சற்று முன்
’காந்தா’ விமர்சனம்
Directed by : Selvamani Selvaraj
Casting : Dulquer Salmaan, Samuthrakani, Rana Daggubati, Bhagyashri Borse, Ravindra Vijay, Aadukalam Naren, Vaiyapuri, Gayathri Shankar, Brijesh Nagesh, Bucks, Barathan, Nizhalgal Ravi, Java Sunderasan
Music :Jhanu Chanthar
Produced by : Spirit Media, Wayfarer Films - Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri, Jom Varghese
PRO : DOne
Review :
"காந்தா" செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ஸ்பிரிட் மீடியா, வேய்ஃபேரர் பிலிம்ஸ் – ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜானு சந்தர். இந்த படத்தில் துல்கர் சல்மான், சமுதிரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், நிழல்கள் ரவி, வையாபுரி, காயத்ரி சங்கர், பிஜேஷ் நாகேஷ், பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் தொடங்கி, சுதந்திர இந்தியா காலக்கட்டம் வரை கதை நடக்கிறது. அப்போதைய காலக்கட்டத்தில் பிரபல நடிகராக இருக்கும் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான நாடகம் தான் படத்தின் கதை.
மோதல்களுக்கு இடையே தொடர்ந்து நடக்கும் படப்பிடிப்பில் நாயகனுக்கும், நாயகி பாக்யஸ்ரீ-க்கும் இடையே புரிதல் ஏற்படுகிறது. இதனால், மேலும் கோபமடையும் இயக்குநர் தன்னுடைய கிளைமாக்ஸ்படி படம் முடிய வேண்டும் என்பதில் தீவிரம் காட்ட, அவருக்கு போட்டியாக நாயகனும் செயல்படுகிறார். இவர்களின் இந்த மோதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதனால் யார் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள், யார் நினைத்தது போல் படம் முடிந்தது, என்பதை பார்வையாளர்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் விதமாக சொல்வதே ‘காந்தா’.
பழம்பெரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்திருக்கும் துல்கர் சல்மான், தான் ஒரு நடிப்பு சக்கரவர்த்தி என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார். அவரது தோற்றம், சிகை அலங்காரம், வசீகரமான முகம் ஆகியவற்றுடன் பிரமிக்க வைக்கும் நடிப்பு என்று தான் ஏற்று நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் துல்கர் சல்மான், தனது நடிப்பால் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கட்டிப்போட்டு விடுகிறார். ஏமாற்றம், அவமானம், கோபம், ஏக்கம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் தனது நடிப்பின் மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மான், நாடகம் ஜானராக இருந்தாலும் பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தன் பக்கம் திருப்பி, படத்தை கொண்டாட வைத்திருக்கிறார். இந்த படத்திற்காக துல்கர் சல்மானுக்கு தேசிய விருது உறுதி.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, அக்காலத்து நடிகைகளின் முக சாயலுடன் கவர்ந்திழுக்கும் அழகியாக வலம் வருகிறார். அளவான நடிப்பு, அப்பாவித்தனமான பேச்சு என்று தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பு வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருந்தாலும், கொஞ்சம் ஓவராக இருப்பதோடு, சில இடங்களில் கடுப்பேற்றவும் செய்கிறது. அதே சமயம், மென்மையான கதாபாத்திரங்களை பார்த்து சோர்வடையும் பார்வையாளர்களுக்கு சற்று புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாகவும் ராணா டகுபதியின் அதிரடி நடிப்பு அமைந்திருக்கிறது.
உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், ”அண்ணா...அண்ணா...” என்று அழைத்தே பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து விடுகிறார்.
இனிமையான பாடல்கள் மற்றும் மென்மையான பின்னணி இசையோடு காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் இசையமைப்பாளர் ஜானு சந்தர், தனது இசை மூலம் கதாபாத்திரங்களின் மனநிலையை பார்வையாளர்களிடம் கடத்தி அவர்களது ஒவ்வொரு அசைவையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் கேமரா பழையக் படம் பார்ப்பவர்களையும் அக்காலத்தில் பயணிக்க வைத்து விடுகிறது. அக்காலத்து சென்னையை கிராபிக்ஸ் மூலம் சித்தரித்த விதம், அதை காட்சியோடு இணைத்தது என அனைத்தும் தரமாக இருப்பதோடு, நடிகர்களை அழகாக காட்சிப்படுத்தி, அவர்களது நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்களை மிக துள்ளியமாக படமாக்கி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸ்.
படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும், படம் பார்க்கும் போது அந்த நினைப்பே ஏற்படாத வகையில் காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்து படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ல்லேவெல்லின் அந்தோணி கொன்சால்வேஸ்.
கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களைப் போல் படத்தின் கலை இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கலை இயக்குநர் ராமலிங்கம் கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அரங்கம் அனைத்துமே அக்காலத்து படப்பிடிப்பை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் செல்வமணி செல்வராஜ், தமிழ் சினிமாவில் வாழ்ந்த பழம்பெரும் நடிகர் ஒருவரது கதாபாத்திரத்தை கருவாக வைத்துக்கொண்டு எழுதியிருக்கும் கற்பனை கதை மற்றும் அதற்கான திரைக்கதை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.
ஒரு திரைப்படத்தின் இயக்குநர், நாயகன், நாயகி என மூன்று கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு முதல் பாதியை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், அவர்கள் மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றினாலும், அதை மிக விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார்.
முதல் பாதி ரசிக்க கூடிய நாடகமாக பயணித்தாலும், இரண்டாம் பாதி கதை வேறு பாதையில் பயணித்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைக்கிறது. அதே சமயம், இரண்டாம் பாதியின் துவக்கத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், நடிகர்களின் அபாரமான நடிப்பை அவ்வபோது வெளிக்காட்டி படத்தை தொய்வில் இருந்து மீட்டு விடுகிறார் இயக்குநர் செல்வமணி செல்வராஜ்.
வழக்கமான நேரத்தை விட படம் சற்று நீளமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு அந்த உணர்வே ஏற்படாத வகையில், நடிகர்கள் தங்களது நடிப்பில் பார்வையாளர்களை மூழ்கடித்து விடுகிறார்கள். மேக்கிங், தொழில்நுட்பம், கதை சொல்லல் ஆகியவை பாராட்டும்படி இருந்தாலும், அவற்றை எல்லாம் தாண்டி, படத்தை கொண்டாட வைத்து விடுகிறது துல்கர் சல்மான், சமுத்திரக்கனி மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோரது நடிப்பு.
"காந்தா" படத்திற்கு மதிப்பீடு 4/5
Verdict : புதிய முயற்சி
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA

















