சற்று முன்

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட்!   |    பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் #BSS12 -ல் காணலாம்   |    எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது IDSFFK விழாவுக்கு தேர்வு!   |    Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya   |    'ரகு தாத்தா' இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது!   |    SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !   |    அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது   |    எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு - இயக்குநர் நாகராஜ்   |    மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்!   |    சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!   |    கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்   |    பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’   |    தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!   |    சாந்தினி தமிழரசன் நடிக்கும் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ'!   |    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் ‘ராசாத்தி’ புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு   |    கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - இயக்குநர் பா ரஞ்சித்   |    என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் 'வாழை' - மாரி செல்வராஜ்   |    விஷ்ணு விஷால் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து அசத்திய ரசிகர்கள்!   |    உலகமெங்கும் தீபாவளி அன்று வெளியாகிறது ‘அமரன்’   |    'மனோதரங்கல்' உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் தொடர்   |   

croppedImg_1685413657.jpeg

’கிடா’ விமர்சனம்

Directed by : Ra.Venkat

Casting : Poo Ram, Kali Venkat, Master Deepan, Pandiyamma, Lakshmi, Pandi, Yothi, Raju, Karuppu, Anand, Jay, Deva, Sangili

Music :Theesan

Produced by : Sravanthi Ravi Kishor

PRO : AIM

Review :

"கிடா" ரா. வெங்கட் இயக்கத்தில் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை தீசன். இந்த படத்தில் பூ ராம், காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லட்சுமி, பாண்டி, யோதி, ராஜு, கருப்பு, ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தன் பேரனுக்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்ட்டப்படும் ஏழை விவசாயியான பூ ராம். எங்கு கேட்டும் பணம் கிடைக்காததால் தனது பேரன் ஆசையாக வளர்க்கும் ஆட்டை விற்க முடிவு செய்கிறார். ஆனால் அந்த ஆடு சாமிக்கு நேத்து விட்ட ஆடு என்பதால் அதை வாங்க பயப்படுகின்றனர். 

 

இதற்கிடையில் கறிக்கடையில் வேலை பார்க்கும் காளி வெங்கட், கடையில் ஏற்படும் ஒரு தகராறினால் கறிக்கடையிலிருந்து வெளியேறி சாந்தமாக தீபாவளியன்று கறிக்கடை திறக்க முடிவு செய்கிறார். அதற்கு பணம் இல்லாமல் அவதிப்படுகிறார். சொன்னதை செய்வதற்காக ஒரு ஆட்டையாவது வாங்கி தீபாவளிக்கு கறிக்கடை போட்டே தீருவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்பொழுது பூ ராம் ஆடு விற்க முயற்சிப்பதால் காளி வெங்கட், சாமிக்கு நேர்ந்து விட்டது என்றாலும் பரவாயில்லை என்று அந்த ஆட்டை வாங்க முடிவு செய்கிறார். பேரனுக்கு  தீபாவளிக்கு புத்தாடை வாங்கி வழி கிடைத்துவிட்டது என்று நினைக்கும் பொது திடீரென்று ஆடு திருடப்பட்டு விடுகிறது. இதனால் பூ ராம் மற்றும் காளி வெங்கட் அட்டை தீவிரமாக தேடுகின்றனர். ஆடு கிடைத்ததா? இவர்களுடைய ஆசை நிறைவேறியதா என்பதே  ‘கிடா’ படத்தின் கதை.

 

வயதான ஏழை விவசாயியாக நடித்திருக்கும் பூ ராம், வழக்கம் போல் தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார். தாய், தந்தை இல்லாத தனது பேரனின் தீபாவளி ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவர் துடிக்கும் காட்சிகளும், பணத்திற்கான கடைசி வாய்ப்பாக இருந்த ஆட்டையும் இழந்து கதறும் காட்சியும் படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்து விடுகிறார்.

 

வெள்ளைச்சாமி என்ற வேடத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பு மூலம் காட்சிகளுக்கு உயிர் அளித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். கறிக்கடை வைக்க பணம் இல்லாமல் தடுமாறுபவர், வாடிக்கையாளர்களிடமே பணம் வசூலித்து ஆடு வாங்க முயற்சிக்கும் காட்சிகள் புதிய வியாபார யுக்தியாக இருக்கிறது. கறிக்கடை வைத்திருப்பவர்கள் அவரது யோசனை போல் செய்தால் நிச்சயம் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கும்.

 

சிறுவன் கதிர், அந்த மண்ணைச் சேர்ந்த சிறுவனாகவே வாழ்ந்திருக்கிறார். தீபாவளியன்று தனக்கும் புத்தாடை வரப்போகிறது என்ற தகவலை தனது தோழர்களிடம் சொல்லி மகிழ்ச்சியடையபவர், தனது ஆட்டை விற்று  தனக்கு ஆடை வாங்க வேண்டிய சூழல் வரும்போது, தனக்கு ஆடு தான் வேண்டும் என்று சொல்வதும், அதற்காக அழுது அடம் பிடிக்காமல் சூழல்களை சாதகமாக்கி தனது ஆட்டை காப்பாற்ற நினைக்கும் காட்சிகள் வழக்கமான சினிமாவை தாண்டியதாக இருக்கிறது.

 

பூ ராமின் மனைவியாக நடித்திருக்கும் பாண்டியம்மா, இக்கட்டான சூழலில் கணவருக்கு கைகொடுக்கும் குடும்ப தலைவிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார். 

 

காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் விஜயா, காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் பாண்டி, பாண்டியின் காதலியாக நடித்திருக்கும் ஜோதி, ராஜு, கருப்பு மற்றும் திருடர்களாக வரும் ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு பண்டிகை நாட்களின் பரபரப்புடன், அந்த நாளுக்காக காத்திருக்கும் சிறுவனின் எதிர்பார்ப்பு, அந்த நாள் வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்ற பூ ராமின் தவிப்பு, அந்த நாளில் வழக்கம் போல் ஊர் மக்களிடம் அவமானப்பட்டு நிற்கப்போகிறோமே என்ற காளி வெங்கட்டின் ஏமாற்றம், என அத்தனை உணர்வுகளின் போராட்டத்தையும் ரசிகர்களிடத்தில் மிக சிறப்பாக கடத்தியிருக்கிறது.

 

தீசன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பின்னிபிணைந்து பயணித்திருக்கிறது. எந்த இடத்திலும் இசையை தனியாக பிரித்து பார்க்க முடியாதபடி காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

 

முதல் காட்சியில் ஆடு திருட்டுப் போவதை காட்டிவிட்டு, அதற்கு முந்தை மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை விவரித்திருக்கும் படத்தொகுப்பாளரின் கதை சொல்லலும், காட்சிகளின் தொகுப்பும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறது. 

 

காணாமல் போன ஆட்டை தேடி செல்லும் சிறு பயணத்தை கருவாக வைத்துக்கொண்டு இயக்குநர் ரா.வெங்கட் அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள், படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை நம் கவனத்தை கட்டிப்போட்டு விடுகிறது. ஆடும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் படம் என்றாலும், அதனுள் ஒரு காதல் , ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பது, ஊர் மக்களின் எதார்த்த நகைச்சுவை, சிறுவர்களின் வாழ்வியல், விவசாயிகளின் துயரங்கள்,  என பல விசயங்களை சேர்த்து அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி சமூக அவலங்கள் பற்றி போகிற போக்கில் பேசியிருக்கிறார்.

 

காணாமல் போன ஆட்டை தேடி செல்லும் போது இறுதியில் அனைத்தும் சுபமாகவே முடியும் என்பது யூகிக்கும்படி இருந்தாலும், அது எப்படி நடக்கப்போகிறது என்பதை நம் யூகங்களை பொய்யாக்கி, வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு சொல்லிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.

 

சாமிக்கு நேர்ந்து விட்ட ஆட்டை விற்கும் போது, “ஐயோ சாமி தண்டிக்கும்” என்று பயப்படுபவர்களுக்கு, பூ ராம் மற்றும் காளி வெங்கட் கொடுக்கும் பதிலடிகள் பாராட்டும்படி இருந்தாலும், இறுதியில் நடந்தவை அனைத்துக்கும் சாமி தான் காரணம் என்பது போல் இயக்குநர் படத்தை முடித்திருப்பது, அதிலும் உயிர் தப்பித்த ஆடு ஐய்யனார் கோவிலில் பதுங்கியிருப்பது போன்ற காட்சிகள்  மூட நம்பிக்கையை வளர்ப்பது போல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. 

 

பண்டிகை என்றாலே பலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் அந்த நாளை கடந்து செல்கிறார்கள், என்பதை மேலோட்டமாக சொல்லியிருப்பதோடு, நடக்கும் என்று நம்பினால் அனைத்தும் நடக்கும், அனைவருக்கும் ஒரு வழி உண்டு, அது நல்லதாக இருக்கும் என்று சொல்லி  மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதோடு, மகிழ்ச்சியளிக்கும் வகையில் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் ரா.வெங்கட்டை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

 

"கிடா" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : நாம் செய்யும் உதவிக்கு நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA