சற்று முன்
சினிமா செய்திகள்
சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது - தேஜா சஜ்ஜா
Updated on : 01 September 2025

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில்,
தேஜா சஜ்ஜா பேசியபோது,
“அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.
ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. AGS நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அர்ச்சனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்றி.
மிராய், என்றால் “எதிர்காலத்தின் நம்பிக்கை” என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது; அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.
மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால், சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.
இப்படத்தில் VFX பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் VFX-ல் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.
ஹனுமான் படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் மிராய் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.
இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.
இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, ஹிமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.
அனைவரும் வரும் செப்டம்பர் 12ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மிராய் படத்தை கண்டுகளிக்க வேண்டும். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.”
சமீபத்திய செய்திகள்
உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'
நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !!
நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி பாரடைஸ் படக்குழு இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்கானது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்வது முதல், துணிச்சலான புரமோஷன் வரை – ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த படம் இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வலியுறுத்துகிறது.
அந்த முயற்சியை மேலும் ஒரு படி முன்னேற்றி, ஹாலிவுட் #ConnekktMobScene நிறுவனத்தின் க்ரியேட்டிவ் கண்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் வைஸ் பிரெசிடெண்ட் அலெக்ஸாண்ட்ரா E. விஸ்கோந்தியை சந்தித்து, ஹாலிவுட் ஒத்துழைப்பை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிப்படையாக அறிவிக்கபடவில்லை என்றாலும், இந்த சந்திப்பு, தி பாரடைஸ் படத்தை, சர்வதேச தரத்தில் நிலைநிறுத்தும் படக்குழுவின் உறுதியை, மேலும் வலுப்படுத்துகிறது.
படக்குழுவினர் தொடக்கம் முதல், இந்த படத்தை சாதாரண பிராந்திய வெளியீடாக அல்லாமல், உலகளாவிய நிகழ்வாகவே நடத்தி வருகின்றனர். பல மொழிகள், பல சினிமா மார்க்கெட்டுகள், பல தரப்பான ரசிகர்களிடம் தீவிர விளம்பரங்கள் மூலம் இயற்கையான ஆர்வத்தை உருவாக்கியதால், படம் வெளியாவதற்கு முன்பே அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
2026 மார்ச் மாதம் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்கள் தி பாரடைஸ் படத்தை இந்தியாவில் இருந்து வெளிவரும், மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. மேலும் சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரை படத்தில் இணைத்து, சர்வதேச மொழி பதிப்புகளை உலகம் முழுவதும் வெளியிட ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே மாபெரும் கனவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு இன்னொரு உலகளாவிய பரிமாணத்தை சேர்க்கும்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ராகவ் ஜுயால் தனது டோலிவுட் அறிமுகத்தை நிகழ்த்தவுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை C.H.சாய் மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எடிட்டர் நவீன் நூலி, புரடக்சன் டிசைனர் அவிநாஷ் கொல்லா ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.
“தி பாரடைஸ்” படம், 2026 மார்ச் 26 அன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உட்பட உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகிறது.
சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கார்மேனி செல்வம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகிறது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, "அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்," என்றார்.
'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இசையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாளுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைக்கிறார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்தும் ‘ஈவா’ பாடல்!
இசையமைப்பாளர் பிரணாய் உருவாக்கிய ‘ஈவா’ பாடல், கறுமை அழகை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவை எவ்வாறு கறுமையில் எதிரொளிக்கின்றன என்பதை இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது.
கவிஞர் மதன் கார்க்கி எழுதிய வரிகள், கறுமை நிறப் பெண்களின் அழகை முன்னிறுத்தி, இயற்கையின் இருளை உவமையாகக் கொண்டு அழகைச் சிறப்பிக்கின்றன. பாடகர் கபில் கபிலன் குரல் கொடுத்துள்ள இந்தப் பாடல், லிரிக்கல் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டு, கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்துகிறது. பாடலின் ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை பஷாப் பட்டாசார்யா செய்துள்ளார். ‘ஈவா’ த்ரைவர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா மியூசிக் ஆகியவற்றின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சிவராஜ்குமார் நடிபில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!
ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood) பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா (Mandya) இமாச்சலப் பிரதேசம் ( Himachal Pradesh), மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN Productions இந்தப் படத்தை தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான Wadeyar Movies மற்றும் வெங்கட் கோனங்கி (Venkat Konanki) தலைமையிலான KVN Productions இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இதில் ஜெயராம், சாய் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே (Deshpande), பிரகாஷ் பெலவாடி (Prakash Belawadi) போன்ற மூத்த நடிகர்களும், சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) போன்ற இளம் திறமையாளர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
படம் முழுக்க வணிக அம்சங்களுடன் கூடிய கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகிறது. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ( Ajaneesh Loknath) இசையமைக்கிறார். ஷஷாங்க் நாராயண் (Shashank Narayan) எடிட்டிங்கை கவனிக்கிறார். சிவராஜ்குமார் – பவன் வடேயார் (Pavan Wadeyar) – KVN Productions ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால், இயல்பாகவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வரும் துல்கர் சல்மானின் 'லோகா'
துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் மிகத் துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய முடிவை எடுத்துள்ளார். இது மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வரலாற்றில் வித்தியாசமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே Wayfarer Films மாறியுள்ளது. இதற்கு முன் பல சிறந்த படங்களை மலையாள ரசிகர்களுக்குக் கொடுத்திருந்தாலும், “லோகா” மூலம் இந்த பேனர் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. துல்கர் சல்மான் எடுத்த துணிச்சலான இந்த முயற்சி, இந்திய சினிமாவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் துல்கரின் பங்களிப்பு லோகா மூலம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
இப்படத்தின் முக்கிய சிறப்பாகத் திகழ்வது இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி கொடுத்த காட்சிகள், இது உண்மையிலேயே ஒரு மலையாளப் படமா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு உலகத் தரத்தில் இருக்கின்றன. புரடக்சன் டிசைனர் பங்களன் ( Banglan) மற்றும் ஆர்ட் டைரக்டர் ஜீது செபாஸ்டியன் (Jithu Sebastian) சேர்ந்து இந்த படத்தின் அதிசயமிக்க, வண்ணமயமான, மர்மமிகு உலகை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் (Jakes Bejoy) , தனது பின்னணி இசையின் மூலம் ரிதம், திரில் மற்றும் உணர்ச்சி ஆழத்தை வழங்கியுள்ளார். சாமன் சகோவின் கூர்மையான எடிட்டிங் மற்றும் யானிக் பென் வழங்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
கேரளாவிலும், சர்வதேச அளவிலும் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் தரப்பிலும் வலுவாகச் செல்கிறது. முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் தனது சிறப்பான நடிப்புக்காக பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பன்முகப்படுத்தப்பட்ட சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகமாக வெளிவந்துள்ள லோகா, ரசிகர்களின் இதயத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டது.
சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம்... - இயக்குநர் கார்த்திகேயன் மணி
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது…
எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும் ரசிக்கும் படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அன்பே சிவம். அன்புதான் நம்மை எல்லோரையும் ஒன்றிணைக்கும். அதை இந்தப்படம் செய்கிறது. நன்றி.
GEMBRIO PICTURES சார்பில் சம்விதா பாலகிருஷ்ணன் பேசியதாவது…
அன்பைத் தாண்டி இந்தப்படத்தில் எல்லோரையும் இணைக்கும் வேறு ஒரு விஷயமும் உள்ளது. டிரெய்லர் பார்த்தால் உங்களுக்குப் புரியும். படத்துக்கு அப்பாற்பட்ட வகையில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. இமான் சார் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளன. நாங்கள் படம் பார்த்த போது பெற்ற சந்தோஷத்தை, நீங்கள் அனைவரும் உணர்வீர்கள். இந்தப் படத்தை வெளியிடும் சக்திவேலன் சாருக்கு நன்றி.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது…
தயாரிப்பாளர் சுதா மேடமுக்கு நன்றி. விஷாலும் நானும் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தோம். அங்கிருந்து தொடங்கிய பயணம் இன்று இணைந்து படம் செய்வதற்கு வழிவகுத்தது. இமான் சார் சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
நடிகர் சரவணன் பேசியதாவது…
இயக்குநர் விஷால் வெங்கட்டை, நான் வாய்ப்பு தேடி அலையும் போது, “நரை எழுதும் சுயசரிதம்” பட ப்ரிவ்யூவில் சந்தித்தேன். அவர் இயக்கிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” மிகச்சிறந்த படம். மிக நல்ல கலைஞர். அவரிடம் ஆசைப்பட்டுக் கேட்டு, கெஞ்சியும் வாங்கி நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் டி. எஸ். கே பேசியதாவது…
போன வருடம் லப்பர் பந்து, இந்த வருடம் பாம். அந்தப் படத்தில் நடித்த பல நண்பர்கள் இதிலும் நடித்துள்ளனர். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதற்கு முன் காமெடி தான் செய்து கொண்டிருந்தேன்; ஆனால் என்னை நம்பி விஷால் வெங்கட் ஒரு நல்ல வேடம் தந்தார்.அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்து அவரிடம் வாய்ப்பு கேட்டேன். இரண்டு வருடம் கழித்து அவரே கால் செய்து இந்த வாய்ப்பை தந்தார் – அவருக்கு நன்றி.இமான் சார் ரசிகன் நான்; அவருடைய பாடல்களை மிமிக்ரி செய்து வந்தவன். அவருடைய படத்தில் நடித்தது பெருமை. ஏ, பி, சி ஆடியன்ஸை கவரும் இசையமைப்பாளர் இமான் சார் – அவருக்கு நன்றி.மாஸ் ஆக்ஷனாக நடித்த அர்ஜூன் தாஸை, முழுக்க முழுக்க சாஃப்டாக காட்டும் படமாக இது இருக்கும். ஷ்வாத்மிகா ஹீரோயின் மாதிரி நடக்கவே மாட்டார்; மிக இயல்பாகப் பழகுவார். ஒரு ஹேப்பியான உணர்வைத் தரும் சிறப்பான படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி.
TrendMusic ஜித்தேஷ் பேசியதாவது…
இப்படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சுதா மேடம் இந்த படத்தை நம்பி தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். படம் பார்த்தோம் மிகச் சிறப்பாக இருந்தது. அர்ஜூன் தாஸை வேறு கலரில் காட்டியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசையில் நாங்கள் பங்கு கொண்டது மகிழ்ச்சி. மணிகண்டன், காளி வெங்கட் எனப் பல திறமையாளர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளார்கள். இமான் அற்புதமான இசையை தந்துள்ளார். செப்டம்பர் 12 எல்லோரும் திரையில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
எழுத்தாளர்கள் மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன் பகிர்ந்து கொண்டதாவது…
விஷாலுடன் நாங்கள் ஒரு டீக்கடையில் பேசி, பேசி உருவானது தான் இந்தப்படத்தின் கதை. அவர் எல்லோரையும் போல எங்களிடமும் வேலை வாங்கினார். இந்தப்படத்தில் பெரிய கருத்தெல்லாம் பேசாமல், உங்களைச் சிந்திக்க வைக்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளோம்.
அன்பென்றால் என்ன என்பதை இப்படம் பேசியுள்ளது. ரைட்டிங்கில் இல்லாத பெரிய விஷயத்தை ஒரு ஷாட்டில் காட்டி தான் இயக்குநர் என்பதை விஷால் வெங்கட் நிரூபித்திருக்கிறார்.
டிரெய்லர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறோம். படத்தில் மிகச் சிறந்த செய்தி இருக்கும். அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…
இந்தப்படம் பார்த்து மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுகுமார் சார் செய்யாத தொழிலே இல்லை. எல்லாவற்றிலும் ஜெயித்துள்ளார். படத்திலும் ஜெயிக்கலாம் என வந்துள்ளார். அடுத்த மாதத்தில் பெண்களுக்கென ஒரு சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்கவுள்ளார். அவரிடம் நிறைய புது ஐடியாக்கள் உள்ளது. அவர் போல நிறையப் புதுமுகங்கள் திரைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் காளி வெங்கட் அற்புதமாக நடித்துள்ளார். இப்படம் மண்டேலா, முண்டாசுபட்டி படங்கள் போல இனிமையான படமாக இருக்கும். அர்ஜூன் தாஸுக்கு ஒரு புதுமையான படமாக இருக்கும். அவர் இயக்குநர் கேட்டதை அப்படியே தந்துள்ளார். இமான் பாமர மக்களுக்கான எளிய இசையைத் தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர். அவருடைய தேவை இங்கு நிறைய இருக்கிறது. எல்லோரும் இணைந்து அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இந்தப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவரும் முழு உழைப்பையும் தந்துள்ளார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.
இயக்குநர் ரா பார்த்திபன் பேசியதாவது…
பாம் படத்தை பற்றி என்ன பேசுவது என நிறைய யோசித்தேன். முதலில் வாயு பகவானை வணங்கித் தொடங்குவோம். இந்த மாதிரி கதையை டைட்டிலை தேர்ந்தெடுக்கனும் என்றால் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும், இதைத் தயாரிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில் தான் இது மாதிரி பார்த்திருப்போம். ஆனால் அதைத் தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம், அதை இந்தப்படக்குழு சாதித்துள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் எப்போதும் கண்டென்ட் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இந்த கண்டென்ட் அவருக்கு பிடித்திருக்கிறது. இமான் ஏ பி சி செண்டர் மட்டுமில்லை டி செண்டரையும் கவர்ந்து விடுவார், அதனால் தான் அவர் டி. இமான். தயாரிப்பாளர் சுகுமார் இல்லை சதா தான் – ஆம், சதா. சுதாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார். அதனால் சுதா இல்லை சதா தான் தயாரிப்பாளர். நான் எப்போதும் ஹீரோயின் பார்த்து தான் படம் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் அர்ஜூன் தாஸைப் பார்த்தால் ஹீரோவை மையமாக வைத்துப் படமெடுக்கத் தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன் – நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.
நடிகர் காளிவெங்கட் பேசியதாவது…
இந்தப்படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு விஷால் வெங்கட்டுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது அவர் நடிப்பேனா என்ற சந்தேகத்திலேயே இருந்தார். அருமையான கேரக்டர் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. எத்தனை கோடி சம்பாதித்தாலும் தன் பிணக்கோலத்தைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் இப்படத்தில் கிடைத்தது. அர்ஜூன் தாஸுடன் அநீதிக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறோம். படத்தில் என்னைத் தூக்கிச் சுமந்து நடித்துள்ளார், அவருக்கு என் நன்றி. சக்தி ஃபிலிம் ரிலீஸ் என்றார்கள் – படம் வெற்றி தான். தயாரிப்பாளர்கள் என்னை அமெரிக்கா கூட்டிப்போவதாகச் சொல்லியுள்ளார்கள். மறந்து விடாதீர்கள். இது மிக நல்ல படம். ஆதரவு தாருங்கள். எல்லோருக்கும் நன்றி.
இயக்குநர் கார்த்திகேயன் மணி …
இந்தப்படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமானதாக உள்ளது. காளிவெங்கட் சார் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிக்கும் போது இந்தப்படம் பற்றிச் சொன்னார். அவர் சின்ன வயதிலேயே எத்தனை விதமான பாத்திரங்கள் செய்துவிட்டார். ஒரு முறை சேவலாக நடித்து காட்டி அசத்தினார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் சண்முகபிரியன் …
விஷால் வெங்கட் மிக நல்ல மனிதர். எனக்குப் படம் காட்டினார், அட்டகாசமாக இருந்தது. ஷிவாத்மிகா ஃபேன் நான், அருமையாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸை எப்படி இந்த கதாபாத்திரத்தில் யோசித்தார் எனத் தெரியவில்லை. அவர் என்ன கொடுத்தாலும் செய்வார் என்பதற்கு இந்தப்படம் சாட்சி. எல்லோரும் மிக அட்டகாசமாக நடித்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் டி. இமான் …
இப்படம் முள்ளு மேல் நடப்பது மாதிரியான ஒரு கதை, ஆனால் அதை மிக கவனமாக அழகாக எடுத்துள்ளார் விஷால் வெங்கட். சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்தவுடன் அவருடன் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். அவருடன் பணிபுரிந்தது மிக மிக சந்தோசமாக இருந்தது. நம் மண்ணின் கதை சொல்லும் இந்த மாதிரி படங்களுக்கு நம் மண்ணின் இசை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படத்தில் முறையான புதுமுக பிளேபேக் சிங்கர்ஸ் பாடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அர்ஜூன் தாஸ் தன் பிம்பத்தை உடைத்து புதிதாகச் செய்கிறார். வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி.
இயக்குநர் லோகேஷ் …
அர்ஜூன் தாஸ் பிரதர் அவருடைய இமேஜை உடைத்து இப்படத்தைச் செய்துள்ளார். ஷிவாத்மிகா இப்படத்தில் நேரில் நடிப்பதைப் பார்த்தேன் – மிகச் சிறப்பாக நடித்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். காளி வெங்கட் சார் நிறைய இடத்தில் என் அப்பாவைப் பிரதிபலித்தார் – மிகச்சிறந்த நடிகர். வாழ்த்துக்கள். விஷால் வெங்கட்டும் நானும் புரொடக்ஷன் மேட், தயாரிப்பு கம்பெனியில் சந்தித்தோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். விஷால் எந்த பிரச்சனையையும் ரொம்ப கேஷுவலாக எடுத்துக்கொள்வார். நம் வெற்றியை அவர் வெற்றியாகக் கொண்டாடுவார். இப்படி ஒரு கதையைப் படமாக்கும் தைரியம் இவரைத் தவிர யாருக்கும் வராது. கண்டிப்பாக இந்தப்படம் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ஶ்ரீகணேஷ் …
விஷாலின் முதல் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அவரை தேடி கால் செய்து பேசினேன். அவரின் இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்பது இங்கு பேசியவர்கள் மனதிலிருந்து தெரிகிறது. அர்ஜூன் தாஸுக்கு இந்தப்படம் அவரை புது டைமென்ஷனில் பார்க்கும் படமாக இருக்கும். டி. இமான் சார் செய்யும் புது விஷயம் – இவ்வளவு புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு தருவது மிகப்பெரிய விஷயம். காளி அண்ணா இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருத்தர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி …
விஷால் பிரதர் கதை சொன்ன போது யார் நடிக்கிறார்கள் எனக் கேட்டேன், அர்ஜூன் தாஸ் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் படம் பார்த்து அசந்து விட்டேன். வில்லன் நடிகர் இன்னொசன்ஸை செய்வதை இந்தியாவிலேயே சிறப்பாக செய்பவர் ரஜினி சார். அவருக்கு அப்புறம் அர்ஜூன் தாஸ் தான். காளி வெங்கட் அண்ணன் டான் பைலட் ஃபிலிமில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்து தந்தார். சினிமாவை உண்மையாக நேசிப்பவர், அவர் திறமைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. விஷால் வெங்கட்டும் நானும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். இப்படத்தில் அவர் இயக்குநராக இல்லாமல் எல்லா வேலையும் பார்த்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய விஷயத்தை மிக எளிமையாகப் பேசுகிறது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் மணிகண்டன் …
இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருமே என் நெருங்கிய நண்பர்கள் தான். கிட்டதட்ட எல்லா துறையில் வேலை பார்த்தவர்களும் என் நண்பர்கள். அவர்கள் எல்லோரும் இப்படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. காளி அண்ணா யார் என்ன உதவி, எந்த சமயத்தில் கேட்டாலும் செய்யத் தயங்காதவர். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது. இமான் சார் வெரைட்டியான சாங்ஸ் தரும் வெகு சில இசையமைப்பாளர்களில் ஒருத்தர். அவர் இசையமைத்தது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் தாஸ் அவர் முதல் படத்திலேயே எப்படி அவ்வளவு கான்ஃபிடன்ஸ்-ஆ அந்த கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. தொடரும் அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார். விஷால் வெங்கட் 2008 ல் இருந்து பழக்கம். அவன் அனுபவித்த தடைகளை, அனுபவித்த வலிகளை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவன் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவன் வெற்றி எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிபெறும். நன்றி.
நடிகை ஷிவாத்மிகா …
எனக்கு வாய்ப்பு தந்த சுகுமார் சார், சுதா மேம் இருவருக்கும் நன்றி. இமான் சார் இசைக்கு நான் ரசிகை. அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. காளி வெங்கட் சார் மாதிரியான ஒரு நடிகரோடு நடித்தது பெருமை. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. விஷால் சார் பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் செய்துள்ளார். எங்களை விட அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி. அர்ஜூன் தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் விஷால் வெங்கட் …
GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட் சாரிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன
முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள்! - இயக்குநர் ஆர். கே. செல்வமணி
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசியவர்கள்
தயாரிப்பாளர் மகேஷ்:
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.
ஒளிப்பதிவாளர் சூரஜ்:
நன்றி சொல்வதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. நானும் இயக்குநர் சாமும் கல்லூரி முதலே நண்பர்கள், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி, நன்றாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர்:
கடவுளுக்கு நன்றி. நல்ல மனிதர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். என் சவுண்ட் இன்ஜினியர் கிபிக்கு நன்றி. என்னோடு வேலை செய்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.
மாஸ்டர் ரகு:
நான் மாஸ்டராக கார்டு வாங்கிய பிறகு செய்த முதல் படம் இது. எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். சூரஜ் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். தேவ் மிகப்பெரிய உழைப்பாளி. என்னோடு உழைத்த டான்சர்களுக்கும் நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி:
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சாம் சார் மற்றும் மகேஷ் சாருக்கு நன்றி. படம் மிக அற்புதமாக வந்துள்ளது. கண்டிப்பாக நீங்கள் திரையில் ரசிப்பீர்கள். சமுத்திரக்கனி அண்ணாவின் நிமிர்ந்து நில் படத்தில் நானும் சாமும் வேலை பார்த்துள்ளோம். இப்போது நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொல்வதில் பெருமை. இப்படத்தில் அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
எழுத்தாளர் ராம்ஸ் முருகன்:
இது என் நண்பனின் படம் என்பதில் பெருமை. சமுத்திரக்கனி சார், அமீர் சார் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மகேஷ் அவரைப் பார்த்தால் அவர் தயாரிப்பாளர் போலவே தெரியவில்லை, நண்பராகவே இருந்து வருகிறார். இப்படத்தை மிகுந்த உழைப்பில் உருவாக்கியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
TrendLoud சார்பில் ஜிதேஷ்:
தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நன்றி. அவர் மிக பாசிடிவானவர். சகிஷ்னா சேவியர் ஒரு படத்தில் 6 பாடல்கள் கிடைப்பது அரிது என்றார், அந்த ஆறு பாடல்களும் TrendLoud க்கு கிடைத்தது சந்தோஷம். எல்லா பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் அருமையாக வந்துள்ளது. தேவ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள்.
VJ நிக்கி:
நான் நிறைய மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். பத்திரிக்கையாளனாக இருந்துள்ளேன். அங்கிருந்து இன்று இங்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். மிகப்பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஒரு நாள் கால் வந்து, “நீதான் ஹீரோ, ஆபீஸ் வா” என்றார்கள். நான் பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் செகண்ட் லீட் என்று சொல்லி ஷூட்டிங் கூப்பிட்டுப் போய் விட்டார்கள். அங்கு ஆகாஷ் பிரேம், திவாகர், யுவராஜ் எல்லோரிடமும் நீ தான் செகண்ட் லீட் என்று சொல்லி இருந்தார்கள். நான் படம் நடிக்கிறேன் என்பதை என் அப்பாவே நம்பவில்லை. இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. படம் சூப்பராக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகர் ஹார்ட் பீட் கிரி:
இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. “You Only Live Once” என்பதுதான் யோலோ. தலைப்பே சிறப்பாக உள்ளது. நண்பர்களாகப் பெரிய ஆளுமைகள் வாழ்த்த வந்துள்ளதில் மகிழ்ச்சி. சாம் சார் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
Generous Entertainment சார்பில் கோகுல்:
இப்படத்தை வெளியிடும் உரிமையை Generous Entertainment நிறுவனத்திற்குத் தந்ததற்கு நன்றி. மகேஷ் சார் இப்படத்தை தயாரித்து உழைத்ததைப் பற்றிப் பேசினார். புது முகங்களை நம்பி வாய்ப்பு தந்த இந்த குழுவிற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு தர வேண்டும். தேவ் சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார். இப்போது தான் ஹீரோவாக மாறியுள்ளார். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் ஆகாஷ் பிரேம்:
படத்தில் மதன் கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று நம்பி என்னை அழைத்த உதவி இயக்குநர் ஸ்டீபன் சாருக்கு நன்றி. அவர் வார்த்தையை நம்பி எனக்கு வாய்ப்பு தந்த சாம் சார், மகேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் மிகச்சிறந்த தயாரிப்பாளராக வருவார். ஒரு வருடத்திற்கு முன் இப்படத்திற்குப் பூஜை போட்டோம். இப்போது படம் முடிந்து வந்துவிட்டது. இந்த திட்டமிடல் சினிமாவில் மிகப்பெரிய விஷயம். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களை அழகாக காட்டிய சூரஜ் சாருக்கு நன்றி. இப்படத்தில் நான் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் சாருக்கு நன்றி. வயலண்ட் படங்களுக்கு மத்தியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் படமாக இது இருக்கும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் படவா கோபி:
2009 லேயே என்னை நடிகனாகச் செதுக்கி இப்போது ஸ்கூல் பஸ் படத்திலும் வாய்ப்பு தந்த சமுத்திரக்கனி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் நான் முதலில் காமெடி தான் செய்வதாக இருந்தேன், ஆனால் சாம் தான் என்னை ஹீரோயின் அப்பாவாக நடிக்க வைத்தார். என்னுடைய மகள் 5 வயதில் இருந்தபோது தவறிவிட்டார். ஆனால் டீனேஜில் மகள் என்ன செய்வார் என்பதை இப்படம் மூலம் அனுபவித்தேன். இப்படத்தின் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. சாம், ராம் இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள். செப்டம்பர் 12 படம் வருகிறது – ஒரு இளமை கொண்டாட்டம். அனைவரும் பார்த்து ரசிக்கவும். நன்றி.
நடிகை தேவிகா:
நான் தமிழில் செய்யும் முதல் படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி. சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்த போது, சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் மிக அருமையாக வந்துள்ளது. செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி.
தயாரிப்பாளர் K.V. துரை:
நாங்கள் Access Film Factory-யில் நிறைய புது திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் குழுவிலிருந்து ஒரு திறமையாளரான தேவ்வை இப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. டிரெய்லர் அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயக்குநர் சதீஷ்:
படக்குழு அனைவருமே இளமைத் துள்ளலுடன் இருக்கிறார்கள். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. சாம் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார். தேவ் எனக்குத் தம்பி மாதிரி. அவன் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. சிறப்பாக வர வேண்டும். வாழ்த்துகள்.
இயக்குநர் ARK சரவணன்:
டிரெய்லர் நன்றாக உள்ளது. அதில் ஒன்றை மறைத்து வைத்துள்ளனர், அது படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். தேவுக்காக தான் வந்துள்ளேன். அவரிடம் தான் முதலில் மரகதநாணயம் கதை சொன்னேன். Access Film Factory-யில் அவர் நிறைய உழைத்துள்ளார். இப்போது ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் டெல்லி சார் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தேவ் பெரிய ஹீரோவாக வர வாழ்த்துக்கள்.
நடிகர் தேவ்:
இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி
இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குத் தீமையே தெரியாது, நன்மை தான் செய்வார். மிகச் சிறந்த இயக்குநர்களை, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பல முறை சொல்லியுள்ளார். இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி. அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.
"YOLO" என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம்.
இந்த படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். சகிஷ்னா வரும்போதே 6 பாடலுடன் வந்துள்ளார். சாம், சமுத்திரகனி, அமீர் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறார், அதுவே அவர் திறமையைச் சொல்லும்.
எனக்கு முதல் படத்துக்குச் சம்பளம் ₹14,000 தான். ஆனால் அடுத்த படத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள். முதல் படத்தோட பட்ஜெட் என்னவோ அது தான் உங்கள் சம்பளம். ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அது தான் என் சம்பளம். அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும். இப்படத்திற்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.
இயக்குநர் அமீர்
இந்த விழாவில் கலந்து கொண்ட எங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் பெருந்தன்மையோடு காரணமில்லாமல் கலந்து கொண்ட அண்ணன் ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு நன்றி.
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு "கேப்டன்" எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்கு பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.
என்னுடைய முதல் படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்கு தெரியாது. "சார், உங்களோடு தான் ஒர்க் பண்ணேன்" என சொன்னால் "அப்படியா, சரி ஓகே" அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டும் தான் ஒர்க் பண்ணியிருப்பான். அடுத்த ஷெட்யூலில் இருக்க மாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு தான். அதில் சாம் ஒருவர்.
எல்லாரும் கனி பற்றி தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன். பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான். இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது. பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: "ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?" என்று. அவருடைய மாமா நிறைய புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன், பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.
தேவ் தன் அப்பா அம்மா இந்த மேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பது போல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை. பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை. நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.
நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான், கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான். ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது.
படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பேசினார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். நன்றி.
இயக்குநர் சாம்
முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.
நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.
கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். "எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்" என்பார். அவர் இந
1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கிய பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு!
குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.
மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், படக்குழு மைசூரில் குளோபல் ஸ்டார் ராம் சரண் பங்கேற்க, பிரம்மாண்டமான பாடலைக் காட்சிப்படுத்த தொடங்கியுள்ளது. பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் இசையமைத்த இந்த மாஸ் பாடல், மிகப்பெரிய அளவில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்கப்படுகிறது. ராம் சரண் தனது தனித்துவமான கவர்ச்சி மற்றும் ஆற்றல்மிகு நடன அசைவுகளால் ரசிகர்களை கவர, இந்தப் பாடல் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும், ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகத்தில் இருந்தாலும், “பெத்தி” குழுவினர் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் ஜகபதி பாபு (Jagapathi Babu) மற்றும் திவ்யேந்து ஷர்மா ( Divyendu Sharm) முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
பெத்தி 2026 மார்ச் 27 அன்று பான்-இந்திய ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி வெளியிட்ட அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான 'ரைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
நட்டி, அருண் பாண்டியன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் “ரைட்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்?, இது தான் இப்படத்தின் மையம்.
ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்முறையாக முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு
சன்லைட் மீடியா நிறுவனம் சார்பில் ஏழுமலை எஸ்.சந்திரசேகர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் குருச்சந்திரன் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மலையப்பன்’. மதுரை மாவட்ட கிராமம் மற்றும் மக்களின் வாழ்வியல் சார்ந்த கதையாக உருவாகும் இப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் அறிமுகமாகும் குருச்சந்திரன், பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`குருச்சந்திரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, பேரரசு, ஷரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
’லோக்கல் சரக்கு’ மற்றும் ‘கடைசி தோட்டா’ படங்களுக்கு இசையமைத்த வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு ரகமாக மக்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் பாடல் ஒன்றை பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாட இருக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கிய ‘மலையப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை நகரில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் நேற்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது.
“வேஷங்கட்டிக்கிட்டு...” என்று தொடங்கும் வீரமிக்க மற்றும் உத்வேகம் தரக்கூடிய முதல் பாடல்காட்சியோடு தொடங்கிய படப்பிடிப்பில், இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழி, ஆக்ஷன் சொல்ல, நடன இயக்குநர் இராம்தாஸ் முருகன் நடன அமைப்பில், இயக்குநரும் கதையின் நாயகனுமான குருச்சந்திரன் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார்.
படப்பிடிப்பு துவக்க விழாவில் ஏழுமலை திருவள்ளுவர் கல்லூரி தலைவர் பெருமாள், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.ஆர்.பாண்டியன், ஊரின் முக்கிய பிரபல தொழிலதிபர்கள், ஊர் பொதும்மக்கள் மற்றும் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், இணைத் தயாரிப்பாளர்கள் திருப்பூர் செ.செல்வம், கணேஷ் ஸ்டுடியோ கோபி, சா.சுப்பையா, குஜராத் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
படப்பிடிப்பு தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கேமரா தடம் பதியாத இடங்களில் ஒரே கட்டமாக படமாக்கப்பட உள்ளது. குறிப்பாக இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத மதுரை பகுதிகளையும், அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் கமர்ஷியல் ஆக்ஷன் பாணியில் மட்டும் இன்றி உணர்வுப்பூர்வமாக சொல்லும் படமாக ‘மலையப்பன்’ உருவாகி வருகிறது.
தேவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்க, காதல் மதி பாடல்கள் எழுதுகிறார். ஜெ.சரவணன் படத்தொகுப்பு செய்ய, கிளாமர் சத்யா மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா