சற்று முன்

‘ஒத்த ஓட்டு முத்தையா’ விமர்சனம்
Directed by : Sai Rajagopal
Casting : Goundamani, Yogi Babu, Rajeshwari, OAK Sundar, Anbu Mayilsamy, Karthik Vasan, Kajesh Nagesh, Motta Rajendran, Chitra Lakshman, Ravi Mariya, Sai Rajagopal
Music :Sidharth Vibin
Produced by : Cine Craft Productions - Raviraaja ME
PRO : Nikil Murugan
Review :
"ஒத்த ஓட்டு முத்தையா" சாய் ராஜகோபால் இயக்கத்தில் சினி கிராப்ட் புரொடக்ஷன்ஸ் – ரவிராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சித்தார்த் விபின். இந்த படத்தில் கவுண்டமணி, யோகி பாபு, ராஜேஷ்வரி, ஓ.ஏ.கே.சுந்தர், அன்பு மயில்சாமி, கார்த்திக் வாசன், கஜேஷ் நாகேஷ், மொட்ட ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ரவி மரியா, சாய் ராஜகோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படும் அரசியல்வாதி கவுண்டமணி, தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருக்கிறார். அவரின் தங்கைகள் காதலிப்பவர்களை, அண்ணன் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில், வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த தங்களது காதலர்களை சகோதர்களாக நடிக்க வைக்கிறார்கள்.
மறுபக்கம் மீண்டும் தேர்தல் வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்ற முயர்சியில் இறங்கும் கவுண்டமணிக்கு சீட் கொடுக்காமல் அவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய யோகி பாபுக்கு கட்சி சீட் கொடுத்து விடுகிறது. அதனால் கோபமடைந்து கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிடும் கவுண்டமணி, தேர்தலில் வெற்றி பெற்றாரா?, அவரது தங்கைகள் அண்ணனை ஏமாற்றி காதலர்களை கரம் பிடித்தார்களா ? என்பதை தமிழக அரசியலில் நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக சித்தரித்து சொல்வதே ‘ஒத்த ஓட்டு முத்தையா’
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கவுண்டர்கள் வழக்கம் போல் ரசிகர்களை சிரிக்க வைப்பது போல் இருந்தாலும், அதில் பழைய கம்பீரம், வேகம், டைமிங் மற்றும் உடல்மொழி ஆகியவை இல்லாததால் சிரிப்பவர்கள் கூட யோசித்து காலதாமதமாக சிரிக்கிறார்கள். கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்துள்ள யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து விடுகிறார்கள்.
வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், செண்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சித்தார்த் விபின் இசையில், சினேகன், மோகன்ராஜா, சாய் ராஜகோபால் ஆகியோரது வரிகளில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்.
எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சாய் ராஜகோபால், கவுண்டமணியை வைத்துக்கொண்டு அரசியல் நையாண்டி செய்ய முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி பல இடங்களில் வெற்றி பெற்றாலும், சில இடங்களில் தோல்வியடைந்திருக்கிறது.
கவுண்டமணி, யோகி பாபு போன்றவர்களுடன் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், மிகப்பெரிய பஞ்சத்துடனேயே திரைக்கதை பயணிக்கிறது. தமிழக அரசியல் சம்பவங்களை நையாண்டியாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைத்தாலும், அதை நேர்த்தியாக கையாள தவறியிருக்கும் இயக்குநர் குறைகள் பல இருந்தாலும், படத்தை முடித்தால் போதும் என்ற நிலையில், காட்சிகளை எடுத்து தள்ளியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணியை திரையில் பார்க்கும் உற்சாகத்துடன் வரும் ரசிகர்களுக்கு அவரது தோற்றம் மற்றும் உடல்மொழி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுப்பதோடு, அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.
"ஒத்த ஓட்டு முத்தையா" படத்திற்கு மதிப்பீடு 2.5/5
Verdict : ஒருமுறை பார்க்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA