'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா மற்றும் அனிகா, சண்டை பயிற்சி இயக்குநர் நூர், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ், பின்னணி பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் & நடிகர் மகேஸ்வரன் தேவதாஸ் பேசுகையில், ''ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடைய இந்த விருப்பத்தை என் ஆசிரியரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை வழங்கினார். நான் கமல்ஹாசனின் ரசிகன் நான். 11 வயதில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை தேர்வு நேரத்திலும் பார்த்தேன். ஆசிரியர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. .
அதன் பிறகு திருமணம் ஆனது. பிள்ளைகளும் பிறந்தார்கள். பிசினஸ் இருந்தது. கோவிட் வந்தது. அனைவரும் நெட்பிளிக்ஸ், அமேசான் என டிஜிட்டல் தளங்களில் தங்களது பொழுதை கழித்தனர். அந்த தருணத்தில் எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கத் தொடங்கினர். சிங்கப்பூரில் என்ன சிறப்பு என்றால், டாப் 10 என திரைப்படங்களை பட்டியலிடுவார்கள். அங்கு சீனர்கள், மலாய்காரர்கள் என அனைவரும் படங்களை பார்ப்பார்கள். இதில் டாப் 1, 2 ஆகிய இடங்களில் தமிழ் படங்கள் தான் இருக்கும். எல்லோருக்கும் தமிழ் படங்களை பார்க்கத்தான் ஆசை. இதை நான் உன்னிப்பாக கவனித்தேன். அதன் பிறகு என்னை தயார்படுத்திக் கொண்டு 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன். அதன் பிறகு இந்த உடலமைப்பை எப்படி எங்கு வெளிப்படுத்திக் கொள்வது என யோசித்தேன். எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். நான் பேட்மேன் படத்தை பார்த்துவிட்டு வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை நான் கில்லி, துப்பாக்கி, தனி ஒருவன் போன்ற படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பேன். விஜய்க்காக மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி வில்லன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பிற்காக அந்தப் படங்களை பார்ப்பேன்.
எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இதற்காக இரண்டு ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்தேன். தமிழ் திரையுலகில் எத்தனை துறைகள் இருக்கின்றன, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்தேன். இதில் என்னை ஏமாற்றுவதற்கும் சிலர் முயற்சித்தனர். அதன் பிறகு தான் அஷ்ரஃப் அறிமுகமானார். அங்கிருந்து இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளானது.
எனக்கு சிங்கப்பூரில் தொழில் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் சர்வதேச அளவிலான மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். கால்பந்து பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறேன். இத்தனை பணிகளையும் நிர்வகித்துக் கொண்டே இடையில் இந்த படத்தின் பணிகளை கவனித்தேன்.
சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் நல்ல படத்தை வழங்க இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்.
என்னுடைய தாத்தாவின் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். ஆபாச காட்சிகள் இடம் பெறக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்ற இரண்டு நோக்கத்தை மனதில் வைத்து தான் என் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரையரங்க அனுபவத்தையும் பெற வேண்டும் என்பதற்காக படங்களை தயாரிக்க திட்டமிட்டேன். இதைத்தான் இயக்குநர் அஷ்ரஃப்பிடம் தெளிவாக தெரிவித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இப்படத்தின் டீசர் என்ன, ட்ரெய்லர் என்ன என்பது வரை விவாதித்தோம். அதனால் தான் அவரை முதலில் ஒரு குறும்படத்தை இயக்கச் சொன்னேன்.
இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் இருக்கிறது. இதனை கிரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும் என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். அந்த வகையில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் 2023ம் ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தோம். அதன் பிறகு இப்படத்தினை நேர்த்தியாக செதுக்குவதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று வெளியாகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
சண்டை பயிற்சி இயக்குநர் நூர் பேசுகையில், ''இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. ஆக்ஷன் காட்சிகளில் டூப் எதுவும் வேண்டாம் என்று சொல்லி வில்லனாக அறிமுகமாகும் மகேஸ்வரன் தேவதாஸ் அவரே நடித்தார். நான்காவது மாடியில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கும் போது டூப் வைத்துக் கொள்ளலாம் என்று விவாதித்தோம். ஆனால் அதனை நானே செய்கிறேன் என்று சொல்லி துணிச்சலுடன் நடித்தார். இந்தக் காட்சியின் போது அவர் ஒரே நாளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்தார். இதன் மூலம் நடிப்பின் அவருடைய அர்ப்பணிப்பும், ஆர்வமும் தெரிந்தது. இந்தக் காட்சி திரையில் வரும் போது பார்வையாளர்கள் ரசிப்பார்கள். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் பேசுகையில், ''இப்படத்தை இயக்குநர் அஸ்ரப் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன, அனைத்தும் நன்றாக உள்ளன. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.
நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், ''தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகத்திற்கு நன்றி. தமிழில் அறிமுகமாகும் போது தமிழ் தெரியாது. நடிப்பும் தெரியாது. இருந்தாலும் தமிழ்நாட்டில் தான் திறமைசாலிகளை கண்டறிந்து, வாய்ப்பளித்து அவர்களை பாராட்டுகிறார்கள். தொடர்ந்து ஆதரவும் தருகிறார்கள். 'காளி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'சிங்க பெண்ணே' என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன்.
நிறைய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் மகேஸ்வரன் தேவதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். அவரை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப் பேசுகையில், ''நான் ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறேன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'பிசாசு ' திரைப்படத்தை கன்னடத்தில் 'ராட்சசி' என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக நான் இயக்கி இருக்கும் படம் இது. படத்தின் பெயர் 'சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்'. தமிழில் எனக்கு இது முதல் பக்கம். என்னுடைய தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாசுக்கும் இதுதான் முதல் படம்.
இது ஒரு முக்கியமான மேடை. இந்த மேடை மீது விருப்பப்படாத உதவி இயக்குநர்கள் ..இணை இயக்குநர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனக்கு இன்று இந்த மேடை சாத்தியமாகி இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் விரைவில் சாத்தியமாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பர் வாயிலாக தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் போன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் தெரிவித்தார். அவரது புகைப்படத்தை பார்த்த பிறகு உங்களை வில்லனாக அறிமுகப்படுத்துகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஏனென்றால் அவருடைய கட்டுமஸ்தான உடலமைப்பு தான் முக்கிய காரணம். அதன் பிறகு அவருக்காக குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்தக் குறும்படத்தில் அவர் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இப்படத்தின் கதையை அவரிடம் முழுமையாக விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கின. தயாரிப்பாளராக இருந்தாலும் நண்பராகவும், நடிகராகவும் பழக தொடங்கினார். அவருடைய ஈடுபாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பை தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்தோம்.
முதல் பக்கம் என்பது கதைக்கு பொருத்தமானதாக இருந்ததால் வைத்திருக்கிறோம். சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில், அவர் ஒரு கதையை விவாதிக்க தொடங்குவதற்கு முன் சோஷியல் மெசேஜ் ஒன்றை தீர்மானித்து, அதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என முடிவு செய்வார். இதற்காகத்தான் அவர் கதையையும், காட்சிகளையும், திரைக்கதையையும் உருவாக்குவார். அதனால் தான் நானும் இந்த படத்தில் ஒரு சோஷியல் மெசேஜை வைத்து கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன்.
கிரைம் திரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. பேய் படங்களும், திரில்லர் படங்களும் தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு பாதுகாப்பானவை என சொல்வார்கள். க்ரைம் திரில்லர் ஜானரில் சோஷியல் மெசேஜை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் ஏ ஜி ஆர், படத்தொகுப்பாளர் வி எஸ் விஷால் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு நாயகனாக வெற்றியை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று என்னிடம் பலர் கேட்டனர். இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன பிறகு, யார் ஹீரோ என அவர் கேட்டபோது, வெற்றி என்று ஒரே ஒரு பெயரை தான் நான் சொன்னேன். மதுரையிலிருந்து வரக்கூடிய ஒரு கிரைம் நாவலாசிரியரின் மகன் எனும் அந்த கதாபாத்திரத்திற்கு வெற்றி தான் பொருத்தமாக இருப்பார் என நான் உறுதியாகச் சொன்னேன். அத்துடன் இப்படத்தின் வில்லன் உடன் மோத வேண்டும் என்றால் அதற்கு இணையான உடல் தோற்றம், உடல் மொழி கொண்ட நடிகர் வெற்றி மட்டும்தான் என விளக்கமும் அளித்தேன், இதனை தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு வெற்றியை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அவர் கதையை கேட்ட பிறகும் முழு திரைக்கதையை வாசித்த பிறகும் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினேன் அவர் அப்போது டெல்லியில் இருந்ததால் கதை முழுவதையும் போனில் சொன்னேன். அப்போது அவர் நான் நடிக்கும் படத்தில் என் கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என பார்ப்பேன், அல்லது அந்தத் திரைப்படம் வெற்றி பெறும் திரைப்படமாக இருக்குமா என்பதை பார்ப்பேன். இந்த படத்தில் இரண்டுமே இருப்பதால் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். இந்தப் படத்தில் அவர் ரிப்போர்டராக தான் நடிக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தத் திரைப்படத்தில் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
நாயகன் வெற்றி பேசுகையில், ''இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்' படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது. அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து பார்த்து ரசித்து பேராதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.