சற்று முன்
'ஆழி’ விமர்சனம்
Directed by : Madhav Ramadasan
Casting : R.Sarathkumar, Indrajith Jagajith, Devika Satheesh, Vaiyapuri, Sreejith Revi, Birla Bose, Thamaraiselvi, Sarjin, Mythili Sathyaraj, Binish Babu, Biju Mavunkal Varghese, Teena Bhatia
Music :Jassie Gift, Back Ground Score - William Francis
Produced by : 888 Production & Celluloid Creaations
PRO : Nikil Murugan
Review :
"ஆழி" மாதவ் ராமதாசன் இயக்கத்தில் 888 புரொடக்ஷன் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜாசி கிப்ட். இந்த படத்தில் சரத்குமார் ,இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ், வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார் சாதாரண வாழ்க்கை நடத்தினாலும், மறைமுகமாக போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ் கல்லூரியில் படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். இவர்களின் காதலை பற்றி அறியும் சரத்குமார் கடும் கோபம் அடைகிறார். தன் மகளுக்காக பெரிய கனவுகள் வைத்திருந்த அவர், வறுமையான பின்னணியிலிருந்து வந்த இந்திரஜித்தை ஏற்க மறுக்கிறார். கோபத்தின் உச்சத்தில், இந்திரஜித்தை கடத்தி தனது மீன்பிடி படகில் ஆழ்கடலுக்கு அழைத்து செல்கிறார். அங்கே யாரும் அறியாத இடத்தில் அவனை கொலை செய்து விட திட்டமிடுகிறார். அதிலிருந்து புத்திசாலித்தனமாகவும் தைரியமாகவும் தப்பிக்க இந்திரஜித் முயற்சிக்கிறார். இறுதியில், இந்திரஜித் சரத்குமாரின் பிடியிலிருந்து தப்பித்தாரா? அல்லது ஆழ்கடல் அவரின் காதலுக்கு முடிவாக மாறுகிறதா? என்பதே "ஆழி" படத்தின் கதை.
மூர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு சரத்குமார் மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளார். அவரது பயங்கரமான தோற்றம், முகத்தை மறைக்கும் நீண்ட முடியும் தாடியும், அதிகம் பேசாத முரட்டுத்தனமான இயல்பும் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அந்த வித்தியாசமான லுக்கும் அடக்கமான ஆனால் தீவிரமான நடிப்பும் அவருக்கு முழுமையாக கை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அருள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்திரஜித் ஜெகஜீத், புதுமுகம் போல தெரியாமல் அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். குறிப்பாக சரத்குமார் உடன் நேருக்கு நேர் மோதும் காட்சிகளில் அவரது உணர்ச்சி வெளிப்பாடு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தி, காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை சேர்க்கிறது.
முகிலா கதாபாத்திரத்தில் நடித்துள்ள தேவிகா சதீஷ் இளமையாகவும், அழகாகவும் கவர்ச்சியாகத் தெரிகிறார். திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணத்திலும் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அவருடைய நடிப்பு அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் அழுத்தமாக தடம் பதிக்கக்கூடிய திறன் அவரிடம் இருப்பது இந்த படத்தின் மூலம் தெளிவாக உணரப்படுகிறது.
ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச் செல்வி, டீனா பாட்டியா, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், வையாபுரி உள்ளிட்ட பலர் படத்தில் தோன்றினாலும், அவர்களின் பாத்திரங்களுக்கு பெரிதான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை; கதையின் மைய ஓட்டத்தில் அவர்கள் தாக்கம் குறைவாகவே உணரப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர், ஆழ்கடல் பின்னணியை இயல்பாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் கடலில் நடைபெறுவதால், உண்மையாகவே நடுக்கடலில் படப்பிடிப்பு நடந்ததுபோன்ற ஒரு நெருக்கடியான உணர்வு சில தருணங்களில் உருவாகிறது.
ஜாஸி கிப்ட் அமைத்த பாடல்கள் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. அவரது முந்தைய ஹிட் பாடல்களின் எதிர்பார்ப்பில் கேட்டால் ஏமாற்றம் ஏற்படும். வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும், ரசூல் பூக்குட்டியின் ஒலிவடிவமைப்பும் கடலின் இயல்பான சத்தங்களை நமக்கு கேட்கச் செய்கின்றன. எனினும், அந்த ஒலிகள் காட்சிகளின் பரபரப்பை முழுமையாக உயர்த்துவதில் அதிக பலம் சேர்க்கவில்லை.
படத்தொகுப்பாளர் கே. சீனிவாஸுக்கு குறைந்த கதாபாத்திரங்களுடன் நகரும் கதையை சலிப்பில்லாமல் வைத்திருப்பது சவாலாக இருந்திருக்க வேண்டும். சில பகுதிகளில் அவர் காட்சிகளை துரிதமாக நகர்த்தியிருந்தாலும், பல இடங்களில் ஓட்டம் சற்றே மந்தமாகிறது.
எழுதி இயக்கிய மாதவ் ராமதாசன், “காதலின் ஆழமா? தந்தையின் பாசமா?” என்ற பரிச்சயமான விவாதத்தை மையமாகக் கொண்டு கதையை வடிவமைத்துள்ளார். இந்த பழக்கப்பட்ட கருத்துக்கு புதிய பரிமாணம் சேர்க்கும் வகையில் ஆழ்கடலைப் பின்னணியாகத் தேர்வு செய்திருப்பது சிறு வேறுபாட்டை தருகிறது. ஆனால் கருத்தின் வலிமையை முழுமையாக திரைக்கதையில் உறுதிப்படுத்த முடியாததால், முயற்சி முழு தாக்கத்தை எட்டாமல் நிற்கிறது.
"ஆழி" படத்திற்கு மதிப்பீடு 2.8/5
Verdict : "ஆழி"யின் தாக்கம் குறைவு
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















