சற்று முன்

’குட் டே’ விமர்சனம்
Directed by : N.Aravindan
Casting : Prithviraj Ramalingam, Kaali Venkat, Myna Nandhini, Aadukalam Murugadass, Bagavathi Perumal, Vela Ramamurthy, Vijay Murugan, Jeeva Subramaniyam, Bharath Nellaiyappan
Music :Govindh Vasantha
Produced by : New Monk Pictures - Prithviraj Ramalingam
PRO : AIM
Review :
"குட் டே" என்.அரவிந்தன் இயக்கத்தில் நியூ மாங்க் பிக்சர்ஸ் – பிரித்திவிராஜ் ராமலிங்கம் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கோவிந்த் வசந்தா. இந்த படத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தவறு செய்த மேலாளரை தட்டிக்கேட்டால், உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் நிறுவனம், அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபித்துக் கொள்ளும் மனைவி, இல்லாத வாசலுக்கு கோலம் போட பணம் கேட்பது ஏன்? என்று நியாயத்தை கேட்டால், வீட்டை காலி செய்ய சொல்லும் வீட்டின் உரிமையாளர், உடல்நிலை சரியில்லாத பெண் குழந்தை, 1000 ரூபாய் கடன் கேட்டால், செருப்பை எடுத்துக்கொடு, என்று சொல்லும் அறை நண்பர், என்று ஒரு நாள் முழுவதும் பல அவமானங்களையும், ஏமாற்றங்களையும் கடந்துச் செல்லும் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம், அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று நினைத்து அன்றைய இரவு மது அருந்துகிறார். அந்த போதை ஆரம்பத்தில் அவருக்கு ஆனந்தத்தை கொடுத்தாலும், அந்த ஆனந்தமே அடுத்த சில மணி நேரங்களில் அவரை சிக்கலில் சிக்க வைக்கிறது.
தான் செய்வது அறியாமல், இரவு முழுவதும் போதையுடன் பயணிக்கும் நாயகனால் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கிடையே காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையும், நாயகனின் போதையால் பாதிக்கப்பட, குழந்தையை தேடும் காவல்துறை நாயகனை தேடி கண்டுபிடிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. இறுதியில் நாயகனின் போதை அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது?, காணாமல் குழந்தை மீட்கப்பட்டதா? என்பதை ஒரு இரவு பயணமாக சொல்வதே ‘குட் டே’.
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களை மது போதை எப்படி ஆட்கொள்கிறது, அதனால் அவர்கள் தன்னைத்தானே எப்படி எல்லாம் இழிவுப்படுத்திக் கொள்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதையை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம். மது போதையின் ஒவ்வொரு கட்டத்தையும் தனது எதார்த்தமான நடிப்பில் கச்சிதமாக வெளிக்காட்டியிருக்கும் பிரித்திவிராஜ் ராமலிங்கம், உடல் மொழி மற்று வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் தனது மன உளைச்சலை போதை மூலமாக வெளிப்படுத்துவதில் அபாரமாக நடித்திருக்கிறார். அதே சமயம், எந்த இடத்திலும் ஓவராக நடிக்காமல், தனது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.
நாயகனின் கல்லூரி தோழியாக நடித்திருக்கும் மைனா நந்தினி ஒரு சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் அசத்துகிறார். எதிர்பார்க்காத அதிர்ச்சி மற்றும் ஏக்கத்தை தனது முகத்தில் காட்டி அந்த ஒரு காட்சியிலேயே ஒட்டு மொத்த திரையரங்கையும் சிரிக்க வைத்துவிடுகிறார்.
மைனா நந்தினியின் கணவராக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ் வரும் காட்சிகளும் அறுமை.
ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் காளி வெங்கட், தையல்காரராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்பவராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அறிவுரை சொல்பவராக நடித்திருக்கும் போஸ் வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விஜய் முருகன் ஆகியோர் நாயகனின் பயணத்தில் கவனம் ஈர்க்கும் மனிதர்களாக கடந்து போகிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் எளிமை என்றாலும், திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும் கூடுதல் வலிமையை கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் என இரண்டு பணிகளை செய்திருக்கும் மதன் குணதேவ், கதை முழுவதும் இரவு நேரத்தில் நடந்தாலும், அந்த உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் விளக்குகளை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். காட்சிகள் பெரும்பாலும் சாலைகளில் நடந்தாலும், அங்கேயும் விளக்குகளின் வெளிச்சத்தில் வேறுபாட்டை காண்பித்து கண்களை உறுத்தாத வகையில் காட்சிகளை கையாண்டிருக்கிறார்.
மதுபிரியர்களின் அதீத போதையினால் சில சமயங்களில் ஏற்படும் ஐயயோ....,சம்பவங்களை மையமாக கொண்டு பிரித்திவிராஜ் ராமலிங்கம் எழுதியிருக்கும் கதை கருவுக்கு, பூர்ணா ஜெஸ் மைக்கேலின் திரைக்கதை மற்றும் வசனம் மது பிரியர்களுக்கான அறிவுரையாக அல்லாமல், அவர்களின் உளவியல் பிரச்சனைகளை பேசக்கூடியதாக அமைந்திருக்கிறது. அதே சமயம், மன அழுத்தத்திற்கு மது தீர்வு அல்ல, அது மேலும் மேலும் மன அழுத்தத்தை தான் கொடுக்கும் என்பதையும் பிரச்சாரமாக சொல்லாமல் போகிற போக்கில் சொல்லிவிட்டு, இறுதியில் திருந்துங்கப்பா...,என்று லேசாக புத்திமதியும் சொல்கிறது.
கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மற்றும் கூடுதல் வசனத்தை விட, அவர் நடித்திருக்கும் சாமியார் கதாபாத்திரமும், சரக்கு கிளாஸை கசக்கி பத்திரப்படுத்தும் விதமும் அதீத கவனம் ஈர்க்கிறது.
குடித்துவிட்டு ரகளை செய்பவர்களையும், அவர்களின் செயல்களையும், இழிவாகப் பார்க்கும் மனிதர்களுக்கு, அவர்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும், அதனால் அவர்கள் எத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் உணர வைக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் என்.அரவிந்தன், எதையும் மிகைப்படுத்தி சொல்லாமல் அனைத்தையும் அளவாக சொல்லி படத்தை ரசிக்க வைப்பதோடு, பார்வையாளர்களை யோசிக்கவும் வைத்திருக்கிறார்.
இரவு 10 மணிக்கு மேக் சரக்கு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், போராட்டத்திற்கு நடுவே பயணப்படும் நாயகன் போகும் இடம் எல்லாம் அவருக்கு சரக்கு கிடைப்பது தான் சற்று செயற்கைத்தனமாக இருக்கிறது. மற்றபடி படத்தில் குறை என்று எதுவும் இல்லை, நாயகனின் போதை போல் படம் பார்வையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்தும்.
"குட் டே" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : ரசிகர்களை யோசிக்க வைக்கும் படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA