சற்று முன்
’தாவுத்’ விமர்சனம்
Directed by : Prashanth Raman
Casting : Linga, Sara Archar, Dilipan, Radha Ravi, Sai Dheena, Sara, Vaiyapuri, Sarath Ravi, Arjay, Abishek
Music :Rakesh Ambikapathy
Produced by : TURM Production House - S.Uma Maheshwari
PRO : Bhuvan
Review :
"தாவுத்" பிரசாந்த் ராமன் இயக்கத்தில் TURM புரொடக்ஷன் ஹவுஸ் – எஸ்.உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ராக்கேஷ் அம்பிகாபதி. இந்த படத்தில் லிங்கா, சாரா ஆச்சர், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வாழ்க்கையை தொடங்கிய தாவுத், மும்பையில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்துகிறார். புகைப்படம் உள்ளிட்ட எந்த விபரமும் வெளி உலகத்திற்கு தெரியாத தாவுத் யார் ? என்பதை தெரிந்து கொள்ள தீவிரம் காட்டுவதோடு, தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதை பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை குழு ஈடுபடுகிறது. அதே சமயம், தாவுத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவுத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது.
கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாக வலம் வரும் லிங்கா, இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். அப்பாவியான முகம், அளவான நடிப்பு என்று தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாரா ஆச்சர், கதாநாயகனுக்கு ஜோடியாக அல்லாமல் வில்லன் கூட்டத்தில் இருப்பவருக்கு ஜோடியாக சுற்றி வருகிறார். அறிமுகம் தான் இப்படி, பிறகு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கும் போது, அம்மணி சட்டென்று மறைந்து பார்வையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜெய், தாவுத்தின் அடியாளாக நடித்திருக்கும் திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், ஸாரா, வையாபுரி, ராதாரவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
ராக்கேஷ் அம்பிகாபதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஆக்ஷன் திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன் பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரது கேமரா, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆக்ஷன் திரில்லர் உணர்வு குறையாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் ஹீரோ அல்லது வில்லன் கதாபாத்திரங்களுக்கு தான் பெரிய பில்டப் கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பில்டப் கொடுக்கும் விதமாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் ஆர்.கே.ஸ்ரீநாத், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து படம் முழுவதையும் பரபரப்பாக பயணிக்க வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் ராமன், தாவுத் மற்றும் அவரது கடத்தல் பொருளை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார்.
எளிமையான விசயத்தை வைத்துக் கொண்டு, இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை பொழுதுபோக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் ராமன், கதாநாயகியின் கதாபாத்திரத்தை சட்டென்று திரைக்கதையில் இருந்து விலக்கி வைப்பது, தாவுத் யார் ? என்ற கேள்வியை பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டு, அது பற்றிய விளக்கத்தை பார்வையாளர்கள் குழப்பமடையும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.
கடத்தல் பொருளை கைப்பற்றப் போவது யார் ? என்ற கேள்விக்கான பதிலை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் ராமன், தாவுத் யார் ? என்ற கேள்வியை மட்டுமே வைத்துக் கொண்டு, படத்தின் இறுதிக் காட்சி வரை பார்வையாளர்களின் கவனத்தை சிதறவிடாமல் காட்சிகளை வடிவமைத்த விதம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
"தாவுத்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : ஒரு முறை பார்க்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA

















