சற்று முன்
சினிமா செய்திகள்
சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!
Updated on : 05 December 2025
இன்னும் சில தினங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் கிறிஸ்தவர்கள், அவருடைய பிறந்தநாளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து, சென்னையில் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாட்டை நடத்த இருக்கிறார்கள்.
வரும் டிசம்பர் 29 ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9 மணி முதல், மாலை 3.30 மணி வரை, சென்னை, செயின்ட் தாமஸ் மலையில் உள்ள "புனித பசிலிக்கா" வில் (St.Thomas Mount Hill Shrine Basilica, Chennai) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பிரிவு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த தேவ ஊழியர்கள், போதகர்கள், ஆயர்கள், பேராயர்கள் பங்கேற்க உள்ளார்கள். தமிழக வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’தாபோர் (TABOR) உச்சி மாநாடு 2025’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மேலும், மாநாட்டின் ஆலோசனை கூட்டம் தருமபுரி பேராயத்தின் ஆயரும், ’தாபோர் (TABOR) உச்சி மாநாடு 2025’ மாநாட்டின் தமிழக பணிக்குழுவின் தலைவருமான 'பிஷப் லாரன்ஸ் பயஸ்' தலைமையில் நடைபெற்றது.
மேலும், தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் செயலாளர் பாதிரியார் அகஸ்டின் பிரேம்ரான், அங்கிளிக்கன் தேவலாயத்தின் ஆயர் டாக்டர்.சந்திரசேகர், டிஎல்ஸ் ஆயரின் பிரதிநிதியாக பாதிரியார் ஜேக்கப் சுந்தர், ஏஜி சபை மற்றும் ஆயர் மோகன் லாசரின் பிரதிநிதியாக டாக்டர். கல்யாணகுமார், பெந்தகோஸ்தே திருச்சபையின் பிரதிநிதியாக ஆயர் எடிசன், ஒய்.எம்.சி.ஏ ஆனந்த், இந்தியன் நேஷ்னல் அப்போஸ்தலிக் டயஸிஸ் சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிஷப் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள்.
இவர்களோடு, ஏசு அழைக்கிறார் சபையின் சார்பில் பால் தினகரன் மற்றும் அவருடன் பயணிக்கும் சகோதர, சகோதரிகளும், பிற திருச்சபைகளை சேர்ந்தவர்களும் வரும் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற உள்ள ’தாபோர் (TABOR) உச்சி மாநாடு 2025’-ல் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை கூட்டம் முடிவடைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ‘தாபோர் உச்சி மாநாடு 2025’ பணிக்குழு தலைவர் பிஷப் லாரன்ஸ் பயஸ், “அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து ஆண்டவரின் சிறப்பு அபிஷேகத்தையும், வல்லமையையும், பரிசுத்த ஆவியையும் பெறுவதற்கான மாபெரும் கூட்டம் நவம்பர் 29 ஆம் தேதி, செயின்ட் தாமஸ் மலை மீது நடைபெற உள்ளது.
ஒரே எண்ணத்தை கொண்ட அனைவரும் ஒன்று கூடி, நல்ல எண்ணத்தை பெற்று தருவதோடு, தேசத்திற்கு ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்ய வேண்டும், என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். இந்த கூட்டம் தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தற்போது சுமார் 15-க்கும் மேற்பட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த திருச்சபையம் இதில் பங்கேற்க உள்ளார்கள். கூட்டம் நடக்கும் போது இன்னும் அதிகமானவர்களை எதிர்பார்க்கிறோம்.
இதற்கு முன் மதமாற்ற தடை சட்டம் போடப்பட்ட போது, அனைத்து திருச்சபைகளும் ஒன்றிணைந்தோம். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் ஒன்றிணைகிறோம். மேலும், 2032 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து பிறந்து, உயிர்தெழுந்து 2000 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அந்த விழாவுக்கான முன்னோட்டமாகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.” என்றார்.
தற்போது தமிழகத்தில் மதம் ரீதியான சர்ச்சைகள் அதிகரித்து வருவது தொடர்பான உங்களது கருத்து ? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிஷப் லாரன்ஸ் பயஸ், “அது பற்றி கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை, எங்களை பொறுத்தவரை ஜெபம்...ஜெபம்...தான். அனைவரும் ஒன்று என்று நினைக்கிறோம். பிற மதங்களை பற்றி வெறுப்பாக பேசப்போவதில்லை, அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், அனைத்து மதங்களுடனும் நல்லுறவுடன் இருக்க வேண்டும். எங்கள் திருச்சபைகளை ஒன்றிணைக்க வேண்டும், என்பது தான் எங்கள் எண்ணம்.” என்றார்.

சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா













