சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
‘ஐ அம் கேம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் வந்த பார்வையிட்ட மெகாஸ்டார் மம்மூட்டி!
துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத் ஆகியோர் எழுதுகின்றனர்.
இதற்கு முன்பு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் அறிமுகமான, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஐ அம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகர்-இயக்குநர் மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த பிக்பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லரின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைக்கிறார்கள். கபாலி, KGF தொடர், கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்-இந்தியா படங்களில் பணியாற்றிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. *‘RDX’*க்கு பிறகு, நஹாஸ் ஹிதாயத்துடன் அன்பறிவ் குழு மீண்டும் இணையும் படமாகவும் இது அமைந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை வருடும் 'சிறை' படத்தின் இரண்டாவது சிங்கிள்!
நடிகர் விக்ரம் பிரபு & LK அக்ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி" பாடல் சென்னை VIT கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடையேயும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மின்னு வட்டம் பூச்சி" பாடல் இன்று VIT கல்லூரியில் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்பட பாடல் வெளியிட்டப்பட்டது.
யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை இளங்காற்றல் வருடும் இந்த " மின்னு வட்டம் பூச்சி" பாடலை கேட்டவுடன் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அருமையான மெலடியாக உருவாகியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் பத்மஜா ஶ்ரீனிவாசன் இப்பாடலை பாடியுள்ளனர்.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது - இயக்குநர் சுதா கொங்கரா
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.
1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.
வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாக, அதன் உலகம் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்கள் (19, 20, 21 டிசம்பர்) பராசக்தி உலகை கண்டுகளிக்கலாம் .
பராசக்தி படத்தின் இந்த உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வள்ளுவர் கோட்டம் அரங்கில், ரசிகர்கள் சூள, படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
இயக்குநர் சுதா கொங்கரா பேசியதாவது..,
திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலில் போய் வாழலாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். 1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.
ஜீவி பிரகாஷ் பேசியதாவது..,
பராசக்தி ஒரு பெரிய உலகம். சுதா கொங்கரா எனக்கு சூரரைப் போற்று படத்தில் தேசிய விருது வாங்கி தந்தார். நான் ரஹ்மான் சாரிடம் இருக்கும் போதே, சுதா எனக்குப் பழக்கம். அவருடன் நிறையப் படங்கள் செய்யவில்லை. நீண்ட காலம் கழித்து சூரரைப் போற்று படம் செய்தோம். அது எனக்கும் சூர்யா சருக்கும் மிகப்பெரிய படமாக அமைந்தது. அதற்கான நன்றிக்கடன் தான் பராசக்தி. பராசக்தியில் மீண்டும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏற்கனவே பீரயட் படங்களில் மதராஸப்பட்டினம் படம் செய்துவிட்டோம், அதிலிருந்து மாறுபட்டு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வியாக இருந்தது. அதைத் தர உழைத்திருக்கிறோம். சிவா உடன் அமரனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். ரவி மோகன், அதர்வா ஶ்ரீலீலா என எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பெரிய படத்தைத் தாங்க ஆகாஷ் போன்ற தயாரிப்பாளர் இருக்க வேண்டும். இப்படத்தில் ஒரு பீரியட் ஃபீல் இருக்கும். ஒரு பெரிய புரட்சியைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதை இசையாகக் கொண்டு வர முயற்சித்திருக்கிறோம். இதில் எல்லோரும் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகை ஸ்ரீலீலா பேசியதாவது..,
எல்லோருக்கும் நன்றி. பராசக்தி எனக்கு மிக முக்கியமான படம். என் அறிமுகத் தமிழ்ப்படம். சுதா மேடமுக்கு நன்றி. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப்பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது, ஒரு அர்த்தம் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். பராசக்தி உலகிற்குள் தரிசித்து கொண்டாடுங்கள் நன்றி.
நடிகர் அதர்வா பேசியதாவது..,
இந்த மாதிரி விழா எல்லா படத்திற்கும் எளிதாக நடக்காது. இது பிரம்மாண்டமான படம். ஜீவி பிரகாஷின் 100 வது படம், ரவிமோகன் சார் வில்லனாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் சாரின் 25 வது படம். ஶ்ரீலீலாவின் முதல் தமிழ்ப்படம். இப்படி எல்லோருக்கும் முக்கியமான படம். ஷீட்டிங் போன போது மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய படத்தை எடுத்துத் தயாரித்திருக்கும் ஆகாஷ் அவர்களுக்கு நன்றி. படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்
நடிகர் ரவி மோகன் பேசியதாவது..,
ஊரே இந்தப்படம் பற்றித் தான் பேசுகிறது. இந்தப்படம் மிகப்பிரம்மாண்ட படம். படத்திற்குள் நான் போகும் முன் எனக்குமே நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக உழைப்பைப் போட்ட அனைவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவ்வளவு உழைத்துள்ளார்கள். என்னை அவ்வளவு அற்புதமாகப் பார்த்துக்கொண்டார்கள். என்னை நன்றாக பார்த்துக்கொண்ட சுதா மேடமுக்கு நன்றி. என்னைச் சரியாக அந்த கதைக்குள் கொண்டு சேர்த்துவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன், ஒரு ஹீரோ வைத்து படமெடுப்பதே கஷ்டம், அவர் மூன்று ஹீரோ வைத்துப் படமெடுத்துள்ளார். அதர்வாவை இந்தப்படத்தில் கொண்டாடுவீர்கள். அதர்வாவிற்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஶ்ரீலீலாவை ஒரு நல்ல நடிகையாக இப்படத்தில் கொண்டாடுவார்கள். சிவா என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார். ஒரு சின்ன அடிபட்டால் கூட என்னையும் அடித்துக்கொள்ளுங்கள் என்பார். சிவாவின் 25 படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை. பராசக்தி திரைப்படம் திரைத்துறையில் மிக முக்கியமான படமாக இருக்கும் நன்றி.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது..,
சுதா மேம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். அவர் தான் இந்தப்படம் பண்ணக்காரணம். இந்தப்படத்திற்காக 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள். அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன் தம்பி போலத்தான். அவர் முதல் படத்திற்கு புரமோசன் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்தார், நான் தான் ஹோஸ்ட் செய்தேன். இந்தப்படத்தில் சேர்ந்து நட்சத்திருப்பது மகிழ்ச்சி. ஶ்ரீலீலாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்டமான டான்ஸ் மூவ்மெண்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி. ரவி மோகன் சார் இந்தப்படத்திற்கு ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியம். ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம். ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, வில்லனாக ஒத்துக்கொள்வது மிகப்பெரிய விஷயம். அவர் எப்போதும் எனக்குக் கல்லூரியில் பார்த்த ஹீரோ தான். அவர் தான் எங்கள் செட்டில் மூத்தவர், அவர் பெயர் தான் முதலில் இருக்கும். அவரை அப்படித்தான் நாங்கள் பார்க்கிறோம். ஜீவி பற்றி என் அம்மா சொன்னார்கள், அந்தப்பையன் சின்ன வயதிலிருந்து இசையமைக்கிறார் போல 100 படம் செய்துவிட்டார் என்றார். 100 படத்திலும் வித்தியாசமான ஜானர்கள் செய்து அசத்தியுள்ளார். இது 25 வது படமாக நடக்கக் காரணம் ஆகாஷ் தான். அவர் தான் இந்தப்படம் 25வதாக இருக்கட்டும் என்றார். இந்த மாதிரி ஒரு டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாக கிடைத்தது என் வரம் தான். பராசக்தி அருள் தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும் பார்த்து ரசியுங்கள் நன்றி.
பராசக்தி திரைப்படம் வரும் 2026 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.
ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் 'ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!
இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன்.
நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார்.
படத்தின் கதை எதைப் பற்றிப் பேசுகிறது?என்பதைப் பற்றி இயக்குநர் பேசும்போது,
"இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து 'டேட்டிங்'கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள். அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் 'டியர் ரதி' படத்தின் கதை.
இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன?அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் 'ரொமான்டிக் காமெடி'யாக இந்த 'டியர் ரதி' திரைப்படம் உருவாகி இருக்கிறது " என்கிறார்.
படத்தில் சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர். அவர் அறிமுகமாகும் படமிது. நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில் கதிர் நாயகனாக நடித்த 'மீஷா' படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர். 'மதராஸி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான். இவர்களுடன் சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜோன்ஸ் ரூபர்ட். இவர் 'பொறியாளன்', 'சட்டம் என் கையில்' படங்களுக்கு இசையமைத்தவர். ஒளிப்பதிவு செய்துள்ளவர் லோகேஷ் இளங்கோவன். இவர் 'நாய்சேகர்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளர், 'ஹர்ஹரா' படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். பிரேம் .B படத்தொகுப்பு செய்துள்ளார்.இவர் செல்வா ஆர்கே - யிடம் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் .கலை இயக்கம் ஜெய் ஜெ.திலீப், நிர்வாகத் தயாரிப்பாளர் மனோ வி கண்ணதாசன், தயாரிப்பு நிர்வாகம் : ஹென்றி குமார்.
இப்படி புதுமுகங்களையும் அனுபவி சாலிகளையும் இணைத்துப் படக் குழு அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். கே .மணி.
வரும் 2026 ஜனவரி 2 ஆம் தேதி இந்த 'டியர் ரதி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்
"குணத்தை அழிக்கும் சீர்குலைவான உணர்ச்சியாக மட்டுமே சினம் பரவலாகப் பார்க்கப்பட்ட நிலையில், அகமாற்றத்திற்கான ஊக்கு ஆற்றலாக அதைச் செலுத்திட முடியும் என்பதை, 'சினம் கொள் மனமே' பாடல் வலியுறுத்துகிறது.
கர்நாடக இசைப் பாடகர் சிக்கில் குருசரண் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடல், சினத்தை எரிபொருளாக்கி, தெளிவுக்கும் மாற்றத்திற்குமான பாதையில் இலக்கமைக்க, மனதைப் பண்படுத்தலாம் என்னும் நம்பிக்கையை விதைக்கிறது.
பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலுக்கு இசை நிரலாக்கத்தை ராஜேஷ் மற்றும் ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இணைந்து செய்துள்ளனர். பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடலை, அனைத்து இசையோடைத்தளங்களிலும் கேட்கலாம். "
23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!
ஹாலிவுட் சுயாதீன திரைப்படமான ‘டெதர்’, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் (CIFF) உலக சினிமா போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரிஹரசுதன் நாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இரு முறை திரையிடப்படுகிறது. டிசம்பர் 14 அன்று காலை 10:00 மணிக்கு சத்யம் சினிமாஸ் சீசன்ஸ் அரங்கிலும் டிசம்பர் 18 அன்று காலை 9:45 மணிக்கு ஐநாக்ஸ் சிட்டி சென்டரில் ஸ்க்ரீன் 1லும் 'டெதர்' திரையிடப்படும்.
அங்கஸ் ஹூவோராஸ் எழுத்தில் ஹரிஹரசுதன் நாகராஜன் இயக்கி தயாரித்துள்ள ‘டெதர்’, பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவுகளை ஆராய்கிறது. மகளின் இழப்பால் துக்கத்தில் தவிக்கும் ஒரு குடும்பம், மருத்துவ ரீதியாக மனச்சோர்வடைந்த முன்னாள் பள்ளி அதிகாரி, ஆபத்தை எதிர்கொள்ளும் 15 குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் உறைந்து நிற்பது என இக்கதை சுழல்கிறது.
பெரிதும் மதிக்கப்படும் டான்ஸ் வித் பிலிம்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட 'டெதர்' அங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. 'டெதர்' திரைப்படம் சென்னையில் திரையிடப்படுவது குறித்து இயக்குநர் ஹரிஹரசுதன் நாகராஜன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
திரைப்பட உருவாக்கத்திலும் உணர்ச்சிப்பூர்வமான கதைசொல்லலிலும் தீவிர ஆர்வம் கொண்ட ஹரிஹரசுதன் நாகராஜனின் முதல் படமான 'டெதர்' அமெரிக்க ஊடகங்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதுமிதா இயக்கும் படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக ஹரிஹரசுதன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லாராக உருவெடுத்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார்.
'சித்தா', 'கனா' ஆகிய படங்களில் வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் , ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், 'டியூட்', 'குட் நைட்', 'டூரிஸ்ட் பேமிலி' ஆகிய பிளாக்பஸ்டர் படங்களின் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர் மோகன் ராஜன், தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் ( Sound Vibe Studios) மற்றும் நடன இயக்குநர் அசார் ஆகியோர் தொழில்நுட்ப குழுவாக பணியாற்றிவருகின்றனர்.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் இன்று வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
கோவை GRD கல்லூரியில் இப்படத்தின் டிரெய்லர் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள,ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. பெரும் ஆராவாரத்தோடு படக்குழுவை உற்சாகப்படுத்திய மாணவர்கள், டிரெய்லரை பாராட்டி வாழ்த்தினர்.
டிரெய்லரில் காவலதிகாரியான விக்ரம் பிரபு ஒரு இளம் குற்றவாளியை அழைத்துச் செல்வதும், அவரிடமிருந்து குற்றவாளி தப்பித்து விட அதைத்தொடர்ந்த பரபரப்பான சம்பவங்களும் விறுவிறுப்பாக காட்டப்படுகிறது. இடையில் ஒரு இளம் ஜோடியின் காதலும் மனதை ஈர்க்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிக அழுத்தமாகவும், ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்வுபூர்வமாக, நமக்கு புது அனுபவம் தரும் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!
தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கல் ரவி ஆகியோரின் வலுவான நடிப்பு ‘உன் பார்வையில்’ படத்தின் ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது.
நடிகை பார்வதி நாயர் கூறியதாவது..,
“பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. டிசம்பர் 19 அன்று ‘உன் பார்வையில்’ படத்தை Sun NXT-இல் நேரடியாக நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண, ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
மேலும், Sun NXT-இன் புதிய எக்ஸ்குளூசிவ் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தையும் தவறாமல் கண்டுகளியுங்கள். ஆக்சன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம் நடித்துள்ள இந்தப் படம், ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை துறுதுறு விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வருகிறது. திரில்லர் ரசிகர்களுக்கு இது மிகச்சிறந்த விருந்தாக இருக்கும்.

- உலக செய்திகள்
- |
- சினிமா













