சற்று முன்
சினிமா செய்திகள்
மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'
Updated on : 23 September 2025
பிரதமர் நரேந்திர மோதியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோதியாக நடிக்கிறார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். மோதியின் அதிகம் வெளிவராத உணர்வுப்பூர்வமான பக்கங்களை பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் படம். நரேந்திர மோதியின் 75 ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று இந்தப் படம் குறித்தான அறிவிப்பும் வெளியானது.
சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிராந்தி குமார். C. H. இயக்கும் 'மா வந்தே' படம் மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும். குஜராத்தில் ஆரம்பித்த அவரது பயணம் இந்தியாவை செதுக்கும் நபராக அவர் எவ்வாறு மாறினார் என்பதையும் காட்ட இருக்கிறது.
இதுகுறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்து கொண்டதாவது, "மரியாதைக்குரிய இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்களாக 'மா வந்தே' படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல! பெரிய பொறுப்பு. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்" என்றார்.
மலையாள சினிமாவில் தனது திறமையான நடிப்புக்கு பெயர் பெற்ற உன்னி முகுந்தன், மோதி கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு பெருமகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருபதாகவும் கூறுகிறார். "ஒரு விஷயத்தில் இருந்து எப்போதும் பின்வாங்கக் கூடாது" என்று தன்னிடம் மோதி சொன்னதை தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையிலும் பின்பற்றுவேன் என்கிறார்.
மோதிக்கும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோதிக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் 'மா வந்தே' (அம்மா நான் உன்னை வணங்குகிறேன்) எனப் படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவே படத்தின் மையக் கருவாக இருக்கும் என்றும் இந்தப் படம் மூலம் மோதியின் இன்னொரு பக்கத்தையும் அவரின் வளர்ச்சியையும் பார்வையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார் இயக்குநர் கிராந்தி குமார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "இது அரசியல் கதையோ பிரச்சாரமோ கிடையாது. அன்பான தாய்- மகன் பற்றியது. அன்பு, ஒழுக்கம் போன்றவை ஒரு தேசத்தை வழிநடத்தும் மனிதனின் பயணத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது பற்றியது" என்றார்.
இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பான் இந்திய மொழிகளில் படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
'மா வந்தே' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட பயோபிக் படங்களில் ஒன்றாக 'மா வந்தே' இருக்கும் என படக்குழு உறுதியளிக்கிறது.
உன்னி முகுந்தனின் பிறந்த நாளான இன்று படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்ஸ் வெளியிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் .
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா