சற்று முன்

‘அந்த 7 நாட்கள்’ விமர்சனம்
Directed by : M.Sundar
Casting : Ajitej, Shriswetha, K.Bagyraj, Namo Narayanan
Music :Sachin Sundar
Produced by : Bestcast Studios - Murali Kabirdass
PRO : DOne
Review :
"அந்த 7 நாட்கள்" எம்.சுந்தர் இயக்கத்தில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் – முரளி கபிர்தாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சச்சின் சுந்தர். இந்த படத்தில் அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா, கே.பாக்யராஜ், நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வானியற்பியல் (Astrophysics) ஆராய்ச்சி மாணவரான நாயகன் அஜிதேஜ், சூரியகிரகண ஆய்வில் ஈடுபடும் போது, ஏற்படும் பாதிப்பால் அதிசய திறன் ஒன்றை அடைகிறார். அதன் மூலம் பிறருக்கு நடக்க இருக்கும் கெட்ட விசயங்களை முன் கூட்டியே அறிந்துக் கொள்கிறார். இதற்கிடையே, 7 நாட்களில் தனது காதலி ஸ்ரீஸ்வேதாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட போவதை தனது அதிசய ஆற்றல் மூலம் அறிந்துக் கொள்ளும் நாயகன், அதில் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, இல்லையா ? என்பது தான் ‘அந்த 7 நாட்கள்’.
நாயகனாக நடித்திருக்கும் அஜிதேஜ் அறிமுக நடிகராக இருந்தாலும், அதற்கான அடையாளமே தெரியாத வகையில் நடித்திருக்கிறார். இளையராஜா பாடல் மூலம் காதல் வளர்ப்பது, காதலிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை நினைத்து கலங்குவது, அவரை காப்பாற்றுவதற்காக போராடுவது, என்று படம் முழுவதும் உணர்வுப்பூர்வமாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதா, பார்த்ததும் கவர்ந்திழுக்கும் அழகியாக இல்லை என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாட்களிலும் தனது பாதிப்பால் ஏற்படும் வலியை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியின் போது, அவரது உடல் மாற்றம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் நமோ நாராயணன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் ஆகியோர் திரைக்கதையில் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், திரை இருப்பு மற்றும் நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் காதல் கதைக்கு ஏற்பவும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை காட்சிகளை தரமாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நாயகியின் உருவ மாற்றம் மற்றும் நடிப்பு ஆகியவற்றை படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.
நாயகன் மற்றும் நாயகி இருவரை சுற்றி மட்டுமே நடக்கும் கதையாக இருந்தாலும், அதை சற்று சுவாரஸ்யமாக நகர்த்த பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளார் படத்தொகுப்பாளர் முத்தமிழன் ராமு.
எழுதி இயக்கியிருக்கும் எம்.சுந்தர், காதல் கதையை ஃபேண்டஸி மற்றும் அறிவியல் அதிசயம் மூலம் சொல்ல முயற்சித்ததோடு, சமீபத்திய தெருநாய்கள் கடிப்பது பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கத்தை திரைக்கதையோடு பயணிக்க வைத்து அதிர்ச்சியளித்திருக்கிறார்.
வானியற்பியல் பின்னனியில் ஒரு காதல் கதை, அதில் ஏற்படும் பிரச்சனை என்ற கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை மற்றும் படமாகிய விதம், சுவாரஸ்யம் அற்றதாக இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், அந்த பலவீனத்தை மறக்கடிக்கும் விதத்தில் இரண்டாம் பாதியில் ரேபிஸ் நோய் பற்றிய காட்சிகள் பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது.
"அந்த 7 நாட்கள்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : பார்க்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA