சற்று முன்
’யெல்லோ’ விமர்சனம்
Directed by : Hari Mahadevan
Casting : Poornima Ravi, Vaibhav Murugesan, Sai Prasanna, Leela Samson, Vinodhini Vaidhyanadhan, Prabu Soloman, Namita Krishnamoorthy, Vigneshwar, Loki, Ajay
Music :Cliffy Chris and Anand Kashinath
Produced by : Covai Film Factory - Prashanth Rangaswamy
PRO : Bharani
Review :
"யெல்லோ" ஹரி மகாதேவன் இயக்கத்தில்கோவை பிலிம் ஃபேக்டரி – பிரஷாந்த் ரங்கசாமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கிளிபி கிரிஸ், ஆனந்த் காசிநாத். இந்த படத்தில் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, லோகி, விக்னேஷ்வர், அஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதல் தோல்வி மற்றும் குடும்ப சூழல் ஆகியவற்றால் அழுத்தமான மனநிலையில் இருக்கும் நாயகி பூர்ணிமா ரவி, தனது தந்தையின் ஆலோசனையின்படி தன் மனதுக்கு பிடித்ததை செய்ய முடிவு செய்கிறார். அதன்படி, தன் சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடி பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவருக்கு வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் இணைந்து தொடரும் இந்த பயணம், இருவரது வாழ்விலும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது, தேடிச் சென்ற நண்பர்கள் கிடைத்தார்களா, என்பதை மனம் ஏங்கும் பயணமாக சொல்வதே ‘யெல்லோ’.
யூடியுப் பிரபலமான பூர்ணிமா ரவி, சில படங்களில் நடித்திருந்தாலும் இதில் முழுமையான நாயகியாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி, தோற்றம் ரீதியாகவும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கும் பூர்ணிமா ரவி, அதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. தனது வழக்கமான நடிப்பை வெளிக்காட்டாமல், அளவாக நடித்து ஆதிரை கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடும் பூர்ணிமா ரவி, ரொமான்ஸ், நடனம், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் அடித்து ஆடி, குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டும் அல்ல கமர்ஷியல் கதாநாயகியாகவும் தன்னால் களம் காண முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கதை நாயகியின் திடீர் தோழனாகவும், துணையாகவும் பயணித்திருக்கும் வைபவ் முருகேசன், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக மட்டும் இன்றி, தனது நடிப்பு மூலம் சாய் கதாபாத்திரத்தை பார்வையாளர்களுக்கு பிடிக்கும் கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார்.
சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் வேடங்கள் கடந்து செல்லும் மேகங்கள் போல், நாயகியின் பயணத்தில் வந்து போனாலும், களக்கத்தில் இருக்கும் மனங்களை தெளிவுப்படுத்தும் காரணிகளாக திரைக்கதையில் பயணித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
பயணத்தை காட்சிப்படுத்திய விதமும், பயணப்படும் இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, ஒரு கதாபாத்திரமாகவே பயணித்து கண்களுக்கு விருந்தளிகும் விதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக். கேரளா, கோவா என்று முக்கியமான சுற்றுலாத் தளங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள், ரயில் நிலையம், தண்டவாளம், ரயில் பயணம் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் படம் பார்ப்பவர்களுக்கும் பயணம் மேற்கொள்ளும் அனுபவத்தை கொடுக்கிறது.
இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்கள் இனிமையாக இருப்பதோடு, பயணத்தினால் கதாபாத்திரங்களின் மனநிலை மாற்றங்களை தனது இசை மூலம் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை இயற்கை பயணத்திற்கு கூடுதல் இதம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
இரண்டு கதாபாத்திரங்களின் பயணத்தை தொய்வின்றி நகர்த்திச் சென்றிருக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீ வத்சன், வசனக் காட்சிகள் அதிகம் இருந்தாலும், அதை ரசிக்க கூடிய விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஹரி மகாதேவன், படம் பார்ப்பவர்கள் ஏங்கும் விதத்தில் ஒரு பயணத்தை நேர்த்தியான படைப்பாக கொடுத்திருக்கிறார். எளிமையான கதை என்றாலும், பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் அமைத்திருக்கும் திரைக்கதையும், அதை காட்சிப்படுத்திய விதமும் படத்தை ரசிக்க வைக்கிறது.
வசனக் காட்சிகள் மற்றும் யூகிக்கும்படியான காட்சிகள் படத்தை சில இடங்களில் தொய்வடைய செய்தாலும், சிறப்பான லொக்கேஷன்களை அழகியலோடு காட்சிப்படுத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிடும் இயக்குநர் ஹரி மகாதேவன், இறுக்கமான மனங்களை இலகுவாக்கும் ஒரு புத்துணர்ச்சி பயணத்தை வெற்றிகரமாக முடித்து கைதட்டல் பெறுகிறார்.
"யெல்லோ" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : அனைவரையும் ஈர்க்கும்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















