சற்று முன்
சினிமா செய்திகள்
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!
Updated on : 08 March 2025

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.
தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள் மூலம், திரையுலகைச் செழிக்க வைப்பதுடன், ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வரும் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தொழில் நுட்ப குழுவில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங், வெங்கட் ராகவன் வசனம், கலை இயக்கம் பொன்ராஜ், சண்டைப்பயிற்சி ராஜசேகர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
பரபரப்பான ஆக்சன், வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்து ஒரு அற்புதமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.
சமீபத்திய செய்திகள்
பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் திரைத்துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அவர் நடித்த பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மீண்டும் புதுப்பொலிவுடன் மார்ச் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான
“எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்ஷன் படமான இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் கொடுத்த ஆர்பாட்ட ரியாக்ஷன் மறக்க முடியாதது. இந்த வெற்றி ரவிமோகன்-மோகன்ராஜா இருவர் காம்பினேஷனுக்கும் இன்றைக்கும் பெரும் வரவேற்ப்புள்ளது.
இதில் முதலில், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
நவீன உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், 5.1 அட்மாஸ் சவுண்ட் அமைப்பில், மார்ச் 14ம் தேதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.
நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'
அஜித் நடித்து எழில் இயக்கத்தில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக அறியப்படும் சோனா. தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது டைரக்சன் பயணத்தையும் துவங்கியுள்ளார்.
ஷார்ட்பிளிக்ஸ் OTT கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் Fly High production நிறுவனம் சார்பில் இந்த வெப் சீரிஸை அவர் தயாரித்திருப்பதுடன் இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார்.
இந்த வெப் சீரிஸ் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட கடுமையான, கசப்பான அனுபவங்கள் தனக்கு கிளம்பிய எதிர்ப்புகள், குறுக்கீடுகள் குறித்தும் இதன் வெளியீடு விஷயங்கள் குறித்தும் தற்போது மனம் திறந்துள்ளார் சோனா.
“பிரச்சினைகளே வேண்டாம் என்று தான் ஒதுங்கி இருந்தேன். ஆனால் நீ என்ன செய்தாலும் உன்னை அடிப்போம் என்கிற விதமாக, நான் ஒரு ப்ராஜெக்டை தொடங்கியதுமே எதிர்க்கிறார்கள். பயோபிக் என ஆரம்பித்ததுமே ஒரு ஆள், இரண்டு ஆள் இல்லை.. ஒரு கும்பலே எங்கிருந்து வந்து குதித்தார்கள் என தெரியாமல் வந்து நிற்கிறார்கள். எனக்கு நன்கு தெரிந்த ஒரு நடிகர், தயாரிப்பாளர் கூட என்னிடம் கடுமை காட்டியது ஏன் என்று தெரியவில்லை. என் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த போது எனக்குள் அவ்வளவு பயம் இருந்தது. அதன் பிறகும் தொடர்ந்து என் மீதான தாக்குதல் நடக்கிறது. நான் எவ்வளவு ஒதுங்கிப் போனாலும் என்னை அடிக்கிறீர்கள் என்றால் இனி நான் பேசினால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற தைரியம் வந்துவிட்டது.
அப்போது கூட என் தரப்பு நியாயத்தை தான் நான் சொல்ல இருக்கிறேன்.. இந்தப் புராஜெக்ட்டை நான் கையில் எடுத்திருப்பது பழிவாங்குவதற்கான எண்ணம் கிடையாது. அதனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தை மனதில் கொண்டு அவர்களின் பெயர்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. நான் எப்போதும் திறந்த மனதுடன் எதையும் பேசுபவள். எதையும் மனதில் வைத்துக் கொள்ள தெரியாது.
எனக்கு மட்டுமே என பணத்தை வைத்துக்கொள்ள தெரிந்திருந்தால் இந்நேரம் 200 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் இருந்திருப்பேன். எனக்கு தெரிந்த சினிமாவை செய்து அதன் மூலம் வளர நினைத்தேன். என்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஏன் உதவி செய்தேன் என்றால் எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னை சுற்றி ஆட்கள் இருக்க வேண்டும்.. உதவி செய்ய வில்லை என்றாலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்..
நான் செய்த சில சின்ன தவறுகள் இருந்தாலும் அதை திருத்திக் கொண்டு எல்லோருக்கும் உண்மையான வாழ்க்கை வாழ்வதை காட்ட நினைத்தேன். ஆனால் அதுவே தப்பாக போய்விட்டது. ஒருவேளை போலியாக இருந்திருந்தால் நான் நன்றாக இருந்திருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் பண்ணாத தவறுகளுக்காக இப்போது நான் கஷ்டங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். நான் பண்ணிய நல்ல விஷயங்களை மறைத்து விட்டார்கள். இப்போது கூட நான் உலகத்தை குற்றம் சாட்ட விரும்பவில்லை. அதேசமயம் நான் தப்பு பண்ணவில்லை.. என் தரப்பு நியாயங்களை கேட்டால், ஒளிவு மறைவாக இல்லாமல் பேசினால் அதுவும் எனக்கு எதிராக திரும்புகிறது. என்னை வாழ விடலாம் இல்லையா ?
‘கனிமொழி’ படத்தில் மூலம் நான் இழந்தது என்னுடைய பணம். அதற்கு யாரையும் நான் குறை சொல்ல தயார் இல்லை. அது என் தவறு. ஆனால் இந்த முறை ஓடிடி தளத்திலிருந்து பணம் பெற்று இந்த புராஜெக்டை தொடங்கினேன். டைரக்சன் எனக்கு பிடிக்கும். அப்படி ஒரு படம் எடுக்கும்போது எனக்கும் அது போன்று ஒரு நல்ல பெயர் கிடைக்கும், கவர்ச்சி நடிகை என்கிற என்னுடைய இமேஜை மாற்றும் என சிறுபிள்ளைத்தனமான ஒரு ஆசை இருந்தது. அதனால் ஒரு இயக்குநர் ஆன பின்னர் கூட என்னுடைய சொந்த கதையைத்தான் படமாக எடுக்க முடிவு செய்தேன்.
நான் ஆரம்பத்தில் வெளியிட்ட இந்த படத்தின் டீசர் கூட நான் உண்மையைத்தான் சொல்லப் போகிறேன் என்பதை உணர்த்துவதற்காக தான். நெட்பிளிக்ஸ் உடன் ஒப்பிடும்போது ஷார்ட்பிளிக்ஸ் சிறிய OTT தளம் தான் என்றாலும் அவர்கள் கொடுத்த ஆத்மார்த்த ஆதரவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் இதை செய்யாதே, அதை செய்யாதே என்று எதிர்ப்பு வரும் போது நான் என்னதான் செய்வது ? நான் என்ன அப்படி தப்பான ஆளா என்கிற விரக்தி தான் ஏற்பட்டது.
ஆனால் யாரும் நேரடியாக தாக்குதல் நடத்தாததால் பழகிய நபர்களிடம் கூட ஒரு சந்தேகம் கண்ணோட்டம் தேவையில்லாமல் உருவாகிறது. மற்றவர்களுக்காவது குடும்பம், குழந்தைகள் என இருக்கின்றன. நான் தனி ஆளாக போராடிக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் ஒன்றும் இல்லாத ஆளாக உள்ளே நுழைந்து வளர்ந்து இன்று ஒரு படத்தின் இயக்குநராக மாறி இருக்கிறேன். இதுவரை இந்த வெப் சீரிஸுக்காக 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறேன். முதல் பத்து நாட்கள் நடத்தி முடித்துவிட்டு மீதி நான்கு நாட்கள் படப்பிடிப்பை நடத்த ஆறு மாதம் பிச்சை எடுத்தேன்.
வெப் சீரிஸ் பண்ணும் போது பெப்சியின் உதவியை நாட முடியாது. ஆனால் நம் ஆட்கள் தானே என்று நம்பினேன்.. ஒவ்வொருவரையும் கெஞ்சினேன்.. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் வந்தது. அதன் பிறகு நிஜமாகவே உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என உதவி செய்ய வந்தவர்கள் சொன்னபோது அப்பாடா நமக்கு ஆதரவு கிடைக்கப் போகிறது என நம்பினேன். அதன் பிறகு மீண்டும் இழுத்தடித்தார்கள் ஆனால் கடைசியில் நீ ஏமாந்தது உண்மை,, அவர் உன்னை ஏமாற்றியது உண்மை,, இனி நீ படப்பிடிப்புக்கு போக முடியாது,, அவரால் உனக்கு பணம் தர முடியாது,, யாருக்கெல்லாம் பாக்கி இருக்கிறதோ நீ தான் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள், இதை சொல்லியே என்னை ஐந்து மாதம் வீட்டில் உட்கார வைத்தார்கள்,
என்னை சுற்றி இருப்பவர்கள் கூட இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒவ்வொருவராக விலகி சென்றார்கள், ஒரு கட்டத்தில் என் வீட்டில் இந்த கொள்ளை முயற்சி நடந்த பிறகு தான் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தை அணுக, நீங்கள் ஷூட்டிங் நடத்துங்கள் என ஆதரவு குரல் கொடுத்தார்கள்.
மோசமான அந்த மேனேஜரை சப்போர்ட் பண்ணுவதற்காக அவருக்கும் மேலிருப்பவர் வருகிறார்.. அவரும் இரண்டு முறை எனக்கு ஆதரவாக பேசுவது போல பேசினார். அதன் பிறகு படப்பிடிப்பு நடந்த போது தேவையான பணம் கொடுத்து ஏற்பாடு செய்யச் சொன்னேன். உரிய வவுச்சர்களுடன் கணக்கு வந்தது. அதை எல்லாம் உண்மை என்று நம்பினேன். ஆனால் ஐந்தாவது நாள் ஒரு தொழிலாளி என்னிடம் வந்து நான்கு நாட்களாக சம்பளம் வரவில்லை இன்று கிடைக்குமா என்று கேட்டபோதுதான் மேனேஜர் சுரேஷ் நான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக கூறி அவர்களை நம்ப வைத்து அவர்களிடம் வவுச்சரில் கையெழுத்து வாங்கி இருக்கிறார் என்பதே தெரிய வந்தது.
ஆனால் அந்த தவறையும் செய்துவிட்டு மீண்டும் என்னிடம் தில் ஆக வந்து வழக்கம் போல பணம் கேட்கிறார். அதன் பிறகு நான் உங்களை ஏமாற்றினேன் என கைப்பட எழுதியும் தந்தார். ஆனாலும் என்னால் எதுவும் பண்ண முடியவில்லை. சரி இவற்றில் இருந்து ஒதுங்கி இருந்தால் பிரச்சனை இல்லை என நினைத்தால் அப்போதும் பிரச்சினை தொடர்ந்தது. அதனால் கொஞ்சம் துணிச்சலாக மீண்டும் எழுந்து வேலைகளை ஓரளவுக்கு முடித்தேன். கொஞ்சம் அமைதியாக இருந்தார்கள்.
இப்போது இதை ஏன் சொல்கிறேன் என்றால் 2015ல் ஒரு பிரச்சனை வந்து ஓரளவு சரியானது. ஆனால் இந்த 2024 வரை எதுவும் பேசாமல் வாயை மூடி அமர்ந்தது தான் தவறு என இப்போது நினைக்கிறேன். தயவுசெய்து என்னை வாயைத் திறந்து எதுவும் பேச வைத்து விடாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்.. 200 ரூபாய் இருக்கும்போது கூட நான் பிச்சை எடுக்கவில்லை.. ஆனால் இயக்குநரான பிறகு பிச்சை எடுத்தேன்.. இயக்குநராக வேண்டும் என்றால் பிச்சை எடுக்கணுமா ?
இந்த படத்தில் டீனேஜில் இருந்து 30 வயது வரையிலான எனது கதாபாத்திரங்கள் நான்கு பருவங்களாக இடம் பெற்று இருக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஜம்ப் இருக்கும். சில விஷயங்களை சொல்லாமல் சென்றிருப்போம். ஆனால் கடைசியில் அதற்கு ஒரு விடை சொல்லி இருப்போம். இந்த நான்கு பருவங்களிலும் ஒவ்வொரு கேள்வி இருக்கும். இதில் ஏதாவது ஒரு கேள்வியில் இருந்து அடுத்த பாகம் தொடங்கும். மொத்தம் எட்டு எபிசோடுகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றும் 25 முதல் 30 நிமிடம் வரை இருக்கும்.
நானும் ஒருவரை காதலித்தேன். அது யார் என்று இப்போது சொல்ல மாட்டேன்.. எல்லாருக்கும் தெரிந்த ஆள் தான். ஆனால் யாருக்கும் தெரியாதவர்.. என்னுடைய 2010-15 காலகட்டத்திய வாழ்க்கை தான் இந்த முதல் சீசனில் இடம் பெறுகிறது. ஆனால் இந்த வெப் சீரிஸில் என்னுடைய தந்தையின் கதாபாத்திரத்திரம் மற்றும் இவரது கதாபாத்திரத்தின் சாயல் தெரியும் விதமாக நடிகர்களை காட்டியிருக்கிறேன். நீங்களாக அதை டி-கோட் செய்து கொள்ள வேண்டியதுதான்.
இந்த ‘ஸ்மோக்’ வெப்சீரிசை துவங்கும்போது ஒரு பத்து பேர்களைப் பற்றிய விஷயத்தை, அவர்கள் குடும்பத்தை பாதிக்காதவாறு சொல்வதற்கு திட்டமிட்டேன். ஆனால் அறிவித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.. 50 பேரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அப்போதுதான் தெரிந்தது இந்த 40 நம்ம பேர் லிஸ்டிலேயே இல்லையே என நினைத்தேன். சில பேர் எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறியபோது, நான் என்னுடைய கதையை தான் சொல்லப் போகிறேன்.. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்டேன்.. இன்னும் பத்து பதினைந்து நாட்களுக்குள் இதன் டிரைலர் வெளியாகும்..
நான் உதவி இயக்குநராக வேலை பார்க்க கிட்டத்தட்ட எட்டு இயக்குநர்களை அணுகினேன். ஆனால் அவர்களோ நீங்கள் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் கவர்ச்சியான பெண்ணாகவும் இருக்கிறீர்கள்.. நான் உங்களை பார்ப்பேனா ? பாதுகாப்பேனா ? என்னுடைய படவேலையை பார்ப்பேனா என்று கேட்டார்கள். அதனால் விட்டு விட்டேன். எனக்கு எல்லாருடைய டைரக்ஷனும் பிடிக்கும். என்றாலும் ரொம்ப பிடித்தது என்றால் பாலுமகேந்திரா, பரதன் ஆகியோரின் ஸ்டைல் தான்.
‘ஸ்மோக்’ என பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. ஓடிடி நிறுவனமும் அதை ரொம்பவே விரும்பினார்கள். இந்த படத்திற்காக சில நடிகர்களை அணுகிய போது நாங்கள் பிட்டு படங்களில் நடிப்பதில்லை என்கிற ரேஞ்சுக்கு பேசினார்கள்.
படம் பாருங்கள் .. உங்களுக்கே தெரியும்.
'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!
தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் , தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் , அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதை மாந்தர்களின் கதாபாத்திர தோற்றம்- பாரம்பரியத்தை கம்பீரமாக வெளிபடுத்தும் குடும்ப புகைப்படமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக சென்னை மற்றும் கேரளாவில் படபிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்'' என்றார்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பைசனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விளையாட்டு வீரர் பற்றிய இந்த கதையின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- நீலம் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. கபடி வீரராக துருவ் விக்ரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருடன் இணைந்து நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு.. ஆர்வம்.. மீள் உருவாக்கம்.. மற்றும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறுவதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டை உயிர்ப்பிக்கிறது.
கதை சொல்வதில் தனித்துவமான பாணியை கொண்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன்'- பார்வையாளர்களை உத்வேகப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் தமிழில் வெளியாகும் ஒரு மைல்கல் படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்த பயணத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள்.
திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!
மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள். திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை நாயகன் நவீன் (கே மணிகண்டன்), ஒரு கிராபிக் டிசைனர், வேலை இழந்து பிறகு, அவனது மனைவி வெண்ணிலா (ஷான்வி மேக்னா) கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையை படு சிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் காமெடியாகவும் சொல்கிறது.
மோசமான வணிக முயற்சிகள், தோல்வியுற்ற ரியல் எஸ்டேட் திட்டம், மற்றும் அவனது மாமா ராஜேந்திரனின் (குரு சோமசுந்தரம்) உடனான சண்டைகள், என நவீனின் வாழ்வில் மேலும் மேலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், உண்மையையும் கலந்த அழகான இந்தக் கதையில், நவீன் தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறான் எந்த எல்லைக்குப் போகிறான் என்பதை படு சுவாரஸ்யமாகவும், காமெடியும் கலந்து சொல்கிறது இப்படம்.
ZEE5 நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது..,
குடும்பஸ்தன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் கண்ணீரையும் சிரிப்பையும் ஒருசேர வரவழைத்துள்ளது இப்படம். ZEE5ல் நல்ல தமிழ்ப் படைப்புகளுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த அரிய ரத்தினத்தை எங்கள் ZEE5ல் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். அற்புதமான நடிகர்கள், மிகச்சிறந்த நடிகர்களின் உழைப்பில், ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் வாழ்க்கை கஷ்டங்களை, உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாட்டத்துடனும் சொல்லும் இப்படத்தை, திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடியதைப் போலவே, இப்போது இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம். வரும் மார்ச் 7 அன்று ZEE5 இல் இப்படத்தை கண்டுகளியுங்கள்.
இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி கூறியதாவது..,
"ஒரு அறிமுக இயக்குனராக, ஒரு அற்புதமான குழுவுடன் குடும்பஸ்தன் படத்தை உருவாக்கியது, மிக அபாரமான பயணமாக அமைந்தது. தியேட்டர்களில் நவீனின் பயணத்தை பார்வையாளர்கள் கொண்டாடியதைக் காண, பெரு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம், அனைத்து மக்களும் இந்த காமெடி என்டர்டெயினரை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது,
குடும்பஸ்தனில் ஒரு மிடில்கிளாஸ் இளைஞனாக நவீன் பாத்திரத்தை ஏற்று நடித்தது, மிகச் சவாலான அனுபவமாக இருந்தது. குடும்பத்துக்காக ஒரு இளைஞன் படும், துயரங்கள், சிக்கல்கள், அவனின் சாகசங்கள் என மிக உணர்ச்சிகரமான பயணமாக அமைந்தது. நவீன் கதாப்பத்திரம் அனைத்து இளைஞர்களின் பிரதிபலிப்பு. இந்த அற்புதமான திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் ZEE5 மூலம் ரசிக்கவுள்ளது, பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், குடும்பம் சார்ந்த முடிவுகளில் உங்கள் சிந்தனையை மாற்றும்.
ஷான்வி மேக்னா கூறியதாவது,
"வெண்ணிலா அன்பு நிறைந்த ஒரு அழகான பாத்திரம், குடும்பத்தைச் சுற்றி நடக்கும் குழப்பங்களுக்கு மத்தியில், தனது கனவுக்காக போராடும் ஒரு இளம் பெண். நவீனின் தொடர் சாகசங்களுக்கு இணையாக அவளும் இணைந்திருப்பது, ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் அனுபவமாக அமைந்தது. பார்வையாளர்களை தங்கள் சொந்த வாழ்க்கையை நினைத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பல தருணங்களின் சரியான கலவையை இப்படம் வழங்குகிறது. பல ஆச்சரிய திருப்பங்களுடன் கூடிய இந்த ஃபெமிலி என்டர்டெயினர் திரைப்படத்தை, Zee5 மூலம் அனைத்து மக்களும் ரசிக்கவுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நிவேதிதா ராஜப்பன் கூறியதாவது,
குடும்பஸ்தன் படத்தின் ஒரு அங்கமாக நானும் இருந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனது கதாபாத்திரம் நவீனின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களுக்கு மேலும் ஒரு புதிய அடுக்கைச் சேர்க்கிறது, கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில், இது உண்மையான வாழ்க்கை போராட்டங்களை மிக அருமையான நகைச்சுவையுடன் சொல்கிறது. திரையரங்குகளில் இப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ZEE5 மூலம் இப்போது அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதைக் காண ஆவலோடு உள்ளேன்.
திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோ!
ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோஸ் உள்ளது. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களை தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் வரவேற்றார். இந்த ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைவர் இயக்குநர் விஜய். ராஜகிருஷ்ணன், ஹெட் ஆஃப் சவுண்ட், ராஜசேகரன் விஷுவல் பிரிவின் தலைவராகவும், முத்துகிருஷ்ணன் குரல் பிரிவின் தலைவராகவும் உள்ளனர்.
மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, திரைப்படத் துறையில் உள்ள பல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் 'மெஹந்தி சர்க்கஸ்'. அதன் கதை, வசீகரமான காதல், நடிகர்களின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் காரணமாக இன்றும் பலருக்குப் பிடித்த படமாக இருக்கிறது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குநர் ராஜூ சரவணன் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கூட்டணி இன்னொரு அழுத்தமான கதைக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த டிசம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படம் பாலக்கோடு , தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைப் பகுதிகளின் அழகான நிலப்பரப்புகளிலும் மற்றும் தர்மபுரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு தீவிரமான திரில்லராக, ஆக்சன் அதிரடிப் படமாக இருக்கும் என்பதைக் குறிக்கின்றது. போஸ்டரில், நடு காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க, நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில், பிபி கையில் கோடாளியுடன் மிரட்டலாக தோற்றமளிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார்.
“மார்கோ” படம் போலவே இந்த “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படு மிரட்டலாக, மிக உயர்ந்த தரத்துடன் உள்ளது. கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், தனது முதல் திரைப்படத்திலேயே, பெரிய கவனத்தைப் பெற்ற நிறுவனம், இதன் இரண்டாவது படத்திற்கும், இப்போது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. போஸ்டரின் டைட்டில் நாகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் பின்னணியில் மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆச்சரியங்களை டைட்டிலேயே வைத்திருக்கிறது படக்குழு. ஜெயிலர், லியோ, ஜவான், கூலி போன்ற படங்களின் டைட்டிலை உருவாக்கிய அடென்ட் லேப்ஸ் நிறுவனம், இந்த டைட்டிலை உருவாக்கியுள்ளது.
தனது முதல் படத்தில் வித்தியாசமான களம், கதை மற்றும் மார்கெட்டிங் என முழு திறமையை நிரூபித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் தனது முந்தைய படங்களின் மூலம், ரசிகர்களின் அன்பைப் பெற்ற, பிபி இணைந்து உருவாக்கும் இந்த புதிய பான் இந்தியா திரைப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது .
நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு
'நேச்சுரல் ஸ்டார்' நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது.
'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம்- அவருடைய திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இருந்தது. அவர் தன்னுடைய சௌகரியமான தளத்திலிருந்து விலகி, ஒரு கரடு முரடான கிராமிய கதாபாத்திரத்திற்கு மாறி இருக்கிறார். திரைப்பட ஆர்வலர்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்காத ஒன்றை தற்போது நானி மீண்டும் வழங்குவதற்கு தயாராக உள்ளார். அவர் SLV சினிமாஸ் - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி ஆகியோருடன் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படத்திற்காக இணைகிறார். இவர்கள் இணைந்திருக்கும் புதிய படம் 'தி பேரடைஸ்'. தற்போது தயாரிப்பின் தொடக்க நிலையில் உள்ளது. மேலும் நானியை இதற்கு முன் ஏற்றிராத தைரியமான- மிக வலிமையான கதாபாத்திரத்தில் தோன்றுவதையும் உறுதியளிக்கிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 'ரா ஸ்டேட்மென்ட்' எனும் பெயரில் பிரத்யேக வீடியோவை வெளியிட்டனர். அந்த காணொளியின் முதல் காட்சியிலிருந்து 'ரா - RAW' என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். சூழல் - மொழி- கதை - பின்னணி - ஆகியவை கரடு முரடானவை மற்றும் பண்படுத்தப்படாதவை. இந்தக் காட்சி ஒருவகையான மறுப்புடன் தொடங்குகிறது. அசலான உண்மை - அசலான மொழி - ஆகியவை வரவிருக்கும் விசயங்களுக்கான த்வொனியை அமைக்கிறது. ஒரு சக்தி வாய்ந்த குரல் வழியாக இக்கதையின் மையம் குறித்து விவரிக்கப்படுகிறது.
அதில், '' வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களை பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள் - தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல.. ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழு சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்த காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கதை இது. அந்த இளைஞன் ஒரு தலைவராக மாறிய கதை...'' என அந்த குரல் விவரிக்கிறது.
இந்தக் குரல் அப்பட்டமான காட்சிகளுடன் இணைந்து பார்வையாளர்களை அது விவரிக்கும் சமூகத்தின் வேதனையை உணர அனுமதிக்கிறது. தொடக்கக் காட்சியில் இறந்த உடல்களால் சிதறடிக்கப்பட்ட சேரிகளையும், அதன் மேலே அச்சுறுத்து வகையில் காகங்கள் பறப்பதையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் ஒரு மிகப்பெரிய வெடிப்பிற்குள் கதாநாயகன் நானியின் பிரவேசத்தை குறிக்கிறது. அவர் எதிர்பாராத தோற்றத்தில் தோன்றுகிறார். காலணிகளில் கட்டப்பட்ட கை கடிகாரம்- தண்ணீரிலிருந்து இழுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி - கரடு முரடான தோற்றம் - இதனுடன் அவர் உறுதி குலையாமல் நடந்து ..தனது மக்களை பெருமையுடன் வழி நடத்துகிறார். அவரது முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அவரது உடல் மொழி - தோரணை - குரலின் ஆற்றல் - அவருடைய உடல் அமைப்பு மற்றும் இரட்டை ஜடையுடனான சிகை அலங்காரத்தால் சிறப்பிக்கப்படுகிறது. அத்துடன் கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உடனடியாக காட்சிப்படுத்துகிறது. 'ஹீரோ' என்ற வார்த்தையால் அலங்கரிக்கப்பட்ட அவர் அணிந்திருக்கும் பெல்ட் - மக்களின் தலைவராக அவருடைய பங்களிப்பையும் குறிக்கிறது.
இந்த ரா ஸ்டேட்மென்ட் மூலம் 'தி பாரடைஸ்' படத்திற்காக இன்றுவரை நானியின் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் தீவிரமான கதாபாத்திரத்தை காட்சிப்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. அவரது அற்புதமான மேக்ஓவர் பார்வையாளர்களுடன் நிறைய பேசுகிறது. மேலும் அவரது முகத்தில் தெளிவான பார்வை இல்லாவிட்டாலும் அந்த கதாபாத்திரத்தின் சித்தரிப்பும்.. உணர்வும்... வலிமையும்... நேர்த்தியாக வெளிப்படுகின்றன. இது ஆரம்பம் மட்டும்தான். மேலும் படம் - கிளர்ச்சி மற்றும் தலைமைத்துவ உலகத்திற்குள் ஒரு முரட்டுத்தனமான மற்றும் காவியம் சார்ந்த பயணமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா மீண்டும் ஒரு கற்பனை திறன் மிகு படைப்பாளியாக தன்னை நிரூபித்துள்ளார். முதல் காட்சியிலிருந்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு முரட்டுத்தனமான மற்றும் மூழ்கடிக்கும் உலகத்தை திறமையாக உருவாக்கியிருக்கிறார். அவரது வித்தியாசமான கதை சொல்லல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. மேலும் அவர் நானியின் திரை தோற்றத்தை அசலான தீவிரம் நிறைந்த கதாபாத்திரமாக முன் வைப்பதையும் மறு வரையறை செய்கிறார். இது இந்த வீடியோவில் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று. நானியின் கையில் உள்ள பச்சை குத்தியிருப்பது..போன்ற விவரங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துவதாகும். இந்த சிறிய காட்சியின் அம்சம்- கதாபாத்திரத்தின் தனிப்பட்ட பரிணாம வளர்ச்சியின் சக்தி வாய்ந்த அடையாளமாக மாறுகிறது.
ரா ஸ்டேட்மென்ட் காணொளியில் இப்படத்தில் பணியாற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலும் சிறப்பாக விளங்குகிறது. ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார்.
தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை அவினாஷ் கொல்லா மேற்கொள்வது இந்தத் திரைப்படத்தின் தனித்துவமான அம்சமாகும். இயக்குநர் ஓடெலா உருவாக்கும் உலகம் நம்பக்கூடிய வகையில் உருவாகிறது. கதாபாத்திரங்கள் அணியும் உடைகள் முதல் அரங்க வடிவமைப்பு வரை ஒவ்வொரு விவரமும் பார்வையாளர்களை இந்த தீவிரமான பிரபஞ்சத்தில் மூழ்கடிக்கும். படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கையாள்கிறார். SLV சினிமாஸின் தயாரிப்பின் தரம் என்பது சர்வதேச அளவிலானது. படத்தின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரியும். இவை சொல்லப்படும் கதையின் அளவை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் மெருகூட்டுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ரா ஸ்டேட்மென்ட் எனும் பிரத்யேக வீடியோ பார்வையாளர்களுக்கு எதிர்பாராததை வழங்குகிறது. ஒரு புதிய தரத்தை உருவாக்கி. சிறப்பான சினிமாவிற்கான தரத்தை மேலும் உயர்த்துகிறது. இந்த காணொளியின் வீடியோவின் கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி மொழி பதிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இதன் உலகளாவிய ஈர்ப்புடன் படம் உலகம் முழுவதும் வெளியிடப்படும்.
பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்
YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'ஸ்வீட்ஹார்ட் ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.
எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம், கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், '' என் தலைவன் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும் , இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ... இல்லையோ.. 'ஸ்வீட் ஹார்ட் 'என்று சொல்லாமல் கடக்க முடியாது.
ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி அண்ணன் , '' ஏண்டா அந்த கேள்வியை என்ன பார்த்து கேட்ட?' என ஒரு டயலாக் பேசுவார். அதே போல் இந்தப் படத்தில் அது போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்கு எப்படி தோன்றியது? என்று தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறேன்.
கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள். அதற்கு எப்போதும் உதாரணம் ரியோ ராஜ் தான். அவன் நடித்த இந்தப் படமும் ஹிட்டாகும். அடுத்த படமும் ஹிட்டாகும். அவருடைய பயணம் இனி வெற்றி தான்.
பொதுவாக காதலை சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை தான் காதலுக்காக சொன்னேன். இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில், '' ஸ்வீட்ஹார்ட் என்ற இந்த படத்தின் டைட்டில் நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தொடர்பாக வெளியான காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்கான போஸ்டரில் நான்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது . 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற என்னுடைய படத்திலும் இதே போல் தான் போஸ்டரை வடிவமைத்திருப்பேன். அதை பார்ப்பது போல் இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் தரமான பொழுதுபோக்காக இருந்தது. ரியோவின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது நம் மண்ணின் தோற்றம். இந்த படத்தின் டிரைலரில் நல்லதொரு 'வைப்' ( Vibe) இருக்கிறது படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.
இயக்குநர் இளன் பேசுகையில், '' யுவன் சாரை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது. இந்தப் படத்தை பற்றி எதுவும் தெரியாது. நண்பர்களிடம் 'பியார் பிரேமா காதல்' போல் இருக்குமா? என கேட்டேன். அதற்கு அவர் பணிவாக 'இருக்கலாம்' என்று சொன்னார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு படம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இப்படத்தில் உள்ள 'ஆஸம் கிஸா..' என்ற பாடல் வேற லெவலில் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவிற்கு 'மார்டன் மாஸ்டரோ', 'கிங் ' என பல பெயர்கள் இருந்தாலும் அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை தான் இந்த படத்தின் டைட்டில் அவர் ஒரு ஸ்வீட்ஹார்ட். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில், '' யுவனுடன் இணைந்து பாடல் கம்போசிங் செய்வது ஜாலியான அனுபவமாக இருக்கும். முதலில் அவரிடமிருந்து எப்படி பாடல்களை பெறுவது என்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன்.
ரியோ நன்றாக நடிக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன் பி & சி ரசிகர்களுக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும். ஏனெனில் பி & சி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். அவர்களுக்காக ஒரு படத்தில் நடித்தால் உங்கள் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்.
திரையில் ரியோவுக்கும் , கோபிகாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இது இளம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இந்தப் படத்தில் இருக்கும் 'கிஸா' சாங் எனக்கு மிகவும் பிடிக்கும். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஸ்யூர் ஹிட். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு நம்பிக்கை அதிகம் வேண்டும். இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், '' யுவன் சங்கர் ராஜாவின் தயாரிக்கும் திரைப்படத்தில் திங்க் மியூசிக் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். அழகான பீல் குட் ரொமான்டிக் திரைப்படம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த படம் வெளியான பிறகு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நிறைய ரசிகர்களைக் கவரும். இந்த படத்தின் இசையில் ஒரு இன்ப அதிர்ச்சி உள்ளது. யுவன் சங்கர் ராஜா லைவ் கான்சர்ட்டிற்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார். யுவனின் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அந்தப் பாடல் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது '' என்றார்.
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில், '' ஸ்வினீத் நான் பார்த்து பழகிய நபர்களில் பாசிட்டிவானவர். 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'வில் இவருடைய பங்களிப்பு அதிகம். இவரைப் போன்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது நாம் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்தப் படத்தின் கதையை ஒரு பயணத்தின் போது எங்களிடம் சொன்னார். சிரித்து சிரித்து வயிறு புண்ணானது.
அவர் அனைவருக்கும் மரியாதை அளிப்பவர். அவர் இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இப்படி ஒரு இளம் குழுவினரை அறிமுகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்.
என் முதல் ஹீரோ ரியோ ராஜ். ஸ்வீட்ஹார்ட் படத்தைப் பற்றி தொடர்ந்து நல்ல விதமாக கேள்விப்படுகிறேன். அவருக்கும் இந்த படம் பெரிய வெற்றியை வழங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில், '' முதல் படம். முதல் மேடை. நிறைய பேர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஜோ' படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 'ஜோ' படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த :ஸ்வீட்ஹார்ட்' படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது , கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி மேடம் என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால்... அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன். இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சிக்கலான சூழலில் அந்த கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். '' என்றார்.
நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், '' ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி.
மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று தேர்வானேன். இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
ரியோ ராஜ் திறமையானவர். சௌகரியமான சக நடிகர். அவருக்கும் வரிசையாக வெற்றிகள் காத்திருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்': என்றார்.
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், '' இந்த மேடையில் பேசிய அனைவரும் யுவனின் ரசிகர்கள் தான். அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவரை பிடிக்கும்.
'துள்ளுவதோ இளமை' படத்தில் அவருடைய இசையை எட்டாவது படிக்கும் போது கேட்டு ரசித்தேன். அப்போது ஆடியோ கேசட் இருந்தது. அதன் பிறகு சிடி வந்தது. அதன் பிறகு கம்ப்யூட்டரில் ப்ளே லிஸ்ட் வந்த போதும் கூட அவருடைய பாடல்கள்தான் முதலில் இருக்கும். என்னுடைய தொகுப்பாளர் பணியிலும் கூட 'சென்னை 28 'படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பயன்படுத்திக்கொண்டேன். தற்போது இந்தப் படத்தில் எனக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வீட்ஹார்ட் மார்ச் 14ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம்.
இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். 'இவர் என் மாணவர்' என பெருமையாக சொல்வேன்.
இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றி நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஸ்வீட்ஹார்ட்' அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.
தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், '' மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால்.. முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதில் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் உண்மையில் இதுதான் நடந்தது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு பாடல்களை இணைத்தோம். அதன் பிறகு இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் 'ஸ்வீட்ஹார்ட்: படத்தை பார்க்க திரையரங்குகளில் சந்திப்போம் '' என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா