சற்று முன்
சினிமா செய்திகள்
வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!
Updated on : 15 April 2026
அதிதி மூவிஸ் தயாரிப்பில், டாக்டர் R. நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி வரும் “காலனி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர்.
“அறம்” திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்ற கோபி நயினார், தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு வலுவான படைப்பாக “காலனி”யை உருவாக்கியுள்ளார். “தாய்கிழவி” படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ராதிகா, இப்படத்தில் மீண்டும் மையக் கதாபாத்திரத்தில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
“காலனி” திரைப்படம், தனது மகனின் மரணத்திற்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சிப் பயணத்தை மையமாகக் கொண்டது. வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கோபமும் வேதனையும் கலந்த கண்களுடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பது, சமூக பிரச்சினைகளை தீவிரமாக பதிவு செய்யும் படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படத்தில் ராதிகாவுடன் அறிமுக நடிகர் லியோ அவரது மகனாக நடித்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே.கே., ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிறு இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆர். வேல்ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.
தமிழகத்தின் திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள “காலனி” தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானவுடன் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகள்
“லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,
இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.
இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா? என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள். படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.
இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,
பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.
அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.
பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.
முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,
இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.
இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.
இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.
இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise-ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். ஒரு swimming pool sequence-ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.
இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.
கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.
ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.
இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.
இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.
எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.
எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.
சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்
CinemaCon 2026 விழா லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் யாஷ் தனது புதிய படம் “Toxic: A Fairy Tale for Grownups” குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய மேடையான CinemaCon-ல் இப்படம் குறித்து வெளியான இந்த தகவல், சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்திய சினிமா புதிய உயரங்களை எட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், “Toxic” திரைப்படம் அந்த பயணத்தில் முக்கிய இடம் பெறும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது,
“எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால் இதில் ஆழமான சைக்கலாஜிகல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு டார்க் கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”
இயக்குநர் கீது மோகன் தாஸ் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில் :
“அது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. எங்கள் இயக்குநர் கீது மோகன் தாஸ் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார். நான் இதை மிகவும் ரசித்தேன். இதன் காட்சி ரசிகர்களுக்கு ஒருவிருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”
இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது.., இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது — சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும் கலாச்சாரமும் மாறிவிடும் என்று அவர் கூறினார். டப்பிங் மற்றும் பான்-இந்தியா கதைகள் மூலம் இப்போது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டாக்ஸிக் Toxic இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகும் — இந்திய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டாலும், உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில், அதே சமயம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் படம் இது,” என்று அவர் முடித்தார்.
கீது மோகன் தாஸ் இயக்கத்தில், கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions ) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations) தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் உலகம் முழுவதும் 2026 ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!
லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து, இசையமைப்பாளராகவும் இணைகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம் தற்போது ஆரம்பகட்ட பணிகளில் வேகமாக முன்னேறி வருகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் வெற்றி கண்ட இயக்குநர் ஹரிஹரன் ராம் இப்படத்தை இயக்கவுள்ளார்.
ஹரிஹரன் ராம் கூறிய கதையை கேட்டவுடன், அதில் கவரப்பட்ட ஜி.வி. பிரகாஷ், நாயகனாக நடிப்பதுடன், இசையமைத்து தயாரிப்பாளராகவும் இணைவதாக முடிவு செய்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து மாறுபட்ட முறையில், முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
‘ஜோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மாளவிகா மனோஜ் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ‘கர்ணன்’, ‘வாழை’ போன்ற படங்களில் தனது ஒளிப்பதிவால் பாராட்டைப் பெற்ற தேனி ஈஸ்வர் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!
நவீன கால பிராண்ட் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் வகையில், Deconstruct நிறுவனம், இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் உடன் தனது அதிகாரப்பூர்வ கூட்டணியை அறிவித்துள்ளது.
சாதாரணமாக நடைபெறும் விளம்பர அறிமுக நிகழ்வுகளைப் போல அல்லாமல், இந்த கூட்டணி இணையத்தின் வாயிலாக இயல்பாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் மற்றும் அவரது ஸ்டைலிஸ்ட் இடம்பெற்ற ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் இந்த இணைப்பு தொடங்கியது. அந்த வீடியோவில் பின்னணியில் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த டீகன்ஸ்ட்ரக்ட் சன்ஸ்கிரீனை கூர்மையான பார்வை கொண்ட ரசிகர்கள் கவனித்தது இந்த கூட்டணியின் ஆரம்பமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இயல்பான விவாதங்கள் கிளம்பின. ரசிகர்கள் அந்த தயாரிப்பை அடையாளம் கண்டு பகிர்ந்ததன் மூலம், ஒரு சாதாரண தருணம் மிகப் பெரிய கலாச்சார பேசுபொருளாக மாறியது. திட்டமிடப்படாத இந்த நிகழ்வு, டிஜிட்டல் உலகில் இயல்பான ஈர்ப்பை உருவாக்கிய விதமாக பார்க்கப்படுகிறது.
இந்த உண்மையான மற்றும் இயல்பான தொடர்பின் தாக்கத்தை உணர்ந்த டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம், அந்த தருணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, தற்போது அதை ஒரு அதிகாரப்பூர்வ கூட்டணியாக மாற்றியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் தோன்றிய இந்த சம்பவம், திட்டமிடப்பட்ட விளம்பரங்களை விட நம்பகத்தன்மை மிக்க புதிய மார்க்கெட்டிங் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில், அனிருத் – டீகன்ஸ்ட்ரக்ட் கூட்டணி, சமூக ஊடகங்களின் சக்தியையும், இயல்பான ரசிகர் ஈடுபாட்டையும் அடிப்படையாகக் கொண்டு உருவான புதிய தலைமுறை பிராண்ட் இணைப்பாக கவனம் ஈர்த்து வருகிறது.
இது தொடர்பாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாலினி அடபு ரெட்டி பேசுகையில்,
''டீகான்ஸ்ட்ரக்ட்’ நிறுவனத்தில் உண்மையான தருணங்களே மிகவும் சக்தி வாய்ந்த கதைகளை உருவாக்குகின்றன என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். குறிப்பிட்ட அந்த தருணத்துடன் மக்கள் எவ்வளவு இயல்பாக ஒன்றி போனார்கள் என்பதை நாங்கள் கண்டபோது... அதை முன்னோக்கி எடுத்துச் செல்வது மிகவும் இயல்பானதாக தோன்றியது. அனிருத் - நம்பகத் தன்மை மற்றும் எளிதில் தொடர்புபாபடுத்தக்கூடிய விசயம் ஆகியவற்றின் உருவமாக திகழ்கிறார். இந்த மதிப்புகள் அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்திற்கு ஆதரவளித்து வரும் மற்றும் அதில் புகழ்பெற்ற எங்கள் பிராண்டுடன் கச்சிதமாக பொருந்துகின்றன,'' என்றார்.
தனது சாதனை படைத்த இசை மற்றும் இளைஞர்களுடன் பரந்த தொடர்புக்காக அறியப்படும் அனிருத் ரவிச்சந்தரின் இயல்பான செல்வாக்கும், அவருடைய தனிப்பட்ட பாணியும்... நாடு முழுதும் உள்ள பார்வையாளர்களிடம் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எங்களின் இந்த கூட்டணி...பாரம்பரிய பிரபலங்களின் விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து கலாச்சாரத்திற்கு முதலிடம் கொடுக்கும் மற்றும் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மாறுவதை குறிக்கிறது. இதில் நுகர்வோர் புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்ல பிராண்டுகள் அதற்கு வழிகாட்டியாய் திகழ்ந்து, பதில் அளிக்கின்றன.
இந்த கூட்டணியின் மூலம் டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் தனது சமூகத்தின் கருத்துக்களை கேட்டு.. அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு அவர்களுடன் இணைந்து வளரும் ஒரு பிராண்டாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. மேலும் இன்றைய சூழலில் நம்பகத் தன்மை தான் மிக வலிமையான நாணயம் என்பதையும் இது நிரூபிக்கிறது.
திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!
KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய தயாரிப்பாளர்களாக உயர்ந்து வருகின்றனர். தரமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் வணிக அம்சங்களைச் சிறப்பாக இணைக்கும் இவர்களின் தேர்வு, அவர்களை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.
அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவான இப்படம், சமூக கருத்துகளையும் அரசியல் பகடியையும் சிரிப்பூட்டும் விதமாக இணைத்து மக்களிடம் எளிதாக சென்றடைந்துள்ளது.
படம் வெளியானதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் உமாபதி ராமையா, நட்டி நட்ராஜ், ஸ்ரித்தா ராவ், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படம் பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது ரசிகர்கள் அளித்த வரவேற்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மேளதாளம், பேண்டு வாத்தியம், சரவெடி, ஊர்வலம் என உற்சாகமாக கொண்டாடப்பட்ட இந்த விழா, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மக்கள் தொடர்பையும் அவருக்கு கிடைக்கும் ஆதரவையும் வெளிப்படுத்தியது.
“TN 2026” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பே அதன் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் இப்படம், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.
“தலைவர் தம்பி தலைமையில்” என்ற ப்ளாக்பஸ்டர் படத்தைத் தொடர்ந்து, “TN 2026” மூலம் கண்ணன் ரவி – தீபக் ரவி கூட்டணி மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், அடுத்ததாக நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் “டெக்ஸ்லா” திரைப்படத்தையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர்.
மொத்தத்தில், கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர்களாக வலுவாக தங்கள் இடத்தைப் பதித்து வருகின்றனர்.
மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
நம் மண்ணின் வாழ்வியல் மற்றும் சமூக நியாயங்களை மையமாகக் கொண்டு, மணல் கொள்ளை பிரச்சனையை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஜனநாயக நாட்டில் ஒருவரின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் எந்த அதிகாரத்தாலும் பறிக்கப்படக் கூடாது என்பதையே இப்படம் வலியுறுத்துகிறது. கிராமத்து மக்களின் வாழ்க்கையில் நேரும் அத்தகைய சிக்கல்களை உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்வதே இப்படத்தின் கரு.
வெளியான டிரெய்லரில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்தியாவில், 75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பில் இருப்பது காட்டப்படுகிறது. அந்த பாதுகாப்புக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளது. இதன் மூலம் படம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் சமூக உணர்வுகளைக் கிளறும் கதையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பன்முகத் திறமையாளர் கங்கை அமரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் திரைக்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் உருவான இப்படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பாளர்களாக G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் பணியாற்றியுள்ளனர்.
அமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் ‘தீயோர் கூடம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை சக்திவேல் எழுதி, இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
வசந்த் இசைப்பேட்டை இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசாத் டி.எஃப்.டி. ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.கே. படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், கலை இயக்குநராக பிரசாத் பணியாற்றியுள்ளார். பாடல்களை ராஜா எழுதியுள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படம், ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
கதைக்களம் ஒரு வீட்டில் திடீரென நடைபெறும் கொலைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது. அந்த சம்பவத்தில் சிக்கிக் கொள்ளும் மூன்று பேரின் வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்கள், அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதைக் கொண்ட திரில்லர் அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ‘தீயோர் கூடம்’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில், நடிகை சாக்ஷி அகர்வால் முன்னிலையில், உடைந்த கண்ணாடி பிரதிபலிப்புகளில் டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரியின் முகங்கள் இடம்பெற்றுள்ளன. இது படத்தின் மர்மம், விசாரணை மற்றும் சந்தேகங்களை மையமாகக் கொண்ட கதைநடையை சுட்டிக்காட்டுகிறது.
படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டைத் தொடர்ந்து, இப்படம் குறித்த மேலும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களின் மூலம் தனித்துவமான கதை சொல்லலுக்காக பெயர் பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் தனது கம்பேக்கை பதிவு செய்கிறார். இப்படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றல்போல் மனதை வருடும் காதல் மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகளுடன் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த டீசர் முழுவதும் காட்சிகளின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. உரையாடல்களை விட காட்சிப்படுத்தலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், ஒரு ஆழமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்த படம் வழங்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த டீசரை நடிகை ரீமா சென் வெளியிட்டுள்ளார். டீசர் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு, விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'
பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயினுடன் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இந்த படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மனு ஆனந்த் இயக்கிய இந்த படம், அவர் முன்னதாக இயக்கிய FIR திரைப்படத்தின் வெற்றிக்கு பின் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் வெளியீட்டு விழா விஜயா ஃபோரம் மாலில் உள்ள பேலசோ திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது
ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’, ஏப்ரல் 17ஆம் தேதி ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்க தயாராகியுள்ளது.
இந்த நிகழ்வில்
தயாரிப்பாளர் S.லஷ்மன்குமார் பேசும்போது,
இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்திருக்கிறார்களா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதேபோல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. முழுமையான திருப்தி ஏற்பட்டது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதை எங்களால் எடுக்க முடிந்ததற்காக எங்களுடன் கைகோர்த்த மேவரிக் மூவிஸ்க்கு நன்றி. ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட எங்களது பார்ட்னர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசும்போது,
“கொடுத்த காசுக்கு மேல் நடிக்கிறார்கள் என்று சொல்வது போல, இந்த படத்தில் பணியாற்றியவர்கள் கொடுத்த காசுக்கு மேல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல ஸ்டைலிஷாக இருந்தாலும் இங்கே எல்லோருமே ஒரு அடிமட்ட தொழிலாளி போலத்தான் உழைத்தோம். அஜர்பைஜான் உட்பட எங்களுடைய படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் முழுவதுமே பஞ்சபூதங்கள் ஆக்ரோசமாக வந்தன. நானும் இயக்குநர் மனுவும் ரூம் போட்டு எல்லாம் பெரிதாக விவாதிக்க மாட்டோம். எங்களுக்குள் ஒரே அலைவரிசை இருப்பதால் பணியாற்றுவது எளிதாக இருக்கும்.. சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டது. மஞ்சு வாரியார் ரொம்பவே அசால்டாக சண்டைக் காட்சிகளில் நடித்தார்” என்று கூறினார்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பேசும்போது,
“ஒரு நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கு பின்னணி இசை அமைப்பது ரொம்ப எளிதாக இருந்தது. என்னுடைய பயணத்தில் இந்தப் படத்திற்காக பின்னணி இசையில் அடுத்த கட்டமாக ஒன்றை முயற்சி செய்து இருக்கிறேன்” என்று கூறினார்.
படத்தொகுப்பாளர் பிரசன்னா பேசும்போது,
“இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இந்தப்படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.
நடிகை ரைசா வில்சன் பேசும்போது,
“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக என்னை தேர்வு செய்வதற்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மனு ஆனந்த் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக சரியான படம். சீரியசான டாப்பிக்காகவும் அறிவார்ந்ததாகவும் இந்தப் படம் இருக்கிறது. இது போன்ற படம் நமக்குத் தேவையான ஒன்று. இதுபோன்ற கதைகளை இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
நடிகை அதுல்யா ரவி பேசும்போது,
“எப்போதுமே நாம் ஒரே மாதிரி படங்கள் பண்ணும்போது இவர்களுக்கு இதுதான் வரும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். அதை உடைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு இயக்குநர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் என்னை நம்பியதற்காக இயக்குநர் மனு ஆனந்திற்கு நன்றி. வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் கொடுத்ததுடன் இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பும் கொடுத்தார். இதில் நடித்த எல்லோருடனும் எனக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அனுபவங்களை கற்பதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. திபு இசையில் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த பாடல் இப்போது வரை எனக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. மிகப்பெரிய தியேட்டர் அனுபவம் கொடுக்கும் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.
நடிகை அனகா பேசும்போது,
“இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்து இருந்ததால் இந்த தருணம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. இதில் மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றியதில் எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மஞ்சு வாரியருடன் இணைந்து நடித்தது கனவு நனவான தருணமாக மாறியது” என்று கூறினார்.
நடிகர் சரத்குமார் பேசும்போது,
“‘மிஸ்டர் எக்ஸ்’ படம் இப்போது அவசியமான ஒன்று. உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதன் கதையை மனு ஆனந்த் என்னிடம் சொன்னபோது என்னை நடிக்க வைப்பதற்காக ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இதற்கான ஆராய்ச்சி பேப்பர்களை பக்காவாக வைத்திருந்தார். அதில் இரண்டு மூன்று பக்கங்களை பார்த்ததுமே அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மிஸ்டர் எக்ஸ் என்னுடைய 172 வது படம். இத்தனை வருடங்களில் தாத்தா வேடம் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் இதில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். எனக்கு வெள்ளை முடி, வெள்ளைத் தாடியைக் கொடுத்து இயக்குநர் தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார். 2023ல் இந்தப் படத்தைத் தொடங்கினாலும் இதை மிகுந்த சிரத்தையுடன் பொறுமையாக கொண்டு வந்ததற்கு மனு ஆனந்த்தைப் பாராட்ட வேண்டும். தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் இருவருமே மிகுந்த அளவு மெனக்கெடலை தந்திருக்கிறார்கள். கௌதம் இந்த படத்தில் வித்தியாசமாகத் தெரிவார். படத்தில் எங்கள் அனைவரையும் இயக்கியிருப்பதால் மஞ்சு வாரியரை மேம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். போரில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா உள்ளிட்ட உரிய கௌரவங்கள் கிடைக்கின்றன. நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் தங்கியிருந்து உளவாளிகளாக வேலை செய்வது யாருக்கும் வெளியே தெரியாது. அதை வெளியே சொல்லவும் முடியாது. தன் மனைவிக்குக் கூட நான் யார் என்று உண்மையைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட முகம் வெளியில் தெரியாத ஹீரோக்களை நாம் பாராட்ட வேண்டும் என்றால் இது போன்ற படங்களை எடுத்து தான் பாராட்ட முடியும்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குநர் மனு ஆனந்திற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அதை பட்டை தீட்டுவதற்காக இந்த கால அவகாசம் தேவைப்பட்டது.. இந்த சமயத்தில் தான் துரந்தர் வெளியாகி சரித்திரம் படைத்தது. இதுபோன்ற படங்கள் வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். படம் பார்த்து எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றால் சாதாரண ரசிகனுக்கு எந்த அளவிற்கு அனுபவமாக இருக்கும் எனச் சொல்லத் தேவை இல்லை. படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியானால் ரசிகர்கள் அதிகமாக திரையரங்குக்கு செல்வார்கள்” என்று கூறினார்.
நடிகை மஞ்சு வாரியர் பேசும்போது,
“இந்த ஒரு தருணத்திற்காக தான் மாதக்கணக்கில் நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் கதையை ஓகே சொல்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டது நான் மட்டும்தான் என பின்னாளில் ஆர்யா சொல்லி எனக்கு தெரிய வந்தது. மனு இந்தக் கதையை சொன்னதும் அதைப்பற்றி இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. நிறைய சந்தேகங்கள் இருந்தது. இது நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கும் ஒரு வாழ்க்கையே இல்லை. அதனால் அது குறித்து சில சந்தேகங்களையும் இயக்குநர் மனுவிடம் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் பொறுமையாக எனக்கு பதில் சொன்னார். எனக்கே ஒரு நம்பிக்கை வந்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதற்கு முன்பாக நிறைய ஸ்பை படங்கள் பார்த்திருப்போம். அதில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின் கதை, ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பு என எல்லோருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நான் செய்திராத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட சின்ன சின்ன காயங்கள் இப்போதும் கூட இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் எப்போதும் ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது,
“என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக பிரின்ஸ் பிக்சர்ஸுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் போது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கும். ஆனால் ஆர்யா தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையால் ரொம்பவே தைரியமாக இருந்தார். அதனாலேயே அவருடன் நான் நடிக்கும் போது என்னை, நீ பண்ணு மச்சான் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது மற்றவர்கள் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் இனி எனது படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு அதைச் செய்வேன். மஞ்சு வாரியருக்கும் எனக்கும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது போன்று காட்சிகள் இல்லை என்பது தான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். கிட்டத்தட்ட 70% இது ஆக்சன் படம் என்பதால் இதில் நடித்துள்ள கதாநாயகிகள் அனைவருமே ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார்கள். சரத்குமார் சார் எனக்கு ஒரு அப்பா போலத்தான். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா என் உடல்வாகு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகளை எனக்கு வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த ஆன்மாவையும் இசையமைப்பாளர் திபு அழகாக செதுக்கி இருக்கிறார். என்னைப் போன்றவர்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணுவார்களா என வேறு யாராவது இருந்தாலும் சந்தேகம் பட்டிருப்பார்கள். ஆனால் இயக்குநர மனு ஆனந்த் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. எனக்கே என் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோது கூட அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தினார்” என்று கூறினார்.
இயக்குநர் மனு ஆனந்த் பேசும்போது,
“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பார்த்த பலரும் என்னிடம் நீங்கள் பான் இந்தியா படம் தான் எடுப்பீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இது பான் இந்தியா படம் அல்ல. தமிழ் படம். அந்த ஒரு நோக்கத்தோடு தான் இந்தப் படத்தை எடுத்தேன்.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது. இந்தப் படம் உருவாவதற்கு காரணம் இரண்டு பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கே கூட என்னால் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. நன்றிக் கார்டில் கூட அவர்களின் பெயரை என்னால் இடம்பெறச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட சூழலில் உருவாக்கிய கதை தான் இது.
இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் சமீபத்திய பல பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சொன்னேன். ஆனால் கதை கேட்டு அரை மணி நேரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு படத்தை பண்ண உங்களால் முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, அது தயாரிப்பாளரின் கவலை என்று கூலாக சொன்னார். கௌதம் கார்த்திக் என் மீது நம்பிக்கை வைத்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கடேஷ் ரொம்பவே ஆர்வமுடன் தனது பங்களிப்பைக் கொடுத்தார்.. இதில் பல நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதற்கு அவர்தான் உறுதுணையாக இருந்தார். அப்படி அவர் மூலமாக வந்தவர்தான் நடிகை அனகா. என்னிடம் கதை பற்றி அதிகமாக கேள்வி கேட்டு சாகடித்தவர் என்றால் அது அனகா தான். எல்லா காட்சிகளிலும் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதுல்யா ரவியை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மூலமாக அவரிடம் கதை சொல்ல சென்றபோது அவர் அந்த அரை மணி நேரத்தில் இந்த கதை குறித்து காட்டிய ஆர்வம், என்னிடம் எழுப்பிய கேள்விகள் எல்லாமே அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் தான் என எனக்கு உணர்த்தியது. இந்தப் படத்திற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு தேர்வு செய்தது என்றால் ரைசா வில்சனை தான். இதற்காக பல பேரை பார்த்திருந்தாலும் கடைசியாக ரைசா தான் உள்ளே வந்தார். அவருடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவமும் எனக்கு இருந்தது, அவருக்கு கதையை சொல்வதற்காக நான் அழைத்தபோது அதெல்லாம் வேண்டாம் என்று என் மீது இருந்த நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார்,
இவர்கள் அனைவரையும் விட மஞ்சு வாரியரை இந்தப் படத்தில் கொண்டு வருவதற்குத் தான் எனக்கு கொஞ்சம் அதிக காலம் பிடித்தது. அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தாலும் ஒருமுறையாவது அவரைப் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று தான் சென்றேன். கதையைக் கேட்டதும் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்கள் என்றார். அதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை என்று சொன்னார். மீண்டும் அவரிடம் சென்று முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துக் காட்டினேன், அதுவரை அமர்ந்திருந்தவர் பின்னர் நடந்து கொண்டே கதைய
இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!
இந்திய இசையின் மாபெரும் கலைஞரான Ilaiyaraaja அவர்களின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், Saregama Live மற்றும் Mercuri இணைந்து வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். குறிப்பாக, Dolby Theatre மற்றும் Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.
“Music for Healing - Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Catch the Rhythms உடன் இணைந்து, Saregama Live மற்றும் Mercuri நிறுவனங்களின் கூட்டாண்மையில் நடத்தப்படுகிறது. மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் பிற நகரங்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமா இசை உலகில் அழியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீதம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமையும் அவருக்குண்டு.
முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கச்சேரிகளில், ரசிகர்கள் அவரது காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் அரிய வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை குறித்து MD & Group CEO of Mercuri ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:
“இளையராஜாவின் இசை எல்லைகள் தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”
அதேபோல், Executive Vice President – Films & Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:
“இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம் வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”
இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.
இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- உலக செய்திகள்
- |
- சினிமா













