சற்று முன்

’லெவன்’ விமர்சனம்
Directed by : Lokkesh Ajls
Casting : Naveen Chandra, Abirami, Dileepan, Rithvika, Reyaa Hari, Aadukalam Naren, Arjai
Music :D.Imman
Produced by : AR Entertainment - Ajmal Khan & Reyaa Hari
PRO : Nikil Murugan
Review :
"லெவன்" லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் – அஜ்மல் கான் & ரேயா ஹரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை டி.இமான். இந்த படத்தில் நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது இடங்களில் போடும் முறையை பின்பற்றும் சைக்கோ கொலையாளி பற்றி சிறு துப்பு கூட கிடைக்காமல் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். மறுபக்கம் கொலை சம்பவங்கள் தொடர்கிகிறது.
இதற்கிடையே, வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திடீரென்று விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதனால், வழக்கு மற்றொரு காவல்துறை அதிகாரியான நாயகன் நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நவீன் சந்திரா வழக்கை விசாரிக்க தொடங்கிய உடன் அவருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அதை வைத்து கொலை செய்யப்பட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பவர், கொலையாளி யார்? என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார் ?, எதற்காக இத்தனை கொலைகள் ? ஆகிய கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடும், எதிர்பார்க்காத திருப்பங்களோடும் சொல்வதே ‘லெவன்’.
லெவன் என்ற தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பு போல், அந்த தலைப்பிலும் ஒரு மர்ம முடிச்சு உள்ளது. அது என்ன? என்பதும், அதைச் சார்ந்த கதை திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதோடு, கொலையாளி யார் ? என்பதில் இருக்கும் திருப்பங்கள், படத்தின் கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை நீள வைத்து பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, இறுக்கமான முகம் மற்றும் மனநிலையுடன் இருந்தாலும், தெளிவான சிந்தனை, வேகமான செயல்பாடு என்று வழக்குகளை முடிக்கும் விதத்திலும், சைக்கோ கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும் விதத்திலும், காவல்துறை அதிகாரிக்கென்று அளவு எடுத்து தைத்தது போல் கதாபாத்திரத்தில் ஒட்டுக்கொள்கிறார். அவரையும் ஒரு பெண் காதலிக்க, அவருக்கு அதே கம்பீரத்துடன் அட்வைஸ் செய்து அனுப்பி வைப்பவர், தனது இலக்கை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், உடல் மொழி, வசன உச்சரிப்பு, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தான் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபிக்கிறார்.
பள்ளியின் தலைமை ஆசிரியையாக நடித்திருக்கும் அபிராமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அவர்களது கதாபாத்திரம் திரைக்கதையோடு பயணிக்கும் வகையில் அமைந்திருப்பதால், சிறிய வேடம் என்றாலும் பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.
முதல் முறையாக கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்திற்கு இசையமைத்திருக்கும் டி.இமான், தனது பாணி எந்த இடத்திலும் தெரியக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். படத்தின் பாடல்களை கூட தனது வழக்கமான பாணியில் கொடுக்காமல், புதிய வடிவில் கொடுத்திருப்பவர் பின்னணி இசையை அளவாக கையாண்டு படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார். பார்வையாளர்களுக்கு எப்படியோ, இசையமைப்பாளர் டி.இமானுக்கு இது நிச்சயம் புதிய அனுபவமாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் கேமரா இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானராக இருந்தாலும் வன்முறை காட்சிகள் அதிகம் இல்லாத திரைக்கதை என்பதால் ஒளிப்பதிவாளர் சைக்கோ கொலையாளியை விட, அவரை தேடும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறார்.
கொலையாளி யார் ? என்பதை நாயகன் அபிராமி உடனான ஒரே சந்திப்பில் கண்டுபிடித்து விட்டாலும், அதன் பிறகும் படம் சஸ்பென்ஸுடன் நகர்வதோடு, கொலையாளி தொடர்பான சஸ்பென்ஸை யூகிக்க முடியாதபடி, காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி.
எழுதி இயக்கியிருக்கும் லோகேஷ் அஜில்ஸ், கொலை செய்யப்படும் நபர்கள் யார்? மற்றும் எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் ? என்ற கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி முதல் பாதி படத்தோடு பயணிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் கொலையாளி யார் ? என்ற எதிர்பார்ப்போடு படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் கொலையாளி யார்? என்ற சஸ்பென்ஸை உடைப்பவர், அடுத்த சில நிமிடங்களில் அதிலும் ஒரு திருப்பத்தை வைத்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.
இறுதிக்காட்சி வரை திருப்பங்களுக்குள் திருப்பம், என்று பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை பயணித்தாலும், கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்பில் இருக்கும் நிதானத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார்.
"லெவன்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA