சற்று முன்

‘கடுக்கா’ விமர்சனம்
Directed by : S.S.Murugarasu
Casting : Vijay Gowrish,Smeha, Adarsh Madhikanth, Manjunathan, Manimegalai, Sudha
Music :Kevin d'cost
Produced by :
PRO : Anand
Review :
"கடுக்கா" எஸ்.எஸ்.முருகரசு இயக்கத்தில் விஜய் கௌரிஷ் புரொடக்ஷன்ஸ், நியந்த் மீடியா மற்றும் டெக்னாலஜி, மலர் மாரி மூவீஸ் - கௌரி ஷங்கர் ரவிச்சந்திரன், ஆனந்தி பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கெவின் டி,கோஸ்டா. இந்த படத்தில் விஜய் கெளரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உருப்படியான வேலை ஏதும் இல்லாமல், அம்மா உழைப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாயகன் விஜய் கெளரிஷ், வீட்டுக்கு எதிரே புதிதாக குடிவரும் நாயகி ஸ்மேஹாவை கண்டதும் காதல் கொள்வதோடு, அவரை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். மறுபக்கம், விஜய் கெளரிஷின் நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரிடம் தெரிவிக்கிறார். விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக் கொள்ளும் ஸ்மேஹா, மறுபக்கம் ஆதர்ஷையும் காதலிப்பதாக சொல்கிறார்.
நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது தெரியாமல் காதல் மயக்கத்தில் இருக்கும் போது, உண்மை தெரிய வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண இருவரும் தனித்தனியாக ஸ்மேஹாவை சந்தித்து பேசும்போது, அப்பொழுதும் அந்த பெண் இருவரையும் முட்டாளுக்கும் விதத்தில் பதில் அளித்து, இருவரையும் காதல் மயக்கத்தில் சுற்ற விடுகிறார். அவர் அப்படி செய்ய காரணம் என்ன ?, உண்மையில் அவர் காதலிக்கிறாரா? இல்லையா ? என்பதை எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதே ‘கடுக்கா’.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் கெளரிஷ் அவரது நண்பராக நடித்திருக்கும் ஆதர்ஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அவர்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
வயதுக்கு ஏற்ற பொறுப்பு இல்லை என்றாலும், காதலிக்க பெண் தேடி பேருந்து நிலையத்தில் நிற்பதையே வேலையாக பார்க்கும் விஜய் கெளரிஷ், அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு, ஏக்கத்தோடு பேருந்துகளை பார்ப்பதும், தனது வயதை விட மூத்தவர்களுடன் சேர்ந்து வெட்டியாக பொழுதை கழிப்பதும் என்று மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா, பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக இருப்பதோடு, பெண்களின் மனகுமுறல்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகனான ஆதர்ஷ், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயல்பாக நடித்து கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெவின் டி,கோஸ்டா இசையில் பாடல்கள் முனுமுனுக்க வைக்கிறது. பின்னணி இசை அளவு.
ஒளிப்பதிவாளர் சதிஷ் குமார் துரைகண்ணு, கதை மாந்தர்களையும், கதைக்களத்தையும் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து வீடுகள், டீக்கடை, பேருந்து நிலையம் என அனைத்தையும் காட்சிப்படுத்திய விதம், படம் பார்ப்பவர்களுக்கு அந்த ஊரில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.
படத்தொகுப்பாளர் எம்.ஜான்சன் நோயல், காட்சிகளை சுருக்கமாக வெட்டினாலும், நகைச்சுவை மற்றும் ரசிப்புத்தன்மையை அதிகரிக்கும் வகையில் நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எஸ்.முருகரசு, இளைஞர்களின் எதார்த்தமான வாழ்வியலை நகைச்சுவையாக சொன்னாலும், அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இரண்டு இளைஞர்களின் காதல், இருவவரின் காதலையும் ஏற்றுக்கொள்ளும் நாயகி இறுதியில் இருவருக்குமே கடுக்கா கொடுப்பது, என்று படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையாக நகர்ந்தாலும், இறுதியில் பார்வையாளர்களின் இதயம் கனக்க செய்யும் வகையில் முக்கியமான பிரச்சனையை பற்றி பேசி படத்தை முடித்து பாராட்டு பெறுகிறார்.
"கடுக்கா" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : நல்ல பொழுதுபோக்கு கதை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA