சற்று முன்
’வணங்கான்’ விமர்சனம்
Directed by : Bala
Casting : Arun Vijay, Roshini Prakash, P.Samuthirakani, Mysskin, Ridha, Dr.Yohan Chacko, Shanmugaraja, Tharun Master, Cheran Raj, Daya Senthil, Chaya Dhevi, Kavitha Gopi
Music :GV Prakash Kumar and Sam.CS
Produced by : v House Productions - Suresh Kamatchi
PRO : johm
Review :
"வணங்கான்" பாலா இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் – சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார் & சாம்.சி.எஸ். இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, சண்முகராஜா, டாக்டர்.யோஹன் சாக்கோ, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், பிருந்தா சாரதி, பாலா சிவாஜி, கவிதா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பேச்சு திறன் மற்றும் கேட்கும் திறன் இல்லாதவரான அருண் விஜய், தனது தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். கிடைக்கும் வேலைகளை செய்து வரும் அருண் விஜய், தன் கண்ணெதிரே எந்த தவறு நடந்தாலும், அதை செய்வது யாராக இருந்தாலும், அவர்களுக்கு முரட்டுத்தனமான தண்டனை வழங்கக் கூடிய சுபாவம் கொண்டவர். அவரது கோபத்தை குறைப்பதற்காக அவருக்கு ஒரு நிரந்த வேலைக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யும் அவரது நல விரும்பிகள் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் காவலாளி வேலை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
தன்னைப் போன்று உடலளவில் குறைபாடு இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மத்தியில் சகோதரனாக தனது பணியை செய்து வரும் அருண் விஜய், அங்கு நடக்கும் ஒரு அநீதியைக் கண்டு கடும்கோபம் கொள்வதோடு, அதை செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கிறார். அதன் மூலம் அவரது வாழ்க்கை என்னவானது? என்பதை தனது வழக்கமான பாணியில் இயக்குநர் பாலா சொல்வதே ‘வணங்கான்’.
பேரன்பும், கடும் கோபமும் நிறைந்த விளிம்புநிலை மனிதனை கதையின் நாயகனாக சித்தரித்து, அவர் மூலம் எளிய மக்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுப்பதை தனது படங்களின் முக்கிய அம்சமாக வைத்திருக்கும் இயக்குநர் பாலா, இந்த படத்திலும் அதே பாணியை பின்பற்றி தன் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.
இயக்குநர் பாலா கொடுக்கும் கஷ்ட்டத்தை அனுபவித்தால் அடுத்தக் கட்டத்திற்கு எளிதில் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அருண் விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். இயக்குநர் பாலா வடிவமைத்த கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் அருண் விஜய் நடித்திருந்தாலும், அவரது உடல் மொழி, முகபாவனை, சண்டைக்காட்சிகள் என அனைத்தும் முந்தைய பாலா படங்களில் நடித்திருந்த நாயகர்களின் பாதிப்பாக இருக்கிறத தவிர குறிப்பிட்டு சொல்லும்படியான தனித்தும் எதுவும் இல்லை.
நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம் அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் நாயகனை ஒருதலையாக காதலிப்பது, அவரது முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக கண்ணீர் சிந்துவது, என பார்வையாளர்களின் மனதில் ஒட்டாமல் ஓடிவிடுகிறார்.
அருண் விஜயின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்துவிடுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரது திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம்.
டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களாக வலம் வந்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் உள்ளது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை டைடில் கார்டு போடும் போதே கவனம் ஈட்ப்பதோடு, திரைக்கதைக்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா மற்றும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஷில்வா இருவரும் இயக்குநர் பாலா சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார்கள் என்பது படம் முழுவதும் தெரிகிறது.
எளிய மக்களையும், அவர்களது வாழ்க்கை மற்றும் வலிகளை திரையில் கொண்டு வருவதோடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் நாயகனையும் எளிய மக்களின் ஒருவனாக சித்தரித்து அவர்களை முன்னிலைப்படுத்துவதை தொடர்ந்து செய்து வரும் இயக்குநர் பாலா, தனது கதாபாத்திரங்களின் கடும் கோபத்தை இரத்தம் தெறிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தாலும், அதை எதார்த்தமான காட்சிகளின் மூலம், சில இடங்களில் கலகலப்பாகவும் கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர் பாலாவின் முந்தைய படங்களின் சாயல் சற்று இருந்தாலும், வியாபாரம் மற்றும் வண்ணமயமான சினிமா உலகில், காண்பிக்க மறுக்கும் முகங்களையும், அம்மக்களின் சொல்லப்படாத வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு மனிதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து செய்து வரும் இயக்குநர் பாலா, மீண்டும் ஒரு முறை அன்பை ஆக்ரோஷமாக சொல்லி மக்கள் மனதை உலுக்கியிருக்கிறார்.
"வணங்கான்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : மக்கள் மனதை நிச்சயம் தொடும்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA