சற்று முன்
சினிமா செய்திகள்
சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்
Updated on : 18 December 2024
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
இம்மாதிரி ஒரு நல்ல படத்தைத் தயாரித்ததற்காக ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்கள் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லிஸ்டில் இடம் பிடிப்பார். மிக அழகான சூட்சமத்தைப் பிடித்துவிட்டார். அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். சில பேர் மட்டும் தான் நேர்மையான நல்ல விசயத்தைப் பேசப் பொருத்தமாக இருப்பார்கள். சமுத்திரகனி அதற்குப் பொருத்தமானவர். அவர் மிக நன்றாக நடித்துள்ளார். அடுத்ததாக பாரதிராஜா சார். அவர் ஒரு முறை சிவாஜி சாரிடம் தான் நடிக்க வந்ததாக சொன்ன போது, உங்க ஊரில் கண்ணாடியே இல்லையா? எனக்கேட்டதாகச் சொல்வார்கள். அவரே இப்போது இருந்திருந்தால் பாரதிராஜா சார் நடிப்பைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார். விஷால் சந்திரசேகர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தாருங்கள் நன்றி.
நடிகை வடிவுக்கரசி பேசியதாவது…
இப்படத்தைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன் என்றார். யாருக்கு அம்மா யாருக்கு பாட்டி என்று தான் கதை கேட்பேன், ஆனால் இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக்கேட்டேன். என் கேரக்டர் சின்னது தான் ஆனால் என் குரு பாராதிராஜா சாருக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம். சமுத்திரகனி சாரைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார். இந்தப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம். நேர்மையான நேர்மையோடு பார்த்துப் பாராட்டுங்கள் நன்றி.
இயக்குநர் சரண் பேசியதாவது…
இந்தப்படத்தில் மிக அருமையான கதை இருக்கிறது. இந்தப்படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். நான் என்னுடைய ஒரு படத்தில் மிக அமைதியான கேடக்டருக்கு சமுத்திரகனி என்று தான் பெயர் வைத்தேன். காலம் பாருங்கள். இப்போது அவர் பிரபலமான வில்லன் ஆகிவிட்டார். இந்தப்படத்திலும் அவர் தான் வில்லன். படம் பாருங்கள் புரியும். இந்தப்படம் பார்த்து சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம். ஸ்கெட்ச் போட்டு வேலை செய்திருக்கிறார் நந்தா பெரியசாமி. அதை விட இந்தப்படத்தை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலும் ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்திருக்கிறார். பாராதிராஜா சாரிலிருந்து குட்டி குட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட அழகாகச் செய்துள்ளனர். முழு திருப்தி தந்த படம். கண்டிப்பாக இப்படம் மக்களின் மனங்களை வெல்லும். நன்றி
நடிகை அனன்யா பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக உள்ளது. இந்தப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பு. நந்தா சார் இந்தக்கதையைச் சொன்னபோதே பிடித்திருந்தது. அவர் எனக்கு மட்டுமல்லாமல், நடித்த ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன விசயங்கள் கூடச் சொல்லித் தந்தார். அது எனக்கு நடிக்க மிக உதவியாக இருந்தது. சமுத்திரகனி சார் தான் என்னைத் தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார். அவருடன் நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். இயக்குநர் மிக அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். எல்லோரும் சொல்வது மாதிரி மிக நேர்மையான படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் இயக்குநர் தம்பி ராமைய்யா பேசியதாவது….
நான் பேசுவதை விட, இங்கு படம் பார்த்தவர்கள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி நந்தாவிடம் கதையைத் தோன்றியவுடன் எடுத்து விடு. இம்மாதிரி கதை கிடைக்காது எனச் சொல்வேன். தம்பி லிங்குசாமிக்கு எப்படி ஆனந்தம் படம் அமைந்ததோ அது போல நந்தா பெரியசாமிக்கு இந்தப்படம் இருக்கும். சமுத்திரகனி நடந்து கொள்வது எல்லாம் ஆரம்பத்தில் பார்த்தால் நல்லவனாக நடிக்கிறாரோ என நினைப்பேன். ஆனால் ஒருவனால் தொடர்ந்து நடிக்க முடியாதே அவன் இயல்பிலேயே நல்ல மனதுக்காரன். இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறான். இது அற்புதமான படம். சமுத்திரகனியை நாயகனாக வைத்து எடுக்கும் ஒரு நல்ல படைப்புக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அற்புதமான படைப்பாக மக்களைச் சென்றடையும் நன்றி.
தயாரிப்பாளர் ரவிக்குமார் பேசியதாவது…
ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்து இப்படம் எடுத்துள்ளேன். என் நண்பன் ராஜா செந்தில் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தி இப்படத்தைப் பற்றிச் சொன்னார். இக்கதை கேட்ட போது நானும் அழுது விட்டேன். அன்றே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விட்டோம். படம் பார்த்தவர்கள் படம் பற்றிச் சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். டிசம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது…
சென்னைக்கு வந்த புதிதில், நான் தங்கியிருந்த அறையில், என் நண்பனாக உடனிருந்தவர் நந்தா. வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் என எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அப்போதே என்னை ஆதரித்தவர் நந்தா. ஆனந்தம் படம் எழுதிய போது முழுக்க முழுக்க உடனிருந்தவர் நந்தா. சிலருக்கு முதல் படத்திலேயே வெற்றி பெரிதாக அமைந்து விடும், சிலருக்கு லேட்டாகும். ஆனால் தொடர்ந்து போராடுவது இருக்கிறது இல்லையா அது மிகப்பெரிய விசயம். அதை நந்தா சாதித்துள்ளார். எல்லோரும் படம் பார்த்து மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்ன போதும் உண்மையாகச் சொல்கிறார்களா? நட்புக்காகச் சொல்கிறார்களா? எனத் தயங்கினேன். ஆனால் எல்லோரும் மனதார பாராட்டினார்கள். உண்மையான நேர்மையான படைப்பு. சமுத்திரகனி அற்புதமான நடிகன். விசாரணை படத்தில் அப்படி நடித்திருப்பார். கேமரா வைத்தால் 100 சதவீதம் கதாபாத்திரமாக மாறிவிடுவார். அனன்யா, வடிவுக்கரசி அம்மா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா செந்தில் என் படத்தில் நடிப்பு வாய்ப்பு கேட்டவர், வாரியர் படத்தில் சின்ன ரோல் செய்தார். இப்படத்தைத் தயாரித்துள்ளார். நந்தா குடும்பமே இங்கு வந்துள்ளது, இது சரியான தருணம் இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். எல்லோரும் இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் நன்றி.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசியதாவது…
இந்த திருமாணிக்கம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்தக்கதையை முதன்முதலில் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸிடம் தான் சொன்னேன் அவர் முதன் முதலில் பாராட்டிய கதை இது தான். லிங்குசாமி முதல் எல்லோரும் கேட்டுவிட்டு இது படமாக்கப்பட வேண்டிய கதை என்று ஊக்கம் தந்தார்கள். ரவிக்குமார் சார் இந்தக்கதை கேட்டு ஆரம்பித்தார். சமுத்திரகனி அண்ணன் கதை கேட்டு உடனே ஷூட்டிங் போகலாம் என என்னை நம்பி வந்தார். அவரால் தான் இந்தப்படம் உருவாகியது. அமீர் அண்ணன் எனக்குப் படம் காட்டுங்கள் என்றார் அவர் படம் பார்த்துப் பாராட்டியது பெருமை. பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை. ஒரு நல்ல தமிழ்ப்படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார் சார். அவருக்குத் தமிழ் மக்கள் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும் நன்றி.
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…,
மிக மகிழ்ச்சியான தருணம். தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். எல்லோரும் வெற்றிக்காகத் தான் உழைக்கிறோம். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம். அப்பாவுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படம் கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா கதை சொன்ன போது அய்யா பாரதிராஜாவிடம் போய் சொல் அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்து விடலாம் என்றேன். அவர் கதை கேட்டு உடனே ஓகே சொன்னார், அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள். தயாரிப்பாளர் மிக இனிமையானவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். நல்ல கதையைப் படமாக்குகிறோம் என்பது மட்டும்தான் அவர் மனதிலிருந்தது. இயல்பாக இருப்பது தான் நேர்மை, எனக்கும் அமீர் அண்ணனுக்குமான உறவும் கூட, அப்படித்தான் ஆரம்பித்தது. சசியுடனும் அப்படித்தான் ஆரம்பித்தது. உண்மை தான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு. முன்பெல்லாம் கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நந்தா எப்போதும் திடீர் திடீரென அழைப்பார். எப்போது அழைத்தாலும் போவேன். நந்தா என்னை விட நல்லவன். சிலருக்குக் காலம் வெற்றியைத் தரும் அவருக்கு நல்ல காலம் வந்துவிட்டது. கதை படித்தவுடன் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப்பார்த்துப் பண்பட்ட நடிகனாகிட்டே என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாள் வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர். முன்பெல்லாம் சுகுமாரிடம் பதட்டம் தெரியும் ஆனால் இப்போது மிகப்பெரிதாக வளர்ந்துவிட்டார் மகிழ்ச்சி. இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திருமாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும். இப்படத்தை வெல்ல வைக்க வேண்டியது உங்கள் கடமை. நன்றி.
இயக்குநர் அமீர் பேசியதாவது…
எனக்கு நந்தாவுக்கு முன்னால் அவரது அண்ணைத் தெரியும். அவரது ஒரு கல்லூரியின் கதை படம் வருவதற்கு முன்னாலே அந்தப்படம் பற்றி நல்ல பேச்சு இருந்தது. அப்போதே என் கம்பெனிக்கு படம் செய்யுங்கள் என 2 லட்சம் தந்தேன். யோகி படம் நான் செய்யும் போது அதை வேண்டாம் என சொன்னது நந்தா தான். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். மாத்தி யோசி என்றே டைட்டில் வைத்து படமெடுத்தார். நந்தாவிடம் உழைப்பு முயற்சி தேடல் இருந்து கொண்டே இருக்கும். சமுத்திரகனியிடம் இதைப்பார்த்துள்ளேன். அதே மாதிரி நந்தாவிடம் பார்த்தேன். இந்தப்படம் பார்த்தேன் இரு காட்சியில் உண்மையில் கண்கலங்கி விட்டேன். படம் வெற்றி பெறுகிறது இல்லை என்பது வேறு விசயம். ஆனால் நாம் அடைய நினைத்ததை செய்து விட்டோமா என்பது தான் முக்கியம் அதை இந்தப்படம் செய்துள்ளது. வாழைக்குப் பிறகு எனக்கு மிக நெருக்கமான படைப்பு. இந்த காலத்தில் நேர்மையாக வாழ்வது என்பதே கடினமாகிவிட்டது. இது நேர்மையை பற்றிப் பேசும் படைப்பு. வறுமையில் நேர்மையாய் வாழ்வது கடினம், அதை சொல்லித்தருவது தான் இந்தப்படம். கமல் சாரையும், சிவாஜி சாரையும் எதிர்த்து நடித்த ஒரே ஆளுமை வடிவுக்கரசி, இதில் பாராதிராஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அசத்தியுள்ளார். பாராதிராஜா சார் சின்ன பாத்திரம் என்றாலும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். அனன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நிறைவான படைப்பு. சுகுமார் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு. நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். மனித சமூகத்திற்கான படைப்பு. சமுத்திரகனி இந்த கதாப்பாத்திரத்தை இவனை சிறப்பாக யாருமே செய்துவிட முடியாது. தேர்ந்த நடிகனாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள். நன்றி.
ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்...
‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.
ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு..ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இசைகலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார்.
பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான இத்திரைப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா