சற்று முன்
சினிமா செய்திகள்
சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு
Updated on : 29 January 2026
Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி, சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முழுமையாக வசனங்கள் இன்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வழக்கமான சினிமா மரபுகளை உடைத்து, காட்சிகளின் வலிமை மற்றும் உணர்ச்சியின் ஆழம் மூலம் கதை சொல்லும் ஒரு துணிச்சலான முயற்சியாக திகழ்கிறது.
இன்றைய சினிமா சூழலில் ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவை மேலோங்கி நிற்கும் நிலையில், “காந்தி டாக்ஸ்” தன்னடக்கம், மௌனம் மற்றும் நம்பிக்கையுடன் தனது வருகையை பதிவு செய்கிறது. டிரெய்லரில் இடம்பெறும் பதற்றம் நிறைந்த மௌனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் மற்றும் ஆழமான பார்வைகள், வார்த்தைகள் இல்லாமலேயே பல விஷயங்களைச் சொல்லி விடுகின்றன. இது காதுகளால் மட்டுமல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வைக்கும் ஒரு தனித்துவமான சினிமா அனுபவமாக அமைந்துள்ளது.
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நுணுக்கமான, உள்ளார்ந்த நடிப்புகள் டிரெய்லரில் வெளிப்படையாக தெரிகின்றன. வசனங்கள் இல்லாததால், நடிகர்களின் முகபாவனைகளும், அவர்களின் இருப்பும் தான் கதையின் மையமாக மாறி, உணர்வுப்பூர்வமான மோதல்களுக்கு வலுவூட்டுகின்றன.
படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி ..,
“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மௌனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது.” என்றார்.
படம் குறித்து அரவிந்த்சாமி கூறுகையில்..,
“சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மௌனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை ‘காந்தி டாக்ஸ்’ நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது.” என்றார்.
படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை பற்றி அதிதி ராவ் ஹைதாரி கூறியதாவது..,
“வார்த்தைகளை விட உணர்வுகள் தான் இதில் என்னை அதிகம் நெகிழ வைத்தது. மௌனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது.”
சித்தார்த் ஜாதவ் கூறியதாவது..,
“உரையாடலின்றி இவ்வளவு வலிமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது உண்மையிலேயே சிறப்பு. வார்த்தைகளைத் தாண்டி பேசும் சினிமாவின் உலகமொழியை இது மீண்டும் நினைவூட்டுகிறது.”
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசனங்கள் இல்லாத இந்த உலகத்தில், இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் ஆழமான உணர்ச்சியுடன் உயர்த்துகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட கச்சேரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, பாரம்பரிய சினிமா மற்றும் இசையின் சங்கமத்தை கொண்டாடும் வகையில், ஒரு துணிச்சலான மற்றும் மரபு மீறிய விளம்பர அணுகுமுறையை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த முயற்சி, படத்தின் தத்துவம், கலை நோக்கம் மற்றும் அனுபவபூர்வமான சினிமா மொழியை தெளிவாக பிரதிபலிக்கிறது.
“காந்தி டாக்ஸ்” மூலம், Zee Studios மற்றும் தயாரிப்பாளர்கள், விதிமுறைகளைத் தாண்டி, நுணுக்கமான நடிப்பையும், மௌனத்தின் சக்தியையும் கொண்டாடும் படங்களுக்கு தங்கள் உறுதியான ஆதரவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தும் இந்த திரைப்படத்தை, தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்ச்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.
“காந்தி டாக்ஸ்” திரைப்படம் 2026 ஜனவரி 30 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்திய செய்திகள்
பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!
கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில், இயக்குநரும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற இந்த வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் உற்சாகத்துடன் சென்னையில் வெற்றி விழாவை ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு, வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், '' அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் ஐந்தரை மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். ஒரு நாள் தான் வருவார் என்று எதிர்பார்த்தால்.. ஒவ்வொரு நாளும் இதே போல் வந்தார். அவருடைய கடுமையான உழைப்பிற்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்.
பவானி ஸ்ரீ யுடன் பணியாற்றும் போது ஒரு முறை கூட எனது பெயரை முழுவதுமாகவும், சரியாகவும் உச்சரித்ததில்லை.
பிரிகிடா இந்தப் படத்திற்காக நடித்த நாட்களை விட , இப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக நிறைய நாட்கள் எங்களுடன் இணைந்து பயணித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் பாலாமணி மார்பன் நான் குறும்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே என்னை ஒளிப்பதிவாளராக பணியாற்ற செய்ய வேண்டும் என நினைத்தவர். இறுதியாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.
நாங்கள் பாதி தூரம் சென்ற பிறகு எங்களை கை தூக்கி ஆதரவளித்தவர் தயாரிப்பாளர் அனில்.
'மங்காத்தா'வில் குறிப்பிடுவது போல் செந்தில் சார் இறுதியாக தான் வந்தார். வந்தவுடன் இப்படம் ஜனவரி 23 வெளியாகும் என்று சொன்னார். படம் வெளியானது. இப்படத்திற்கு வெற்றி விழா நடைபெறும் என்றார். அது தற்போது நடைபெறுகிறது.
கடைசியாக வந்த ஸ்டுடென்ட் போன்றவர் ராபின். அவுட் ஆஃப் சிலபஸில் இருந்து வந்து, அனைவரையும் வென்றுவிட்டார்.
விஜய் டிவி அமருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் சிரித்துக் கொண்டே இருப்போம்.
இப்படி படக் குழுவினர் அனைவரும் மறக்க இயலாத அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இந்த வெற்றி விழாவில் நடிகை சஞ்சனா திவாரி பேசுகையில், '' இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டிருப்பதை மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் மீதும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மீதும் ரசிகர்கள் அன்பு செலுத்துவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கும்? என்று பதட்டத்துடன் இருந்தேன். இதற்காக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ,தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், '' இந்தப் படத்திற்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் வழங்கிய பேராதரவு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதற்குப் பின்னர் ரசிகர்களும் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களுடைய வாய் மொழியால் படத்தை பாராட்டி கொண்டாடினர். மூன்று கதைகளுக்கும் பெரும் ஆதரவும் , வரவேற்பும் கிடைத்தது. எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எங்களுக்கு சாதகமாக பல விசயங்கள் நடைபெற்றிருக்கிறது. தற்போது கூட திருச்சி- தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். இதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல கன்டென்ட் இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு இந்த படம் மீண்டும் ஒரு சாட்சியாகி, வெற்றி பெற்று இருக்கிறது இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இது போன்றதொரு வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் , தயாரிப்பாளர்கள், இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை பிரிகிடா சகா பேசுகையில், '' இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய வெற்றி படம் இது. எங்கள் திரைப்படத்திற்கு எவ்வளவு பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இதன் மூலம் தற்போது லைக் மைண்டட் பீப்புள் நிறைய பேர் வருகிறார்கள் என தெரிகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் இப்படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம். இதற்காக இயக்குநருக்கு நன்றி. ஒரு வெற்றி பெற்ற படத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் உள்ள எண்ணமாக இருக்கும்.
இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை பற்றி இயக்குநர் சொன்னபோது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறதே..! ஏற்று நடிக்கலாமா? என முதலில் தயங்கினேன். இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். 'நான் ஒரு லெஸ்பியன் என்று '.. இதனை பேசும்போது முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் உணர்வு உணர்வு தான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். சமூகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால் இது குறித்து என் கேரக்டர் பேசி இருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
உடலுக்குள் நடைபெறும் மாற்றத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்... என்பதெல்லாம் நல்ல விசயமாக இருந்தது. அதேபோல் தம்பி ராமையா பேசும் வசனங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தது.
இதெல்லாம் சமூகத்தில் நடைபெறும் விசயங்கள் தான். ஆனால் இதனை யாரும் பேச மாட்டார்கள். இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இது தொடர்பாக பார்ட் 1 எடுத்து, பார்ட் டூவும் எடுத்திருக்கிறார். இவை வெற்றி பெற்றிருக்கிறது என்றால்... ரசிகர்களின் விசாலமான மனதும் ஒரு காரணம். இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்திற்குப் பிறகு.. நான் இனி நடிக்கப் போகும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நம்பிக்கையை எனக்குள் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உருவாக்கியிருக்கிறார்.
உண்மையான லவ் கிடைக்காதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படத்தில் வரும் காதல் கதை மிகவும் பிடிக்கும். இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் உடனடியாக திரையரங்கத்திற்கு சென்று படத்தைப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில், '' இறைவனுக்கு நன்றி. கடவுள் பல ரூபங்களில் வந்து என்னை பல தருணங்களில் காப்பாற்றி இருக்கிறார். நிறைய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார். நான் இந்த பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன். அவர்களில் ஒருவராக எனது நண்பராக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கை நான் பார்க்கிறேன்.
அவர் என்னை சந்தித்து இந்த படத்தில் இந்த கதையை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரிடம் நான் ஏராளமான சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் பொறுமையாக எனக்கு புரியும்படி விளக்கம் அளிப்பார். இந்தப் படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சியும் அவருடைய ஐடியா தான். நான் இயக்குநரை முழுமையாக நம்பி ஒப்படைத்து விட்டேன். இதற்காக அவருக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.
இந்தப் படத்தின் வெற்றி என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இதற்காக நான் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படக் குழுவில் பணியாற்றிய அனைவரும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர்கள். அவர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி, இன்று நாங்கள் வெற்றி விழாவில் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்திருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முழுமையாக வழங்கி விட்டார். நடிகராக தயாரிப்பாளர் வழங்கும் ஊதியம் என்பது எங்களுக்கு முக்கியமானது. அதற்காக தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்
தயாரிப்பாளர் - நடிகர் கே.ஜே. பாலாமணி மார்பன் பேசுகையில், '' படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள். வரவேற்றிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர். தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன் பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.
படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காண சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ரசனையும் , வரவேற்பும் ஒரே மாதிரியானதாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
இப்படத்தின் வெற்றிக்காக வழி விட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் 'பைவ் ஸ்டார்' செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தப் படம் மட்டும் காரணம் அல்ல அந்தப் படம் வெளியாகும் சூழலும் ஒரு முக்கிய காரணம். இருப்பினும் இந்தப் படத்தின் வசூலைக் கடந்து படம் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களின் வரவேற்பினை பெற்றதற்காக குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் அனைவரும் இணைந்து திரையரங்கத்திற்கு இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள் என்றால்.. அதற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் வழங்கியிருக்கிறார் என்பதை நான் பெருமிதத்துடன் சொல்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து எங்களுக்கு தொடர் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், '' ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு வெற்றி தான். அதனால் தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்- ஊடகங்கள் - விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் - உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் - ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் - இசையமைப்பாளர் - தயாரிப்பு நிர்வாகி - நடிகர்கள் ராபின், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர் ரக்சன், பிரியா பவானி சங்கர், ஆதித்யா கதிர், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி 'குறிஞ்சி' என்பவருக்கு இருக்கும். இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து 'முதல் கனவே' எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர். அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது. அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்து படங்களிலும் தொடரும்.
இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு. பொதுவாகவே ரசிகர்களைப் பற்றிய பார்வை தான் இது. அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும் .. எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.
டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசை பாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஒரு இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர.. குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.
அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திர
'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!
நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்பட உலகிலிருந்து, நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார். Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும் துல்கர் சல்மான், அடுத்ததாக இந்த படத்தில் நடித்து வருகிறார். புதுமையான கதை சொல்லல் மற்றும் தனித்துவமான காட்சி அமைப்புகளால் பல வெற்றிப் படங்களை தந்துள்ள பவன் சடினேனி இந்தப் படத்தை இயக்குகிறார்.
புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில், கண்ணாடியுடன் கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வை, இயல்பான தோற்றம் மற்றும் உதட்டில் சிகரெட்டுடன் மேலெழும் புகை—அவை அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் உணர்ச்சி ஆழத்தையும், சொல்லப்படாத கதைகளையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த திரைப்படத்தின் கதையோட்டத்தில், ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் முக்கிய திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இணைப்பு, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவையும், ஸ்வேதா சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனிக்கின்றனர்.
தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் “ஆகாசம்லோ ஒக தாரா”, தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.
ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-இல் சமீபத்தில் வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, புதிய ஓடிடி சாதனையைப் படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற பின்னர், ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Seven Screen Studio சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ், தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான உணர்ச்சிப் பயணமே “சிறை” படத்தின் மையம். அதிகாரம், மனிதநேயம், மனசாட்சி ஆகியவற்றுக்கிடையிலான மோதலை நுணுக்கமாக பதிவு செய்யும் இந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆழமாக பாதிக்கிறது.
நாயகனாக விக்ரம் பிரபு வலுவான நடிப்பை வெளிப்படுத்த, அவருக்கு ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கும் படத்தின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. பிரபு வடிவமைத்த ஸ்டண்ட் காட்சிகள், கதையின் யதார்த்தத்துக்கு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்குகின்றன.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ZEE நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ZEE5-ல் வெளியானதும் “சிறை” திரைப்படம் பார்வையாளர்களிடையே வேகமாகப் பரவியது. சமூக வலைதளங்களில் குவிந்த நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுகளும், இந்த படம் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை எட்டுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
மண் சார்ந்த உண்மை கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கி வரும் ZEE5 தமிழ், தொடர்ந்து வித்தியாசமான, தாக்கம் மிக்க படைப்புகளை தமிழ் பார்வையாளர்களுக்காக கொண்டு வருகிறது. அந்த வரிசையில், “சிறை”, தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க ஓடிடி சாதனைகளில் ஒன்றாக தன்னை உறுதியாக பதிவு செய்துள்ளது.
உணர்வுபூர்வமான, சிந்திக்க வைக்கும் ஒரு சினிமா அனுபவத்தை நாடும் ரசிகர்கள், “சிறை” திரைப்படத்தை ZEE5 தளத்தில் தவறாமல் கண்டுகளிக்கலாம்.
என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தனது எதிர்கால திரைப்படத் திட்டங்கள், தற்போதைய பணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை குறித்து வெளியான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்குப் பிறகும் ஊடகங்களை சந்திப்பது என்னுடைய வழக்கம். ‘கூலி’ படத்திற்குப் பிறகு இதை செய்ய வேண்டும் என நினைத்தேன். இப்போது தான் அது சாத்தியமானது” என்றார்.
‘கூலி’ திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதாக குறிப்பிட்ட லோகேஷ், வசூல் விவரங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்றும், படம் லாபகரமானது என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். “ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த படம் 35 நாட்கள் ஓடியதே மக்களின் ஆதரவு தான்” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “அந்த விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவியது. அதை என் அடுத்த படங்களில் பயன்படுத்த முயற்சி செய்வேன்” என்றார்.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைப்பு படம் குறித்து பேசும் போது, “ ‘கூலி’ வெளியான நேரத்தில் இருவரையும் சந்தித்தேன். 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் எனக்கு இயக்க வாய்ப்பாக கிடைத்தது மிகப்பெரிய விஷயம். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், மென்மையான திரைக்கதை வேண்டும் என நினைத்தனர். அந்த ஸ்டைலில் படம் இயக்குவது எனக்கு வராது என்பதால் மரியாதையுடன் விலகி கொண்டேன்” என விளக்கம் அளித்தார்.
‘கைதி 2’ தாமதமானது சம்பள விவகாரம் காரணமாக என்ற செய்தியை மறுத்த லோகேஷ், “ஒரு இயக்குநரின் சம்பளத்தை சந்தையும் தயாரிப்பாளரும் தான் தீர்மானிக்கிறார்கள். கடந்த வாரமே ‘கைதி 2’ தயாரிப்பாளரை சந்தித்து பேசியுள்ளேன். என்னுடைய அடுத்த படம் ‘கைதி 2’ தான்” என உறுதிபட தெரிவித்தார்.
LCU குறித்து, “LCU என்ற பெயரை நான் வைக்கவில்லை. ரசிகர்கள்தான் உருவாக்கினார்கள். ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ ஆகியவை என் கமிட்மெண்ட்கள். அவை இல்லாமல் நான் நகர முடியாது. அதனால் LCU தொடரும்” என்றார். அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் படம் இயக்க இருப்பதும், அமீர் கானுடன் பேச்சுவார்த்தை தொடர்வதும் அவர் உறுதிப்படுத்திய முக்கிய தகவல்களாக அமைந்தது.
மொத்தத்தில், சமூக வலைதளங்களில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் நேரடியாக பதிலளித்து, தனது எதிர்கால பாதை குறித்த தெளிவான செய்தியை லோகேஷ் கனகராஜ் இந்த சந்திப்பின் மூலம் ரசிகர்களுக்கும் திரையுலகிற்கும் தெரிவித்தார்.
சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெளடி & கோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. வழக்கமான விளம்பர யுக்திகளுக்கு மாறாக, இந்தப் படத்தின் டீசர்–போஸ்டர் கான்செப்ட்டை முற்றிலும் புதிய பாணியில் அறிமுகப்படுத்தியுள்ளது படக் குழு.
“ரெளடிகளை தேர்ந்தெடு… அவர்களை படத்தின் முதல் பார்வையில் வெளியிடு” என்பதே இந்த வித்தியாசமான கான்செப்ட். இதன் மூலம், படத்தில் இடம்பெறும் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவராக போஸ்டர்களில் வெளிப்படுத்தப்பட்டு, ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்கும் இந்த காமெடி என்டர்டெய்னரின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர், சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘கப்பல்’ திரைப்படம் மூலம் பாராட்டப்பட்ட இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ், இந்த படத்தை முழுக்க முழுக்க கலகலப்பான, வித்தியாசமான முயற்சியாக உருவாக்கியுள்ளார். நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்ல்ஸ் வினோத் மற்றும் ‘தனி ஒருவன்’ வில்லன் வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ள ‘ரெளடி & கோ’, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து வருகிறது.
முதல் பார்வையிலேயே வித்தியாசமான யுக்தியால் கவனம் ஈர்த்துள்ள இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!
இதுவரை ரசிகர்கள் உணர்ந்திராத ஆழமான உணர்வுகளுடன் கூடிய ஐந்து காதல் கதைகளை ஒரே திரைப்படத்தில் முன்வைக்கும் முயற்சியாக, ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் உருவாகியுள்ளது.
உயிரிலும், உணர்விலும், சுவாசத்திலும் இருந்து பிறக்கும் காதலே மனித வாழ்க்கையின் மையம் என்பதைக் கவிதைநடையில் சித்தரிக்கும் இந்த படம், காதலின் பல பரிமாணங்களை வித்தியாசமான கோணத்தில் பேசுகிறது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, ஈர்ப்பிலிருந்து பிடிவாதம் வரை, இனிமையிலிருந்து இருள் வரை… காதலின் இருபக்கங்களையும் துணிச்சலுடன் ஆராயும் படமாக ‘VOWELS’ உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகள் மொழியின் அடிநாதம் என்பதுபோல், இந்த திரைப்படமும் ஐந்து உயிரெழுத்துகளை மையமாகக் கொண்ட ஐந்து தனித்துவமான கதைகள் வழியாக காதலை வெளிப்படுத்துகிறது.
காதலின் ஐந்து உயிரெழுத்துகள் – ஐந்து உணர்வுகள்
-
A – Attraction (ஈர்ப்பு):
முதல் பார்வையிலேயே மலரும் உண்மை காதல், இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு -
E – Emotion (உணர்ச்சி):
ஆழமான பிணைப்பு, தியாகம், ஏக்கம், பிரிவு -
I – Intimacy (நெருக்கம்):
உடல்–மன நெருக்கம், ஆசை, பற்றுதல், பலவீனம் -
O – Obsession (பிடிவாதம்):
இருண்ட காதல், குற்றம், “எனக்கே” என்ற உரிமை உணர்வு, த்ரில்லர் -
U – Unconditional (நிபந்தனையற்ற காதல்):
கட்டுப்பாடுகளற்ற தூய்மை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு
ஒரு வரைபடம் (Atlas) போல, ஒவ்வொரு கதையும் தனித்தனி உணர்வுகளை பிரதிபலிக்க, அனைத்தும் ஒன்றிணைந்து காதலை ஒரு அழகான மொழியாக மாற்றுகின்றன. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர். பல்வேறு மொழிகள் மற்றும் பின்னணிகளை சேர்ந்த நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
காதலை உணர்வுகளின் பயணமாக வரையறுக்கும் ‘VOWELS – An Atlas of Love’, தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவமாக ரசிகர்களை மெய்மறக்கச் செய்யத் தயாராக உள்ளது.
ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் காமெடி என்டர்டெய்னர் திரைப்படம் ‘ராவடி’, மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதாக படக் குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் L.K. அக்ஷய் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிகர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P.S. ஹரிஹரன் கவனிக்க, பிரியா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S. லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு L.K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ராவடி’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை, இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ அனிருத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் பஸில் ஜோசப், L.K. அக்ஷய் குமார், ஜாபர், நோபல், அருணாசலம் ஆகியோரின் வித்தியாசமான தோற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
காமெடி கலந்த கலகலப்பான கதையுடன் உருவாகும் ‘ராவடி’ திரைப்படம், எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. ☀️🎬
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!
இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை எழுதத் தயாராக இருக்கும் மெகா மல்டி–ஸ்டாரர் திரைப்படம் “பேட்ரியாட்” தனது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை பிரம்மாண்டமான போஸ்டருடன் அறிவித்துள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சர்வதேச ஸ்பை திரில்லர் திரைப்படம் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த ரிலீஸ் டேட் போஸ்டரை 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது, படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. தமிழ் பதிப்பு போஸ்டரை அட்லீ, தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டா, ஹிந்தி போஸ்டரை கரண் ஜோஹர் வெளியிட்டனர்.
மலையாளத்தில் துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஃபஹத் ஃபாசில், ஆசிஃப் அலி, நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் போஸ்டரை பகிர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கு முன் வெளியான மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் ரசிகர்களிடையே வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றன.
Anto Joseph Film Company மற்றும் Kichappu Films இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அன்டோ ஜோசப் மற்றும் K.G. அனில்குமார் தயாரித்துள்ளனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி–மோகன்லால் இணையும் இந்த படம், மலையாள சினிமாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளதோடு, Twenty:20 படத்திற்குப் பிறகு அதிகமான முன்னணி நடிகர்களை ஒன்றிணைக்கும் படமாகவும் அமைந்துள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு, இந்தியா, இலங்கை, UK, அசர்பைஜான் மற்றும் UAE உள்ளிட்ட பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. Take Off, Malik படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் இந்த படத்தை சர்வதேச தரத்திலான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாக்கியுள்ளார்.
முன்னதாக வெளியான டைட்டில் டீசர், மம்மூட்டி–மோகன்லால் இணைந்து தோன்றும் சக்திவாய்ந்த ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை மிரள வைத்தது. மலையாள சினிமாவில் இதுவரை காணாத தொழில்நுட்ப தரமும், உலகளாவிய களமும் கொண்ட படமாக ‘பேட்ரியாட்’ உருவாகியுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!
எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் வெளியாகி கவனம் பெற்ற திரைப்படமான ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, தற்போது அதன் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில், திரைக்கதையை புத்தகமாக வெளியிடுவது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு சிறப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்கிய ராஜமோகன், இயக்குநர்கள் ராஜகுமாரன், விஜய் மில்டன், ஏ. வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இயக்குநர் சேரன் உதவியாளராக இருந்த ராமகிருஷ்ணன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், வெளியான காலகட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை தற்போது அறம் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி திருவிழாவில், இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ராஜமோகன், ராஜகுமாரன், விஜய் மில்டன், நடிகர் ராமகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், இயக்குநர் ராஜகுமாரன் புத்தகத்தை வெளியிட, இயக்குநர் விஜய் மில்டன் பெற்றுக் கொண்டார். ஒரு திரைப்படத்தின் திரைக்கதை, காலத்தைக் கடந்து புத்தக வடிவில் வாசகர்களை சந்திப்பது, தமிழ் சினிமா – இலக்கிய இணைப்பின் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில்
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் நூலின் ஆசிரியரும் இயக்குநருமான ராஜமோகன் ஏற்புரை ஆற்றி பேசும்போது,
நல்ல விமர்சனங்களை தந்த இந்தப்படம் ஒரு சிறந்த திரைக்கதை என்பதை கர்வத்துடன் சொல்லிக் கொள்வேன். இயக்குநராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்த என் அண்ணன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் படிப்பை முடித்தோம். ஒரு கட்டத்தில் என் தம்பி என்னை சினிமாவுக்கு செல்ல ரொம்பவே ஊக்கம் கொடுத்து வற்புறுத்தினார். அப்போதுதான் இயற்கையே என்னை கவிதை, கதை எழுதுவதற்கு தயார்படுத்தியது. அதன்பின் சென்னை வந்து இயக்குநர் ராஜகுமாரனிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினேன். அப்போது என்னை அவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் பணியாற்றிய அனுபவத்தில் நான் இயக்குநராக மாறினேன். ஒளிப்பதிவையும் சேர்த்து கற்றுக் கொண்டேன். இந்த சினிமாவில் எனக்கு ஒரு நந்தவனம் அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும் தான். அவர்கள் இருவருக்கு நடுவே நான் இன்று என்னுடைய புத்தக விழாவில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்பதை விட வேறு பெருமை எனக்கு கிடைக்காது.
நான் உதவி இயக்குநராக பணியாற்றிய சமயங்களில் என்னுடன் நட்பாக பழகிய புரொடஷன் மேனேஜர் சின்னச்சாமி என்னிடம் இருந்த கதையை கேட்டுவிட்டு என்னை விட அதிக இடங்களுக்கு அந்த கதையை சுமந்து சென்றார். அப்படி நான்கு இடங்களில் எனக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்த போது அதில் அழகாக அமைந்த வாய்ப்பு தான் கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிப்பாளர் எஸ்பி. சரண் சார் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் வாலி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுத யுவன் சங்கர் ராஜா இசையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை அந்த பாடல்கள் பேசப்படுகின்றன. புத்தகத்தை வெளியிட்டுள்ள அறம் பதிப்பகத்திற்கு கடந்த வருடம் வேறு ஒரு புத்தகம் வாங்குவதற்காக சென்றபோது நான்தான் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் டைரக்டர் என்பதை அறிந்து நீங்கள் நிச்சயம் இந்த கதையை புத்தகமாக எழுதுங்கள் எங்கள் நிறுவனத்தில் வெளியிடுகிறோம் என்று ஊக்கப்படுத்தினார்கள். இந்த புத்தகம் வெளியாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
ஜேம்ஸ் பேசும்போது,
“இயக்குநர் ராஜமோகனுடன் பல வருடங்களாக பழகி வருகிறேன். அவர் நான்கு படங்களை இயக்கி விட்டாலும் கூட இன்று வரை அவரை உயிர்ப்புடன் நகர்த்தி செல்வது குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தை பற்றி பலரும் சிலாகித்து பேசுவது தான்” என்று கூறினார்.
நடிகர் ராமகிருஷ்ணன் பேசும்போது,
“நான் இயக்குநராகும் முயற்சியில் தீவிரமான தேர்தலில் இருந்தபோது என்னை குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ராஜமோகன் நடிக்க வைத்தது யாரும் எதிர்பாராதது. இந்த படம் வெற்றி தோல்வி என்பதையெல்லாம் தாண்டி இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது என்றால் இந்த படத்தின் திரைக்கதை தான் காரணம். இந்த திரைப்படத்தை வாழ்வியல் நுட்பத்துடன் எடுத்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதும் என்னை இந்த படத்தில் நடித்த ஹீரோ தானே என்று சொல்லித்தான் அடையாளம் காட்டுகிறார்கள். இந்த படத்தின் காட்சிகள் பாடல்கள் இப்போதும் கூட சோசியல் மீடியாவில் உயிர்ப்போடு இருக்கிறது என்றால் நிச்சயம் இந்த படம் ஏதோ ஒரு மேஜிக் செய்திருக்கிறது” என்று பேசினார்.
இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது,
“எங்களைப் போன்ற இயக்குனர்கள் கதை எழுதுவது, கவிதை எழுதுவது எல்லாம் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். யாரோ ஒருவர் நம்முடைய கதையை, படத்தை நன்றாக இருக்கிறது, அதுவும் தோற்றுப்போன படம் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது அது மிகப்பெரிய அங்கீகாரம். அப்படி ஒரு சந்தோஷத்தை இயக்குநர் ராஜமோகனுக்கு கொடுத்ததற்காக அறம் பதிப்பகத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எங்கே சென்றாலும் அவரை குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் டைரக்டர் தானே என்று சொல்கிறார்கள். இந்த வருடம் அதையும் தாண்டி ஒரு படத்தை பண்ணுவதற்காக கதையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.
இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது,
“இந்த புத்தக வெளியிட்டு விழாவை ஒரு மனிதனின் அயராத முயற்சியும் ஒரு தன்னம்பிக்கை எழுச்சிமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு நடுவில் பிறந்து தந்தையையும் அண்ணனையும் இழந்து படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலில் ஒரு சினிமாவை பார்த்துவிட்டு அதில் கதாநாயகன் செய்யும் பல வேலைகளை குறித்து வைத்துக் கொண்டு அதில் சில வேலைகளை தனது தினசரி வாழ்க்கையில் செய்து படிப்பை விடாமல் தொடர்ந்து கல்லூரி பட்டம் பெற்ற ஒரு செயல் வீரனின் கதையாகத்தான் இந்த புத்தகத்தை நான் பார்க்கிறேன். அப்படி கல்லூரி படிப்பை முடித்த பிறகும் அந்த வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய, ‘நீ வருவாய் என’ படத்தை பார்த்துவிட்டு நான் விக்ரமனின் உதவியாளர் என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து எனக்கு கடிதங்கள் எழுதி, என்னைக் கவர்ந்து, என்னை தேடி சென்னைக்கு வந்து விட்டார் இயக்குநர் ராஜமோகன். என்னிடம் உதவியாளராக சேர்வதற்கு சில தேர்வுகளை வைத்தேன். நல்ல காட்சி சொன்னால் 100 ரூபாய் தருவதாக சொன்னேன். அப்படி பலமுறை என்னிடம் பரிசாக பணம் பெற துவங்கினார். இவர் இப்படி என்னிடம் பரிசாக பணம் வாங்குவதை பார்த்து, நான் இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டுமோ அல்லது தவறாக வாக்கு கொடுத்து விட்டோமோ என்கிற அச்சமும் கூட எனக்கு ஏற்பட்டு அதனாலயே அவரை என் உதவியாளராக சேர்த்துக் கொண்டேன். அவருடைய வாழ்க்கையே ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்கிற அந்தப் படத்தினால் தான். ஒரு படைப்பு என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் “என்று கூறினார்.
கவிஞர் மனுஷ்ய புத்திரன் பேசும்போது,
“இந்த புத்தகத்திற்கு இயக்குநர் ராஜமோகன் எழுதி இருக்கும் முன்னுரையே ஒரு திரைக்கதை போல அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. அதையே ஒரு படமாக எடுக்கலாம். பேருந்து நிலையத்தில் யாரோ ஒரு வயதான பெண் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொன்ன போது, அதையே இந்த சமூகத்திற்கு ஒரு படைப்பாக கொடுக்கும் விதமாக இந்த கதையை அவர் உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் வெளிவந்து 17 வருடங்களுக்குப் பிறகு அது ஏன் புத்தகமாகி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இன்று படங்களின் ஆயுள் காலம் ஓரிரு வாரங்கள் என்று ஆகிவிட்ட நிலையில் கால ஓட்டத்தில் சமூக நோக்கில் எடுக்கப்பட்ட படங்கள் கூட மறக்கடிக்கப்பட்டாலும் அவற்றின் திரைக்கதைகள் புத்தகங்களாக வெளியாகி இன்றைய தலைமுறையை சென்று அடைய வேண்டும். அந்த பணியை தான் அறம் பதிப்பகம் செய்திருப்பதாக நினைக்கிறேன். இதுபோன்ற நல்ல படைப்புகளை ராஜமோகன் படமாக இயக்க வேண்டும். இது போன்ற நல்ல திரைக்கதைகளை அறம் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.
‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!
‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்த கவனத்தை ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ திரைப்படத்துடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களை துல்லியமாக கையாளும் இயக்குநராக அறியப்படும் அவர், இந்த படத்தின் மூலம் 14ஆம் நூற்றாண்டு ஹோய்சால பேரரச வம்சத்தின் மகத்துவத்தை மீண்டும் திரையில் உயிர்ப்பிக்கிறார்.
ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘திரௌபதி 2’, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவமாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் செழுமையான ஆனால் பெரிதும் பேசப்படாத பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வரலாற்று சினிமா ஆவணமாக இருக்கும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
படம் குறித்து அவர் மேலும் கூறியதாவது, “‘திரௌபதி 2’ திரைப்படம் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் வரலாற்றை எந்த சமரசமும் இல்லாமல், துல்லியமான வரலாற்று உண்மைகளுடன் திரையில் மீண்டும் உருவாக்குகிறது. மன்னர் வீர சிம்ம கடவராயன் கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி, பேரரசருக்கே உரிய கம்பீரமும் அதிகாரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை, பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.”
மேலும், பிலிப் கே. சுந்தர் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாக பதிவு செய்கிறது. ஆக்ஷன் சந்தோஷ் வடிவமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ் ஆகியோர் தீவிரமான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் வழியாக தமிழ் வீரத்தின் வரலாற்றை பதிவு செய்யும் இந்த துணிச்சலான வரலாற்றுத் திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













