சற்று முன்
’வங்காள விரிகுடா’ விமர்சனம்
Directed by : Guhan Chakkaravarthiyar
Casting : Guhan Chakkaravarthiyar, Ponnambalam, Alina Sheikh, Vaiyapuri
Music :Guhan Chakkaravarthiyar
Produced by : Guhan Chakkaravarthiyar
PRO : Nikil Murugan
Review :
"வங்காள விரிகுடா" குகன் சக்கரவர்த்தியார் தயாரித்து இயக்கி இசையமைத்து அவரே நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் பொன்னம்பலம், வாசு விக்ரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வாக்கு வாய்ந்த தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியின் வாழ்க்கைதான் இந்த படத்தின் மையம். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல், மன அழுத்தத்துடன் கடற்கரையில் தனியாக நேரம் கழிக்கும் குகனின் வாழ்வில், எதிர்பாராத ஒரு சம்பவம் திருப்புமுனையாக அமைகிறது.
தன்னுடைய முன்னாள் காதலி தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதை நேரில் கண்டு அதிர்ச்சி அடையும் குகன், அவளை உடனடியாக காப்பாற்றுகிறார். பின்னர் அவளது திருமண வாழ்க்கையும் தன் வாழ்க்கையைப் போலவே வெறுமையாக இருப்பதை உணரும் குகன், அவளது வாழ்க்கையை மீண்டும் சரிசெய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அந்த முடிவின் விளைவாக நிகழும் ஒரு கொலை, கதையை முற்றிலும் வேறு பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
கொல்லப்பட்டதாக நம்பப்படும் நபர், குகனின் காதலியை தொலைபேசி மூலம் மிரட்டத் தொடங்கும் போது, கதையின் மர்மம் தீவிரமாகிறது. இறந்தவன் பேசுகிறான் என்ற குழப்பம் ஒருபுறம், காதலியை அச்சுறுத்தும் விசித்திர சம்பவங்கள் மறுபுறம் என, குகனின் வாழ்க்கை மேலும் சிக்கலாகிறது. இந்த மிரட்டல்களுக்கு பின்னால் இருப்பவர் யார்? உண்மையில் நடந்தது என்ன? என்பதைக் கண்டறியும் முயற்சியே "வங்காள விரிகுடா" படத்தின் கதை
நாயகனாக நடித்ததோடு, இயக்கப் பொறுப்பையும் ஏற்றுள்ள குகன் சக்கரவர்த்தி, திரை முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ரஜினிகாந்த் ஸ்டைலின் ஆவேசமும், விஜயகாந்த் படங்களின் நேரடியான மாஸும் கலந்த ஒரு ஹீரோ உருவம் அவர் மூலம் உருவாகிறது. தவறு செய்தவர்களை நேருக்கு நேர் எதிர்க்கும் தைரியம், குடும்பத்தின்மீது உள்ள பாசம், முன்னாள் காதலியிடம் காட்டும் அக்கறை, சமூகத்திற்காக செய்யும் உதவிகள் என, வழக்கமான தமிழ் சினிமா நாயகனின் அனைத்து அம்சங்களும் ஒரே கதாபாத்திரத்தில் அடுக்கப்பட்டுள்ளன.
நாயகனின் மனைவியும், முன்னாள் காதலியும், பாடல்களுக்கும் காதல் காட்சிகளுக்கும் மட்டும் பயன்படுத்தப்படும் கதாபாத்திரங்களாக இல்லாமல், கதையின் போக்கில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இது படத்திற்கு ஒரு நேர்மறையான அம்சமாக அமைந்துள்ளது.
பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்கள் நடிப்பால் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறார்கள். அதே சமயம், பல புதுமுகங்கள் தெளிவான நோக்கம் இல்லாமல் வந்து போவது, திரைக்கதையில் சற்றே சிதறலை ஏற்படுத்துகிறது.
திராவிட சிந்தனைகளையும், தமிழ் சினிமா நாயகர்களின் புகழையும் முன்வைத்து அமைக்கப்பட்ட பாடல் கவனம் பெறுகிறது. பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும் உணர்விற்கும் ஏற்றபடி பயணிக்கிறது. ஒளிப்பதிவு தேவையை நிறைவேற்றும் அளவில் உள்ளது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு என 21 துறைகளில் ஒரே மனிதராக உழைத்துள்ள குகன் சக்கரவர்த்தியின் சினிமா மீதான தீவிர ஈடுபாடு, படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படுகிறது. நடிகராக அவரது உடல் மொழியும், ஸ்டைலும் முழுக்க “மாஸ்” ரசிகர்களை குறிவைத்ததாக இருக்கிறது.
ஆரம்பத்தில் அதிரடி பாணியில் நகரும் படம், பின்னர் குடும்ப உணர்ச்சிகளுக்குள் நுழைந்து, இறுதியில் சஸ்பென்ஸ் திரில்லர் பாதையில் பயணிக்கிறது. பல்வேறு ஜானர்களை ஒரே படத்தில் இணைக்கும் முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதே நேரத்தில் சில இடங்களில் குழப்பத்தையும் உருவாக்குகிறது.
ஒரு நடிகராக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் குகன் சக்கரவர்த்தி, இயக்குநராக ஒரே நேரத்தில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கிறார்.
"வங்காள விரிகுடா" படத்திற்கு மதிப்பீடு 2.5/5
Verdict : துணிச்சலான முயற்சி
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















