சற்று முன்
’யுஐ’ (UI) விமர்சனம்
Directed by : Upendra
Casting : Upendra, Reeshma Nanaiah, Achyuth Kumar, P. Ravi Shankar, Sadhu Kokila
Music :B.Ajaneesh Loknath
Produced by : Lahari Films & Venus Enterrtainers - G. Manoharan, Sreekanth K. P, Bhaumik Gondaliya
PRO : DOne
Review :
"யுஐ’ (UI) விமர்சனம்" உபேந்திரா இயக்கத்தில் லஹரி பிலிம்ஸ் & வீனஸ் எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பி.அஜனீஸ் லோக்நாத். இந்த படத்தில் உபேந்திரா, ரீஷ்மா நானய்யா, ரவி சங்கர், சது கோகிலா, அச்யுத் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்பட இயக்குநரான உபேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். சிலர் தைரியமான சில முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால், அந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறது. இது போதாது என்று முன்னணி திரைப்பட விமர்சகர் அந்த படத்தை நான்கு முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறுகிறார். இதனால், அந்த படம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கும் அவர், படத்தை இயக்கிய உபேந்திராவை தேடி செல்ல, அவரது தேடலுக்கான விடை கிடைத்ததா?, உபேந்திரா இயக்கிய அந்த படத்தின் கதை என்ன? என்பது தான் ’யுஐ’ படத்தின் கதை.
யுனிவர்சல் இண்டலிஜன்ஸ் என்பதன் சுருக்கமான UI-மூலம் அரசியலை நையாண்டியாக மட்டும் இன்றி, ஃபேண்டஸியாகவும் பேசியிருக்கும் இயக்குநர் உபேந்திரா, நாட்டில் மதம் மற்றும் சாதியை வைத்து மக்களை பிரிவினை படுத்தும் சக்திகள் பற்றி பேசுவதோடு, இயற்கை வளங்களை சுரண்டுவதால் எதிர்காலத்தில் எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பதையும் தனது கற்பனை உலகத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு உணரச் செய்திருக்கிறார்.
சத்யா மற்றும் கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் உபேந்திரா, சத்யாவாக மென்மையாகவும், கல்கியாக மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். ஆரம்பக்காட்சியில் இரத்தம் தெறிக்க எண்ட்ரி கொடுப்பவர், எதிராளிகளை பந்தாடுவார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், அவர்களிடம் தன் உடம்பை பஞ்சராக்கிக் கொண்டு மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக படம் முழுவதும் வலம் வருகிறார்.
திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், சது கோகிலா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியலாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபாலின் கேமராவை காட்டிலும், வி.எஃப்.எக்ஸ் கலைஞரும், கலை இயக்குநரும் அதிகம் உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் நடிகர் உபேந்திரா, உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை பேசியிருந்தாலும், எதையும் நேரடியாக பேசாமல் குறியீடாக காட்டி பேசியிருக்கிறார். அவரது இந்த முயற்சி வித்தியாசமானதாக இருந்தாலும் அதுவே விபரீதமாகவும் மாறியிருக்கிறது. இதனால், படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்வையாளர்கள் புரியாமல் புலம்புகிறார்கள்.
நாட்டில் ஒழுங்கான சாலைகள் இல்லை, ஆனால் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மக்களுக்கு சரியான உணவு இல்லை என்றாலும் ஆயுதங்களை வாங்கி குவித்துக்கொள்வது, இயற்கை வளங்கள் பலரது சுயநலத்திற்காக சூரையாடப்படுவது ஆகியவற்றால் எதிர்காலத்தில் மக்களின் நிலை எப்படி இருக்கும்? என்ற தனது கற்பனைக்கு உயிர் கொடுத்தாலும், அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்குநராக உபேந்திரா சற்று தடுமாறியிருக்கிறார்.
”நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன்னே தியேட்டரை விட்டு சென்றுவிடுங்கள்” என்ற வாக்கியம், கல்கி அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து சத்யா தப்பிப்பது, அரசனாக இருந்தவரை தந்திரத்தினால் பிச்சைக்காரராக மாற்றுவது போன்ற விசயங்கள் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இயக்குநர் உபேந்திரா, சத்யா மூலம் சாதி, மதம் இல்லாமல் ஒற்றுமையாகவும், அன்பாகவும் வாழும் மக்களை, கடவுள் பெயரால் எளிதில் பிளவு படுத்தி விடுவார்கள் என்பதை கல்கி மூலம் சொல்லி ரசிக்கவும் வைக்கிறார்.
"யுஐ" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : சுமார்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA