சற்று முன்

‘காத்துவாக்குல ஒரு காதல்’ விமர்சனம்
Directed by : Mass Ravi
Casting : Mass Ravi, Lakshmi Priya, Manju, Super Subbarayan, Sai Dheena, Kalluri Vinoth, Adithya Kathir, Thangadurai, Power Star, Monaksha
Music :GKV & Mikkin Aruldev
Produced by : Chennai Productions - Ezhil Iniyavan
PRO : Kumaresan
Review :
"காத்துவாக்குல ஒரு காதல்" மாஸ் ரவி இயக்கத்தில் சென்னை புரொடக்ஷன்ஸ் - எழில் இனியவன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிகேவி. இந்த படத்தில் மாஸ் ரவி,சூப்பர் சுப்பராயன்,ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி தங்கதுரை சாய் தீனா லட்சுமி பிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால் கூட, எப்போதும் பிரியாத காதலர்களாக இருக்க வேண்டும், என்று சொல்லும் அளவுக்கு உருகி உருகி காதலிக்கிறார்கள். மறுபக்கம் ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்படும் மோதலில் பல ரவுடிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரை தேடி அலையும் நாயகி லட்சுமி பிரியா, ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவராக மாஸ் ரவியை மீண்டும் சந்திக்கிறார். ஆனால், மாஸ் ரவி லட்சுமி பிரியாவை தெரியாதவர் போல், அவரை கடந்து செல்கிறார். மாஸ் ரவியின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன ?, லட்சுமி பிரியாவின் காதல் என்ன ஆனது ?, என்பதை பல குழப்பங்களுக்கு மத்தியில் சொல்வதே ‘காத்துவாக்குல ஒரு காதல்’.
படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, மென்மையான நபர் மற்றும் அதிரடியானவர் என இரண்டு கெட்டப்புகளில் அசத்தியிருக்கிறார். காதலிக்காக உருகும் போதும் சரி, ரவுடிகளை துவம்சம் செய்யும் போதும் சரி, நடிப்பில் வித்தியாசத்தை காட்டி, தான் ஒரு மாஸ் என்பதை நிரூபித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சிரித்த முகத்தோடு அழகாக இருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக இருந்தாலும், வலிமையான நடிப்பு மூலம் பார்வையாளர்களை எளிதில் கவர்ந்திழுத்து விடுகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மஞ்சு நடிப்பிலும் குறையில்லை.
வில்லன்களாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் மற்றும் சாய் தீனா நடிப்பு வழக்கத்தை விட கொஞ்சம் ஓவராக இருப்பதோடு, வித்தியாசம் என்ற பெயரில் பார்வையாளர்களை அவ்வபோது வெறுப்பேத்தவும் செய்திருக்கிறார்கள்.
ஆதித்யா பாஸ்கர் மற்றும் தங்கதுரை வரும் காட்சிகள், கவுண்டமணி - செந்தில் ஜோடி அளவுக்கு இல்லை என்றாலும், சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசைமைப்பாளர்கள் ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் ஓகே ரகம். தேவா குரலில் ஒலிக்கும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியனின் கேமரா காட்சிகளை பளிச்சென்று காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாநாயகனின் கெட்டப்பை வித்தியாசப்படுத்தி காட்டுவதிலும் அதிகம் மெனக்கெட்டிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் மாஸ் ரவி, காதல் கதையை பல மர்ம முடிச்சுகளுடன் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, காதலில் விழுந்த நாயகனின் பின்னணியும், காதலனை தொலைத்துவிட்டு தேடும் நாயகியின் காதல் வலியும் எதிர்பார்க்காத அதிர்ச்சியளிக்கும் திருப்பங்கள்.
படத்தின் முதல் பாதியில் காதலும், ரவுடிகளின் மோதலும் நிறைந்திருந்தாலும், அவை படத்திற்கு பயனுள்ளதாக இல்லாதது பலவீனம். அதே சமயம், இரண்டாம் பாதியில் பல திருப்பங்களும், அவற்றுக்கு கொடுக்கப்படும் விளக்கங்களும் பலவீனத்தை மறைத்து படத்திற்கு சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.
"காத்துவாக்குல ஒரு காதல்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : ஒரு முறை பார்க்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA