சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

கஜா புயல் - கவிஞர் வைரமுத்து 5 லட்சம் நிதி வழங்கினார்
Updated on : 20 November 2018

புயலே புயலே என்செய நினைத்தாய் தமிழச்சாதியை என்று புலம்புவதில் இனிப் புண்ணியமில்லை. வாழ்விழந்த தமிழர்கள் மீட்கப்படவும் காக்கப்படவும் வேண்டும். அவர்களின் தலைக்கு மேலே வானம் கிழிந்துபோனது; கால்களுக்குக் கீழே பூமி அழிந்துபோனது.



கஜா புயலால் விழுந்துபோன தென்னைமரங்கள் வீட்டில் விழுந்த இழவுகளாகிவிட்டன. மனிதன் சாவதைவிட மாடு சாவதுதான் ஒரு விவசாயக் குடும்பத்தின் பெருந்துயரம். தமிழ்நாட்டுக்கே சோறுபோடும் நிலம் தனக்குச் சோறில்லாமல் போவது அவலத்தின் அவலம். குழந்தைகளும் முதியவர்களும் தொழுதும் அழுதும் நிற்கும் துயரம் பதறும் இதயத்தைச் சிதறுதேங்காய் போட்டுவிட்டுப் போகிறது. என்னால் தொலைக்காட்சி பார்க்கமுடியவில்லை. அதை நிறுத்திவிடுகிறேன் அல்லது கண்களை அணைத்துவிடுகிறேன்.



வேதாரண்யத்திலிருந்து இலங்கை நெடுந்தூரமில்லை; பக்கம்தான். போரால் இலங்கைத் தமிழன் அன்று அடைந்த துயரத்தை இந்தியத் தமிழன் இன்று புயலால் அடைந்திருக்கிறான். ஒரு தமிழனாக அல்ல மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது.



அரசியல் – சாதி – மதம் என்ற எல்லா எல்லைகளையும் கடந்து தமிழர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இயற்கையைவிட மனிதன் சிறந்தவன். கொடுப்பதும் கெடுப்பதும் இயற்கையின் குணங்கள். ஆனால் கொடுப்பது மட்டும்தான் உயர்ந்த மனிதனின் சிறந்த குணம். அள்ளிக்கொடுப்போர் அள்ளிக்கொடுங்கள்; கிள்ளிக்கொடுப்போர் கிள்ளிக்கொடுங்கள். ஒரு செல்வந்தரின் அல்லது ஒரு நிறுவனத்தின் இரும்புப்பெட்டியில் உள்ளதெல்லாம் தமிழன் கொடுத்த பணம்தான். இயன்றதைக் கொடுங்கள்.



வரிகட்டுகிறோம் இல்லையென்று சொல்லவில்லை. அது ஆணைக்கு உட்பட்டுச் செய்வது. தர்மம் அறத்துக்கு உட்பட்டுச் செய்வது. உறைவிடம் – உணவு – உடை – அன்பு – ஆறுதல் – மீட்சி இவையே அவர்களின் இன்றைய முன்னுரிமைகள். ஊர்கூடி ஊரை மீட்டெடுப்போம்.



அரசு அதிகாரிகள் நேர்மையோடும் அக்கறையோடும் ஈரத்தோடும் ஈகையோடும் செயலாற்றுவார்கள் என்று நம்புகிறோம். அரசு ஆற்றும் நற்பணிகளுக்குப் பாராட்டு; நன்கொடை தந்தோர்க்கு நன்றி.



என்ன இருந்தாலும் சொல் என்பது பித்தளை; செயல் என்பதே தங்கம். எழுதிப் பிழைக்கும் இந்த எளிய கவிஞன் தமிழர் மறுசீரமைப்புக்காக 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவழி அனுப்பியிருக்கிறேன். இந்தச் சிறுதொகை ஐந்து ஜோடிக் கண்களின் கண்ணீரைத் துடைத்தால் அதுபோதும் எனக்கு.



எளிதில் அடையமுடியாத கிராமங்களில் மீட்சிப்பணியாற்ற வெற்றித்தமிழர் பேரவைத் தோழர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் விரைவில் களமிறங்குவார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா