சற்று முன்
சினிமா செய்திகள்
‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!
Updated on : 21 January 2026
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், பிரமாண்டமான வரலாற்று கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘திரௌபதி 2’. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அதன் தீவிரமான கதையம்சம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு, தங்கள் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் விதமான முக்கியமான கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் நடித்துள்ள திரௌபதி, ஆயிஷா, கோதை என்ற கதாபாத்திரங்கள், பெண்களின் வலிமை, உணர்ச்சி, அறிவு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், இந்த அனுபவத்தை தனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். ஆழமான உணர்ச்சிகளும், தாங்கும் உறுதியும், அதே சமயம் நளினமும் கொண்ட கதாபாத்திரமாக திரௌபதி இருப்பதாகவும், அந்த உணர்வுகளை திரையில் வெளிப்படுத்துவது ஒரு பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஆயிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தேவியானி ஷர்மா, இந்த படம் தன் வாழ்க்கையில் பெருமையான தொடக்கம் எனக் கூறியுள்ளார். அறிவும், அமைதியும், மன உறுதியும் கொண்ட ஆயிஷா கதாபாத்திரத்தை இயக்குநர் மோகன் ஜி அழகாக திரையில் வடிவமைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களின் மனதை தொடும் இசையும், ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தர் அவர்களின் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோதை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவி வைத்யன், உறுதியான உண்மையான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக கோதை இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த வீரத்தையும் உறுதியையும் தன் நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த ஆக்ஷன் சந்தோஷ் அவர்களுக்கும், படப்பிடிப்பில் வழிகாட்டியாக இருந்த ரிச்சர்ட் ரிஷி அவர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வலுவான பெண்கதாபாத்திரங்கள், வரலாற்று பின்னணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான கதையம்சம் ஆகியவற்றின் சங்கமமாக ‘திரௌபதி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு தாக்கம் கொண்ட சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா














