சற்று முன்
சினிமா செய்திகள்
300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி
Updated on : 20 January 2026
உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ள ‘மான சங்கர வர பிரசாத் (MSG)’ திரைப்படம், தெலுங்கு திரையுலகில் புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே இந்த இலக்கை எட்டிய முதல் தெலுங்குத் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
வட அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லைக் கடந்து, மெகா ஸ்டார் சிரஞ்சீவி – இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய வசூல் சாதனை படமாக MSG உருவெடுத்துள்ளது. வெளியான எட்டாவது நாளிலும் வலுவான வசூலை பதிவு செய்த இப்படம், பெரும் முன்பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வேகத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள இந்த திரைப்படம், தொடர்ந்து புதிய சாதனைகளை நோக்கி பயணித்து வருகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின்னணியில், வசூல் கணக்குகளை விட ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினரின் உழைப்பையே முக்கியமாக பேசும் விதமாக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது இதயம் கனிந்த – உணர்ச்சி பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
'மெகா ஸ்டார் 'சிரஞ்சீவியின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது...
''நமது எம் எஸ் ஜி யின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை பார்க்கும் போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளை பொருள் என்று கூறி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள்.
இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், அன்பான விநியோகஸ்தர்களுக்கும், பல தசாப்தங்களாக எனக்கு துணையாக நிற்கும் எனது அன்பான மெகா ரசிகர்களுக்கும் சொந்தமானது. திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும். போகும். ஆனால் நீங்கள் என் மீது பொழியும் அன்பு ...என்றென்றும் நிலைத்திருக்கும்.
இந்த பிளாக் பஸ்டர் வெற்றி நமது அனில் ரவி புடி - தயாரிப்பாளர்களான சாஹூ மற்றும் சுஷ்மிதா ஆகியோருடனான முழு படக் குழுவினரின் கடின உழைப்பிற்கும், என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்''.
இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கூட்டு உழைப்பையும், ரசிகர் – நட்சத்திர உறவின் ஆழத்தையும் சிரஞ்சீவியின் இந்த வார்த்தைகள் மீண்டும் நினைவூட்டுகின்றன.
சாதனைகள் மாறக்கூடும், ஆனால் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு – எப்போதும் நித்யமானதே.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா














