சற்று முன்
சினிமா செய்திகள்
தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!
Updated on : 07 August 2025

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது.
மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார்.
தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தை ‘வாழ்வின் சிறு, சிறு தருணங்களில்தான் எதிர்பாராத ஆச்சரியம் உள்ளது’ என்றும் ‘மனதிற்கு இதமான ஃபீல் குட் கதை’ என்றும் விமர்சகர்கள் பாராட்டினர். செண்டிமெண்ட், எண்டர்டெயின்மெண்ட், நகைச்சுவை, என இதயப்பூர்வமான படமாக அமைந்ததாக ரசிகர்கள் தங்கள் கருத்தை இணையத்தில் பதிவிட்டனர்.
தற்போது ‘பறந்து போ’ திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் சப்டைட்டிலோடு ஸ்ட்ரீம் ஆகிறது. மேலதிக விவரங்களுக்கு சமூகவலைதளங்களில் ஜியோஹாட்ஸ்டாரை பின்தொடருங்கள்!
சமீபத்திய செய்திகள்
முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'
தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இப்போது தனது தனித்துவமான நடிப்பை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறார்.
முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், நகைச்சுவையின் பிறமகாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவது காரணமாக, இப்படத்துக்குத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே மிகுந்த நட்பு உருவானது. பிரம்மானந்தம் சார் தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்து, இருவரும் மனம் திறந்து பேசினர். அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள புத்தகம் "நான் பிரம்மானந்தம்" என்பதை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார்.
இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு மனமுவந்த பேச்சில் கூறுகிறார்:
தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளது.
பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபு இணையும் குர்ரம் பாப்பி ரெட்டி படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான நகைச்சுவை விருந்தாக இருக்கும். இரண்டு துறைகளின் ஐகானிக்கள் இணையும் இந்த படம், ஒரு கலாச்சார சங்கமமாகவும், நகைச்சுவையின் பண்டிகையாகவும் அமையும்.
மேலும் குர்ரம் பாப்பி ரெட்டி திரைப்படத்தின் விவரங்கள் விரைவில்
‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம் மற்றும் எம். தங்கவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ‘அக்யூஸ்ட்’ வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால் அங்கும் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தபோது அவர்கள் படத்தில் நடித்தவர்களை அவரவர் கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே அழைத்து மகிழ்ந்தனர். குறிப்பாக நாயகன் உதயாவை அவரது கதாபாத்திரமான கணக்கு என்று அழைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த அளவிற்கு படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் 10 நிமிடம் போனதே தெரியவில்லை என்று ரசிகர்கள் படக்குழுவினரிடம் தெரிவித்தனர். பஸ் சண்டை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளை அவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினார்கள்.
இது குறித்து பேசிய உதயா, "இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்," என்றார்.
'அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான 'அக்யூஸ்ட்', உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.
'அக்யூஸ்ட்' படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார்.
அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
'பேய் கதை' திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி'ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.
ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், ''இப்படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.
படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.
'பேய் கதை' கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
வசனகர்த்தா நவீன் பேசுகையில், ''இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர். அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், ''2017ம் ஆண்டில் வெளியான 'அட்டு' படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், ''கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். 29ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை எலிசபெத் பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், ''இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் , படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ''வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. 'பேய் கதை' படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன,'' என்றார்.
இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், ''படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன்.
எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்," என்றார்.
இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ''இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன.
இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்,'' என்றார்.
நாயகன் வினோத் பேசுகையில், ''இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளியின் ரசிகன். ஏனெனில் 'வாலி' படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷுக்கும் நன்றி. அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.
இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார். அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன்.
'பேய் கதை' திரைப்படம் 29ம் தேதி அன்று வெளியாகிறது. ஊடகங்களும், ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா" ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பயணத்தைப் பற்றிச் சொல்கிறது. திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன், அஸ்கர் அலி, மாதவ் சுரேஷ் கோபி மற்றும் பைஜு சந்தோஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், சட்டத்தின் குறைபாடுகள், தார்மீக தெளிவின்மை மற்றும் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் நீதியை வடிவமைக்கும் அரசியல் அடித்தளங்களை ஆராய்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா, விவாதத்தைத் தூண்டும் மற்றும் இதயங்களைத் தொடும் ஒரு துணிச்சலான, கதையைச் சொல்கிறது.
கேரள நீதித்துறை அமைப்பின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதை, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி நிபுணரான ஜானகி வித்யாதரன் (அனுபமா பரமேஸ்வரன்) பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, தனது சொந்த ஊருக்குப் பண்டிகைக் கால பயணம் செல்வது ஒரு இருள் மிகு கனவாக மாறுவதைப் பின்தொடர்கிறது. நீதியைத் தேடத் தீர்மானித்த அவள், கூர்மையான மற்றும் சாந்தமான வழக்கறிஞரான டேவிட் ஆபெல் டோனோவன் (சுரேஷ் கோபி) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட முன்வரும்போது, ஒரு சிக்கலான சட்டப் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள். சட்ட வாதங்களுக்கும் பாதிக்கப்பட்ட உயிருள்ள ஜீவன்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஜானகியின் போராட்டம், இந்திய நீதித்துறை அமைப்பின் ஆழமான தார்மீக மற்றும் நெறிமுறை சங்கடங்களை அம்பலப்படுத்துகிறது. சட்டம் பாதுகாக்கப்பட வேண்டிய உலகில், சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகள் மங்கலாகி, ஒரு கேள்வியை விட்டுச்செல்கின்றன. ஜானகிக்கு உண்மையில் என்ன நடந்தது, நீதி என்றால் உண்மையில் என்ன? என்பது தான் இந்தப்படத்தின் மையம்.
ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவர் மற்றும் தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறுகையில்…,
“இந்த சுதந்திர தினத்தன்று எங்கள் பார்வையாளர்களுக்கு ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த படம் அதன் சக்திவாய்ந்த கருப்பொருளுக்காக மட்டுமல்லாமல், அது உருவாக்கப்பட்ட நேர்மையுடனும் தனித்து நிற்கிறது. பிரவின் நாராயணன் போன்ற ஒரு தீவிர திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் தலைமையிலான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. இது பரபரப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்ற டிராமா திரைப்படமாகும், இது பொழுதுபோக்கு மட்டுமல்ல - இது சிந்தனையைத் தூண்டுகிறது, விதிமுறைகளைச் சவால் செய்கிறது மற்றும் பலர் எதிர்கொள்ளத் தயங்கும் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கிறது. கேரளாவில் வேரூன்றிய இந்தக் கதை, இப்போது முழு தேசத்துடனும் பேசும் என்பது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்படுவதன் மூலம், கொச்சி, கொல்கத்தா அல்லது கான்பூரில் உள்ள ஒவ்வொரு பார்வையாளரும் ஜானகியின் நீதிக்கான போராட்டத்தை அணுகவும், அனுபவிக்கவும் முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஒரு சக்திவாய்ந்த கதை எல்லைகள் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை ZEE5 நம்புகிறது, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படமும் அந்த மாதிரியான படம்தான்."
தயாரிப்பாளர் ஜே. பணீந்திர குமார் கூறுகையில்...,
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தைத் தயாரித்தது எனது திரைத்துறை வாழ்க்கையின் மிகவும் அர்த்தமுள்ள அனுபவங்களில் ஒன்றாகும். இந்தக் கதை வெறும் சட்டப் போராட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல - இது உண்மை, தைரியம் மற்றும் குற்றத்திற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணின் அமைதியான வலிமையைப் பற்றியது. ZEE5 உடனான எங்கள் கூட்டணி, இந்த சக்திவாய்ந்த கதையை, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை அவர்களின் சொந்த மொழிகளில் சென்றடையச் செய்துள்ளது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, உங்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு படம், மேலும் இது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.”
இணைத் தயாரிப்பாளர் சேதுராமன் நாயர் கன்கோல் மேலும் கூறுகையில்… ,
“ஆரம்பத்திலிருந்தே, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா நேர்மை, பச்சாதாபம் நிறைந்த மற்றும் கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒரு நம்பமுடியாத படைப்பாற்றல் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதும், இப்போது ZEE5 உடன் கூட்டணி சேர்வதும், நம்பமுடியாத அளவிற்குப் பலனளிப்பதாக உள்ளது. இந்த வெளியீட்டைச் சிறப்புறச் செய்வது என்னவென்றால், வடக்கு முதல் தெற்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார்வையாளர்கள் இப்போது ஜானகியின் பயணத்தை, தங்கள் சொந்த மொழியில் பார்க்க முடியும். இந்தப் படம் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செய்தியைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.”
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பிரவீன் நாராயணன் கூறுகையில்,
“முதல் வரைவிலிருந்து இறுதிப் படப்பிடிப்பு வரை, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா ஒரு அன்பின் உழைப்பாகும், இது ஒரு உயிர் பிழைத்தவரின் குரலைப் பெருக்கி, நமது அமைப்பில் உள்ள விரிசல்களில் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்பட்டுள்ளது. ஒரு அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றிய சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் பலர், நான் எதிர்பார்த்த விதத்தில் கதையை உயிர்ப்பித்தனர். ZEE5 உடனான எங்கள் ஒத்துழைப்பு, தைரியம், நேர்மை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் பிரதிபலிப்பான இந்தக் கதையை, இப்போது பார்வையாளர்களை அவர்களின் விரல் நுனியில் சென்றடையச் செய்கிறது. இது ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு வாய்ப்பாகும். இந்த சுதந்திர தினத்தன்று எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இதைப் பார்த்து, படத்தின் துடிப்பை அதன் தயாரிப்பின் போது நாங்கள் செய்ததைப் போலவே, வலுவாக உணர வேண்டும் என்று நான் ஆவலாக உள்ளேன்.”
நடிகர் சுரேஷ் கோபி கூறுகையில்..,
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகுந்த உணர்ச்சிப்பூர்வமானது, பார்வையாளர்கள் இந்தக் கதையை அன்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. எங்கள் கதைசொல்லலில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இப்போது ZEE5 இல் உலகம் முழுக்க அதை அனுபவிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். டிஜிட்டல் வெளியீடு மூலம் ஜானகியின் குரல், அவரது போராட்டம், அவரது வலி மற்றும் அவரது தைரியம் ஆகியவை இறுதியாக இந்தியா முழுவதும் வீடுகளை எட்டும் . “டேவிட் ஏபெல் டோனோவனின் கதாபாத்திரம் இன்றைய உலகில் நேர்மை மற்றும் தார்மீக சிக்கலை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து பிறந்தது. ஒரு உயிர் பிழைத்தவரின் சார்பாக நீதிக்காக நீதிமன்றத்தில் போராடுவது எனக்குச் சவால் விடுத்த ஒரு பாத்திரம், ஆனால் அது என்னை நிலைநிறுத்தியது. படம் ஒளிபரப்பப்படும்போது பார்வையாளர்கள் அதன் ஆன்மாவுடன் இணைந்திருப்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன், மேலும் அவர்கள் ஜானகியின் குரலையும் கேட்பார்கள் என நம்புகிறேன்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறிகையில்..,
“ஜானகி பாத்திரத்தைச் சித்தரித்தது எனது திரை வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பயணங்களில் ஒன்றாகும். அவர் எண்ணற்ற கேட்கப்படாத குரல்களின் சின்னம், மேலும் அவரது கதையை நேர்மையுடனும் பச்சாதாபத்துடனும் உயிர்ப்பிப்பதில் எனக்கு ஒரு மகத்தான பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். திரையரங்க வெளியீட்டின் போது எங்களுக்குக் கிடைத்த அன்பும் ஆதரவும் மிகப்பெரியதாக இருந்தது, இப்போது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ZEE5 இல் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தைக் காண்பார்கள் என்பதில் நான் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறேன். இது ஆன்மாவுடன் பேசும் ஒரு கதை - வலிமை, மீள்தன்மை மற்றும் உலகம் உங்களை மௌனமாக்க முயற்சிக்கும் போது கூட எழுந்து நிற்பது பற்றிய அவசியத்தைச் சொல்லும் கதை. ஜானகியின் தைரியம் பார்க்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.”
இந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ZEE5 இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத் தவறவிடாதீர்கள்.
எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது.
பல நுணுக்கமான விசயங்களுடன், பார்த்தவுடன் ஆச்சரியப்பட வைக்கும், யோசிக்க வைக்கும், புதுமையான இந்த ஃபர்ஸ்ட் லுக், திரை விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மேலும் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
உண்மை தான் என்றும் நிலையானது, வாய்மையே எப்போதும் வெல்லும், இந்த கருத்தினை மையமாக வைத்து, வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து எண்டர்டெயினருடன், முழுக்க எமோஷனல் டிராமாவாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் & பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
“ஓ காட் பியூட்டிஃபுல்” பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கே இத்தனை உழைத்திருக்கும் படக்குழு படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வைத்துதிருக்கிறன்றனர் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் டீசரையும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத்தின் குரலில் ஃபர்ஸ்ட் சிங்கிளையும், விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!
துல்கர் சல்மான் - ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 - #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. 'நேச்சுரல் ஸ்டார் ' நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் #SLV 10 என்பது- இந்நிறுவனத்தின் புதிய மைல் கல்லை குறிக்கிறது.
இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சுப முகூர்த்த படப்பிடிப்பிற்கு 'நேச்சுரல் ஸ்டார்' நானி கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்தார். இயக்குநர் புச்சிபாபு சனா (Buchi Babu Sana) கேமராவை இயக்கினார். குன்னம் சந்தீப் (Gunnam Sandeep), நானி மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார்.
'தசரா' மற்றும் 'தி பாரடைஸ்' படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவும் (Srikanth Odela) இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வலுவான வெற்றியை வழங்கி வரும் துல்கர் சல்மானை சமாதானப் படுத்துவது எளிதான சாதனை அல்ல .இருப்பினும் இயக்குநர் ரவி நெலகுடிடி துல்கர் சல்மானின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு தனித்துவமான மற்றும் புதிய கதையை கொண்டு வந்துள்ளார்.
இந்தப் படத்தின் தயாரிப்பு தரம் மற்றும் தொழில்நுட்பம் சர்வதேச தரம் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனய் ஓம். கோஸ்வாமி (om Goswamy) ஒளிப்பதிவை கையாள தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா (Avinash Kolla) தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள்' நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.
'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார். ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்று, காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'பார்க்கிங்' எனும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரை கௌரவிக்கும் வகையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் எம். எஸ். பாஸ்கரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!
சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதைக்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் என 3 பிரிவுகளில் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதை ’பார்க்கிங்’ திரைப்படம் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் & பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்த ‘பார்க்கிங்’ படம் அதன் வெளியீட்டிற்கு பின்பு விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. தற்போது 71ஆவது தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்தது. அதில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை (தெலுங்கு படம் ‘பேபி’யுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) மற்றும் சிறந்த துணை நடிகர் விருது எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கும் என மூன்று தேசிய விருதுகளை அள்ளியுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம்.
சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தனர். அன்றாடம் வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் பார்க்கிங் சவாலையும் அதனால் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் இந்தப் படம் நுட்பமாக அணுகியதாக ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் பாராட்டினர். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தயாரிப்பாளர்கள் கே.எஸ். சினிஷ் மற்றும் சுதன் சுந்தரம் தெரிவித்திருப்பதாவது, “சிறந்த தமிழ் படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ பெறுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்கள் ‘பார்க்கிங்’ படக்குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த சரியான அங்கீகாரம். நகர வாழ்க்கை, அங்கு ஏற்படும் பிரச்சினையால் வரும் ஈகோ, அவை எப்படி மனித உணர்வுகளையும் உறவுகளையும் மாற்றுகிறது என உலகளாவிய பார்வையாளர்களுக்கான கதையாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதை திரையில் கொண்டு வந்தார். ராம்குமார் கதை சொல்லும்போதே இது சிறந்த திரைக்கதை மற்றும் இதற்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்பினோம். அதன்படி தற்போது ‘சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது’ கிடைத்திருக்கிறது.
இந்தக் கதையை எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒத்துக்கொண்டு படத்திற்கு முழு ஆதரவு கொடுத்த என்னுடைய பார்ட்னர் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரத்திற்கும் நன்றி. பல லேயர் கொண்ட இந்த கதாபாத்திரங்களை உண்மையான உணர்வோடு திரையில் பிரதிபலித்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கருக்கும் ஸ்பெஷல் நன்றி. ’பார்க்கிங்’ படத்தின் அனைத்து திறமையான நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் எங்களுடன் பயணித்த அனைவருக்குமே இந்த விருது உரியது.
சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களுள் எம்.எஸ். பாஸ்கர் சாரும் ஒருவர். ‘பார்க்கிங்’ படம் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றிருப்பது தயாரிப்பாளர்களாக எங்களுக்கும் மகிழ்ச்சி. ‘பார்க்கிங்’ டீம் சார்பாக தேசிய விருது பெற்ற மற்ற வெற்றியாளர்களுக்கும் குறிப்பாக ‘வாத்தி’ பட பாடலுக்காக ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வென்றிருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றனர்.
ஐடி ஊழியரான ஈஸ்வர், கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் புது வீட்டிற்கு குடி போகிறார். அவர்கள் குடிபோகும் வீட்டிற்கு கீழ் இருக்கும் இளம்பரிதியுடன் வண்டி பார்க்கிங் தொடர்பாக மோதல் உருவாகிறது. மோதல் வளர்ந்து ஒருக்கட்டத்தில் வெடிக்க இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ‘பார்க்கிங்’ திரைப்படம். நகர வாழ்க்கை, மனித மனங்களின் உணர்வுகள், ஈகோ, பாசம் என அனைத்தையும் வலுவான திரைக்கதை மூலம் நுட்பமாக காட்டியிருந்தது ’பார்க்கிங்’ திரைப்படம்.
டிசம்பர் 1, 2023 அன்று வெளியான இந்தப் படம் பின்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆனது.
இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், இலங்கையின் பிரமாண்டமான Cinnamon Life – City of Dreams இடத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தனக்கே உரிய சீரான அழகையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படக் கலைஞர் கேசரா எடுத்த இந்த போட்டோக்கள், 'கருப்பு வெள்ளை' மற்றும் 'பேஸ்டல்' நிறங்களில் வரலட்சுமியின் இயல்பான பிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பதிவு செய்கின்றன.
மெல்லிய நிறங்களில் கட்டமைக்கப்பட்ட ஆடைகளில் தோன்றும் அவர், சினிமாவின் ஆழத்தையும், எக்காலத்திலும் மரையாத ஃபேஷனையும் கலந்து சுமந்திருக்கிறார். “கம்பீரமாக இரு , ஒவ்வொரு புகைப்படமும் ” எனும் அவரது விளக்கம், வெறும் வார்த்தையல்ல – திரைத்துறையிலும், வாழ்க்கையிலும் அவர் கட்டியெடுத்த தனி அடையாளத்தின் பிரதிபலிப்பாகும்.
‘The Verdict’ போன்ற படங்களில் அவரின் அடக்கமும் ஆழமும் கலந்த நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு, தன்னிச்சையான தேர்வுகளால் இன்று வரலட்சுமி, தனது தலைமுறையின் மிகவும் தைரியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
தற்போது பல்வேறு பருவங்களில் உள்ள திரைப்படங்கள் மூலம், இன்னும் பல உயரங்களை அடையத் தயாராக இருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கதைகளாக இருந்தாலும், உள்ளடக்கம் சார்ந்த படைப்பாக இருந்தாலும் – அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் இருக்கும்.
இந்த போட்டோஷூட் வெறும் ஃபேஷனுக்காக மட்டுமல்ல , இது தனது திறமையையும், தன்மையையும் முழுமையாக புரிந்து கொண்ட ஒரு பெண்ணின் ஆளுமையை பதிவு செய்திருக்கும் அழகிய படம்.
'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!
சென்னை, 1 ஆகஸ்ட் 2025: எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷாவின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'சுழல்: தி வோர்டெக்ஸ்' மற்றும் 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்ததற்காக கதிரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது மலையாளத்திலும் 'மீஷா' படம் மூலம் அறிமுகமாகிறார். இது தமிழ் ரசிகர்களுக்காக தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.
டிரெய்லரின் ஆரம்ப காட்சிகளில் கதிரின் நடிப்பு பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், தமிழ் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன.
யூனிகார்ன் மூவீஸ் பேனரின் கீழ் சஜீர் கஃபூர் தயாரித்த 'மீஷா' திரைப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ (குட் பேட் அக்லி, பீஸ்ட்), ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் முரளி, சுதி கோபா, உன்னி லாலு மற்றும் ஹஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அடர்ந்த காட்டின் நடுங்கும் அமைதியில் அமைக்கப்பட்ட 'மீஷா' திரைப்படம், நண்பர்கள் குழுவைச் சுற்றி நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகளைப் பின்தொடர்கிறது. ஆபத்து, சிலிர்ப்பு மற்றும் உளவியல் சவால்கள் ஆகியவற்றை டிரெய்லர் உணர்த்துகிறது.
சமீபத்தில் வெளியான தமிழ் டிரெய்லர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. தமிழில் டப் செய்துள்ளது ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமானதாக மாற்றியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா