சற்று முன்
சினிமா செய்திகள்
மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”
Updated on : 11 November 2025
Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow).
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது..,
இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான் கேமராமேன், இப்போது அவரது முதல் படத்திற்கு நான் கேமராமேன் என்பது மகிழ்ச்சி. நவம்பர் 21 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
எடிட்டர் ஶ்ரீ வாட்சன் பேசியதாவது..,
இப்படம் ஆரம்பித்து 2 வருடம் ஆகிவிட்டது. படக்குழு அனைவரும் ஒன்றாக இருந்து இப்படத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸிற்காக, நானும் ஹரி பூர்ணிமாவை பார்க்க போனோம், அதிலிருந்து இப்போது படம் வரை வந்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
கலை இயக்குநர் கார்த்திக் கிருஷ்ணன் பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பித்த போது கொஞ்சம் நெர்வஸாக இருந்தது. கதை கேட்கும் போது மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது. பயணம் தான் படம் என்பதால் பல இடங்களைத் திரையில் சரியாகக் கொண்டு வர நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைவரும் எல்லோரும் பெரிய அளவில் வந்து, பிஸியாக உழைக்க நான் சாபம் தருகிறேன். அனைவருக்கும் நன்றி.
உடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்புத் தந்த தயாரிப்பாளர், பூர்ணிமாவுக்கு நன்றி. சென்னைக்கு வந்து சாதித்த ஒரு இளம்பெண் பூர்ணிமா அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.
இசையமைப்பாளர் கிளிஃபி கிரிஷ் பேசியதாவது..,
இது என் முதல் படம் எனக்கு வாய்ப்பு தந்த ஹரி பிரதருக்கு நன்றி. நான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பண்ணிக் கொண்டிருந்தேன் என்னைத் திரைத்துறைக்கு அழைத்து வந்ததற்கு நன்றி. பிரசாந்த் ப்ரோவுக்கு நன்றி. நான் இந்தப்படத்தில் நான்கு பாடல்கள் செய்துள்ளேன். பூர்ணிமாவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டேன். இந்தப்படம் கலர்ஃபுல் எண்டர்டெயினராக இருக்கும், அனைவருக்கும் நன்றி
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத் பேசியதாவது..,
இது என் முதல் மேடை, தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணா அவரை இன்று தான் நேரில் பார்க்கிறேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஹரி அண்ணாவுடன் நாலைந்து வருடம் முன் ஆரம்பித்த நட்பு, இன்று வரை தொடர்கிறது. அவர் பெரும் உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். அபி ஆத்விக் விஷுவல் அற்புதமாக வந்துள்ளது. பாடல்கள் நன்றாக வந்துள்ளது. பாடலாசிரியர் மோகன்ராஜ் அண்ணாவிற்கும் சரண் குமாருக்கும் நன்றி. பூர்ணிமா அக்காவுடன் ஒரு வெப் சீரிஸ் வேலைபார்த்துள்ளேன், அது வளர்ந்து இன்று திரைக்கு வந்துள்ளது. வைபவ் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இது குழந்தைகள் ஃபேமிலி என எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது..,
இந்தப்படத்தில் எனக்கும் பாட வாய்ப்பு தந்த இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. யெல்லோ மஞ்சள் நிறம், மக்களை மகிழ்விக்கட்டும். திரையரங்கில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் சாய் பிரசன்னா பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பிக்கும்போது யாரையும் தெரியாது, ஆனால் இப்போது வா மச்சான் என பேசும் அளவு நெருக்கமாக ஆகிவிட்டோம். ஆரம்பத்தில் ஹரி அண்ணா கொரில்லா மேக்கிங்கில் கதை இல்லாமல் தோன்றுவதை எடுக்கலாம் என்றார், ஆனால் அதன்பிறகு உட்கார்ந்து பேசி எழுதி, நிறைய உழைத்து, ஜாலியாகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். பூர்ணிமா சிறப்பாக நடித்துள்ளார் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
உத்ரா புரடக்சன்ஸ் உத்தாரா பேசியதாவது..,
நவம்பர் 21 ஆம் தேதி உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் தமிழகமெங்கும் யெல்லோ திரையரங்கில் வெளியாகிறது. இப்படி ஒரு தரமான படத்தை வெளியிட என்னிடம் கொண்டு வந்த அஹமத் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரையும் ஒரு டூர் கூட்டிப்போவது போல், எல்லோரையும் மகிழசிப்படுத்தும். இந்த காலத்தில் ஒரு படத்தை எடுத்து திரைக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய விசயம். இந்த குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்து, இப்படத்தை எடுத்துள்ளார்கள். மலையாளப்படம் போல் தமிழ்ப்படம் இல்லை என்பதைச் சொல்வதை மறந்து, இப்படத்தைப் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் வைபவ் முருகேசன் பேசியதாவது..,
நான் பேட்டை படத்தில் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்டாக ஆரம்பித்து, வதந்தி முதல் பல படைப்புகளில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இப்போது நான் நாயகனாக நடித்து யெல்லோ படம் திரைக்கு வருகிறது. பிரசாந்த் பிரதர் பல தடைகளைத் தாண்டி, இப்படத்தை முடித்து திரைக்குக் கொண்டு வந்துள்ளார். ஹரி பிரதர், இப்படம் ஒரு டிராவல் படம் என்பதால் பல இன்னல்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்படத்தை அருமையாக இயக்கியுள்ளார். பூர்ணிமா அவர் தான் இந்தப்படத்தின் மையமாக இருந்தார். அனைவரையும் ஒருங்கிணைத்தது அவர் தான். பாடல்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளது. ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். பிரபு சாலமன் எங்களை நம்பி, நாங்கள் கேட்டதால் ஒரு கதாப்பாத்திரம் நடித்துத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இது என் முதல் படம் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் லோகி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ஹரி அண்ணாவுக்கு நன்றி. ஃபர்ஸ்ட் ப்ரேம் ஆசையாக நடிக்கத் தயாராகி டயலாக் கேட்டேன், நீயே பேசுடா என்றார். இப்போது வரை படத்தில் நான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் படம் வேலை செய்தது மிக ஜாலியாக இருந்தது. படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ஹரி மகாதேவன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறையக் கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன். நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். அவர் கேமரா யூனிட் வைத்துள்ளார். அதை வித்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நான் கொரோனா காலத்தில் பல திரைக்கதை எழுதி, பலரைத் தொடர்பு கொண்டேன், அதில் ஒப்புக்கொண்டு நடித்தவர் பூர்ணிமா மட்டும் தான். அவருடன் ஒரு படம் செய்யலாம் என டிஸ்கஸ் செய்தது தான் இந்தப்படம். இந்தப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் ஓய்வே இல்லாமல் இப்படத்தில் நடித்துத் தந்தார். வைபவ் பூர்ணிமா மூலமாக வந்தவர், சிறப்பாக நடித்துள்ளார். சாய் என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப்படத்தில் அவர் நடித்ததைத் தாண்டி எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துள்ளார் நன்றி. கிளிஃபி நானும் அவரும் டீக்கடையில் உட்கார்ந்து பலமுறை விவாதித்துள்ளோம். அவர் தந்த பாடல்களுக்கு நன்றி. ஆனந்த் என்னுடைய முகவரியான காத்தாடி பாடலை தந்தவன், அவனை நான் முழுதாக நம்புகிறேன். அபி இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் கேமரா செய்து தந்துள்ளார். புரடக்சனிலும் நிறைய உதவியாக இருந்தார். காஸ்ட்யூம் செய்து தந்த மீராவிற்கு நன்றி. நல்ல பாடல்கள் தந்த மோகன்ராஜ், ராஜேஷ் இருவருக்கும் நன்றி. ஹரி உத்தாரா பல புரடக்சன் கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிடுவதற்கு நன்றி. என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு நன்றி. டெல்லிகணேஷ் சார் எங்களை நம்பி வந்து நடித்துத் தந்தார். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகை பூர்ணிமா பேசியதாவது..,
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்த விழா நேற்று வரை கனவாக இருந்தது. எஙகள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ் பணம். ஆனால் இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம். இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர் பிரசாந்த்திற்கு எங்கள் வளர்ச்சியில் நிறையப் பங்கு உள்ளது. மீடியா படத்தைப் பார்த்து நல்ல கருத்துக்களை எழுதுங்கள். படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இது கொரில்லா மேக்கிங், பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். பிரசாந்த் அண்ணா உறுதுணையாக இருந்தார். என் நண்பர்கள் குடும்பத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இந்த உலகம் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், அப்படியான ஆச்சரியங்கள் தான் இந்த படத்தின் மையம். மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நாயகனாக வைபவ் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . உத்ரா புரடக்சன்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா






.jpeg)







