சற்று முன்
சினிமா செய்திகள்
மோகன்லால் போல் நடிக்க முயற்சி செய்திருக்கிறேன் - விவேக் ஆனந்த் ஓபராய்
Updated on : 30 November 2022

MX ஒரிஜினல் இணையத்தொடரான 'தாராவி பேங்க்' வலுவான கதைக்களத்தோடு தாராவி பகுதியில் நடைபெறும் ஒரு பரபரப்பான குற்றச் செயல்களை உள்ளடக்கிய கதை ஆகும். இது போன்ற ஒரு பரபரப்பான கதைக்களத்தோடு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த இணையத் தொடரில் 10 எபிசோட்கள் இருக்கிறது. தாராவியின் பகுதிகளில் 30,000 கோடி ரூபாயை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான நிதி சாம்ராஜ்யத்தை வழி நடத்தக் கூடிய பிடிக்க முடியாத ஒரு தலைவனை துரத்தும் அமைதியற்ற காவல்துறை அதிகாரியை பார்வையாளர்கள் இதில் பார்க்கப் போகிறார்கள்.
இந்தத் தொடரில் JCP ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்திற்காக விவேக் ஆனந்த் ஓபராய் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்த காவல்துறை அதிகாரி ரூல் புக்கில் உள்ளபடி நடந்து கொள்ளாதவன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், விதிகளை தனக்கேற்றபடி மாற்றிக் கொள்பவன்தான் இந்த ஜெயந்த் கவாஸ்கர். அதேபோல, தன்னுடைய உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் ஆதரவை அவன் விரும்புவதில்லை, அவனுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்வான்.
இப்போது, விவேக் ஓபராய் 'தாராவி பேங்க்' இணையத் தொடருக்கும் தன்னுடைய அறிமுகப் படமான 'கம்பெனி'க்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி நினைவு கூர்ந்துள்ளார். அதில் மும்பை காவல்துறையின் இணை ஆணையரான வீரப்பள்ளி சீனிவாசன் ஐபிஎஸ் என்ற நடிகர் மோகன்லாலின் கதாபாத்திரத்தில் இருந்து 'தாராவி வங்கி'யில் தனது கதாபாத்திரத்திற்கான உத்வேகம் பெறப் படத்தை மீண்டும் பார்வையிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து விவேக் பகிர்ந்திருப்பதாவது, "சிலருடைய நடிப்பு மட்டும்தான் உங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க பதிந்திருக்கும். 'கம்பெனி' என்னுடைய முதல் படமாக இருந்தாலும் அதுதான் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்ட களம். அஜய் தேவகனில் இருந்து மோகன்லால் வரையும் பல சிறந்த நடிகர்களுடன் வேலைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் 'தாராவி பேங்க்' இணையத் தொடரில் நடிப்பதற்காக வீரபள்ளி ஸ்ரீனிவாசன், ஐபிஎஸ் மும்பையின் இணை கமிஷனராக மோகன்லால் சார் நடித்தக் காட்சிகளை நான் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அதில் எப்படி அணுகினார் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது".
மோகன்லாலின் நடிப்புக் குறித்து பாராட்டி அவர் மேலும் கூறியிருப்பதாவது, "மோகன்லால் சாருடைய அந்த நடிப்பு அவருடைய தேர்ந்த அனுபவத்தில் இருந்து வந்ததால் எந்தவொரு சிரமமும் இல்லாமல் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் அந்த கதாபாத்திரத்தை அணுகிய விதம், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது, படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் என எல்லா விஷயங்களுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அவருடைய சில நுட்பங்களை நானும் இதில் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். ஏனெனில், மும்பை போலீஸ் ஃபோர்சில் உள்ள பலரும் எனக்குத் தெரியும் மேலும் அவர்களுடைய வழிகாட்டுதலும் எனக்கு உதவியாக இருந்தது".
ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் உள்ள உண்மையான சவால்களையும் அவர் பகிர்ந்து கொண்டார், "உண்மையில் இதில் கடினமான ஒரு விஷயம் என்னவென்றால், சரியான விதத்தில் நம்பும்படியாக என் நடிப்பை வெளிப்படுத்துவது மற்றும் அது உயிரோட்டமாக திரையில் கொண்டு வருவது போன்ற விஷயங்கள்தான். மோகன்லால் சார் போல அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்".
சமீபத்திய செய்திகள்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கும் 'மைக்கேல்'
Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்' ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது..,
"படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்."
தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது.,
" சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித் ஜெயக்கொடி பயணிக்கிறார். அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும். இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். "
நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியதாவது..,
" எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். சாம் உடைய சிறப்பான இசை மற்றும் ரஞ்சித் உடைய உழைப்பு இந்த படத்தைச் சிறப்பாக மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். "
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது..,
" ரஞ்சித் ஜெயக்கொடி உடைய முந்தைய படங்களிலிருந்த நேர்த்தியை விட இந்த படத்தில் அதிகம் இருக்கிறது. அவர் ஒவ்வொரு படத்திலும் தரத்தை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். சந்தீப் அனைவருடனும் ஒரே மாதிரி பழகக் கூடியவர், அவருடன் நான் அடுத்த படம் பண்ணுகிறேன். படக்குழு அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். "
இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது..,
" ரஞ்சித், லோகேஷ் போன்ற இயக்குநர்களுடன் பயணிக்கும் போது எனக்குச் சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில் அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன் இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும். இந்த படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். "
நடிகை தீப்சிகா பேசியதாவது..,
" இந்த படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பளித்த ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் சாம் CS உடைய இசைக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் சிறப்பான இசையைக் கொடுத்து இருக்கிறார். படம் சிறப்பாக வந்து இருக்கிறது. உங்களது ஆதரவு தேவை. "
நடிகை திவ்யான்ஷா பேசியதாவது..,
" எங்களது உழைப்பிற்குக் கிடைத்த காதலாக இதை நான் பார்க்கிறேன். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும், ரஞ்சித் உருவாக்கிய அற்புதமான கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். சாம் CS சார் அதை மேம்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் படம் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும். "
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,
" எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர் தயாரிப்பாளர்கள் தான். அவர்களால் தான் இந்த மைக்கேல் படம் இப்படி உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்தும் எமோஷன்களையும், வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், ராவாகவும் இருக்கக் கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார். சாம் CS எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார், அவர் இந்தப்படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும் தான் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர். இந்த படத்தில் ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார். கௌதம் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்.
நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது.,
" இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத் தான் எங்களுக்கு உத்வேகம் அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் CS-க்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. மொழி தாண்டி இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி வழங்கியுள்ளார். கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர், பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.
இப்படத்தில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.
நானியின் மிரட்டலான 'தசரா' திரைப்பட டீசரை வெளியிட்ட பிரபல திரை நட்சத்திரங்கள்!
இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர், நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் "தசரா" படத்தின் ரத்தமும் சதையுமான அதிரடி டீசரை வெளியிட்டனர்.
உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையிலான உணர்வுகளைப் பேசும் படம் மொழிகளைக் கடந்து ஜெயிக்கிறது. உணர்வுகளை ஆழமாகப் பேசும் மண் சார்ந்த திரைப்படமானது எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்போது அது அனைத்திந்தியர்களுக்கான படமாக மாறிவிடுகிறது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வரும் "தசரா" அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் தசரா படத்தின் டீசரை, இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர்.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த தசரா திரைப்படம் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கும். இந்தியாவெங்குமுள்ள அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் அசத்தலாக இருக்கிறது தசரா டிரெய்லர்.
நடிகர்களின் முழுமையான மாற்றம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை, அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களைக் காட்டுவது என, தசரா டீஸர் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. முதல் பிரேமில் தரணி (நானி) ஒரு பெரிய ராவணன் சிலைக்கு முன்னால் நிற்பது காட்டப்படுகிறது. தெலுங்கானாவின் கோதாவரிக்கானி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள வீரலப்பள்ளி கிராமத்தில் நடக்கும் கதை. சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள மக்கள் கஷ்டத்தை மறக்க மது அருந்துவது வழக்கம். அந்த மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. அங்கு வாழும் தரணியின் உலகம் மிகவும் காட்டுத்தனமானது. சில தீய சக்திகள் கிராமத்தில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் போது தரணியின் கோபம் பொங்கி எழுகிறது.
இந்தப் படம் நடிகர் நானியின் படமட்டுமல்ல, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவின் கனவுப்படைப்பு. இருவருமாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான படைப்பை நமக்குத் தந்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் ஒதெலாவின் உருவாக்கம் ஒரு அறிமுக இயக்குநரைப் போல் இல்லை. காட்சி மற்றும் கதை சொல்லும் பாணி கதாநாயகன் மற்றும் எதிரிகள் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தலாக முன்னெப்போதும் பார்த்திராத அனுபவத்தைத் தருகிறது.
டீஸர் உண்மையில் ஒரு புதிய உலகைக் காட்டுகிறது. நானியின் வெறித்தனத்தனமான தோற்றம், அவருடைய குணாதிசயம், பேச்சு, பாவனை, உடல்மொழி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நானி கத்தியின் குறுக்கே விரலை வைத்து நெற்றியில் ரத்தம் பூசுவது அவரது கலக மனப்பான்மையைக் காட்டுகிறது. ஷைன் டாம் சாக்கோவும் சாய் குமாரும் நெகட்டிவ் வேடங்களில் தோன்றியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ISC யின் தலைசிறந்த ஒளிப்பதிவில், சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தின் நிலத்திற்குள் நாமே நுழைந்தது போல் உள்ளது. ரகிதா ரகிதாவின் ஒலி அமைப்புடன், சந்தோஷ் நாராயணனின் துடிப்பான பின்னணி இசை காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது. எடிட்டர் நவின் நூலி உடைய டீஸர் கட் சிறப்பாக உள்ளது. SLV சினிமாஸின் பிரமாண்ட தயாரிப்பு நம்மை மிரளச் செய்கிறது. படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா, நிர்வாக தயாரிப்பாளராக விஜய் சாகந்தி பணியாற்றுகின்றனர்.
இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்துகிறது.
“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.
வாத்தியுடன் போட்டிபோடும் 'பகாசூரன்'
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’.
இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
படம் இம்மாதம் 17 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதே தேதியில் செல்வராகவனின் சகோதரர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
2 நிமிடங்கள் 23 வினாடிகள் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக உருவான 'தக்ஸ்'...
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக தக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான HR Pictures சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.
2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய டிரெய்லர் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக அமைந்துள்ளது. படத்தின் முன்னணி நடிகர்களான ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ் காந்த் ஆகியோரின் நடிப்பும் கதாப்பாத்திர அமைப்பும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. சாம் CS-ன் அற்புதமான பிஜிஎம், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் அட்டகாசமான காட்சிகள் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நேர்த்தியான எடிட்டிங் அனைத்தும் இணைந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எல்லாவற்றையும் விட இயக்குனர் பிருந்தாவின் மேக்கிங் ஸ்டைல் ஒரு கைதேர்ந்த இயக்குனரின் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது - சுஹாசினி மணிரத்னம்
"தி கிரேட் இந்தியன் கிச்சன்" ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய
நடிகை சுஹாசினி மணி ரத்னம்,
இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன்.
இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை 12 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கும்போது, ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்.
சென்னையில் நல்ல ரசனையான நிகழ்ச்சி நடந்தால் நிச்சயம் போய் பாருங்கள். அப்போது தான் நாம் வளர முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று நினைக்காமல் எல்லாவற்றையும் போய் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள். மெட்ராஸ் டாக்கீஸ் குழுவில் நகைச்சுவை வேண்டுமென்றால் கண்ணனை கூப்பிடுங்கள் என்று தான் கூறுவோம்.அந்த அளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்படி பட்ட அவர் இந்த சீரியசான படத்தையும் அருமையாக எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யாவை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான், ரேவதி போன்றோர்கள் நீண்ட காலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐஸ்வர்யாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தெலுங்கில் நான் முன்னணி நடிகையாக இருந்ததற்கு இயக்குநர் தான் காரணம். அந்த காலத்திலேயே பெண்களை புரிந்து கொண்ட இயக்குநர்கள் கே.பாலசந்தர் சாரும் தான்.
கண்ணனுக்கு இதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியதற்கு வாழ்த்துகள்.
கேரளாவில் விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருவள் தான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன்.
நான் மணியை திருமணம் செய்துகொள்ளும்போது ரூ.15 ஆயிரம் தான் இருந்தது. அவர் 5 படங்கள் தான் இயக்கியிருந்தார். நான் 90 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இந்த நிலையில் நண்பர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அங்கு புதிதாக திருமணமான மணப்பெண்ணான எனக்கு இறுதியாகத்தான் உணவு பரிமாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம். அதுவும் சமையலறையில் தான் கொடுத்தார்கள். எனக்கு சினிமா பார்ப்பது போல அதிர்ச்சியாக இருந்தது. காலம் மாறவே மாறாதா என்று அன்று தோன்றியது.
பள்ளியில் படிக்கும்போது அம்பை என்று எழுத்தாளர். அவர் ஒரு புத்தகம் எழுதினார். அந்த கதையில் அவர்கள் வீட்டில் தயாரிக்கும் தோசையின் சுவை போன்று வேறு எங்கும் கிடைக்காது. சமையலறை மூலையில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் என்று பாலசந்தரும் சிந்தித்தார்.
பெண்களின் சமையலறை நேரத்தை குறைப்பதற்காக ராமகிருஷ்ணன் ஓப்போஸ் குக்கிங் தொடங்கி இருக்கிறார். இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது தான் நம்பிக்கை வருகிறது.
எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது. என்னுடைய வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணிற்கு நானோ அல்லது எனது கணவரோ தான் முதலில் பரிமாற வேண்டும் என்று எண்ணுகிறேன்.
இந்த படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,
12 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆதரவு தான் காரணம். சுஹாசினி மேடம் பேச்சு எளிமையாக, தெளிவாக இருந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சுஹாசினி மேடம் தான் என்னை உதவி இயக்குநராக மணி சாரிடம் சேர்த்துவிட்டார்.
இன்று வேகமாக இயக்குகிறேன் என்றால், மணி சாரிடம் கற்றுக் கொண்டது தான் காரணம். காலை 6.30 மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்து விடும் பழக்கம் கொண்டவர் மணி சார் . மிலிட்டரி வீரர் போல உழைப்போம். அன்று கற்று கொண்டது.. இன்று வேகமாக நல்ல படங்களை எடுக்க முடிகிறது.
எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருந்தார். நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான்.
ஒளிப்பதிவாளர் பாலு சார் பிறர் கேட்காமலேயே உதவி செய்வார். திறமைகள் நிறைய உடைய அற்புதமான மனிதர். 20 வருடங்கள் கழித்தும் அவர் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பார். எது வேண்டுமோ அதை சண்டைப் போட்டு வாங்கிக் கொள்வார்.
ஜீவிதா, ஹிருதயாவிற்கு நன்றி. ஒரு முக்கியமான காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார் கலைராணி. போஸ்டர் நந்தகுமார் சார் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து என் மனைவிக்கு அவரை அடிக்கும் அளவிற்கு கோவம் வந்தது.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஜான்சன் சாரும் ஒருவர்.
இப்படத்தின் இசைத்தட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுஹாசினி மேடம் வெளியிட எனது மனைவி மது கண்ணன் பெற்றுக் கொள்வார். எனது மனைவி உண்மையாகவே தி கிரேட் இந்தியன் கிச்சன் தான் என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
இந்த நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சுஹாசினி மேடமிற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும் போது நான் இதுபோன்ற ஆள் இல்லை என்று கூறினார்.
இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
வசனகர்த்தா ஜீவிதா பேசும்போது,
இப்படத்தை ஏற்கனவே மலையாளத்தில் பார்த்திருக்கிறேன். சிலர் ஏற்றுக் கொண்டார்கள். சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்கள் சுதந்திரம் என்றால் ஆடைக் குறைப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள். மலையாள பார்வையாளர்களும், தமிழ் பார்வையாளர்களும் ஒரே மாதிரி அல்ல. இந்த வாய்ப்பை இயக்குநர் ஆர்.கண்ணன் சார் கொடுக்கும்போது என்னால் எழுத முடியுமா? என்று தோன்றியது. ஆனால், எனக்கு 3 நாள்தான் கொடுத்தார். பலமுறை பார்த்து எழுதி முடித்து கண்ணன் சாரிடம் கொடுத்தேன். அவர் நினைத்ததை போலவே எழுதியிருந்தேன் என்று கூறினார். மேலும், இன்னொரு வசனகர்த்தாவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.
கண்ணன் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவர் மிகச் சிறந்த நிர்வாகி என்றார்.
படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால் பேசும்போது,
இந்த படம் எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். ஆராய்ச்சியாகத்தான் எடுக்க முடியும். அதிலும் லாக்டவுன் சமயத்தில் இந்த படத்தை கண்ணன் சார் எடுத்தார். மலையாளத்தில் ஓடிடியில் தான் வெளியானது. அதை திரையரங்கிற்கு கொண்டு வரும்போது அப்படியே கொடுக்க முடியாது. மிக யதார்த்தமாக எடுக்க வேண்டும். அதை அற்புதமாக செய்திருந்தார். அந்த படத்திற்கு முதல் படமாக என்னை நம்பி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
பாடலாசிரியர் ஹிருதயா பேசும்போது,
கண்ணன் சாருடன் எனக்கு இது இரண்டாவது படம். கதாநாயகன் அறிமுக பாடலுக்கு பெரிய கவிஞரிடம் தான் கொடுப்பார்கள். ஆனால், என்னை நம்பி சந்தானம் சார் படமான #டிக்கிலோனா படத்திற்கு எழுத வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு என்னுடைய எல்லா படத்திற்கு நீங்கள் இருப்பீர்கள் என்றார். அடுத்த படத்திற்கும் வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். அவரின் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவருடைய தோற்றத்தைப் பார்த்து யாரும் நம்பமாட்டார்கள். மிகச் சிறந்த கலாரசிகன் கண்ணன் சார்.
இந்த படத்தில் மாய நீர்வீழ்ச்சியாய் என்ற பாடலை எழுதியிருக்கிறேன். அதை திரையில் பார்க்கும்போது தான் சந்தோஷம் கிடைக்கும். மணி சாரின் சிஷ்யன், ஏ.ஆர்.ரகுமானின் இளைய சிஷ்யனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர்கள் கூட்டணி போல் இவர்கள் கூட்டணியும் வெற்றி பெறும் என்றார்.
நடிகர் நந்தகுமார், இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் பேசும்போது
கண்ணனின் முதல் படத்திற்கு நான் தான் ஒளிப்பதிவு செய்தேன். அவர் எப்போதுமே நகைச்சுவையாகத்தான் இருப்பார். ஒரு படத்தின் படப்பிடிப்பை இரண்டு நாட்களிலேயே துவங்கி விடுவார். மலையாள பாணியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஒளிப்பதில் சிறிது மாற்றங்கள் செய்திருக்கிறோம். ஐஸ்வர்யா என்னுடைய நண்பர். சிறு சிறு விஷயங்களில் கூட மிக அருமையாக நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு இன்னொரு நாயகன் பின்னணி இசை. பின்னணி இசைக்கு மட்டும் இரண்டு மாதங்கள் பணியாற்றியிருக்கிறார்கள் என்றார்.
தயாரிப்பாளர் துர்காராம் பேசும்போது,
இந்த படத்திற்கு ஆதரவு தர வந்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. படத்தை தயாரித்தது மகிழ்ச்சியடைகிறேன். பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நிச்சயம் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நடிகை கலைராணி பேசும்போது,
இப்படத்தை மலையாளத்தில் பார்த்து வியந்தேன். சமையலறை முக்கிய பாத்திரமாக இருந்தது. ஆண்களுக்கு சமையலறையில் வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், எந்தளவிற்கு சிரமத்திற்குள்ளாகிறார்கள் என்று யதார்த்தமாக இருந்தது.
பெண்களும் சிறு சிறு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல, ஆண்களும் சமையலறையில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்ணன் சாருடன் இரண்டாவது முறை நடிக்கிறேன். அவர் எப்போதுமே கலைஞர்களை குடும்பமாக வைத்துக் கொள்வார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை மிகவும் சிரமப்படுத்தியிருக்கிறேன்.. கதைக்காக.. என்றார்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்சனோடு களம் இறங்கும் ராக்கிங் ஸ்டார் !
6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், படம் "வாட் தி ஃபிஷ்". இதில் ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களம் இறங்குகிறார் தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு.
உலகத்தரத்தில் அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. மனோஜின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
ரசிகர்களுக்கு புதிய உலகைக் காட்டப்போகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது. படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அனைவரும் ரசிக்கும் வண்ணம் உலகின் பல மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஒரு அதிசய உலகத்தை உங்கள் கண்முன் காட்டும் திரை அனுபவமாக இப்படம் இருக்கும்.
“வாட் த ஃபிஷ்” திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் உலகளாவிய படமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உலகத்தரமான தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. இந்தப் படத்தின் பெயரே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
ஆர். ஜே. பாலாஜிக்கு காமெடி பண்ற சூழ்நிலை இல்லை !
பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், 'சர்தார்' வெற்றி படத்தை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மண்குமார் தயாரிப்பில் ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் த்ரில் அனுபவத்தைக் கொடுக்கும் படம் "ரன் பேபி ரன்".
இந்த படத்தில் ஆர். ஜே. பாலாஜியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், விவேக் பிரசன்னா, ஜார்ஜ் மரியன், ஜோ மல்லூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ்., பாடல்கள் விவேகா, ஒளிப்பதிவு யுவா.
படம் பற்றி இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் கூறியதாவது :
"தமிழ் சினிமா எனக்கு பிடிக்கும். டெக்னீக்கலாக இரு மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ் கலாச்சாரம், பண்பாடுகள் எனக்கு பிடிக்கும் என்பதோடு அந்த கலாச்சாரம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக 'ரன் பேபி ரன்' படம் அமைந்தது.
மலையாளப் படம்பண்ணும் போது இருந்த சுதந்திரம் தமிழிலும் கிடைத்தது. இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மண்குமார் சார் தான்.
மலையாளத்தில் எனது இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்து வெளியான 'தியான்' 25 கோடி படஜெட்டில் உருவாகி பெரிய வெற்றி அடைந்தது.
தமிழில் படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதுமட்டுமல்ல, ஒரு படைப்பாளி யாக தமிழில் படம் பண்ணும்போது அதன் வரவேற்பு அதிகம்.
தமிழுக்குப் பொருத்தமான கதையும் என்னிடம் இருந்தது. நான் இயக்கிய 'தியான்' படமும் எனக்கான வாய்ப்பை எளிதாக்கியது.
'ரன் பேபி ரன்' என்ற டைட்டில் கதைக்கு நூறு சதவீதம் பொருந்திப் போகுமளவுக்கு இருக்கும். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த கதை என்பதால் கதையை முழுமையாக சொல்ல முடியாது.
ஆனால் ஹீரோவை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது. படம் பார்க்கும் ரசிகர்கள் இந்த மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்த மாதிரி இருக்கும்.
ஏன் என்றால் படத்தில் ஹீரோவுக்கு நடக்கிற மாதரியான சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அல்லது நடக்கலாம்.
அந்த மாதிரி பிரச்னை வரும்போது பாதிக்கப்பட்டவர்களால் வாழ முடிகிறததா அல்லது விதி என்று அப்படியே விட்டுவிடுகிறார்களா என்பதை ரசிக்கும்படியாக சொல்வதுதான் 'ரன் பேபி ரன் '.
எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அல்லது உடல் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்னைகளோடு போராட்டம் இருக்கும். அந்த போராட்டத்தில் சிலருக்கு வெற்றி கிடைக்கலாம் சிலருக்கு தோல்வி கிடைக்கலாம் என்பதை விறுவிறுப்பாக சொல்லி உள்ளோம்.
கதை எழுதும்போதே ஆர்.ஜே.பாலாஜி என்னுடைய முதல் சாய்ஸாக இருந்தார். ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் எனக்கு பிடிக்கும்.
ஆர்.ஜே.பாலாஜி இதுவரை பண்ணிய படங்கள் எல்லாமே காமெடி படங்கள். இதில் பழைய சாயல் ஏதுவும் இல்லாதளவுக்கு அவருடைய கேரக்டர் புதுசாக இருக்கும்.
ஆர்.ஜே.பாலாஜி முதல் முறையாக த்ரில்லர் கதையில் நடித்துள்ளார்.
படத்தில் காமெடி இருக்கும். ஆனால் ஆர். ஜே. பாலாஜிக்கு காமெடி இருக்காது. காமெடி பண்ற சூழ்நிலையிலும் அவர் இருக்கமாட்டார்.
ஆர்.ஜே.பாலாஜியிடம் கதை சொன்னதுமே அவர் மிகவும் இம்ப்ரஸாகி உடனே சம்மதம் சொல்லிட்டார். அவருடைய கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை வழங்கினார்.
அந்த விதத்தில் புது வடிவத்தில் ஆர். ஜே. பாலாஜி பார்க்கலாம். இவர் வங்கி அதிகாரி கேரக்டர் பண்றார்.
முக்கியமான வேடத்துல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
தமிழில் அவருடைய இடம் உயரத்தில் இருக்கிறது. கதை உருவாக்கத்திலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் வந்துவிட்டார். இது வழக்கமான ஹீரோ, ஹீரோயின் கதை இல்லை என்று தெரிந்தாலும் கேரக்டரின் முக்கியத்துவம் புரிந்து நடிக்க சம்மதித்தார்.
இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கும். என்றும் கூறினார்.
கேரளாவில் நடைபெற்ற அழகி போட்டியில் வென்ற சென்னை பொண்ணு!
பிகாசஸ் குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் மிஸ்சஸ் சவுத் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியை நடத்தியது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ,கேரளா , கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து மூன்று சுற்றுகளில் சுமார் 14 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள்.
இந்த மூன்று சுற்றுகளிலும் சென்னை சேர்ந்த வைஷாலி. S இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு மிஸஸ் இன்ஸ்பயரிங் என்ற துணை பட்டமும் இந்த போட்டியில் வழங்கப்பட்டது.
இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் படத்தில் ஒரு சிறு வேடத்திலும் நிமிர்ந்து செல்லடி என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வெற்றிபெற்ற வைஷாலி. S தன்னுடைய கருத்தை பதிவு செய்யும்போது,
திருமணமான ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கான அடையாளத்தை பதிவு பண்ண வேண்டும் , அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு பெண்களும் எடுத்து தங்களுக்கு பிடித்த துறையில் பிடித்து தொழிலை செய்ய வேண்டும்
அதற்காகத்தான் நான் என்னையே நேசிக்க தொடங்கி என் வாழ்வில் நான் சந்தித்த இன்னல்களை கடந்து இந்த வெற்றியை அடைந்தேன்.. இது வெறும் தொடக்கம்தான் முடிவு அல்ல என்றார்.
எனக்கு எப்போதுமே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு இதனால் நான் 2018 அன்று புற்றுநோயாளிகளுக்காக எனது முடியை தானமாக வழங்கி இருந்தேன்.
இதனால் இன்னும் பலர் என் போன்று புற்று நோய்களுக்காக தங்களது முடியை தானம் செய்தார்கள் அது எனக்கு பெருமையாக இருந்தது.. என்று கூறினார்.
கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால், R.K. சுரேஷ்,மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
யோகா டீச்சராக சஞ்சனா சிங் நடிக்கிறார். மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. wide angle ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.
இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து, நாங்கள் சொகுசாக வாழ்கிறோம் - ஆர்.ஜே.பாலாஜி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பட குழுவினர் பேசியதாவது,
நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது,
லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. ரன் பேபி ரன் படம் நன்றாக வந்திருக்கிறது. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் நன்றாக கதை தேர்வு செய்வார். இருவருமே கதாபாத்திரத்திற்குள் பொருந்தி போவார்கள். தளத்தில் இருவரும் பேசிக்கொள்ளும்போதே கதையிலும், கதாபாத்திரத்திலும் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுப்பார்கள். சராசரி மனிதனின் பார்வையிலே தான் சிந்திப்பார்கள். ஆகையால் தான் இருவருக்கும் தொடர்வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜிக்கும், மக்கள் செல்வி (ஐஸ்வர்யா ராஜேஷ்)க்கும் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் மதன் பேசும்போது,
லஷ்மன் சார் ஒரு நாள் போனில் அழைத்து ஒரு கதை இருக்கிறது, கேளுங்கள் என்றார். இயக்குநரை சந்திக்கத்தான் சென்றேன். ஆனால், 3 மணி நேரம் கதை கூறினார். நானும், இயக்குநரும் நல்ல நண்பராகி விட்டோம். இந்த நன்றாக வந்திருக்கிறது என்று நானே சொல்லக் கூடாது. இப்படத்தில் பணியாற்றியதற்கு மகிழ்ச்சி. ஆர்.ஜே.பாலாஜியுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. நாம் சோர்ந்து போகும் நேரத்தில் எதாவது நகைச்சுவை கூறி சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வார் என்றார்.
நடிகர் விஷ்வா பேசும்போது,
இந்த படத்தில் இறுதியாக தேர்வானது நான் தான் என்று நினைக்கிறேன். இப்படத்தில் என்னுடையது ஒரு திருப்புமுனையான கதாபாத்திரம். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் அட்டக்கத்தி படத்தில் பணியாற்றினேன். அதன்பிறகு இப்படத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. என்னைப் பார்த்ததும் ஹாய் விஷ்வா என்றார். ஆனால், அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தும் கூட அப்போது இருந்ததுபோலவே இன்னமும் இருக்கிறார். அவருடைய வளர்ச்சிக்கு இதுதான் காரணம். கிருஷ்ணகுமார் சார் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்து காட்டுவார். அவரைப் பின்பற்றினாலே போதும், நாம் நன்றாக நடித்துவிடலாம்.
நடிகர் ராஜா ஐயப்பா பேசும்போது,
ஆர்.ஜே.பாலாஜி உடன் பல காட்சிகள் இருந்தது. நடிக்கும்போது சீரியஸாக மாறிவிடுவார். அதேபோல, இப்படத்தில் சண்டைக் காட்சிகள் இருந்தது. ஐஸ்வர்யா மேடமும் நன்றாக பழகினார்.
கலை இயக்குநர் வீரமணி பேசும்போது,
இந்த நிறுவனத்தில் எனக்கு 2வது படம். இந்த படத்தின் இயக்குநரை முதன் முதலில் சந்திக்கும்போது, மலையாள இயக்குநர்கள் உயிரோட்டமாக எடுப்பார்கள் என்று தயக்கமாக இருந்தது. ஆனால், எனக்கு தெரிந்ததை செய்தேன். இப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜியை வேறு கோணத்தில் பார்ப்பார்கள். காட்சிக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அர்ப்பணிப்போடு நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்-ஐ ரம்மி படத்தில் பார்த்தேன். அன்று நான் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கும் நடிப்பில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் யுவாவின் பணி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.
நடிகை ரித்திகா பேசும்போது,
இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை சண்டைபோட்டு வாங்கினேன். ஆர்.ஜே.பாலாஜியும், ஐஸ்வர்யா ராஜேஷும் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து பணியாற்றுவார்கள். யுவாவும், கிருஷ்ணகுமாரும் வேகமாக பணியாற்ற கூடியவர்கள் என்றார்.
நடிகர் தமிழரசன் பேசும்போது,
பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் எப்போது முடியும் என்று நேரத்தை சரியாக கூறமாட்டார்கள். ஆனால், இயக்குநர் கிருஷ்ணகுமார் மிகவும் திட்டமிட்டு அதேசமயம், வேகமாகவும் பணியாற்றினார். இன்று 5 காட்சிகள் என்றால், அதற்கு மேல் ஒரு காட்சிகூட அதிகமாக எடுக்கமாட்டார் என்றார்.
ஒளிப்பதிவாளர் யுவா பேசும்போது,
இந்த வாய்ப்புக் கொடுத்த பிரின்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. ஆர்.ஜே.பாலாஜியை வைத்து பொதுமக்களுடன் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த காட்சிகள் உயிரோட்டமாக வந்திருக்கிறது. அனைவருடனும் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து, என்னைத் தொடர்பு கொண்டு ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நடிப்பீர்களா? என்று தெரியவில்லை என்றார்கள். அப்படியென்றால், நான் முதலில் கதை கேட்கிறேன் என்று கூறினேன். என் வீட்டிற்கு இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை கூறினார். கதையையும், கதாபாத்திரத்தையும் விட கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ் எனக்கு பிடித்து விட்டது. அவருக்காக நான் நடிக்கிறேன் என்று கூறினேன். ஒரு நல்ல மனிதரை சந்தித்த திருப்தி கிடைத்தது. அவருடைய பணியாற்றும் பாணியும் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் வசனம் உறுதியாக இருந்தது. முதல்முறையாக ஆர்.ஜே.பாலாஜியுடன் எனக்கு முதல் படம். எனக்கு நிறைய அறிவுரை கூறியிருக்கிறார். இப்படக்குழு அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் பேசும்போது,
நான் மலையாளத்தில் தான் நிறைய படங்கள் இயக்கியிருக்கிறேன். வெங்கடேஷ் சார் மூலம் தான் லக்ஷ்மண் சாரின் அறிமுகம் கிடைத்தது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்போது புது அனுபவமாக இருந்தது. கதை கூறும்போது, லக்ஷ்மண் சார் தான் ஆர்.ஜே.பாலாஜியை கூறினார். இப்படம் முழுக்க சீரியஸாகத்தான் போகும் என்று கதை கூறியதும் ஒப்புக் கொண்டார். அதுதான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். ஐஸ்வர்யா மேடம் கூறியது சரிதான். அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் படம் வெளியானதும் தெரியும்.
நான் முதலில் இங்கு வரும்போது மலையாளத்தில் ஒரு மாதிரி இருக்கும், இங்கு வேறு மாதிரி இருக்கும் பஎன்று பலர் கூறினார்கள். ஆனால், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றார்.
தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது,
இயக்குநரின் கதை கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. அந்தளவிற்கு அவர் அனைத்தையும் திட்டமிட்டு வைத்திருந்தார். கதை கேட்கும்போதே ஆர்.ஜே.பாலாஜி தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. சுமார் 7 மாத காலத்திற்குப் பிறகு தான் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. கதை கேட்டதும் அவர் உடனே ஒப்புக் கொண்டார். அதுவரை இயக்குநர் கிருஷ்ணகுமாருக்கு படப்பிடிப்பு நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. இப்படம் சீரியஸான திரில்லர் படம். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பெரிய பட்ஜெட், பல வெளிப்புற படப்பிடிப்புகள், நிறைய கலைஞர்கள் ஆனால், சரியாக திட்டமிட்டு வேகமாக முடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.
நடிகர் ஜோ மல்லூரி பேசும்போது,
இப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது வெளியே தெரிய வேண்டாம் என்று இயக்குநர் நினைத்திருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கு வந்திருக்கிறேன். இப்படத்தில் எனக்கு திருப்புமுனையான கதாபாத்திரம். மலையாள திரையுலகின் அடர்த்தியான அறிவு இந்த இயக்குநருக்கும் இருக்கும் என்பதை இப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தைத் தரும். ஆர்.ஜே.பாலாஜியுடன் நீண்ட பயணத்துடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். அவர் பேராற்றலுள்ள ஒரு நாயகன். எல்லாவற்றுக்கு கேள்வி, பதில், ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி, இயக்குநருடன் அவருக்கும் இருக்கும் உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் பார்க்கிற பொழுது பெரிய உயரத்திற்கு வந்து கொண்டிருக்கும் நாயகனோடு இணைந்து பணியாற்றியதில் பெருமையாக இருக்கிறது.
ஐஸ்வர்யாவோடு இது எனக்கு 4வது படம். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு எப்போதும், பலமும் நியாயமும் சேர்க்கிறவர், தனக்கென தனிமுத்திரை பதிக்கக் கூடியவருக்கு இப்படம் தங்கத்திலான மைல்கல்லாகத்தான் இருக்கும். இப்படம் வெற்றிப் படத்திற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது. இத்தனை காட்சிகள் தான் இருக்க வேண்டும் என்று தீர்க்கமாக இருந்த இயக்குநரைப் பார்த்து வியப்பாக இருந்தது. உதவி இயக்குநர்கள் அனைவரும் ஒரு கதையை எப்படி கூற வேண்டும் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுத்தவர், தமிழிலும் வெற்றி படத்தைக் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் லக்ஷ்மனுக்கும் நன்றி என்றார்.
நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது,
வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். ஏனென்றால், எனக்கு இது போதும் இதை செய்தால் தான் எனக்கு வெற்றி கிடைக்கும் என 3 படங்களுக்கு நடித்தேன். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்துகொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதனால் நான் லக்ஷ்மன் சாருக்கு அழைப்பு விடுத்து பேசிய பின் தான் கிருஷ்ணகுமார் சார் அறிமுகமானார். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் வைக்க மாட்டேன். இதுதான் நான் 7 மாதங்கள் தொடர்பு கொள்ளாததற்கு காரணம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது போல் தான் கிருஷ்ணகுமார் சார் வீட்டிற்கு வந்து சிரித்துக்கொண்டே கதை கூறினார்.
இந்த படத்தில் 33 வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன்.
அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார்.
அந்த 7 நாட்கள் பாக்யராஜின் மறுபிறவி தான் இயக்குநர் கிருஷ்ணகுமார். அவர் திறமையான குழுவை வைத்திருக்கிறார். நான் பொறாமைபடும் அளவிற்கு அந்த குழுவை வைத்திருக்கிறார். லக்ஷ்மன் சார் பெரிய பொருட்செலவில், நிறைய கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் பணியினால் சாம் சி.எஸ். வரவில்லை. ராதிகா மேடமுக்கு நன்றி. இப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி.
இவர்கள் கூறியதுபோல, நான் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவன் என்பது அல்ல. ஒரு சராசரி மனிதன், இவ்வளவு பெரிய சண்டைக் காட்சிகளை செய்வானா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் இருப்பான். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.
ஐசரி கணேஷ் சார் எப்படி என் குடும்பத்தில் ஒருவரோ அப்படித்தான் லக்ஷ்மன் சாரும். கார்த்தி சார் போல, தற்போது எனக்காகவும் லக்ஷ்மன் சார் கதை கேட்க ஆரம்பித்து விட்டாராம்.
படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்கான இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன் என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா