உதயா தான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவை தான் குறிப்பிடுவேன்.
கன்னட திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், '' பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது.
இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம்.
இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு.
எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம்.
இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்.
இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது.
இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து நாம் பட வெளியீட்டை ஒழுங்கு படுத்துவது தான் முதன்மையான பணி. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன். தயாரிப்பாளர் கேயார் , தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும் தான் சினிமா நன்றாக இருக்கும்.
இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி.
இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 'டண்டனக்கா டான்' என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த 'அக்யூஸ்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்,'' என்றார்.
'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!
Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில்
தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது…
எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்..
பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது.
கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்ததற்கு நன்றி. இரண்டு பாடல்களில் ஒன்றை தேவா சார் பாடி இருப்பது எனக்கு பெருமை. டீசருக்கான பாடலை ஒரு வில்லுப்பாட்டு போன்று 20 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தேன். கதாநாயகி பற்றி நான் எழுதி இருந்த பாடல் வரியை குறிப்பிட்டு தேவா சார் பாராட்டினார். தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்குவது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல பெரிய விஷயம் என்றார்
ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் பேசியதாவது…
படத்தை முழுதாக நான் பார்த்துவிட்டேன். தந்தை பெரியார் கருத்தை அழகாகவும், சிறப்பாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் எனது பாராட்டுக்கள். ஒரு பெண்ணின் பார்வையில் படத்தைச் சொன்னதற்குப் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நடித்த அனைவருக்கும் பட ரிலீஸுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகளும் பெரிய பேரும் கிடைக்கும். ஆனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹிரோயின் வரவே இல்லை. ஏதோ வெப் சீரிஸ் வாய்ப்பில் அவர் பிஸியாகிவிட்டார் என்றார்கள். கஷ்டப்பட்டு இவர்கள் எடுத்த படத்தால் பிரபலமாகிவிட்டு, பட விழாவிற்கு வராமல் இருப்பது குற்றம். இனிமேல் படத்தில் புக் செய்யும்போதே அவர்கள் விழாக்களுக்கும் வர வேண்டுமென ஒப்பந்தம் போட வேண்டும்.. படக்குழுவினர் அனைவரும் ஜெயிக்க வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் கௌரி சங்கர் எந்த விளம்பரமும் இல்லாமல் பல சமூகப் பணிகள் செய்து வருகிறார். அவரது மனதுக்காக கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா பேசியதாவது….
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி.. என் இசையில் பாடிய இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு நன்றி.. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்..
நடிகர் சௌந்தர்ராஜா பேசியதாவது….
கடுக்கா மிகச்சிறப்பான கருத்தைச் சொல்லும் சிறப்பான படம். கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். பாடல் கேட்டவுடன் முணுமுணுக்கத் தோன்றுகிறது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது, இரண்டு படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதே போல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். தயாரிப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் நன்றி என்றார்
இயக்குநர் SS முருகராசு பேசியதாவது…
இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி இருவருக்கும் நன்றி. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். படம் எடுத்த அந்த ஊரில் எல்லோரும் மிகவும் உதவியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை எங்கள் படம் மிகச்சிறந்த படம், இனி நீங்கள் தான் படம் பார்த்துச் சொல்ல வேண்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது…
என் நண்பன் விஜய் கௌரிஷை ஹீரோவக்க வேண்டும் என்று தான் இந்தப்படத்தை ஆரம்பித்தோம். அதிலும் இதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஏன் நடிக்கிறாய் என கேட்டேன். என்னுடைய தயாரிப்பான கடாவர் சீரிஸில் துணை நடிகராகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். அவன் சின்ன சின்னதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியுள்ளான். இது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய படம். அவன் எது செய்தாலும் சரியாக இருக்கும். இந்தப்படத்தில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார் என்றவுடன் சந்தோசமாகிவிட்டது. இனி அவர் இப்படத்தை எடுத்துச் சென்று விடுவார். கௌரிஷ் பல சமூக அக்கறைமிக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறான். அவன் இன்னொரு விஜய் சேதுபதியாக வருவான்.. இயக்குநர் அவ்வளவு அழகாக இப்படத்தினை எடுத்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. என்றார்.
தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது…
இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது என்னுடைய அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது.. சின்ன படங்கள் எடுப்பதில் படம் எடுப்பதைத் தாண்டி படத்தை விளம்பரப் படுத்துவதில் தான் இருக்கிறது.. அதை மிகச்சிறப்பாக தனஞ்செயன் சார் செய்து வருகிறார்.. அவர் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
கடுக்கா படத்தை வாழ்த்த நிறையப் பிரபலங்கள் வந்துள்ளார்கள். படக்குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்து விட்டார்கள். பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருக்கும் இந்த தயாரிபபளர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். சினிமாவில் நாம் சரி செய்ய வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு ஷோ தருகிறார்கள், எந்த ஷோ நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால் அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர் இருக்கும். ஆனால் இப்போது ஒரே படத்தை எல்லாத் தியேட்டரிலும் போட்டு வசூலை அள்ள, மற்ற படங்களை ஓட விடமால் செய்து விடுகிறார்கள். குறைந்த பட்சம் சின்ன படங்களுக்கு ஒரு வாரம் 4 ஷோ தர வேண்டும். இதைத் தயாரிப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஒரே பாட்டில் கலக்கிவிட்டார். கிராமிய படங்கள் தான் பெரிய வெற்றியைத் தரும். கடுக்கா மிகச்சிறப்பான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
நாயகன் விஜய் கௌரிஷ் பேசியதாவது..
மேடையில் இருப்பவர்கள் அனைவரும் என் இன்ஸ்பிரேஷன். அவர்கள் எங்கள் படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தேவா சாருக்கு நன்றி. இப்பாடலுக்கு வரவேற்பைப் ஏற்படுத்தித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தில் எல்லோருமே எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். டிரெய்லரில் காட்டாத ஒரு விசயத்தைப் படத்தில் வைத்துள்ளோம். கதையில் தான் பிரம்மாண்டத்தை வைத்துள்ளோம். கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். நாங்கள் நல்ல படம் தந்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தப்படத்தில் விசயம் இருக்கும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா என்றால் காய் இல்லை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை. இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டகத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ஆடியன்ஸை ஏமாற்றாது. சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. கடுக்கா சின்ன டீம் செய்துள்ள நல்ல படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
இப்படம் அட்டகத்தி படத்திற்கு டிரிப்யூட் மாதிரி இருந்தது. அதனால் தான் CV குமாரை விழாவிற்கு அழைத்தேன். நான் நிறைய வெளிவராத படங்கள் பார்க்கிறேன்.. நம்மை மதித்து படம் காட்டுகிறார்கள் என்று அவர்களிடம் உரையாடி படத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அப்படி படம் பார்த்தபோதே சில திருத்தங்கள் சொன்னேன். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதையெல்லாம் சரி செய்தார்கள். மிகச்சிறப்பாக 2 மணி நேரத்திற்குள் சிறப்பான படமாக மாற்றிக் காட்டினார்கள். அதனால் இப்படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று சொன்னேன். நாயகன் விஜய் கௌரிஷ் ஒவ்வொரு ஊராகப் போய் அங்கு இன்ஸ்டா விளம்பரம் செய்து புரமோட் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாளை நமதே படத்திற்கும் நான் உதவி செய்திருந்தேன் 50 லட்சத்தில் எடுத்த அந்த படத்திற்கு மிகச்சிறப்பான ரிவ்யூ தந்தீர்கள். மிகப்பெரிய வெற்றியைத் தந்தீர்கள். அதே போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். நன்றி.
நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!
நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.
ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் ( George Philip Roy)மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். Maverik Movies Pvt. Ltd தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம் பேனரான Pauly Jr. Pictures மற்றும் Rowdy Pictures Pvt. Ltd. இணைந்து தயாரிக்கின்றன.
நேற்று வெளியான அசத்தலான டீசர், பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகையும் சித்தரிக்கிறது. மேலும் மாணவர்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் கலந்த கமெர்ஷியல் எண்டர்டெய்னர் என டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நிவின் பாலி தனது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் துறுதுறுப்புடன் குறும்பு மிக்க ஹரி என்ற கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அதேசமயம், நயன்தாரா ஒரு வலிமையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது கதைக்கு பெரும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியாகிய ப்ளாக்பஸ்டர் “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்திற்குப் பின், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் K உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ் (Aju Varghese), ஷரஃபுதீன் (Sharafudheen), சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி ஆகியோர் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு வெளிவரும் மிக அதிக நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!
VERUS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சை-ஃபை கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
சூரியபிரதாப் இயக்கும் இந்த படத்தில், கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட் நட்சத்திரம் அபர்ஷக்தி குரானா தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ஹிந்தி சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், இப்போது தமிழ் ரசிகர்களையும் கவர்வார் என்ற நம்பிக்கை குழுவினருக்கு உள்ளது.
முக்கிய காட்சிகள் இடம்பெற்ற இந்த முதல் கட்டப் படப்பிடிப்பில், இரு முன்னணி நடிகர்களின் பங்களிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் உணர்ச்சி நிறைந்த கதையையும்,நேரத்துடன் போட்டியிடும் சை-ஃபை த்ரில்லர்கான விறுவிறுப்பையும் ஒருங்கே தரவுள்ளது.
இந்த படத்தில் பாவ்யா திரிகா நாயகியாகவும், மூத்த நடிகர் வை.ஜி. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர்கள்: தனிஷ்டன் பெர்னாண்டோ, ராஜராஜன் கனனசம்பந்தம், சஞ்சய் சங்கர், ஷைக் முஜீப் – VERUS புரொடக்ஷன்ஸ்.
இயக்குனர் சூரியபிரதாப் எஸ் கூறுகையில்:
"முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவிற்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது. கௌதம் – அபர்ஷக்தி இணைந்து தோன்றும் காட்சிகள் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். சென்னை நகரின் பரபரப்பான பின்னணி இந்த படத்துக்கு கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் மேலும் அதிரடி காட்சிகளும், ரசிகர்களுக்கான பல அசத்தலான ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன.
ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!
கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 12) இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் ஜே சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார்.
ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகவுள்ள இப்படங்களுக்கு 'பிரெய்ன்' மற்றும் 'ஷாம் தூம்' எனப் பெயரிடப்பட்டுள்ளன. 'பிரெய்ன்' திரைப்படத்தை 'தாதா 87', 'பவுடர் ', மற்றும் 'ஹரா' புகழ் விஜய்ஶ்ரீ ஜி இயக்க, 'ஷாம் தூம்' படத்தை நவீன் குமார் இயக்குகிறார். 'ஷாம் தூம்' படத்தின் கதை, திரைக்கதையை ஆர் ஜே சாய் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய ஆர் ஜே சாய், "கனடாவில் வாழ்ந்து வரும் போதிலும் தமிழ் திரையுலகில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். எனவே, 'பிரெய்ன்' மற்றும் 'ஷாம் தூம்' படங்கள் வாயிலாக எனது பயணத்தை தொடங்குகிறேன். உலகத் தரத்தில் இப்படங்கள் உருவாகவுள்ளன. கதையம்சம் மிக்க படங்களையும், திறமை கொண்ட இளைஞர்களையும் ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் தொடர்ந்து ஊக்குவிக்கும். எனது பிறந்த நாளன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் வாழ்த்துகளோடு இந்த அறிவிப்பை வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி," என்றார்.
ஆர் ஜே சாய் தயாரிப்பில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் 'பிரெய்ன்', நவீன் குமார் இயக்கும் 'ஷாம் தூம்' ஆகிய இரண்டு படங்களும் விரைவில் தொடங்கி 2026ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளன. பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படங்களில் பணியாற்ற உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் வெளியாகும்.
PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!
இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) காந்தாரா திரைப்படத்தின் அசத்தல் அம்சங்களை இணைத்து, அக்டோபர் 2 அன்று வெளியாகும் காந்தாரா: அத்தியாயம் 1க்கு ஒரு கண்கவர் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது.
இன்று முதல், ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ பார்க்க வரும் ரசிகர்கள், PVR INOX லோகோவை உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவில், அனைத்து திரையரங்குகளிலும் கண்டு ரசிக்க முடியும். அதிநவீன திரை-ப்ரொஜெக்ஷன் முறை மற்றும் நாட்டின் உச்சமான கலை வடிவ ( state-of-the-art ) டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்பட்ட இந்த லோகோ, (logo) காந்தாராவின் மைய சக்தியையும் மற்றும் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த லோகோ (logo) மாற்றம், இந்த ஆண்டின் மிகப் பெரிய திரைப்பட நிகழ்வுகளில் ஒன்றிற்கு முன், ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து PVR INOX திரையரங்குகளிலும் திரையிடப்படும்.
PVR INOX Ltd. – வருவாய் மற்றும் செயல்பாடுகள் தலைமை நிர்வாக அதிகாரி கவுதம் தத்தா கூறியதாவது..,
“சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல – அது ஒரு தேசத்தை ஒன்றிணைக்கும் உணர்வு. PVR INOX-ல், எப்போதும் திரையரங்கத்தைத் தாண்டிய, பிரமாண்டமான அனுபவங்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம். காந்தாராவின் மைய சக்தியை எங்கள் புகழ்பெற்ற லோகோவில் இணைப்பதன் மூலம், இந்தியாவின் செறிவான கலாச்சார கதைகளைப் போற்றுகிறோம். இது வெறும் லோகோ மாற்றம் அல்ல – ரசிகர்களை மறக்க முடியாத கதையுலகிற்குள் அழைக்கும் ஒரு அழைப்பிதழ்.”
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது..,
“இந்தியாவின் மிகப் பெரிய மல்டிப்ளெக்ஸ் குழுமம், உலகளவில் மிகப்பெரிய ரசிகர் தொடர்பை கொண்ட நிறுவனம், காந்தாராவை இப்படி தனித்துவமான முறையில் கொண்டாட முடிவு செய்திருப்பது எங்களுக்கு பெருமையாகும். இது மிகச் சிறப்பு வாய்ந்த ஐடியா, குறிப்பாக சுதந்திர தினத்தில், நமது செறிவான கலாச்சாரத்தை கொண்டாடும் முயற்சி. இத்தனை பெரிய குழுமத்துடன் இணைந்து, நாங்கள் வெகு நம்பிக்கையுடன் சொல்லும் கதைகளை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.”
வரும் வாரங்களில், PVR INOX மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் மேலும் பல வகையான ஐடியாக்களின் அடிப்படையில் புதுமைகளை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை காந்தாரா உலகிற்குள் அழைக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளன.
இத்தகைய முயற்சிகள் மூலம், PVR INOX மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ், இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தங்களின் முன்னணித் தலைமையையும், ரசிகர்களுக்கு மறக்க முடியாத, ஆழமான புதிய அனுபவங்களை வழங்கும் பங்களிப்பையும் உறுதிப்படுத்துகின்றன.
16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!
16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான திரில் பயணமாக உருவாகிறது.
படத்தின் தனித்துவமான ஈர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren), சோடா பாபுவாக (Soda Babu) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ( Sai Abhyankkar) இசையமைக்கிறார். துடிப்பு மிக்க இளம் திறமைகளின் பங்கேற்பில், “பல்டி” 2025 மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்தாக உருவாகிறது.
2007ஆம் ஆண்டு, நடிகர் மோகன்லாலுடன் நடித்த ஏஞ்சல் ஜான் (Angel John) என்ற திரைப்படத்தின் மூலம் சாந்தனு மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த படம், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர் தமிழ் திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி, வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்தார். வெகுகாலமாகவே அவரது மலையாள திரைப்படத்திற்காக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சாந்தனு தனது மலையாளக் கம்பேக்கைப் பற்றி கூறியதாவது:
“பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த படம் ஒரு புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்க சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.”
புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும், விளையாட்டு பின்னணியிலான அதிரடி திரில்லர் திரைப்படமான இந்தப் “பல்டி” படம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. STK ஃபிரேம்ஸ் மற்றும் Binu George Alexander Productions ஆகிய நிறுவனங்களின் சார்பில் சந்தோஷ் T. குருவில்லா (Santhosh T. Kuruvilla) மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் (Binu George Alexander) ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தின் அற்புதமான தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தயாரிப்புக் குழு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது மலையாள சினிமாவில் அபயங்கரின் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பாடலாசிரியர் விநாயக் சசிகுமாருடனான அவரது கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
"RDX: ராபர்ட் டோனி சேவியர்" திரைப்படத்தில் பணியாற்றியதற்காக பரவலாகப் பாராட்டப்பட்ட அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் J. புலிக்கல், இந்த நட்சத்திரக் குழுவில் இணைகிறார். இந்தப் படத்தை சிவகுமார் V. பணிக்கர் எடிட்டிங் செய்கிறார். ஷெரின் ரேச்சல் சந்தோஷ் இணை தயாரிப்பாளராகவும், சந்தீப் நாராயண் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இந்த படத்தில் கிஷோர் புறக்காட்டிரி தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், ஸ்ரீலால் M தலைமை இணை இயக்குநராகவும் ஒரு வலுவான குழு உள்ளது. இணை இயக்குநர்களில் சபரிநாத், ராகுல் ராமகிருஷ்ணன், சாம்சன் செபாஸ்டியன் மற்றும் மெல்பின் மேத்யூ (போஸ்ட் புரடக்சன்) தயாரிப்பு) ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான, நடிகர் சூரி நடித்த “மாமன்” திரைப்படம், வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. “மாமன்” குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.
மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ZEE5 இல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுக்க , டிஜிட்டல் பிரீமியர் செய்யப்பட்டது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, இந்த பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம், மக்களின் பேராதரவைப் பெற்று வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.
ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் “மாமன்” திரைப்படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துள்ளது.
ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான சிறப்பான படைப்புகளை பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான "சட்டமும் நீதியும்" சீரிஸ் மக்களின் பேராதாரவைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. தற்போது சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
“மாமன்” திரைப்படத்தை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக கண்டுகளியுங்கள்!.
சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி
ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்
இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்து வருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டது. அப்படி துவங்கப்பட்டது தான் காயல் திரைப்படம். நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை இன்று தான் பார்க்கிறேன். ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானாக வந்தடையும் , இந்தக்கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது. இன்னும் நல்ல கதைகளை திரைப்படமாக்குவதில் ஜெ ஸ்டுடியோ தயாராக இருக்கிறது . இந்த காயல் திரைப்படம் தமிழில் பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறேன்.
விழாவில் பேசிய இயக்குனர் தமயந்தி
இந்தக்கதை எனது வாழ்வில் நடந்த கதைதான். சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாத எண்ணங்கள் ஆண்கள் பக்கம் மட்டுமே அதிகம் இருப்பதைப்போன்று திரைப்படங்களும் , படைப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் உண்மையில் பெண்களிடம் மிக மிக அதிகம் இருக்கின்றது. காலங்காலமாக அதை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திசெல்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர் பெண்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் காயல். இந்தக்கதை திரைப்படமாவதற்கு தயாரிப்பதற்கு முன் வந்த தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் அவர்களுக்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும். படத்தின் கதாநாயகன் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாசகா, ஐசக் , ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தில் சிறப்பானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள் என்றார்.
விழாவில் பேசிய நடிகர் லிங்கேஷ்
இந்தப்படம் மிக முக்கியமான படம் எனது கேரியரில் , கதாநாயகனாக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யும் பொழுதே இந்தப்படம் என்ன மாதிரியான அதிர்வலைகளை சமூகத்தில் ஏற்படுத்தும், நமது பங்களிப்பு இந்த படத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை யோசித்து வைத்திருந்தேன். படத்தின் இயக்குனர் தமயந்தி அவர்கள் இந்தக்கதையை படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். அதுவும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக்க முயற்சித்திருப்பது வரவேற்கிறேன். ஒரு பொறுப்பானபடத்தில் நடித்த திருப்தி இருக்கிறது என்றார்.
விழாவில் பேசிய நடிகை அனுமோல்
தமயந்தி இந்த கதையை எனக்கு தயாரிப்பாளர் முடிவாவதற்கு முன்னாடியே சொல்லிவிட்டார், அப்போது நான் மலையாள படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதே நான் சொல்லிவிட்டேன் இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று, அதன்பிறகு சொன்னதைப்போலவே படம் துவங்கும் நேரத்தில் சொன்னது போல நடிக்க வந்துவிட்டேன். பெரும்பாலும் படப்பிடிப்பு கடற்கரை ஒட்டிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் எங்களுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதுவும் ஒரு பயணம் செய்யும் அனுபவத்தை தந்தது. இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் அதைவிட இப்படி பெண்களின் உண்மையான மனங்களில் இருக்கும் இன்னொரு பக்கத்தை சொல்ல துணிந்து சொல்லியிருக்கும் இயக்குனர் தமயந்திக்கு எனது பாராட்டுக்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன், டிராஸ்கிமருது, அதிஷா, இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகை ஸ்வாதகா, நடிகர் ஐசக், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'புல்லட்' படத்தை தயாரித்துள்ளார்.
விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.
'புல்லட்' படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர்.
எண்பதுகள் மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி இப்படத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் மீண்டும் தடம் பதிக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி 'புல்லட்' படத்தில் மிக முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே, ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'புல்லட்' படப்பிடிப்பு சென்னை, தென்காசி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன், “இது ஒரு முழு நீள அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது. இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி,” என்று கூறினார்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ‘டிமான்டி காலனி’, ‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை பேண்ட்டம் பிரதீப் வடிவமைத்துள்ளார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் 'புல்லட்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா