சற்று முன்

’பிளாக்மெயில்’ விமர்சனம்
Directed by : Mu Maran
Casting : G. V. Prakash Kumar, Teju Ashwini, Srikanth, Bindu Madhavi
Music :Sam C. S
Produced by : JDS Film Factory - Jayakkodi Amalraj
PRO : DOne
Review :
"பிளாக்மெயில்" மு.மாறன் இயக்கத்தில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி – ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாம்.சி.எஸ். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சரக்கு வாகன ஓட்டுநரான ஜி.வி.பிரகாஷ் குமார், ரூ.50 லட்சம் இருந்தால் மட்டுமே தனது முதலாளியால் சிறைபிடிக்கப்பட்ட தன் காதலியை மீட்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார். பணத்திற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மனைவியான பிந்து மாதவியை அவரது முன்னாள் காதலன் லிங்கா மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்.
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் பண தேவையை அறிந்துக் கொண்டு அவர் மூலம், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் குழந்தையை கடத்த லிங்கா திட்டம் போடுகிறார். ஆனால், ஜி.வி.பிரகாஷ் குமார் கடத்துவதற்கு முன்பாகவே அந்த குழந்தை வேறு ஒருவரால் கடத்தப்படுகிறது. குழந்தையை கடத்தினால் பணம் கிடைக்கும் என்பதால், குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஈடுபட, குழந்தை வெவ்வேறு தரப்பினரால் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் ?, எதற்காக குழந்தையை கடத்த முயற்சிக்கிறார்கள் ? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘பிளாக்மெயில்’ படத்தின் கதை.
ஜி.வி.பிரகாஷ் குமார் அப்பாவி சரக்கு வாகன ஓட்டியாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் காதலியை காப்பாற்றுவதற்காக எந்த தவறையும் செய்ய ரெடியாகும் அவர், பலவிதமான உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும், எமோஷனல் காட்சிகளில் அவர் நடிப்பில் தடுமாறியிருப்பது பல இடங்களில் தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் தேஜு அஸ்வினியின் பங்கு திரையில் குறைவு என்றாலும், திரைக்கதை நகர்த்தலுக்கு அவரது கதாபாத்திரம் தான் மையப்புள்ளி என்பதால், அவர் பார்வையாளர்கள் கவர்ந்து விடுகிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தனது அனுபவமிக்க நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் பிந்து மாதவி, முன்னாள் காதலனால் பிளாக்மெயில் செய்யப்படுவதோடு, கடத்தப்பட்ட குழந்தையை மீட்க போராடுவது என்று உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கும் லிங்கா, நடிப்பில் மிளிர்கிறார். சாஜி, ரெடின் கிங்ஸ்லி, முத்துகுமார், ரமேஷ் திலக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறையின்றி நடித்திருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. திருநங்கைகளுக்கான பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் விதத்தில் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் வண்ணங்களையும், கோணங்களையும் கையாண்டு கவனம் ஈர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஷால் லோகேஷின் திரைக்கதையை வேகமாகவும், காட்சிகளை விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றாலும், கடத்தப்பட்ட குழந்தையை மீட்க போராடும் தாயின் போராட்டம், சிறைபிடிக்கப்பட்ட காதலியை மீட்க துடிக்கும் காதலனின் பதற்றம் இரண்டையும் பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், குழந்தை கடத்தல் பின்னணியில் இரண்டு வெவ்வேறு பிளாக்மெயில் சம்பவங்களுக்கு திரைக்கதை அமைத்த விதம் விறுவிறுப்பாக மட்டும் இன்றி யூகிக்க முடியாதபடி உள்ளது.
ஆரம்பம் முதல் முடிவு வரை படம் விறுவிறுப்பாக பயணிப்பதோடு, குழந்தை கடத்தல் மூலம் எதிர்பாரத திருப்பங்கள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதே சமயம், குழந்தை தொடர்ந்து கடத்தப்படுவது, ஒரே விசயத்தை திரும்ப திரும்ப காட்டுவது போல் இருப்பதால், திரைக்கதை திடீரென்று நொண்டியடிக்கவும் செய்கிறது. இந்த குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால், சீட் நுணியில் உட்கார வைத்து முழுமையான சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.
"பிளாக்மெயில்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : முழுமையான சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA