சற்று முன்
சினிமா செய்திகள்
நடிகர் ரிச்சர்ட் ரிஷி & பெல்ஜியன் மலினோயிஸ் நாய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுப்ரமணி’!
Updated on : 12 February 2025

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வின்சென்ட் செல்வா தற்போது ‘சுப்ரமணி’ என்ற புதிய ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். ‘திரௌபதி’ உள்ளிட்ட பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரியவகை நாய் இனமான ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ முதன்முறையாக இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்த நாயைப் படத்தில் நடிக்க வைப்பதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயுடன் ஒரு மாதத்திற்கு மேலாக நேரம் செலவிட்டு பழகி வருகிறார். இப்படம் எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்ட இந்தப் படம் ஆக்ஷன் க்ரைம் த்ரில்லராக இருக்கும். முன்னதாக ‘ஜித்தன் 2’ படத்தைத் தயாரித்த வின்சென்ட் செல்வாவின் உதவியாளரான ராகுல் பரமஹம்சா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே கொடைக்கானலில் உள்ள அடர் வனப்பகுதியில் நிறைவடைந்துள்ளது மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். இத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.
படத்தின் எழுத்தாளரான இயக்குநர் வின்சென்ட் செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “மனிதனின் சிறந்த நண்பன் நாய்கள் மட்டும்தான். புனித நூல்கள், புராணங்கள், வரலாற்றுப் படைப்புகள் இவற்றில் எல்லாம் நாய்கள்தான் மனிதர்களுக்கு சிறந்த துணையாக இருந்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான ஆரம்பகால உறவு 15,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மை என்னை ஈர்த்தது. தவிர அகிரா குரோசாவா, ஸ்டீபன் கிங், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உட்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் பலர் தங்கள் படைப்புகளில் எப்போதும் ‘நாய்களை’ முக்கியப் கதாபாத்திரங்களாகக் கொண்டு வந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். பல வருடங்களாக, நாயை மையக்கருவாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது ‘சுப்ரமணி’ படம் மூலம் நடந்திருக்கிறது. இதில் 'பெல்ஜியன் மாலினோயிஸ்' என்ற அரிய இனத்தைச் சேர்ந்த நாய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் பார்வையாளர்களை மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
இப்படத்தை எஸ் புரொடக்ஷன்ஸின் எஸ். சௌந்தர்யா தயாரிக்கிறார். இவருடன் பிரனவ் & பாலாஜி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகள்
அமெரிக்காவில் ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை சந்தித்த உலகநாயகன்!
இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன்.
இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன்,
சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. க்யூரியாசிடி கில்ஸ் த கேட் என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர் உண்டு. ஆனால், இங்கே க்யூரியாசிடி பூனையைக் கொல்லவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாஸை உருவாக்கியிருக்கிறது! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
அரவிந்த் ஶ்ரீநிவாஸ் ட்வீட்
கமல்ஹாசன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் 09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியுள்ளார் அது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்க வேண்டியும் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தனிமைப்பு அதேபோல் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது ஒரு தனி அமைப்பு என்ற அர்த்தத்தில் தான் நாங்கள் கூறினோம் என்பதை ஆர்கே செல்வமணி அவர்கள் நன்கு புரிந்து இருந்தும் அது தவறாக புரிந்து கொண்ட மாதிரி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பு பற்றி தரம் தாழ்ந்து சொல்லி இருப்பது அனைத்து தொழிலாளர்களையும் அவமதிக்கும் செயலாகும். எத்தனையோ சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள போதும் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை பற்றி திரு செல்வமணி ஏன் பேச வேண்டும் இந்த கூட்டமைப்பை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் ஒரு டுபாக்கூர் சங்கம் என்றால் அதனை பற்றி மீடியாக்களில் ஏன் திரும்பத் திரும்ப பேசி பெரிதாக வேண்டும். அவரது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதனை ஆர்.கே. செல்வமணி அவர்கள் தற்போது தயாரிப்பாளர்களை இரண்டு பிரிவாக பிரித்து தன் பதவியை வைத்து தொழிலாளருக்கு துரோகம் இழைத்து வருகிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தான் காலம் காலமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு வருகிறது. அந்த வகையில் ஆர் கே செல்வமணி அவர்கள் கடந்த மூன்று முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஊதிய உயர்வையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தான் வாங்கிக்கொண்டு, தற்போது எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து சென்ற நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சில சுயநலமிக்க நிர்வாகிகளுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இனி நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பரிந்துரை கடிதம் பெற்று வந்தால் தான் படப்பிடிப்புக்கு வருவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? முதல் போடும் ஒரு தயாரிப்பாளர் தொழிலாளர்கள் சங்கத்தில் சென்று கடிதம் அளிக்க வேண்டிய சூழ்நிலையை ஆர்.கே.செல்வமணியும், நடப்பு சங்க செயலாளர் டி. சிவா உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக தாய் சங்கத்திலிருந்து பிரிந்து சென்று ஆரம்பிக்கப்பட்ட சங்கம் தான் தமிழ் திரைப்படம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அத்தைய சங்கத்தில் ஆர்கே செல்வமணி அவர்கள் தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்திற்காக பெப்சியில் உள்ள 23 சங்கங்களில் இருக்கும் 25 ஆயிரம் தொழிலாளர்களையும் அடமானம் வைத்துள்ளார். அதேபோல தயாரிப்பாளர்களையும் திரு சிவா அவர்கள் அவருடைய சுயநலத்திற்காக தொழிலாளர்கள் சம்மேளனத்தி ல் அடமானம் வைப்பதற்காக இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியே இத்தனை பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் என்பதை ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு பெரிய திரைப்படங்கள் தயாரிப்பது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் என்று டி சிவா அவர்களும் மற்ற நிர்வாகிகளும் திரு செல்வமணி அவர்களும் சேர்ந்து ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் மட்டுமே ஏனெனில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் மட்டுமே படமாக்கப்படுகிறது. அதனால் நம் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது இதனை புரிந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் திரு செல்வமணி அவர்களின் பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரடெக்ஷன் பணிகளை நிறுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். தமிழ்த்துறை உலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை அரவணைத்தே செயல்படும் என்பதற்கு சாட்சியை இந்த தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகும். ஆகவே உண்மைக்கு புறம்பாகவே மீடியாக்களில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் திரு செல்வமணி அவர்களின் எண்ணங்களும் செயல்களும் என்றைக்கும் ஈடெராது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
.
மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் சம்மேளனத்தில் கடிதம் கொடுத்து படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார். அதுவும் உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும். திரு ஆர் கே செல்வமணி அவர்கள் தலைமையில் உள்ள தற்போதைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகம் தான் படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ள தயாரிப்பாளர்களிடம் அவர்களுடைய புரொடக்ஷன் மேனேஜர்களை வைத்து வலுக்கட்டாயமாக கடிதங்கள் வாங்கி உள்ளார்கள். புரடக்ஷன் மேனேஜர்கள் என்பவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பணிகளை கவனிக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் ஆர்கே செல்வமணி யின் கைப்பாவையாக இருக்கிறார்கள் என்பதை மிகவும் வேதனைக்குரியது.
மேற்படி பிரச்சனை குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களையும் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் விளக்கமாக கூறியதின் அடிப்படையில் காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்தில் இணைந்துள்ள நடிகை தபு!
கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.
இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY படப்பிடிப்பு இனிதே துவங்கியது!
முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே துவங்கியது.
பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார். புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது.
இப்படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
அனிமல் திரைப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் #NOBODY ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.
படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா!
'புஷ்பா' படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - 'ஜவான்' படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி - பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் - ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள புதிய படத்தைப் பற்றிய '#AA22xA6' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை தந்து, இந்தி சினிமாவில் 'ஜவான்' படத்தின் மூலம் 1100 கோடி வசூலை சாதித்துக் காட்டி, சர்வதேச திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்த இயக்குநராக உயர்ந்திருக்கும் அட்லி இயக்கத்தில், அவரது ஆறாவது படைப்பாக, 'புஷ்பா' படத்தின் மூலம் இந்திய சினிமாவின் வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கும் 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் நடிப்பில், கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக தயாராகும், இந்தப் பெயரிடப்படாத '#AA22xA6' புதிய திரைப்படத்தைப் பற்றிய, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்திய சினிமாவின் முத்தான மூன்று பிரம்மாண்டங்களும் ஒன்றிணையும் இந்த திரைப்படம் - இந்தியாவில் தயாராகும் சர்வதேச தரத்துடனான உலக சினிமாவாக இருக்கும்.
உலகத்தரத்தில் பான்வேர்ல்ட் படைப்பாக உருவாகும் இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது. 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லியின் #AA22xA6 வது படமாக உருவாகும் இந்த புதிய படம் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான திரைத்துறையில் புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது
'ரெட்ட தல' படத்திற்க்காக மீண்டும் இணைந்த தனுஷ், அருண் விஜய் கூட்டணி!
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க, இருவர் கூட்டணியில் உருவாகும் “இட்லி கடை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழித்தியுள்ளது.
இசையமைப்பாளர் சாம் CS இசையில் உருவாகியுள்ள இந்த அழகான பாடலை தனுஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கான படப்பிடிப்பு படக்குழு வெளிநாட்டில் பல இடங்களில் மிகபிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். விரைவில் இப்பாடல் லிரிகல் வீடியோ வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல், இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M. மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.
தங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்'
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார்.
கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம்' கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, 'கொண்டல்' மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன்,
ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தனது இசை மழையால் பல வெற்றிப் படங்களுக்கு உயிரூட்டிய என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, பிரகத் முனியசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பை கையாளுகிறார். பாடல்கள்: மோகன் ராஜன், கருமாத்தூர் மணிமாறன். தயாரிப்பு மேலாளர்: நமஸ்காரம் சரவணன்; போஸ்ட் புரொடக்ஷன்: Bee ஸ்டுடியோஸ்; கலரிஸ்ட்: பரணிதர்; வி எஃப் எக்ஸ்: ராகவ கோபாலன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன், "கல்லூரியில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை நாயகன் ஒரு தலையாக காதலிக்க, சக மாணவியான மிகவும் சக்திவாய்ந்த ஒருவரின் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நாயகனும் நாயகியும் இணைய, அது நாயகன்-நாயகியின் வாழ்வையே புரட்டிப்போட என 'கிறிஸ்டினா கதிர்வேலன்' விறுவிறுப்பாக செல்லும்.
'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் மாநகர இளைஞனாக நடித்த கெளஷிக் ராம், கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு உருவாகி இருக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு கிராமத்து கதிர்வேலன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி பிரதிபாவின் அசாத்திய நடிப்பும், உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதமும் குழுவினரின் பாராட்டுகளை அள்ளியது.
எதார்த்தம் மீறாத இப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தனின் இசை மிகப்பெரிய பக்க பலமாகும். 2023ம் ஆண்டு வெளியான 'அயோத்தி' திரைப்படத்தின் பின்னணி இசையை போன்று 'கிறிஸ்டினா கதிர்வேலன்' பின்னணி இசையையும் மக்கள் கொண்டாடுவார்கள். தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் தேர்ந்த ஒளிப்பதிவை பிரகத் முனியசாமி வழங்கியுள்ளார்," என்று தெரிவித்தார்.
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தை கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
குளோபல் ஸ்டார் ராம் சரணின் பான்-இந்தியா படமான 'பெத்தி' படம் பிரம்மாண்டமாக துவங்கியது!
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி” ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸுடன் இணைந்து வழங்கும், “பெத்தி” இந்திய திரைப்படத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை படமாக இருக்கும். தொலைநோக்கு மிக்க படைப்பாளி வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். ஸ்ரீ ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் முதல் ஷாட் வீடியோவை வெளியிட்டனர், மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
படத்தின் முதல் ஷாட் ஒரு அற்புதமான சூழ்நிலையுடன் தொடங்குகிறது, மிகப்பெரிய கூட்டம் பெத்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறது. ராம் சரண் ஒரு அற்புதமான, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் பெத்தியாக அறிமுகமாகிறார் , தோளில் பேட்டை சுமந்துகொண்டு, படு ஸ்டைலாக சிகார் புகைத்துக்கொண்டே , கிரிக்கெட் மைதானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அவர் பேசும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. படுபயங்கர மாஸாக, அதிரவைக்கும் அறிமுகமாகும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
நீண்ட முடி, அடர்த்தியான தாடி மற்றும் மூக்குத்தியுடன் கூடிய ராம் சரணின் புதிய கரடுமுரடான தோற்றம், அவரது கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையை மேம்படுத்துகிறது, மேலும் அவரது ஆளுமைக்கு மேலும் தீவிரத்தைச் சேர்க்கிறது. அவரது டயலாக் டெலிவரி, மற்றும் உடல் மொழி எல்லாமே ரசிகர்களை வசீகரிக்கிறது. விஜயநகர பேச்சுவழக்கை அவர் குறைபாடற்ற முறையில் பேசுவது, ஒரு தனித்துவமான தருணம், இது அவரது வாழ்க்கையில் முதல் முறையாகும், இது அவரது கதாப்பாத்திர சித்தரிப்புக்கு நம்பகத்தன்மையையும் சக்தியையும் சேர்க்கிறது. இந்த ஃபர்ஸ்ட் ஷாட்டில் வரும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் வாழ்க்கைத் தத்துவத்தின் சுருக்கமான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது, இது அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியம் தருணமாக அமைகிறது. அவரது கரீஷ்மா “பெத்தி” கதாபாத்திரத்தை அசத்தலாக வெளிப்படுத்துகிறது.
அசாதாரணமான கதாபாத்திரத்தைத் திரையில் அசத்தலாக உயிர்ப்பிக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநர் புச்சி பாபு பெடி கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு அசைவையும் அற்புதமாக வடிவமைத்துள்ளார், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு மற்றும் பிரம்மாண்டம் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரகாசிக்கிறது. ஆர் ரத்னவேலு படம்பிடித்த காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன. அதே நேரத்தில் அகாடமி விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை, காட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. உலகளாவிய தரத்தில் நம் மண்ணின் கதை திரையில் விரிகிறது. அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு, பெத்தியின் பழமையான உலகின் சாரத்தைத் திறமையாகப் படம்பிடித்து, ஒரு அற்புதமான அனுபவத்திற்கு மேடை அமைக்கிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலியின் கூர்மையான எடிட்டிங், தடையற்ற கதை ஓட்டத்தை உறுதி செய்கிறது, படத்தின் வேகத்தை இறுக்கமாகவும் ஈடுபாட்டுடனும் வைத்திருக்கிறது.
ராம் சரணின் வசீகரம், வெகுஜனத்தை ஈர்க்கும் நடிப்பு, புச்சி பாபுவின் கூர்மையான எழுத்து மற்றும் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உயர் மட்டத்தை நிர்ணயித்த தொழில்நுட்பக் குழுவுடன், “பெத்தி” இன் முதல் ஷாட் படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகளை உயர்த்துகிறது. இப்படம் வரும் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக வரும் இந்தப் படம், ஒரு இணையற்ற சினிமா அனுபவத்தையும், அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்களுக்கு ஒரு முழு விருந்தை வழங்கும் என்று உறுதியளிக்கிறது.
ஆக்சன் கிங் அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
இறுதி கட்டப் பணிகள் முடிந்த நிலையில், படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து 'வீர தீர சூரன்' ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது!
சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம்.
ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கடந்து, ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதால், படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.
இது குறித்து நடிகர் சீயான் விக்ரம் தெரிவித்தாவது….
எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்கமுடியாதது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி.
மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா