சற்று முன்
சினிமா செய்திகள்
பெண் இயக்குநர் ஆண் இயக்குநர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை - சிலம்பரசன் TR
Updated on : 26 July 2022
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது. மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வாழ்வின் தருணங்களை ரசிப்பது மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்ற கருத்தைச் சுற்றி வருகிறது. பாடல்களின் மாபெரும் வெற்றியின் காரணமாக, பேப்பர் ராக்கெட் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகள் படிப்படியாக அதிகரித்துள்ளன. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் டிரைலர் வெளியீட்டு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது..,
“பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின் பெரிய நட்சத்திரங்களுடன், இந்த பேப்பர் ராக்கெட் ஒரு அற்புதமான இடத்தை வந்தடைந்துள்ளது. பெரும்பாலும், திரில்லர் வகை அடிப்படையிலான தொடர்கள் தான் ஓடிடி இயங்குதளங்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். ஜீ5 இந்தத் தொடரில் ஆர்வம் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதைச் செய்ததற்காக ஜீ5 குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில், சிறந்த தயாரிப்பாளர் பெண்டெலா சாகர் தான். நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் இந்த தொடரை உயர்த்தியுள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் சிறந்த பங்களிப்புகளால் அதை அழகுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, பேப்பர் ராக்கெட்டில் ஒலி வடிவமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. தபஸ் நாயக்கின் அற்புதமான பணிக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். பேப்பர் ராக்கெட் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..,
“ ஜீ5-க்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த தொடர் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். படபிடிப்பு நடக்கும் போது, கிருத்திகாவின் தனிப்பட்ட வாழ்கையில் பல சிக்கல்கள் இருந்தாலும், அதை தாண்டி இந்த தொடரை முடித்துள்ளார். கிருத்திகா இந்த கதையுடன் மிகவும் ஒன்றிணைந்துவிட்டார், அதனால் தியேட்டரில் வெளியாகும் படங்களுடன் எதிரித்து போராடும் மனநிலையில் இருக்கிறார். OTT மற்றும் திரையரங்கு வெளியீடுகள் வேறுபட்டவை என்பதை அவர் அறிந்திருந்தாலும், தியேட்டர் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார்.
நடிகர் சிலம்பரசன் TR பேசியதாவது…
முதலில் இங்கு நன்றி கூற வேண்டும், அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உதவிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அங்கிளுக்கும், உதயநிதி அண்ணாவுக்கும் நன்றி. உதயநிதியை அணுகுவது வெகு இயல்பாக ஈஸியாக இருக்கிறது. அவர் உதவியதோடு நிற்காமல் தொடர்ந்து விசாரிப்பது பெரிய விசயம். அதற்கு நன்றி. கிருத்திகா மேடமும் நானும் முன்பே ஒரு படம் செய்வதாக இருந்தோம். எனக்கு பெண் இயக்குநர் ஆண் இயக்குநர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் இவர் ஹாபியாக செய்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது ஆனால் அவரது உழைப்பு பிரமிப்பு தருகிறது. இருப்பினும், அவருடைய அலாதியான ஆர்வத்தையும், தீவிர உழைப்பையும் கண்டு நான் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறேன், அது இந்த வெளியீட்டில் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தொடர் அற்புதமான தொடர், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த தொடர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
ஜீ5 சார்பில் சிஜு பிரபாகரன், பேசியதாவது..,
“ ஜீ5 உடைய தொடர்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்றுவருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த தொடர், வாழ்வை பற்றிய புரிதல்களை கூறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஒரு பயணம் சம்பந்தப்பட்ட தொடர். மிகச் சிறப்பாக வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் இந்த தொடரை பார்த்து ஆதரவு தர வேண்டும். “
ஜீ5 சார்பில் கௌசிக் பேசியதாவது..
“ இந்த தொடர் உணர்வுபூர்வமாகவும், கதையமைப்பில் அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும். இந்த தொடர் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.”
தயாரிப்பாளர் பென்டெலா சாகர் பேசியதாவது..,
“ எனது தொழில்நுட்ப குழுவிற்கு எனது நன்றியை கூறிகொள்கிறேன். ஒரு தயாரிப்பாளராக பேப்பர் ராக்கெட் எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது. நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுடைய உழைப்பால் தான் இந்த தொடர் இந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. தொடரை எல்லோரும் பாருங்கள், உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது..,
“இந்த படத்தில் பெரிய அனுபவம் இருக்கிறது. இப்போதெல்லாம் படத்தில் இருக்கும் நல்ல காட்சிகளை டிரெய்லரில் போட்டு படம் பார்க்க முடியாமல் செய்து விடுகிறார்கள். அது போல் இல்லாமல் இயக்குனர் கிருத்திகா திறமையான நபர், அவருடைய திறமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் பெரிய அனுபவங்களை கிருத்திகா பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். தொடர் பார்க்க சிறப்பாக வந்துள்ளது. சிக்கலான திரைக்கதை அமைப்புடன் பார்வையாளர்களைக் குழப்புவதைத் தவிர்த்து, எளிமையான, நேர்த்தியான மற்றும் தெளிவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையும் தொடர்களையும் அனைவரும் உருவாக்க தொடங்கினால் நன்றாக இருக்கும். இந்த தொடர் பிரம்மாதமாக இருக்கிறது, ஒட்டுமொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது..,
“இயக்குனர் கிருத்திகா, படத்தை கதையாக வித்தியாசமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்கிறார். இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இந்த தொடர் இருக்கும். ஒரு வெப் தொடர், நடிகர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்தத் தொடரில் பல நடிகர்களின் திறமை விரைவில் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஜீ5 உடைய விலங்கு தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த தொடரும் அப்படி வெற்றி அடைய படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்.
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
“கிருத்திகா ஒரு திறமையான இயக்குநர். இந்த படத்தில் அவர் செய்திருக்கும் விஷயத்தை டிரெய்லர் மூலமாக என்னால் உணர முடிகிறது. கிருத்திகா மிகப்பெரிய இயக்குநராக எனது வாழ்த்துகள். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது..,
“பேப்பர் ராக்கெட் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு என்றி. அவர் பாராட்டிய ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொடரில் மிகவும் ரசித்து நடித்தேன். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும், இந்த தொடர் உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்..
நடிகை தான்யா ரவிசந்திரன் பேசியதாவது..,
“இந்த தொடரில் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த தொடர் ஒரு அர்த்தமுள்ள மற்றும் மதிப்புமிக்க பயணத்தை மேற்கொள்வது போல் இருந்தது. எனது அனுபவத்தை சிறப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றியதற்காக அணியில் உள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது..,
“இந்த தொடரின் கதை எனக்கு முன்பே தெரியும். இது ஒரு பீல்குட் கதை. பேப்பரில் இருந்ததை அப்படியே திரைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குநர் கிருத்திகா. இதில் சிறப்பான தருணங்கள் பல இருக்கிறது. இந்த தொடரை நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.
நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது..,
“ஒரு வெப் தொடர் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. கிருத்திகா ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்.”
எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது..,
“பேப்பர் ராக்கெட் எழுத்தாகவே சிறப்பான ஒன்றாக இருந்தது. உணர்வுபூர்வமாகவும், கதாபாத்திரங்களாகவும் சிறப்பாக இந்த தொடர் வந்துள்ளது. நீங்கள் இதை பார்த்து உங்கள் ஆதரவை தரவேண்டும். “
இசையமைப்பாளர் சைமன் பேசியதாவது..
“நான் திரில்லர் படங்களுக்கு தான் வழக்கமாக இசையமைப்பேன், இது வாழ்கையை பற்றிய படம் என்பதால், எனக்கு புது அனுபவமாக இருந்தது. தொடர் நன்றாக வந்துள்ளது. இந்த தொடருக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் தரண் குமார் பேசியதாவது..,
“இந்த தொடர் இசையால் நகரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வேலைபார்த்ததற்கு பெருமைப்படுகிறேன். பாடலாசிரியர் விவேக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்”
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் பேசியதாவது..,
“இந்த தொடர் பயணம் சம்பந்தபட்ட கதை என்பதால், அதை எடுக்கும் போதே நாங்கள் மிகுந்த சந்தோசத்துடன் பணிபுரிந்தோம். தொடரை பார்க்கும் போது உங்களுக்கும் அந்த உணர்வு வரும் என்று நினைக்கிறேன்.”
கலை இயக்குநர் சக்தி வெங்கட் ராஜ் பேசியதாவது..,
“இந்த தொடரை பொறுத்தவரை, வாழ்க்கையை பற்றிய அனுபவம் நிறைய கிடைத்தது. பயணம் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது தெரிந்தது. இது மிக முக்கியமான தொடர் உங்கள் அனைவரையும் கவரும்“
இசையமைப்பாளர் வேத் சங்கர் பேசியதாவது…
இந்த தொடரில் இரண்டு பாடல்களை நான் இசையமைத்துள்ளேன். இந்த தொடர் இப்படி உருவாகி வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது உலகளாவிய மக்களால் விரும்பப்படும் என்பதை உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் இந்தத் தொடரைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது..,
“இந்த தொடரில் ஒரு எபிசோட் தான் நான் நடித்திருக்கிறேன். ஆனால் அதுவே கவித்துவம் நிறைந்த எபிசோடாக இருந்தது. வட்டார வழக்கு, பயணம் என இந்த தொடரில் நடித்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. “
நடிகர் கருணாகரன் பேசியதாவது..,
“ஒரு வித்தியாசமான சீரிஸில் நடித்தது மகிழ்ச்சி. இது வாழ்வின் மகிழ்ச்சியை பற்றி 7 எபிசோடுகளில் கூறும் தொடர், 6 கதாபாத்திரங்கள் பற்றிய கதை. இந்த தொடரில் பணிபுரிந்தது பெரிய அனுபவமாக இருந்தது.”
நடிகை கௌரி கிஷன் கூறியதாவது..,
“ஒரு நடிகராக ஒரு வெப் சீரிஸ் பண்ண வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகம் இருந்தது. கதையை நான் கேட்கும் போது இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது. இந்த தொடரில் பெண் கதாபாத்திரத்திற்கு சிறப்பான எழுத்தை கொடுத்துள்ளார் இயக்குநர், அவருக்கு நன்றி. இத்தொடர் ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பான அனுபவமாக இருக்கும், நன்றி.
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது..,
“வெப் தொடரில் நடிக்க வேண்டும் என்பதும், ஒரு பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. அது இந்த தொடரில் நிகழ்ந்தது. கிருத்திகா மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். இயக்குநருக்கு என்ன எடுக்க போகிறோம் என்ற தெளிவு இருந்தது. இந்த தொடரில் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைபார்த்துள்ளனர். இந்த தொடர் கண்டிப்பாக வெற்றியடையும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நடிகர் சின்னி ஜெயந்த் பேசியதாவது..,
“எனது 38 வருட திரைப்பயணத்தில் நான் நடித்த முதல் தொடர் இது தான். முதலில் என்னிடம் நீச்சல் தெரியுமா என்று தான் கேட்டார்கள் நான் தெரியாது என்றேன் பரவாயில்லை இல்லை வாருங்கள் என கூட்டிப்போனார்கள். நான் நடித்த பல காட்சிகள் கடலில் தான் எடுக்கப்பட்டது. காளிதாஸ் உடன் இந்த தொடரில் நடித்தது எனக்கு சந்தோசம். அவரது அப்பா ஜெயராம் உடன் நடித்திருக்கிறேன் இப்போது காளிதாஸ் உடனும் நடிப்பது மகிழ்ச்சி. இந்த தொடர் பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.”
ஜூலை 29 முதல் ZEE5 இல் திரையிடப்படும் பேப்பர் ராக்கெட் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், டாக்டர் தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், உள்ளிட்டோருடன் பூர்ணிமா பாக்யராஜ், G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து பணியாற்றியுள்ளனர்
இந்தத் தொடரில் தரண் குமார், சைமன் K கிங் மற்றும் வேத்சங்கர் என மூன்று இசையமைப்பளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா