சற்று முன்

4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!   |    EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |   

சினிமா செய்திகள்

டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
Updated on : 01 April 2025

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. 



 



வில்லன், குணச்சித்திர வேடம், கதையின் நாயகன் என பல கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆர்பிஎம்’ (RPM) திரைப்படத்தின் டிரைலர் விழாவோடு, அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 



 



இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி  இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது.




 



 



எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர்களுடன் கிரியா டெக்  நிறுவனர்-  தொழிலதிபர் பாஸ்கரன், 'எம் ஆர் டி மியூசிக்' முருகன், 'சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்' சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார்த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெங்கட், இயக்குநர் பிரசாத் பிரபாகர்,  தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 



 



தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் பேசுகையில், ”இந்த நாளில் எங்களுடைய ஆர் பி எம் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு சிறந்த நாளாக கருதுகிறோம். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 



 



படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகர் நடிகர் டேனியல் பாலாஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில்..  எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக நன்றி  தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன் என்றார். அந்த சந்திப்பின்போது, 'நான் விரும்பும் பாடலை பாடுவீர்களா?' என கேட்டார். அந்தப் பாடலைக் கேளுங்கள். தெரிந்தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன் என்று சொன்னேன். 'தண்ணீர் தண்ணீர் ' எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய 'கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே..' என்ற பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அந்தத் தருணத்தில் பாட இயலாததற்கு மன்னிக்கவும் எனக் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு பயிற்சி பெற்று அந்த பாடலை நேரில் வந்து பாடுகிறேன் என்றும் சொன்னேன். 'சிங்கார வேலனே' என்ற பாடலை பாட இயலுமா! என கேட்டார். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன்.  




 



 



அவர் மிகுந்த திறமைசாலி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமா நுணுக்கங்களை பற்றியும்... நடிப்பு திறன்களை பற்றியும் .. திரை தோன்றலை எப்படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆக்கிரமிப்பது எப்படி? என்ற நுட்பத்தையும் அறிந்தவர். அவர் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையாக இருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அதன் பிறகு அவர் கேட்ட விருப்பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன்.‌ அந்தப் பாடலை இங்கு நான் பாட விரும்புகிறேன். இந்த பாடலுக்கான வரிகள் நம்மிடமிருந்து மறைந்த அந்த ஆத்மாவிற்கு பொருத்தமாக இருக்கும். மக்களுடைய மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்பது பேரிழப்பாகும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.



 



இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்களான ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நிறைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும். இதன் பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் பற்றி குறிப்பிடுவதற்கு இரண்டு விசயங்கள் உண்டு. நான் சின்ன வயதில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டு பாடுவதில் தான் கவனம் செலுத்தினேன். இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந்தித்து உங்களிடம் ஒரு கோரிக்கை.  நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொண்டார். இயக்குநர் 'ஆக்சன்' என்று சொன்னவுடன், அவர் கேரக்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்க்கும்போது வியந்து போனேன். 



 



இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஈஸ்வர் கார்த்திக் - நடிகை தயா பிரசாத் பிரபாகர் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் படம். இருவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடைந்தார்கள். அப்போது அவர்களிடம் நடிக்கும் போது பயப்படக்கூடாது. இங்கு நடிக்கும் போது நான் டேனியல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலைஞர்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம் எனக்கும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது. ஆர் பி எம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இயக்குநர் பிரசாத் பிரபாகர் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவினரும் பரிபூரணமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம்.  இந்தத் திரைப்படத்திற்கு அனைவருடைய ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



 



டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், ”டேனியல் பாலாஜி சின்ன குழந்தையாக இருக்கும்போதே ரொம்ப பக்தி. மூன்று வயதில் இருந்தே அவனுக்கு பக்தி அதிகம். ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என இந்த பொருளை வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான். காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். அவன் நடிச்ச படம். இதனை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும்.  




 



 



கௌதம் மேனன், பாலாஜி இவர்களெல்லாம் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் அவனுக்கு நடிப்பதில் விருப்பமில்லை. பிறகுதான் வந்தது.  முதலில் அவர்கள் அப்பா வேண்டாம் என்று தான் சொன்னார். பிறகு 'வேட்டையாடு விளையாடு ' படத்தை பார்த்துவிட்டு அவர் சந்தோஷம் அடைந்தார்.  எப்போதும் அவன் ...அவன் இஷ்டப்படி தான் இருப்பான். கடைசி அஞ்சு நாளைக்கு முன்னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டார். கடைசி கட்டத்தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, 'நான் இருக்க மாட்டேனே!!' என்று சொன்னான்.  நான் இன்னும் இருக்கும்போது... அவன் இல்லையே!! என்ற குறை இப்போது என் மனதில் இருக்கிறது.” என்றார்.



 



கல்வியாளர் - ஆராய்ச்சியாளர் - தொழிலதிபர் பாஸ்கரன் பேசுகையில், ”கல்லூரியில் படிக்கும் போது வாரம் இரண்டு திரைப்படங்களை பார்ப்பேன். அதன் பிறகு வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் திரைப்படங்களை பார்ப்பேன். தொழில் தொடங்கிய பிறகு சினிமா பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது தான் சினிமாவின் வீரியம் எனக்கு புரிந்தது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் சினிமா தான். ஏனென்றால் அங்கு பள்ளி படிப்பில் தமிழ் கிடையாது. 



 



அமெரிக்காவில் கூட கடந்த 20 ஆண்டுகளாக தான் நம்மவர்கள் தமிழில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் தமிழர்கள் இன்று தமிழ் பேசுகிறார்கள் என்றால் அது திரைப்படங்களை பார்த்து தான். புத்தகத்தை வாசித்து தமிழ் தெரிந்து கொள்வதில்லை. ஆப்பிரிக்காவின் என்னுடைய நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் தமிழ் பேசுவார்கள். நான் இது இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால்.. தமிழ் திரைப்படத்தில் ஒரு பக்கம் கான்ட்ரவர்ஸியல் பேசினாலும்.. மற்றொரு பக்கம் சமூகத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால் தமிழை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 



 



இந்தோனேசியாவில் ஒரு ஆலயத்தில் ஒரு சின்ன பெண் முருகனின் பாடலை அற்புதமாக பாடினார். அந்தப் பெண் அந்த நாட்டை சேர்ந்த ஐந்தாம் தலைமுறை பெண். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியவில்லை. ஆனால் தமிழில் அற்புதமாக பாடுகிறார். அந்தப் பாட்டின் பொருள் தெரியவில்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தப் பாடலை அவருக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். மொழி மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சினிமாவை பார்க்க வேண்டும். புத்தகத்தை வாசிக்குமாறு கேட்டால் மறுத்து விடுவார்கள்.அதில் தருணத்தில் சினிமாக்காரர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். உங்களுடைய படத்தின் வன்முறையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.தமிழர்கள் உலகம் முழுவதும் 70, 80 நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தயாராகும் திரைப்படங்களை பார்த்து தான் மொழியை பேசுகிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அனைவரது ஆசீர்வாதமும், ஆதரவும் இந்தத் திரைப்படத்திற்கு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



 



இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், ”அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  டேனியல் பாலாஜி நடித்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன். அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டு தெரிந்து கொள்வார். குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை. 



 



சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன்ஸ் ஆக இருக்கும். அவர் இல்லாமல் இருக்கும்போது தான் அவரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி. அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா