சற்று முன்
சினிமா செய்திகள்
'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!
Updated on : 24 July 2025

'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத் - பீப்பிள் மீடியா ஃபேக்டரி - கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய்' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது.
'ஹனுமான்' படத்தின் மூலம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின் 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா- அடுத்ததாக 'மிராய் 'படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான அளவில் அதிரடி ஆக்சன் படமான இதனை தொலைநோக்கு பார்வை திறன் கொண்ட இயக்குநர் கார்த்திக் கட்டமனேனியின் இயக்கத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. அதன் பிரம்மாண்டமான காட்சி அமைப்பு - அதிவேகமான கதை சொல்லும் பாணி மற்றும் ஒரு வளமான கற்பனையுடன் கூடிய பிரபஞ்சத்துடனான 'மிராய் 'சூப்பர் ஹீரோ வரிசையில் மிகப் பெரும் புரட்சியாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.
படத்தின் இசை - ஜூலை 26 ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலுடன் இப்படத்திற்கான இசை தொடர்பான விளம்பரப் பணிகள் தொடங்குகிறது. இதனை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், 'வைப் இருக்கு பேபி' என மின்ன வைக்கும் டெக்னோ பீட் பாடலாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இந்த பாடல் - முன்னணி ஜோடிகளான தேஜா சஜ்ஜா மற்றும் ரித்திகா நாயக் இடையேயான அற்புதமான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்துகிறது.
தேஜா சஜ்ஜா கரடு முரடான மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் ஒரு நவ நாகரிகமான உடையில் வலுவான வீரமிக்க ஜோதி போன்ற ஒளியை வெளிப்படுத்துகிறார். ரித்திகா நாயக் பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் தேஜா சஜ்ஜாவுடன் ஒரு தீவிரமான தருணத்தில் தோன்றுகிறார். அவர்களுக்கு பின்னால் சூழலும் தங்கத்தினாலான ஆற்றல் மிக்க ஒரு மாயாஜால பாதையை உருவாக்குகிறது. இது 'மிராய்' படத்தின் புராண மற்றும் கற்பனை உலகத்துடன் பொருந்தி சென்று, புதிதாக வேறொரு உலகத்தை காட்சிப்படுத்துகிறது.
நடிகர் மனோஜ் மஞ்சு அச்சுறுத்தும் வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண் , ஜெயராம், ஜெகபதிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து வருகிறார். இப்படத்தின் திரைக்கதையையும் கார்த்திக் கட்டமமேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனத்தில் பங்களித்திருக்கிறார். கலை இயக்கத்திற்கு ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தலைமையேற்று 'மிராய் ' படத்திற்கான உலகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். இப்படத்திற்கு சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராக மேற்பார்வையிடுகிறார்.
'கார்த்திகேயா 2', 'ஜாட்' ஆகிய பிளாக் பஸ்டர் ஹிட் படங்களுக்கு பின்னால் உள்ள படைப்பாற்றல் மிக்க பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'மிராய்'- இந்நிறுவனத்தின் பான் இந்திய பயணத்தில் ஒரு துணிச்சலான படைப்பாக இருக்கும் என்பதை பிரதிபலிக்கிறது. இப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் ..இப்படத்தின் சர்வதேச தரத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் இது உலகளவிய தயாரிப்பு தரத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு படைப்பாகவும் அமைந்திருக்கிறது. உண்மையில் இந்தத் திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை எண்ணிக்கையிலான VFX காட்சிகளை கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'மிராய்' திரைப்படம் -2 D மற்றும் 3 D தொழில்நுட்பத்தில், எட்டு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்திய செய்திகள்
‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரெய்லர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற தரமான ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் மு. மாறன் அடுத்து ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்தான அனுபவத்தை இயக்குநர் பகிர்ந்து கொண்டார்.
"மனிதகுல வரலாற்றில் பிளாக்மெயில் என்பது தவிர்க்க முடியாத, எழுதப்படாத நடைமுறை. சில நேரங்களில் இது நண்பர்களிடையே நகைச்சுவைக்காக செய்யப்படலாம். ஆனால், சில நேரங்களில் ஆழமான ரகசியங்கள் வெளிக்கொண்டு வரும் விதமாகவும், பல நேரங்களில் பிளாக்மெயில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைகிறது. ‘பிளாக்மெயில்’ படம் பல கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிறது. கதாநாயகன் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் கதை. நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் கொண்டிருக்கிறது. நிச்சயம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம்” என்றார் இயக்குநர் மு. மாறன்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “உதவி இயக்குநர்கள் மற்றும் நல்ல கதைகள் இயக்கும் இயக்குநர்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர் ஜிவி பிரகாஷ்குமார் என்பதை அவரின் முந்திய படங்கள் சொல்லும். வித்தியாசமான கதை எனும்போது பலருக்கும் அவரின் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். அதுபோன்ற கதைகளை அவரும் மிஸ் செய்ய மாட்டார். அப்படித்தான் ஜிவி பிரகாஷ்குமார் இந்தக் கதையில் வந்தார். தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் கதை தொடங்கியதில் இருந்து முடியும் வரைக்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொழில்நுட்பக் குழுவினர் பற்றி பேசும்போது, “தன்னுடைய பின்னணி இசையால் சாம் சி.எஸ். படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகி உள்ளது. டி. இமான் சாரின் டிராக்கும் படத்திற்கு பலம். கதைக்கு உயிர் கொடுத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படம் எடுக்கும்போது பல சவால்கள் இருந்தபோதிலும் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி தரத்தில் எந்த சமரசமும் செய்யாத தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.
தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்
தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது.
இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர். அவர் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
காதல் - த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லப்படாத பல ஜானர்களும் கதைகளும் இருக்கிறது. இதெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினர் எடுத்து செய்ய வேண்டும். அதேபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை திரும்ப திரும்ப சொல்வதை விட புதுவிதமான கதைகளை சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது" என்றார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "தனித்துவமான கதைகள் தேடிக் கொண்டிருந்தபோதுதான் பல திருப்புமுனைகளைக் கொண்ட எம். சுந்தரின் கதை கேட்டேன். இதற்கு மேல் கதை பற்றி நான் அதிகம் சொன்னால் அது திரையனுபவத்தை குறைத்துவிடும். சுந்தர் கதை சொல்லி முடித்த உடனே இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். நடிகர்கள் தேர்வில் இருந்து தொழில்நுட்பக்குழுவினர் வரை அனைத்தும் சரியாக அமைந்தது. அஜித்தேஜ், ஸ்ரீஸ்வாதி மற்றும் மற்ற நடிகர்களும் திறமையாக நடித்து படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளனர்”.
இசையமைப்பாளரை தேர்ந்தெடுத்தது பற்றி பேசும்போது, “இந்தக் கதையின் ஆன்மாவை புரிந்து கொண்ட ஒருவர்தான் இந்தக் கதைக்கு இசையமைக்க வேண்டும் என தீர்மானித்தோம். அப்படி பல சாம்பிள் டிராக்குகள் பார்த்த பின்பு இயக்குநர் சுந்தரின் மகன் சச்சின் சுந்தர் எங்களுக்கு சரியான தேர்வாக இருந்தார். அவரது இசை படத்திற்கு புது எனர்ஜி கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரின் பங்களிப்பும் சிறப்பானதாக அமைந்தது” என்றார்.
‘அந்த 7 நாட்கள்’ என படத்தலைப்பு தேர்ந்தெடுத்தது பற்றி அவர் கூறியதாவது, “இந்தப் படத்தின் கதை கேட்டு முடித்ததும் லெஜெண்ட்ரி இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். எங்கள் கதைக்கு இந்த தலைப்பு தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநர் பாக்யராஜ் அவர்களுக்கும் நிச்சயம் மரியாதை செய்யும் விதமாக அமையும். இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நோக்கமே திறமையான இளைஞர்களை சினிமாத்துறைக்கு எடுத்து வருவதுதான். அவர்கள்தான் சினிமாவின் எதிர்காலம்” என்றார் பெருமையுடன்.
சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களை சுற்றிலும் 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்: பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி.
ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!
வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார்.
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார்.
சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இந்த படத்தில் அவர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் ஒளிப்பதிவாளர் (DoP) எனப் பல பொறுப்புகளை ஏற்று தனது பன்முகத் திறமையையும் நிரூபித்துள்ளார்.
தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.
“என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை இன்பத்தை வெகு அழகாகச் சொல்கிறது. இப்பாடல் You Live Only Once எனும் பெயரில் சிற்சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார்.
இன்று வெளியாகியிருக்கும் இப்பாடல் இசை ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது, நந்தா “120 ஹவர்ஸ்” எனும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவிருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பலே பாண்டியா'. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார்.
'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹேப்பி' பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகி 10 லட்சம் பார்வைகளை கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை 20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றி இருந்தனர்.
ஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பரவை முனியம்மா, மலேசியா வாசுதேவன், ரஞ்சித், ஆலாப் ராஜு, ரகீப் ஆலம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், வேல்முருகன், மாணிக்க விநாயகம், முகேஷ், மால்குடி சுபா, திவ்யா, அனிதா, சுசித்ரா, விஜய் யேசுதாஸ், ராகுல் நம்பியார் ஆகியோர் வாலியின் உற்சாக வரிகளில் நேர்மறை எண்ணங்கள் ததும்பும் இப்பாடலை பாடி இருந்தனர். மலேசியா வாசுதேவன் தவிர மற்ற அனைவரும் திரையிலும் தோன்றி பாடலுக்கு அழகு சேர்த்தனர்.
இத்தனை ஆண்டுகள் கழித்து 'ஹேப்பி' பாடல் வைரல் ஆனது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர், "இன்றைய தலைமுறையினர் இப்பாடலை ரசிப்பது கவிஞர் வாலி அவர்களின் சாகாவரம் பெற்ற வரிகளையும், தேவன் ஏகாம்பரத்தின் இளமையான இசையையும், 20 பாடகர்கள் ஒன்றிணைந்த அரிதான நிகழ்வையும் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடலை வெறும் இரண்டே தினங்களில் அனைவரையும் ஒன்றிணைத்து புதுச்சேரியில் படமாக்கினோம். அக்காபெல்லா வகையிலான இப்பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தார்," என்றார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர், "பலே பாண்டியா படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. கவிஞர் தாமரையும் பாடல் எழுதி இருந்தார். மகிழ்ச்சியை பரப்பும் 'ஹேப்பி' பாடலுக்கு பங்காற்றிய அனைவரையும் இந்த தருணத்தில் நினைவு கூர்வதோடு இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.
பிரபல திரைப்பட விளம்பர வடிவமைப்பாளரான சித்தார்த் சந்திரசேகர், 'சந்திரமுகி', 'அந்நியன்', 'கஜினி', 'ஏழாம் அறிவு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னையின் முன்னணி இன்டீரியர் டிசைனராக வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். இவரது நிறுவனமான பென்சில் அண்டு மாங்க் சென்னையின் முக்கிய அடையாளங்களான அமெரிக்க துணைத் தூதரக நூலகம் மற்றும் ஷெரட்டன் கிராண்ட் ஹோட்டல் ஆகியவற்றின் உட்புறங்களை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'காந்தாரா : சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது.
'ராஜ குமாரா' , 'கே ஜி எஃப்', 'சலார் ' மற்றும் ' காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள - அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று 'காந்தாரா :சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.
படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால்.. இந்த மேக்கிங் வீடியோ - நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியின் கதை சொல்லலை வரையறுக்கும் ஆர்வம் மற்றும் துல்லியத்திற்கு சமர்ப்பணமாக அமைந்திருக்கிறது.
' காந்தாரா : சாப்டர் 1 ' என்பது ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் மிகவும் லட்சியமான திரைப்பட முயற்சிகளில் ஒன்றாகும். படத்தின் பின்னணியில் பணியாற்றிய படைப்புத் திறன் மிக்க குழுவில் இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் - ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்காளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் சக்தி வாய்ந்த காட்சி மொழி மற்றும் உணர்வு பூர்வமான கதையை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
அக்டோபர் இரண்டாம் தேதியன்று உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் , இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதே தருணத்தில் அதன் கலாச்சார மையத்தில் வேரூன்றி பல்வேறு மொழிகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களையும் சென்றடையும்.
'காந்தாரா : சாப்டர் 1 'உடன் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை தொடர்ந்து கடந்து செல்கிறது. நாட்டுப்புற கதைகள், மக்களின் நம்பிக்கை மற்றும் அற்புதமான சினிமா திறமைசாலிகள் ஒன்றிணைந்து.. கொண்டாடும் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்கும் என இந்தப் படம் உறுதியளிக்கிறது.
'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!
''குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடித்து வரும் 'பெத்தி' ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
'குளோபல் ஸ்டார் 'ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான 'பெத்தி' ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம்- இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் நாடு முழுவதும் அனைத்து மொழிகளிலும் பெரும் உற்சாகத்தை தூண்டியுள்ளது.
இப்படத்தின் முக்கியமான மற்றும் நீண்ட நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக- இந்த கதாபாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த புதிய அவதாரத்தை வெளிப்படுத்த ராம் சரண் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தன்னை தயார்படுத்தி வருகிறார். அதற்காக அவர் இடைவிடாத பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவரது கதாபாத்திரம் கோரும் ஆற்றலையும், தீவிரத் தன்மையையும் முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் தன் உடலை செதுக்கி இருக்கிறார். இதற்காக அவர் ஜிம்மில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கரடு முரடான தாடி - இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்ட கூந்தல்- ஒழுக்கமும், மன உறுதியும் கொண்ட கம்பீரமான உடல் அமைப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் சாதாரண தோற்றத்தை பற்றியது மட்டுமல்ல.. அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மற்றும் கதையின் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்குச் சிறந்த சான்றாகும். இந்தத் தோற்றத்தில் அவர் உண்மையிலேயே ஒரு கிரேக்க கடவுளைப் போல் இருக்கிறார். வலுவான மற்றும் ஆக்ரோஷமான மனநிலைக்கு முழுமையாக மாறிவிட்டார் என்பதையும் பிரதிபலிக்கிறது.
'குளோபல் ஸ்டார்' ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'பெத்தி' ( Peddi) திரைப்படம் ராம்சரணின் திரையுலக பயணத்தில் இலட்சிய படங்களில் ஒன்று என்ற உற்சாகத்தை உருவாக்கி வருகிறது. அவரது தீவிரமான தோற்றம்.. தற்போது முழு வீச்சில் இருப்பதால் நடிகரின் நம்ப முடியாத மாற்றத்தை போலவே அவரிடமிருந்து சக்தி வாய்ந்த நடிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
' கருநாடக சக்கரவர்த்தி' சிவராஜ் குமாரின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் அவரது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற மேஸ்ட்ரோ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 2026 அன்று இப்படத்தின் வெளியீட்டு தேதி என்பதால்.. படக் குழு அதை நோக்கி விறுவிறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது.. 'பெத்தி ' ( Peddi) படத்தைப் பற்றிய உற்சாகம் அதிகரிக்கிறது.
ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில் அடுத்தடுத்து பல தரமான படைப்புகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ZEE5 வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்,fசீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் வெளியான வேகத்தில் … மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மக்களை பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை, இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சந்தாதரர்கள் அல்லாத அனைவரும் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை கண்டுகளிக்கலாம்.
சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
சட்டமும் நீதியும் சீரிஸை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக கண்டுகளியுங்கள்.
சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மீடியா மத்தியில் பாசிடிவ்வான ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த ஆதரவினால் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.
நிர்வாகத் தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், “இந்தப் படம் புதுவிதமான சந்தோஷமான வெற்றி அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எங்களுக்கு இது முதல் படம் என்பதால் ரிசல்ட் எப்படி இருக்கும் என பயந்து கொண்டே இருந்தோம். ஆனால், மக்களின் ரிசல்ட் பார்த்ததும் பெருமையாகவும் திருப்தியாகவும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. கிளைமாக்ஸ் முடிந்தும் ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை தியேட்டர் விசிட்டில் பார்த்தோம். அனைத்து தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு நன்றி”.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம், “இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. எல்லாருடைய கடின உழைப்பும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சவுண்ட் மிக்சிங் அகமதுவின் பணி முக்கியமானது. மற்ற தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு நன்றி”.
ஒளிப்பதிவாளர் கேஜி, “’ஜென்ம நட்சத்திரம்’ வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. கஷ்டப்பட்டுதான் இந்தப் படம் எடுத்தோம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் பார்த்து ரசித்த அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்றி”.
எடிட்டர் குரு சூர்யா, “படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இன்னும் நன்றாக போகும் என நம்புகிறோம்”.
கலை இயக்குநர் ராம், “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இரண்டாவது வாரம் படம் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஆதரவு கொடுங்கள்”.
நடிகர் மைத்ரேயன், “இயக்குநர் மணி மற்றும் என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பல காட்சிகளில் சக நடிகர்கள் என்னை கூல் செய்து நடிக்க வைத்தார்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.
நடிகை மால்வி மல்ஹோத்ரா, “படத்திற்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடின உழைப்பு கொடுத்திருக்கிறோம். தமிழ் பார்வையாளர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு மறக்க முடியாதது. இன்னும் படம் பார்க்காதவர்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும்”.
நடிகர் முனீஷ்காந்த், “என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி! ஹாரர் படம் என்பதால் காமெடி நாங்களே சேர்த்து செய்தால் அந்த எஸ்சென்ஸ் போய்விடும் என இயக்குநர் நினைக்கவில்லை. எங்களுக்கான இடம் கொடுத்தார். சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. யாசரும் நன்றாக காமெடி செய்தார்”.
நடிகர் அருண் கார்த்திக், “இந்தப் படத்திற்கு கடின உழைப்பு கொடுத்திருக்கிறோம். எல்லோருக்கும் முனீஷ் அண்ணாவின் காமெடி பிடித்திருந்தது. இதுவரை படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கும் நன்றி”.
நடிகை ரக்ஷா ஷெரின், “படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. இன்னும் படம் பார்க்காதவர்கள் நிச்சயம் திரையரங்கிற்கு சென்று பாருங்கள்”.
நடிகர் கார்த்திக், “இது என்னுடைய முதல் தமிழ் படம். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி!”.
கேபிள் சங்கர், “இந்த டீம் எனக்கு மிகவும் பழகினதுதான். இந்தப் படம் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெறும் என ரிலீஸூக்கு முன்பே சொல்லியிருந்தேன். அது நிரூபணமாகி உள்ளது மகிழ்ச்சி. சவுண்ட், ஆர்ட் என தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அதே தரத்தில் எல்லா திரையரங்கிலும் வருமா என பயந்தார்கள். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் கூட அதே தரத்தில் கொடுத்திருக்கிறார்கள். ரோமியோ பிக்சர்ஸ் அட்டகாசமாக ரிலீஸ் செய்து கொடுத்திருக்கிறார்கள். எல்லா சின்ன படங்களுக்கும் கமர்ஷியல் வெற்றி தேவை”.
நடிகர் யாசர், “தொடர்ச்சியாக நெகட்டிவ் கதாபாத்திரம் செய்து வந்தேன். ஆனால், எனக்கு காமெடி கதாபாத்திரம் நடிக்க பிடிக்கும். அந்த வாய்ப்பு இந்தப் படத்தில் வந்தது மகிழ்ச்சி. முதல் முறையாக காமெடி கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறேன் எனப் பாராட்டு வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி!”.
இயக்குநர் மணிவர்மன், “நினைத்ததை விட இந்தப் படம் நன்றாக போய் கொண்டிருப்பதால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். மல்டிஃபிளக்ஸ் திரையரங்கை விட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நேரில் ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரம் போலவே அடுத்த வாரமும் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த வாய்ப்பு கொடுத்த அமோகம் ஸ்டுடியோஸ் சுபாஷினி மேம் மற்றும் விஜயன் சாருக்கு நன்றி. நிச்சயம் அடுத்து சக்சஸ் மீட்டில் சந்திப்போம். படம் ஆரம்பித்ததில் இருந்தே ஆதரவு கொடுத்து வரும் கேபிள் சங்கர் மற்றும் ஈரோடு மகேஷூக்கு நன்றி”.
நடிகர் தமன், “என்னுடைய முந்திய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்ஷன் கொடுத்துள்ளது. இதற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாரின் ஆதரவு முக்கியமானது. படத்தை அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் பிக்சர்ஸூக்கும் நன்றி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு கலெக்ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200- 250 என்ற எண்ணிக்கையில் ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது. ரசிகர்கள் மற்றும் மீடியா கொடுத்த ஆதரவிற்கு நன்றி”.
கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நவகோடி கூடைப்பந்து போட்டி, இளம் விளையாட்டு திறமையாளர்களின் கொண்டாட்டமாக மாறியது. உள்ளூர் அணிகள் வயது வாரியாகப் போட்டியிட்டதால், இந்த நிகழ்வு அதிக உற்சாகமானதாக மாறி பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தது.
இந்தப் போட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்று முன்னாள் இந்திய நெட்பால் அணித் தலைவரும், நடிகையுமான பிராச்சி தெஹ்லான், முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் 'மாமாங்கம்' திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர். பிராச்சி தெஹ்லான் அறக்கட்டளை மூலம் இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவித்து வருகிறார். அவரது வருகை இந்த நிகழ்வுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.
"உள்ளூர் அணிகள் போட்டியிடுவதைப் பார்ப்பது அற்புதமான அனுபவம். ஒவ்வொரு போட்டியும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. தேசிய அளவிலான வீரர்களைப் பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த இளம் கூடைப்பந்து வீரர்களின் திறமையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.”
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், போட்டி முடிவில் நான்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5,000 உதவித்தொகையை தெஹ்லான் அறிவித்தார். இது வெற்றியாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்வேறு வயதுப் பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவரது அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த உதவித்தொகைகள், இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“மாற்றத்தைக் கொண்டுவர உதவும் இந்த மகத்தான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறிய ஊக்கம் கூட ஒரு விளையாட்டு வீரரின் கனவுக்கு சிறகுகளை கொடுக்கும். நம் நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்" என்றார்.
இது போன்ற முயற்சிகளுடன் நடைபெறும் நவகோடி டார்னமெண்ட் வெறும் போட்டியாக மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்கால சாம்பியன்களை வளர்க்கும் முக்கிய முயற்சியாகவும் திகழ்ந்து வருகிறது.
'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா மற்றும் அனிகா, சண்டை பயிற்சி இயக்குநர் நூர், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ், பின்னணி பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் & நடிகர் மகேஸ்வரன் தேவதாஸ் பேசுகையில், ''ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடைய இந்த விருப்பத்தை என் ஆசிரியரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை வழங்கினார். நான் கமல்ஹாசனின் ரசிகன் நான். 11 வயதில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை தேர்வு நேரத்திலும் பார்த்தேன். ஆசிரியர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. .
அதன் பிறகு திருமணம் ஆனது. பிள்ளைகளும் பிறந்தார்கள். பிசினஸ் இருந்தது. கோவிட் வந்தது. அனைவரும் நெட்பிளிக்ஸ், அமேசான் என டிஜிட்டல் தளங்களில் தங்களது பொழுதை கழித்தனர். அந்த தருணத்தில் எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கத் தொடங்கினர். சிங்கப்பூரில் என்ன சிறப்பு என்றால், டாப் 10 என திரைப்படங்களை பட்டியலிடுவார்கள். அங்கு சீனர்கள், மலாய்காரர்கள் என அனைவரும் படங்களை பார்ப்பார்கள். இதில் டாப் 1, 2 ஆகிய இடங்களில் தமிழ் படங்கள் தான் இருக்கும். எல்லோருக்கும் தமிழ் படங்களை பார்க்கத்தான் ஆசை. இதை நான் உன்னிப்பாக கவனித்தேன். அதன் பிறகு என்னை தயார்படுத்திக் கொண்டு 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன். அதன் பிறகு இந்த உடலமைப்பை எப்படி எங்கு வெளிப்படுத்திக் கொள்வது என யோசித்தேன். எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். நான் பேட்மேன் படத்தை பார்த்துவிட்டு வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை நான் கில்லி, துப்பாக்கி, தனி ஒருவன் போன்ற படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பேன். விஜய்க்காக மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி வில்லன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பிற்காக அந்தப் படங்களை பார்ப்பேன்.
எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இதற்காக இரண்டு ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்தேன். தமிழ் திரையுலகில் எத்தனை துறைகள் இருக்கின்றன, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்தேன். இதில் என்னை ஏமாற்றுவதற்கும் சிலர் முயற்சித்தனர். அதன் பிறகு தான் அஷ்ரஃப் அறிமுகமானார். அங்கிருந்து இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளானது.
எனக்கு சிங்கப்பூரில் தொழில் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் சர்வதேச அளவிலான மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். கால்பந்து பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறேன். இத்தனை பணிகளையும் நிர்வகித்துக் கொண்டே இடையில் இந்த படத்தின் பணிகளை கவனித்தேன்.
சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் நல்ல படத்தை வழங்க இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்.
என்னுடைய தாத்தாவின் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். ஆபாச காட்சிகள் இடம் பெறக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்ற இரண்டு நோக்கத்தை மனதில் வைத்து தான் என் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரையரங்க அனுபவத்தையும் பெற வேண்டும் என்பதற்காக படங்களை தயாரிக்க திட்டமிட்டேன். இதைத்தான் இயக்குநர் அஷ்ரஃப்பிடம் தெளிவாக தெரிவித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இப்படத்தின் டீசர் என்ன, ட்ரெய்லர் என்ன என்பது வரை விவாதித்தோம். அதனால் தான் அவரை முதலில் ஒரு குறும்படத்தை இயக்கச் சொன்னேன்.
இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் இருக்கிறது. இதனை கிரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும் என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். அந்த வகையில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் 2023ம் ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தோம். அதன் பிறகு இப்படத்தினை நேர்த்தியாக செதுக்குவதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று வெளியாகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
சண்டை பயிற்சி இயக்குநர் நூர் பேசுகையில், ''இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. ஆக்ஷன் காட்சிகளில் டூப் எதுவும் வேண்டாம் என்று சொல்லி வில்லனாக அறிமுகமாகும் மகேஸ்வரன் தேவதாஸ் அவரே நடித்தார். நான்காவது மாடியில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கும் போது டூப் வைத்துக் கொள்ளலாம் என்று விவாதித்தோம். ஆனால் அதனை நானே செய்கிறேன் என்று சொல்லி துணிச்சலுடன் நடித்தார். இந்தக் காட்சியின் போது அவர் ஒரே நாளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்தார். இதன் மூலம் நடிப்பின் அவருடைய அர்ப்பணிப்பும், ஆர்வமும் தெரிந்தது. இந்தக் காட்சி திரையில் வரும் போது பார்வையாளர்கள் ரசிப்பார்கள். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் பேசுகையில், ''இப்படத்தை இயக்குநர் அஸ்ரப் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன, அனைத்தும் நன்றாக உள்ளன. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.
நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், ''தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகத்திற்கு நன்றி. தமிழில் அறிமுகமாகும் போது தமிழ் தெரியாது. நடிப்பும் தெரியாது. இருந்தாலும் தமிழ்நாட்டில் தான் திறமைசாலிகளை கண்டறிந்து, வாய்ப்பளித்து அவர்களை பாராட்டுகிறார்கள். தொடர்ந்து ஆதரவும் தருகிறார்கள். 'காளி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'சிங்க பெண்ணே' என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன்.
நிறைய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் மகேஸ்வரன் தேவதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். அவரை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப் பேசுகையில், ''நான் ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறேன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'பிசாசு ' திரைப்படத்தை கன்னடத்தில் 'ராட்சசி' என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக நான் இயக்கி இருக்கும் படம் இது. படத்தின் பெயர் 'சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்'. தமிழில் எனக்கு இது முதல் பக்கம். என்னுடைய தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாசுக்கும் இதுதான் முதல் படம்.
இது ஒரு முக்கியமான மேடை. இந்த மேடை மீது விருப்பப்படாத உதவி இயக்குநர்கள் ..இணை இயக்குநர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனக்கு இன்று இந்த மேடை சாத்தியமாகி இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் விரைவில் சாத்தியமாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பர் வாயிலாக தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் போன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் தெரிவித்தார். அவரது புகைப்படத்தை பார்த்த பிறகு உங்களை வில்லனாக அறிமுகப்படுத்துகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஏனென்றால் அவருடைய கட்டுமஸ்தான உடலமைப்பு தான் முக்கிய காரணம். அதன் பிறகு அவருக்காக குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்தக் குறும்படத்தில் அவர் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இப்படத்தின் கதையை அவரிடம் முழுமையாக விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கின. தயாரிப்பாளராக இருந்தாலும் நண்பராகவும், நடிகராகவும் பழக தொடங்கினார். அவருடைய ஈடுபாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பை தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்தோம்.
முதல் பக்கம் என்பது கதைக்கு பொருத்தமானதாக இருந்ததால் வைத்திருக்கிறோம். சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில், அவர் ஒரு கதையை விவாதிக்க தொடங்குவதற்கு முன் சோஷியல் மெசேஜ் ஒன்றை தீர்மானித்து, அதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என முடிவு செய்வார். இதற்காகத்தான் அவர் கதையையும், காட்சிகளையும், திரைக்கதையையும் உருவாக்குவார். அதனால் தான் நானும் இந்த படத்தில் ஒரு சோஷியல் மெசேஜை வைத்து கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன்.
கிரைம் திரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. பேய் படங்களும், திரில்லர் படங்களும் தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு பாதுகாப்பானவை என சொல்வார்கள். க்ரைம் திரில்லர் ஜானரில் சோஷியல் மெசேஜை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் ஏ ஜி ஆர், படத்தொகுப்பாளர் வி எஸ் விஷால் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு நாயகனாக வெற்றியை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று என்னிடம் பலர் கேட்டனர். இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன பிறகு, யார் ஹீரோ என அவர் கேட்டபோது, வெற்றி என்று ஒரே ஒரு பெயரை தான் நான் சொன்னேன். மதுரையிலிருந்து வரக்கூடிய ஒரு கிரைம் நாவலாசிரியரின் மகன் எனும் அந்த கதாபாத்திரத்திற்கு வெற்றி தான் பொருத்தமாக இருப்பார் என நான் உறுதியாகச் சொன்னேன். அத்துடன் இப்படத்தின் வில்லன் உடன் மோத வேண்டும் என்றால் அதற்கு இணையான உடல் தோற்றம், உடல் மொழி கொண்ட நடிகர் வெற்றி மட்டும்தான் என விளக்கமும் அளித்தேன், இதனை தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு வெற்றியை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அவர் கதையை கேட்ட பிறகும் முழு திரைக்கதையை வாசித்த பிறகும் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினேன் அவர் அப்போது டெல்லியில் இருந்ததால் கதை முழுவதையும் போனில் சொன்னேன். அப்போது அவர் நான் நடிக்கும் படத்தில் என் கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என பார்ப்பேன், அல்லது அந்தத் திரைப்படம் வெற்றி பெறும் திரைப்படமாக இருக்குமா என்பதை பார்ப்பேன். இந்த படத்தில் இரண்டுமே இருப்பதால் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். இந்தப் படத்தில் அவர் ரிப்போர்டராக தான் நடிக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தத் திரைப்படத்தில் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
நாயகன் வெற்றி பேசுகையில், ''இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்' படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது. அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து பார்த்து ரசித்து பேராதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா