சற்று முன்
சினிமா செய்திகள்
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் பதவி ஏற்பு!.
Updated on : 24 June 2022

சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தலைவராக கே.ராஜன், செயலாளராக காளையப்பன், பொருளாளராக முரளி, துணைத்தலைவராக நந்தகோபால், இணைச்செயலாளராக சாய் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக மெட்ரோ ஜெயகுமார், கிருஷ்ணன், சந்திரன், பிரபுராம்பிரசாத், தியாகு, பன்னீர்செல்வம், மனோகர், சொக்கலிங்கம், ஆனந்தன், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, சாகா ரகீம், குரோம்பேட்டை பாபு, ஏ.ஜி.ரகுபதி, கருணாகரன், செல்வம் ஆகியோருக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் ஆர்.கே. சுரேஷ், டிஜிட்டல் பிலிம் அசோசியேசன் தலைவர் கலைப்புலி சேகரன், சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.டி.குஞ்சுமோன், பர்பெக்ட் பிக்சர்ஸ் தருண், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி உட்பட ஏராளமான வினியோகஸ்தர்கள் மற்றும் மீடியேட்டர்ஸ் அசோசியேசனின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசி, பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
ஜூலை மாதம் முதல் நலிவடைந்த வினியோகஸ்தர்கள் 100 பேருக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 அன்புத்தொகையாக வழங்க இருக்கிறோம். அதற்கு அச்சாரமாக இன்று 5 பேருக்கு வழங்குவதாக அறிவித்து தலைவர் கே.ராஜன் வழங்கினார்.
மேலும் மாதம்தோறும் இதற்கு ஒரு லட்சம் தேவைபடுகிறது உதவி செய்யுங்கள் என்று தலைவர் கே.ராஜன் கேட்டுக்கொண்டார்.
உடனே எழுந்த ஐசரி கணேஷ் 5 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் ஆர்.கே.சுரேஷ், வினியோகஸ்தர் சங்க துணைத்தலைவர் நந்தகோபால், பொருளாளர் முரளி, இணைச்செயலாளர் சாய் ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினர்.
செயலாளர் காளையப்பன் வரவேற்புரையும் , பொருளாளர் நன்றி உரையும் ஆற்ற விஜயமுரளி தொகுத்து வழங்கினார்.
சமீபத்திய செய்திகள்
சன் டிவியில் 'மங்கை' மெகாதொடர் இயக்கிய அரிராஜன் வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படம் 'ஒழுக்கம்'
சன் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியுடன் தாய்க்குலத்தால் வரவேற்கப்பட்ட " மங்கை" மெகாதொடர் உட்பட 23க்கும் மேற்பட்ட மெகாதொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படம்தான் " ஒழுக்கம்" . இவர் சத்தியராஜ் நடித்த அய்யர் ஐ.பி.எஸ்., சத்தியராஜ் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்த " பொள்ளாச்சிமாப்பிள்ளை" நமீதா நடித்த "இளமை ஊஞ்சல்" மற்றும் கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் படங்களை இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது, " போதைப்பொருட்களால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் சரியான கவனத்தை செலுத்தி அவர்களுக்கு நல்லொழுக்கம் சொல்லிதரும் முதல் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறும்படம்தான் " ஒழுக்கம்". இதில் நிழல்கள் ரவி, ஜே. லலிதா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், உமாசங்கர்பாபு, சாரா, சித்ரா, வெங்கய்யா பாலன், முகமது ரபி, கீதா இன்னும் பலர் நடிச்சிருக்காங்க". என்று கூறினார்.
கஜாதனு இசையையும், பார்த்திபன் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.
இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழாவில் சுதந்திர போராட்ட தியாகியும், கம்பூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல்வாதியுமான ஆர்.நல்லகண்ணு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்பு மிரு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திரைப்பட இயக்குனர் எஸ்பி.முத்துராமன் , நடிகரும் திரைப்பட இயக்குனருமான கே.பாக்யராஜ், கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆர்.நல்லகண்ணு அவர்கள் " ஒழுக்கம்" குறும்படத்தினை வெளியிட அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பெற்றுக்கொண்டார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி உட்பட ஏராளமான திரை உலகினர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் மங்கை அரிராஜன் வரவேற்புரை வழங்க பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும், குறும்படத்தின் தயாரிப்பாளருமான ஜெ. முகமது ரபி நன்றி நவில , நந்தினி விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
பா விஜய்யின் தன்னம்பிக்கையை ஊட்டும் வரிகளில் உருவாகியுள்ள 'ஜதி' ஆல்பம் !
பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.
கூடை சுமந்து மீன் வியாபாரம் செய்யும் பெண்ணின் சிறிய மகள், பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொள்கிறாள். மகளின் ஆசையை நிறைவேற்ற தாய் முயற்சிக்கும் போது, உன்னால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியாது. தகுதிக்கு மேல் ஆசைப்படாதே எனக்கூறி, விரட்டப்படுகிறார்கள்.
இதைப் பார்த்த மற்றொரு குரு, அந்தச் சிறுமியின் ஆர்வத்தை புரிந்துக் கொண்டு, அவளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, அரங்கேற்றம் செய்து வைக்கிறார்.
மகளின் கனவை நிறைவேற்றும் தாயாக கோமதி நடித்துள்ளார். மகளாக சரண்யாஶ்ரீ நடித்துள்ளார். கற்றுக் கொடுக்கும் குருவாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் முரளி நடித்துள்ளார்.
ஒரு முழுநீள திரைப்படம் பார்க்கும் உணர்வை இயக்குனர் ரசல் ஏற்ப்படுத்தி உள்ளார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜூ ஜேக்கப் இசை அமைத்துள்ளார். நடனம் வி.அர்ச்சனா ராம், எடிட்டிங் வீர செந்தில்ராஜ், கிரியேட்டிவ் ஹெட் கே.பாஸ்கர், புரொடக்ஷன் கன்ட்ரோலர் டாக்டர் பி.கமலக்கண்ணன், ஸ்டில்ஸ் கே.பி.பிரபு, பிஆர்ஓ கோவிந்தராஜ்.
மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி தயாரித்துள்ள "ஜதி" (Jathi) ஆல்பத்தை, Vasy Music ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிடுகிறது!
தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம் - வசந்தபாலன் வேதனை
'மவுண்ட் நெக்ஸ்ட்' யூட்யூப் சேனல் பல்வேறு துறைகளில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில் இதன் அடுத்த கட்டமாக 'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022 ' என்கிற பெயரில் குறும்பட திருவிழா ஒன்றை நடத்தினர்.. இந்த இந்த குறும்பட திருவிழாவில் பல்வேறு விதமான குறும்படங்கள் கலந்துகொண்டு அவற்றில் பல்வேறு பிரிவுகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இயக்குனர் வசந்தபாலன், தயாரிப்பாளர் சி வி குமார், ஒளிப்பதிவாளர் வில்சன், எடிட்டர் சான் லோகேஷ் , காலை இயக்குனர் துரைராஜ் , இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் , பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ஸ்டண்ட் இயக்குனர் விக்கி , நடிகர் எம் எஸ் பாஸ்கர், ரேடியோ சிட்டி மேனேஜர் ஜெர்ரி, மவுண்ட் நெஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் ஹை கோர்ட் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வசந்தபாலன், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களையும் விருது வென்றவர்களையும் பாராட்டினார். அதேசமயம் தன் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு ஆதங்கத்தையும் இந்த நிகழ்வில் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “இந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட ஐந்து குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இந்த ஐந்து குறும்படங்களிலும் இன்றைய இளைஞர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி தங்களது டைரக்ஷன் திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இன்றைய படைப்பாளிகளுக்கு டெக்னாலஜி கதவுகள் அகலமாக திறந்தே இருக்கின்றன. அதனால் சாதாரண ஒரு கதையை கூட உங்களால் அழகாக எளிதாக படமாக்க முடிகிறது.
அதேசமயம் தமிழ் சினிமா ஒரே ஒரு விஷயத்தில் தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாததுதான்.. தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம்.. இதற்கு முன்பும் கூட இப்படி குறும்பட போட்டிகள் நடந்தன. உங்களைப் போன்ற பல நூறு இயக்குனர்கள் வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜாக, ரஞ்சித்தாக மாறுகின்றனர். ஆனால் எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவிற்குள் வரவே இல்லை.
இப்போது இங்கே வழங்கப்பட்ட விருதுகளில் கூட கதாசிரியருக்கு என ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இங்க இருக்கும் தயாரிப்பாளர்கள் இனிவரும் காலத்தில் கதாசிரியர்களிடமிருந்து கதையை பெற்றுக்கொண்டு அதன்பிறகு ஹீரோக்களை தேடிச்செல்ல வேண்டும். இங்கு இருக்கும் இயக்குனர்களுக்கு அசாத்திய திறமை நிறையவே உள்ளது. ஆனால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு கதாசிரியர்கள் தான் தமிழ் சினிமாவில் இல்லை. மலையாள திரை உலகில் கதாசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவு செய்த பின்பு தான், மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை தேடி செல்கிறார்கள். அதுபோல இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும்.
இங்கே பார்த்த ‘ஓப்பன் தி பாட்டில்’ குறும்படத்தில் கூட வசனங்களை நீக்கிவிட்டு பார்த்தால் அது ஒரு ஆங்கில படம் தான். தமிழ் படம் என்கிற முத்திரையை பதிக்க ஏதோ ஒரு இடத்தில் தவறி விடுகிறோம். நாளைய இயக்குனர்கள் என்கிற போட்டி மூலம் இயக்குனர்கள் தான் வருகிறார்களே தவிர, எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் வருவதில்லை. அடுத்த வருடமாவது எழுத்தாளர்களுக்கான விருதுகளை கொடுங்கள்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க, ஒரு இயக்குனரால் எளிதாக கனவு காண முடியும். ஆனால் அதை சாத்தியமாக்கியது வில்சன் போன்ற ஒளிப்பதிவாளர்கள் தான். அவருடைய வெற்றி தான் ‘இரவின் நிழல்’ படம். அந்த வகையில் டெக்னிக்கலாக தமிழ் சினிமா மிகப்பெரிய இடத்தில் இருக்கிறது. ஆனால் கதாசிரியர் என்கிற ஒரு இனம் அழிந்து விட்டது. கதாசிரியர் என்கிற இனத்திற்கு இந்த மேடையில் ஒரு நாற்காலியாவது கொடுத்திருக்க வேண்டும்.
எப்போது சினிமாவிற்கான புரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் உருவாக்கப்படுகிறார்களோ, அப்பொழுது வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறும். ரசிகர்களால் கொண்டாடப்படும். இந்த ஐந்து படத்திலும் எழுத்து என்பது ரொம்பவே மிஸ்ஸிங் ஆக இருக்கிறது. இயக்குனராக என்னுடைய ஸ்கிரிப்ட்டை கொடுத்து செக் பண்ணுவதற்கு கூட இங்கே ஸ்கிரீன் பிளே ரைட்டர்ஸ், ஸ்கிரீன் பிளே டாக்டர்ஸ் என யாரும் இல்லை. அப்படியே யாராவது ரைட்டர் ஆக இருந்தால் அடுத்த படத்தில் இயக்குனராக மாறி விடுகிறார்கள்.
காரணம் இயக்குனர்களுக்கு அதிகபட்ச மரியாதை கிடைக்கிறது என்பதுதான். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என போட்டுக்கொண்டால் தான் மரியாதை என ஒரு பொய்யான பிம்பம் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. நான் ஒரு தயாரிப்பாளராக, கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
'இக் ஷு' ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பான் இந்தியா படம்
பத்மஜா பிலிம் பேக்டரி (Padmaja Film Factory) என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர். ஹனுமந்த் ராவு தயாரிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படம் "இக் ஷு " (IKSHU).
விவி.ருஷிகா இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் படம் இது.
படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் ராம் அக்னிவேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
மற்றும் ராஜீவ் கனகலா, பாகுபலி பிரபாகர், சித்திரம் சீனு மற்றும் பலர் நடித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது.
ஐந்து மொழிகளில் போஸ்ட் புரொடக்ஷனுக்குப் பிறகு படத்தின் முதல் பிரீமியர் செய்யப்பட்டது. வணிக ரீதியாக அதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் OTT உரிமைக்காக பிரபல ott நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மீதமுள்ள வணிக நிகழ்ச்சிகள் அனைத்தையும் பத்மஜா ஃபிலிம் பேக்டரிக்காக presenter சாய் கார்த்திக் கவுட் நடத்தி வருகிறார்.
இப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் தேஜாவு படக்குழு!
கடந்த மாதம் 22ம் தேதி அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் "தேஜாவு". வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிப்பில், பிஜி மீடியா ஒர்க்ஸ் PG முத்தையா இனை தயாரிப்பில் உருவான இப்படத்தினை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக நேர்மறை கருத்துகளாலும் ஊடகங்களின் விமர்சனங்களாலும் இப்படம் 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக 3ம் வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. மக்களின் ஆதரவால் இப்படம் 3 வாரம் கணிசமான திரையரங்குகளில் வெற்றி ஓட்டத்தை தொடர்வது படக்குழுவினரை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் இன்று இப்படம் கேரளாவில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாவது படக்குழுவினரை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மது பாலா, சேத்தன், காளி வெங்கட், மைம் கோபி, ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், அருள் சித்தார்த் பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இந்திய அரசிற்காக ராக்ஸ்டார் டிஎஸ்பி பாடிய புதிய பாடல் 'ஹர் கர் திரங்கா' வைரலானது
'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்தி பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை, பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.
இதைப் பற்றி பேசிய டிஎஸ்பி, “இந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும். மேலும் இப்பாடல் எனக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்," என்று கூறினார்.
"உலகெங்கிலும் நடைபெறும் எனது அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய இந்தியக் கொடியுடன் மேடையில் தோன்றி தேசபக்தி பாடல் ஒன்றை பாடுவேன். நம் தேசத்தின் மீது என் அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்துள்ளது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
எல்லா வயதினரையும், குறிப்பாக இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ள தேசபக்தி ததும்பும் இப்பாடலின் மூலம் தான் உண்மையிலேயே ஒரு இசை மேஸ்ட்ரோ என்பதை டிஎஸ்பி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
சமீபத்தில் 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்பட ஆல்பத்தில் நாம் பார்த்தது போல் தனது பாடல்களால் பார்வையாளர்களை கவர்வதில் தனித்திறமை கொண்டவராக டிஎஸ்பி திகழ்கிறார். பாடகரும் இசையமைப்பாளருமான இவர் தற்போது 'புஷ்பா 2' பல படங்களில் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார்.
ஆடி கொண்டாட்டமாக புதிய படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !
தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, “மஹா” படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து, இம்மாதம் நடிகர் அருள்நிதி நடிப்பில், வெளியாகும் “டைரி” திரைப்படம், திரையரங்கு ஓட்டத்திற்கு பிறகு விரைவில் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மஹத் நடிப்பில் உருவாகி வரும் எமோஜி திரைப்படம் ஆஹா ஒரிஜினலாக வெளியாகிறது. ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஜீவி 2 படம், விரைவில் நேரடி வெளியீடாக ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, வெறும் ₹ 99 ரூபாயில் 3 மாதங்கள் ஆஹா ஓடிடி தளத்தை பார்க்கலாம் எனும் அறிவிப்பையும் ஆஹா தளம் வெளியிட்டு அசத்தியுள்ளது.
மேலும் பல பிரபல இயக்குநர்கள் மற்றும் நட்சத்திரங்களின் படைப்புகள் ஆஹாவில் வெளியாக காத்திருக்கிறது. ஆஹா ஓடிடி தளத்தின் அடுதடுத்த இந்த அதிரடி அறிவிப்புகளால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்றே உங்கள் கணக்கை பதிவு செய்து, ஆஹா ஓடிடி தளத்தில் சிறந்த படைப்புகளை கண்டுகளியுங்கள்.
எங்களிடம் பணம் இல்லை; திறமைக்கு இங்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை - நடிகர் கார்த்திக்
Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் சந்துரு முருகானந்தம் பேசியதாவது…
இந்த திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம். அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எனது மேக்கிங் பற்றி தெரியவந்தது. அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஒரு விழாவாக எடுத்து செய்ததே பெரிய விஷயம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடிக்க எனது குழு தான் மிக முக்கிய காரணம். இப்படத்தின் இசையமைப்பாளருக்கு இது தான் முதல் படம், எதிர்காலத்தில் அவர் சிறந்த இசையமைப்பாளராக வருவார். படத்தில் அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். நடிகர் விஷ்வா, சாய் தன்யா, சுபா அனைவருக்கும் நன்றி. கேமராமேன் மிகக்குறைந்த லைட்டை வைத்து அட்டகாசமாக நான் கேட்டதை எடுத்து தந்தார். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் சரண் குமார் பேசியதாவது…
எனது முதல் படத்திற்கு இப்படி ஒரு ஆடியோ லாஞ்ச் நடப்பது சந்தோசம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இந்த படத்திற்கு ஒரு பாடல் தான் இருந்தது, பின்னர் நாங்கள் கலந்துரையாடி படத்தை ரசிகர்களுடன் நெருக்கமாக கொண்டு போக மேலும் சில பாடல்களை இணைத்துள்ளோம். அதுபோக ஒரு பாடலை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளோம். அந்த பாடல் படத்தின் கதையை முழுதாய் கூறும் படி இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் விஷ்வா பேசியதாவது…
இந்த படத்தின் இயக்குநர் மிகவும் திறமை வாய்ந்தவர், அவருடைய ஐடியாக்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பு மூலம் படத்தை மெருகேற்றியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.
நடிகை சுபா பேசியதாவது..
இந்த திரைப்படம் இயக்குநர், இசையமைப்பாளருக்கு முதல் படம், ஆனால் படம் அப்படி இருக்காது. நேர்த்தியான ஒரு படமாக இருக்கும். நான் இங்கு இருப்பதற்கு என் அம்மா தான் காரணம் அவருக்கு நன்றி. நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் இருந்து, இப்போது வரை மக்கள் மனதில் எப்படியாவது பதிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நிறைய சின்ன கதாபாத்திரங்களை கூட எடுத்து நடித்து வருகிறேன். ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இங்கு எங்களை வாழ்த்த வந்த பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் திரை விமர்சகர் கேபிள் சங்கர் பேசியதாவது…
கோயம்புத்தூரில் இருந்து வந்து, ஒரு புது டீம் படம் செய்துள்ளார்கள். இப்போது கோயம்புத்தூரிலிருந்து நிறைய பேர் படம் செய்கிறார்கள் வாழ்த்துக்கள். ஒரு புது படத்தை வியாபாரம் செய்வது இன்றைய நிலையில் மிக கடினமான பணியாக இருக்கிறது. நானும் ஒரு ஒடிடியில் பணியாற்றுகிறவன் என்பதால், டிஜிட்டல் மார்க்கெட் பற்றி தெரியும். சின்ன படங்கள் வியாபாரம் ஆவது கஷ்டம், மக்கள் படம் பார்க்க தயாராக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம். தியேட்டரில் படத்தை நிறுத்தி வைப்பது முடியாத காரியம். அதனால் இன்றைய காலத்தில் படத்தை எங்கெல்லாம் கொண்டு சேர்க்க முடியுமோ அதை சேர்த்து விட வேண்டும். புது ஆட்கள் எனில் படத்தை பற்றி பலவிதமாக சொல்லி படத்தை திரையரங்கில் வாங்க மறுப்பார்கள். ஒரே நேரத்தில் பல ஓடிடியில் ஒளிபரப்பும் வசதி இன்று இருக்கிறது. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். எதிர்காலத்தில் டிஜிட்டலில் நிறைய கண்டண்ட் தேவைப்படுகிறது, உங்கள் படத்தின் உரிமையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் அது பின்னால் உங்களுக்கு பலனளிக்கும். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நடிகர் கார்த்திக் பேசியது…
நாட் ரீச்சபிள் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தின் டீசர் நன்றாக இருந்தது. பாடல் நன்றாக இருந்தது. இந்த டீமிற்கு இது முதல் படம், எனது முதல் படமான பீச்சாங்கை படத்திற்கு இங்கு தான் பிரஸ் மீட் நடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு பதட்டம் இருக்கும் என எனக்கு தெரியும். இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்ப்பது மீடியா, உங்கள் கையில் இருக்கிறது. கோடி ரூபாய் போட்டு பாட்டு எடுக்க எங்களிடம் பணம் இல்லை, எங்களிடம் திறமை இருக்கிறது. ஆனால் திறமைக்கு இங்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு தந்தவர்கள் புது தயாரிப்பளர்கள், இப்போது அந்த நிலை இல்லை. நல்ல படம் நாங்க ரெடி, மக்கள் பாக்க ரெடி ஆனால் நடுவில் ஏதோ ஒன்று மிஸ்ஸாகிறது அது என்னவென்று தெரியவில்லை. நல்ல படம் எடுத்தால் ஜெயிக்க முடியும் என்பதை சின்ன படங்கள் தான் நிரூபித்தது. நம்பிக்கை தந்தது அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருக்கிறோம். அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என் வாழ்த்துகிறேன் நன்றி.
இயக்குநர் அருண்காந்த் பேசியதாவது…
கோயம்புத்தூரிலிருந்து நிறைய கனவுகளோடு வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வீட்டுக்கு வருபவர்களை உபசரிப்பது போல் இந்த திரைத்துறைக்கு வரும் புதியவர்களை வரவேற்க வேண்டும். சமீபமாக சின்ன படம் ஓடாது சின்ன படம் எடுக்காதீர்கள் என ஒரு நெகட்டிவிடி பரவுகிறது. இதை சொல்பவர்கள் சின்ன படம் எடுப்பதில்லை. அதனால் நீங்கள் அதை சொல்லாதீர்கள். சின்ன படம் தான் சினிமாவை வளர்க்கும். சின்ன படங்களுக்கு மீடியா ஆதரவு தாருங்கள். இந்தப்படத்தை பற்றி எழுதுங்கள். இப்படம் நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் நடிகர் பிரவீன் பேசியதாவது…
என் படத்தின் பிரஸ் மீட் இங்கு தான் நடந்தது. இப்போது என் நண்பர்களின் படம் இங்கு நடப்பதை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது படம் எடுப்பதை விட படத்தை விளம்பரப்படுத்தவும், ரிலீஸ் செய்யவும் ஒரு தொகை தேவைப்படுகிறது. அதை புரிந்து கொள்ளாமல் தான் நாம் தவறு செய்கிறோம் என்று நினைக்கிறேன். சின்ன படத்தை ரிலீஸ் செய்ய தொகை ரெடி செய்து கொண்டு படத்தை எடுங்கள். படத்தை மார்க்கெட் செய்வது மிக முக்கியம். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள் இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன். இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன் நன்றி.
தென் மாவட்ட வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை கொண்ட ஆக்சன் படத்தில் நடிக்கும் விக்ராந்த்
A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர்.
விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.
மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
கலையை தியாகராஜனும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கவனிக்கின்றனர்.
சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர் !
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், மாஸ் மகாராஜாவுமான ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் முதல் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கம் இந்திய திரையுலகின் பேசு பொருளாக மாறியது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் லேட்டஸ்ட்டாக சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபவம் கேர் இணைந்திருக்கிறார். அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர், 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரித்து பிரம்மாண்டமான வசூல் வெற்றியைப் பெற்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' எனும் படத்தில் நடித்திருந்தார். இவர் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது.
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் இலட்சிய படைப்பு இது என்பதால், பட உருவாக்கத்தில் சமரசம் செய்யாமல் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 'டைகர் நாகேஸ்வரராவை' உருவாக்கி வருகிறார்.
'டைகர் நாகேஸ்வரராவ்' 1970களில் ஸ்டூவர்ட் புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த திருடன் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாவதால், கதையின் நாயகனாக நடிக்கும் ரவி தேஜா, இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மேலும் ரவி தேஜா இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாகவும் இது இடம்பெற்றிருக்கிறது.
'டைகர் நாகேஸ்வரராவ்' தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது. ஆர். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற, ஸ்ரீகாந்த் விஸா வசனம் எழுதுகிறார். இணை தயாரிப்பாளராக மயங்க் சிங்கானியா பணியாற்றுகிறார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா