சற்று முன்
சினிமா செய்திகள்
இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது
Updated on : 13 January 2026
கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநரும் எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூலின் வெளியீடு மற்றும் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் பதிப்பாளரான நக்கீரன் கோபால், மக்களவை உறுப்பினரும் இலக்கியவாதியுமான தமிழச்சி தங்கபாண்டியன், ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வாழ்த்தினர்.
ஜூனியர் விகடன் வார இதழில் 50 வாரங்களுக்கு மேலாக தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தக் கதை, தற்போது ‘சங்காரம்’ என்ற நாவலாக உருவெடுத்துள்ளது. வன்முறை, அதிகார அரசியல், காதல், பேரன்பு, மனித அகப் போராட்டங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் குறித்து விழாவில் பேசியவர்கள், சமகால சமூக யதார்த்தங்களை ஆழமாக பேசும் படைப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இலக்கியத்தையும் சினிமா மொழியையும் இணைக்கும் தன்மை கொண்ட ‘சங்காரம்’, வாசகர்களிடையே மட்டுமல்லாமல் திரைப்பட உலகிலும் கவனம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.
கவிஞர் வெயில் பேசுகையில்,
'' ஜூனியர் விகடன் இதழில் 'ஒரு கொலை 6 ஆயிரம் ரூபாய்' என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை படித்த சரவணன் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் ... அவருடைய மனதில் எப்போதும் உறங்காத ஒரு பத்திரிக்கையாளராக என்னை அழைத்து பேசினார். அந்த சந்திப்பில் நான் எழுதிய கட்டுரையை கடந்தும் பல விசயங்களை குறிப்பிட்டார். அப்போது அவர் ஒரு சம்பவத்தை சொன்னார். அந்த சம்பவத்தை... அவர் சொன்ன விதத்தை... பார்த்துவிட்டு, ஜுவிக்கு ஒரு தொடர் எழுதுங்கள் என்று அன்பாக கட்டளையிட்டேன். அப்போது அவர், 'நான் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லையே... எப்படி தொடரை எழுத முடியும்' என்றார். ஆனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி. அவருடைய கட்டுரையை நான் வாசித்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு பத்திரிக்கையாளருடைய கட்டுரையில் தகவல்களும், தரவுகளும் கொட்டிக் கிடக்கும். ஆனால் சரவணனுடைய கட்டுரையில் உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும். களத்திற்கு சென்று மக்களை சந்தித்து தகவல் திரட்டி அதனுடைய சூடு குறையும் முன்பாக வெப்பத்துடன் கட்டுரையை எழுதுவார். அவருடைய எழுத்தில் ஒரு எழுத்தாளரின் இலக்கியத்துவம் மிகுந்த நடை இருக்கிறது. அதற்குத் தேவையான உணர்வும் இருப்பதால் அவரை நான் எழுதுங்கள் என்று சொன்னேன்.
ஒரு கதையை எழுதுவதற்கு இலக்கிய பயிற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கதையை சுவைபட சொல்ல இயலாது.
சரவணனிடம் பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கிறது. இதன் காரணமாக கூட அவருடைய எழுத்து மேம்பட்டிருக்கலாம்.
இந்த நூலுக்கு பெயர் சூட்டியது தனிக்கதை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை சொல்ல.. வரை கலை ஓவியரான பாண்டியன் என்பவர் சம்ஹாரம் என சொல்ல... அதனை தமிழில் 'சங்காரம்' என பாரதி தாசன் குறிப்பிட்டதை.. இதன் தலைப்பாக தேர்வு செய்தோம். சங்காரம் என்ற ஒரு சொல் ... அவருடைய எழுத்தில் மிகப்பெரிய வீச்சை உருவாக்கியது.
ஒவ்வொரு தொடருக்கான கட்டுரையை அவர் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் எழுதி கொடுத்து விடுவார், நிறைய அனுபவங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு இருப்பார்களால்தான் இப்படி சரளமாக குறுகிய நேரத்தில் தரமாக எழுத இயலும்.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விசயத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்.. குற்றம் தான் அனைத்திற்கும் அடிப்படை. குற்றத்தை பற்றிய உளவியல் ரீதியிலான கவித்துவமான இலக்கியத் தரமான நூலாக நான் எப்போதும் பைபிளை தான் பார்ப்பேன்.
அதில் 'மனிதன் எப்போது தன்னை மறைக்கத்தொடங்கினானோ... அப்போதே குற்றம் பிறக்கிறது' என்றிருக்கும்.
பாலியல் குற்றமும், அதிகாரத்தை கைப்பற்றும் குணமும் தான் மனிதர்களின் பிரதான இரண்டு குற்றங்கள் என நான் பார்க்கிறேன். இதுதான் இந்த நாவல் முழுவதும் பரவி கிடக்கிறது.
டெல்டா மண்டலத்தில் செயல்படும் இரண்டு தாதாக்கள் ....அந்த இரண்டு தாதாக்களுடைய இரண்டு காதல்கள்--- அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் --- விசுவாசிகள்... உறவினர்கள்... இந்த இரண்டு தாதாக்களையும் பயன்படுத்திக் கொள்கிற ஒரு அரசியல்வாதி.... இந்த இரண்டு தாதாக்களையும் கொன்று விட வேண்டும் என நினைத்து செயல்படும் ஒரு காவல்துறை அதிகாரி... இதற்குள் நிகழும் சம்பவங்கள் தான் இந்த நாவலின் கதை.
இரண்டு தாதாக்களின் வன்முறை உலகத்தை எழுதியிருந்தாலும்.. இதில் மனித உணர்வுகளுக்கும் , அவனுடைய அக போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நிறைய உணர்ச்சிகளை பற்றி பேசி இருக்கிறார். இதில் சமூகத்தை உலுக்கி கொண்டிருக்கும் சாதிய பிரச்சினையை பற்றியும் பேசி இருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுடைய எழுச்சி என்பது எவ்வளவு நுட்பமானதாக இருக்க வேண்டும் என்பதையும் விவரித்திருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய விசயமும் கூட.
வன்முறை அதிகம் பேசப்படும் இந்த நாவலின் காமமும் , ரொமான்ஸும் பேசப்பட்டு இருக்கும். காமம், வன்மம் எனும் இரு பிரிவுகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கதை இது.
ஆண்- பெண் என இரு பாலின அரசியலை சரியாக சம நிகராக புரிந்து கொண்டிருக்கும் ஒருவரால் தான் காமத்தை கண்ணியமாக எழுத இயலும். அந்த வகையில் இரா. சரவணன் மாஸ்டர் என்று சொல்லலாம்.
இந்த நாவலில் தன் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றியும் விவரித்து இருக்கிறார். இந்த சங்காரம் நாவல் உலகத்தில் உள்ள உறவுகளைப் பற்றி பேசக்கூடிய நாவலாக இருக்கிறது.
இந்த புத்தகத்தை வாசித்தவர்களுக்கு வாசித்த பின் மரிக்கொழுந்து வாசம் தான் வீசும். அந்த அளவிற்கு இந்த நாவலில் மரிக்கொழுந்து எனும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
அத்துடன் இந்த கதாபாத்திரத்தில் சக மனிதர்கள் மீது ஒவ்வொருவரும் காரணமற்ற அன்பை செலுத்துவார்கள் என்ற பேருண்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குற்றம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எல்லையை மீறுவது. இதனையே அதிகாரத்தில் இருப்பவர்கள் மீறும் போது எமக்குள் எழும் வெடிப்புதான் சங்காரம். இந்த சங்காரம் தொடரும். இது முடிவுறாத மானுட கதையாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்றார்.
திரு. கலைச்செல்வன் பேசுகையில்,
'' பேசுவது எப்படி ஒரு கலையோ அதேபோல் பேசாமல் இருப்பதும் ஒரு கலை. அந்தப் பட்டியலில் உள்ள நான் சரவணன் கேட்டுக் கொண்டதற்காக இங்கு அவரை வாழ்த்த வருகை தந்துள்ளேன்.
சரவணன்- இந்த மனிதர்களின் இருளடைந்த பகுதிக்குள் சரளமாக உலா வருகிற ஒரு நபர். அவருடைய திரைப்படங்களில் சமூகப் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையை குடும்ப உறவுகளின் சென்டிமென்ட் சார்ந்த பிரச்சனையை பேசி இருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஒரு எழுத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருக்குள் இருக்கும் எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்'' என்றார்
திரு. முருகன் பேசுகையில்,
'' சரவணன் கட்டுரை எழுதும் போதே அது ஒரு இலக்கியமாக இருக்கும். அதனால் அவர் இப்படி ஒரு நாவல் எழுதி இருப்பது வியப்பல்ல. ஒரு தொடரை நூறு அத்தியாயங்களுக்கு மேல் எழுதி ஏராளமான வாசகர்களை படிக்க வைப்பது என்பது எளிதான விசயம் அல்ல. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கதை சொல்லும் போது அது சுவைபட இருக்கும்.
சரவணன் இந்த சிறிய வயதிற்குள் ஏராளமான மனிதர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை பொறுமையுடன் கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்த கதை இவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆக வந்திருக்கிறது.
இந்தக் கதையில் சூரியையும், மார்ட்டினையும் அவர் நேர் எதிராக நிறுத்துவது நன்றாக இருக்கும்.
இந்தக் கதை வன்முறை நிரந்த கதை என்பதை மேலோட்டமாக பார்த்தால் சொல்லலாம். அன்பு எப்படி எல்லா மண்ணுக்கும் பொருத்தமானதோ... அதேபோல் வன்முறையும் எல்லா மண்ணிற்கும் பொதுவானது தான்.
இந்தக் கதை சினிமாவாகவோ இணைய தொடராகவோ உருவானால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடும். இது போன்ற நூற்றுக்கணக்கான கதை சரவணன் இடத்தில் இருக்கிறது. எழுதுவதற்கு எங்களிடம் இடம் இருக்கிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,
'' சரவணனை பத்திரிக்கையாளராக தெரியும். எழுத்தாளராக தெரியும். இயக்குநராகவும் தெரியும். அவர் எழுதிய இந்த நாவலை படிக்கும் போது தான் அவருக்குள் இவ்வளவு பெரிய வன்முறையும், காதலும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். இந்த நாவலில் ஆக்சன் சீனும் அதிகம் ரொமான்ஸ் சீனும் அதிகம். இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் ஒரு ஆக்ஷன் படத்தை பார்ப்பது போல் இருந்தது. இந்த புத்தகத்தை படிக்கும் போது சினிமாவிற்கான நிறைய காட்சிகளை எழுதி இருக்கிறார் என்பதை பார்த்தேன். சினிமாவாக உருவாகும் போது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை. நாவலில் இருக்கும் சூரி மற்றும் மார்ட்டின் என இரண்டு கதாபாத்திரத்தை வைத்து சினிமாவை உருவாக்கலாம். இதை திரைப்படமாக எடுத்தால் எங்களுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்பதை இந்த தருணத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
திருமதி சத்யா கரிகாலன் பேசுகையில்,
''புத்தகங்கள் நமக்கு நிரந்தரமான தோழர்கள் என புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும். மனித சமுதாயத்திற்கு நிரந்தரமான விடுதலையை புத்தகம் மூலம் அடைய முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த வகையில் விடுதலை சிந்தனை கொண்ட எழுத்தாளரும், இயக்குநரும் , சிறந்த நண்பருமான சரவணனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரவணிடமிருந்து இது போன்ற படைப்புகள் வருவது எனக்கு மகிழ்ச்சியேத் தவிர ஆச்சரியம் இல்லை. மனிதர்களை காதலிக்க கூடிய ஒரு கலைஞனுக்கு அதே மனிதர்கள் சில நேரங்களில் பொருளாதாரத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் சில சல்லித்தனமான செயல்களை செய்யும் பொழுது அதை நுட்பமாக உணர்ந்த ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த புத்தகம்.
இவர் மனிதர்களிடத்தில் மட்டும் பற்றும் பாசமும் அன்பும் கொண்டவர் இல்லை. இயற்கை மீதும் பேரன்பும் காதலும் கொண்டவர் என்பது இந்த கதையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்.
'எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு பூ பூக்கத் தான் செய்யும்' என பிரபஞ்சன் குறிப்பிட்டதை போல்... ' தலையை காவு வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் நிலையில் ..ஒருவன் காதலித்துக்கொண்டிருக்கிறான் என்பதே சமகால கவித்துவமாக தான் நான் பார்க்கிறேன்.
அத்துடன் இந்த நாவலில் காமத்தில் புரிதலின் அவசியத்தை குறித்து நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.
இந்தக் கதை அதிகார வேட்கையின் உச்சகட்டத்தை விவரிக்கும் வகையில் தொடங்கினாலும்.. படிப்படியாக பெண் முடிவெடுக்கும் திறனை நோக்கி நகர்ந்து வருவதால் ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது சரவணன் மீதான மரியாதை இன்னும் அதிகமாகிறது'' என்றார்.
நக்கீரன் கோபால் பேசுகையில்,
'' இந்த விழாவை தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் நடந்திருந்தால்... இன்னும் சில ஆயிரம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பார்கள்.
இந்த தொடரைப் பற்றி என்னுடன் பணியாற்றிய லே அவுட் ஆர்டிஸ்ட்டான பாண்டியன்.. 'கதை முழுவதும் ரத்தம் தான்' என சொல்வார். டெல்டா என்ற உடன் நான் சரவணனிடம் மணல்மேடு சங்கர் என்பவரை பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறதா..? என கேட்டேன். அவர் ஆமாம் என தலையாட்டினார்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் முருகனுடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவமும் ஒரு கதையாக எழுதலாம்.'' என்றார்.
நடிகர் சூரி பேசுகையில்,
'' நேற்று முதல் நான் பதட்டத்தின் உச்சத்தில் தான் இருக்கிறேன். சரவணன் போன் செய்து நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என சொன்னார். எப்போது? எனக் கேட்டேன். 'நாளை' என்றார். யார் யாரெல்லாம் வருகிறார்கள்? என கேட்டேன். இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வருகிறார்கள் என சொன்னார். . நான் சிறிது நேரம் மௌனம் காத்து விட்டு என்னை எதற்காக அழைக்கிறீர்கள்? எனக் கேட்டேன். நீங்கள் வந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றார். புத்தகத்தை அனுப்பி இருக்கிறேன் படித்துவிட்டு விழாவிற்கு வாருங்கள் என சொன்னார். அப்போது அவரிடம் புத்தகத்தை படிக்க வா? அல்லது விழாவிற்கு வரவா? இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்டேன். விழாவிற்கு வாருங்கள் என சொன்னார்.
விழாவிற்காக கிளம்பும்போது என் மனைவி இரண்டு பக்கத்தைையாவது படித்துவிட்டு செல்லுங்கள் என சொன்னார். ஜோசியக்காரன் போல் புத்தகத்தில் ஒரு பக்கத்தை திடீரென்று எடுத்தேன். அது 43 வது பகுதி. மார்ட்டின்- காயத்ரி பற்றி எழுதி இருந்ததை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் இடையேயான அளவற்ற காதலை.. கட்டுக்கடதங்காத காதலை.. அடாவடித்தனமான அந்த அன்பை ஒளிந்து இருந்து ஜன்னல் வழியாக பார்ப்பது போல் ஆகிவிட்டது. அவரது எழுத்து நடையை வாசிக்கும் போது உருவம் தெரிந்தது. அதுதான் அவருடைய சிறப்பு.
அண்ணன் சமுத்திரக்கனி படிப்பதற்காக இரண்டு புத்தகங்களை கொடுத்திருக்கிறார். அவரை சந்திப்பதை இப்போது தவிர்த்து வருகிறேன். ஏனென்றால் சந்திக்கும்போது புத்தகத்தை படித்து விட்டாயா? என கேட்டால்... என்ன பதில் சொல்வது?
என்னை பொருத்தவரை புத்தகத்தை நான் பொழுதுபோக்காக நினைத்து விட்டேன். நான் ஏன் அடிக்கடி புத்தகத்தை பார்த்தேன் என்றால் இந்த புத்தகத்தின் டைட்டிலை மறந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்தேன். சங்காரம் என்பதை சிங்காரம் என்று பேசிவிட்டால் தப்பாக்கி போய்விடும் அல்லவா..!
புத்தகம் சாதாரண விசயம் அல்ல. பல நாடுகளில் பல சரித்திரத்தை உருவாக்கி இருப்பது புத்தகங்கள் தான். எழுத்துகள் தான் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. சமூகத்திற்கு தேவையான பல நல்ல விசயங்களை புத்தகங்கள்தான் கொடுத்திருக்கிறது. எத்தனை ஆண்டு காலமானாலும் புத்தகங்கள் அழிவதில்லை.
இப்போதுதான் புத்தகத்தின் அருமையை தெரிந்து கொண்டிருக்கிறேன். :மாமன்' படத்திற்கு கதை எழுதினேன். தற்போது என் தந்தையை பற்றிய சுயசரிதையை எழுதி வருகிறேன்.
இரா. சரவணன் இயக்குநர் மட்டுமல்ல அவருடைய சமூகத்திற்கான பங்களிப்பு இன்றும் தொ
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா














