சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை!
Updated on : 25 November 2024

வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேரக் கவர்ந்து, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிரடி அலைகளை உருவாக்கி, ஒரு சகாப்தமாக மாறியிருக்கிறது அமரன். காதல், தியாகம், தேசப்பற்று ஆகிய உன்னதமான விஷயங்களின் சரிவிகிதக் கலவையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர சரிதத்தை ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில்  சொல்கிறது அமரன். பார்வையாளர்களின் உணர்வோடு ஒன்றிவிடும் தன்மையும் அற்புதமான நடிப்பும் சேர்ந்து இந்த ஆண்டின் பெருவெற்றிப் படங்களுள் ஒன்றாக அமரன் திரைப்படத்தை உயர்த்தியிருக்கின்றன. 



 



சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு சகல தரப்பினரிடமும் பாராட்டுப் பெற்று, திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. அன்பான மகன், நேசமிக்க கணவன், பாசக்காரத் தகப்பன் ஆகிய முகங்களோடு, போர்க்களத்தில் தளபதியாகவும் திகழ்ந்த ஒரு போர்வீரனான முகுந்த் கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பால் பெரும் நம்பகத்தன்மையை உருவாக்கியதோடு முகுந்த் கேரக்டரின் மென்மையான பக்கத்தையும், வீரம் செறிந்த இன்னொரு பக்கத்தையும் திறம்படச் சித்தரித்துக் காட்டிய சிவகார்த்திகேயனின் ஆற்றலை விமர்சகர்களும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயனின் நடிப்பு வாழ்வில் மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாக அமரன் இருக்கிறது. மறுபுறம், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக, நினைவை விட்டு அகலாத வகையில் திரையை அலங்கரிக்கிறார் சாய் பல்லவி. தன் உணர்வுப் போராட்டங்களைச் சமாளிப்பதோடு, தன் கணவனின் கடமைக்கு உறுதுணையாகவும் நிற்கும் உறுதிமிக்க பெண்ணை சாய் பல்லவியின் நடிப்பு மிகச் சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்துவாகவே வாழ்ந்து காட்டியிருக்கும் சாய் பல்லவியை, அவரது நுட்பமான நடிப்புத் திறன் வெளிப்பட்ட படங்களில் அமரன் முக்கியமான ஒன்று என்று அனைவரும் பாராட்டுகின்றனர்.



 



அதிரடியான ஆக்‌ஷன் அம்சங்களோடு மிகுந்த அழுத்தமான உணர்ச்சித் தருணங்களை சரியான விகிதத்தில் கலந்திருப்பதை விமர்சகர்களும், ரசிகர்களும் பலவகையான பாராட்டுக் கருத்துகளை எழுதியும் பேசியும் கொண்டாடித் தீர்க்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரின் கதையாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு பெரும் காவியத்தின் சுவையையும் ஒருங்கே கொண்டிருக்கும் விதத்தில் இயக்கியிருப்பதால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் பரந்த அளவில் பாராட்டு கிடைத்துவருகிறது. திகைப்பூட்டும் ஒளிப்பதிவோடு ஜி.வி. பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் ஆழத்தை வழங்குவதன் மூலம், பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத ஒரு சினிமா அனுபவம் கிடைக்கிறது. 



 



ராணுவ வாழ்க்கைக் கதைகளை எப்படிப் படமாக்க வேண்டும் என்பதற்கான ஓர் அளவுகோலாக அமரன் உருவாகியிருக்கிறது. இந்தப் படம், சமரசமில்லாத நேர்மையான ஒரு ராணுவ வீரனின் கதையை மட்டும் சித்தரிக்கவில்லை, அவனது குடும்பத்தின் உணர்ச்சிமயமான பயணத்தையும் படம் பிடித்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளோடு உணர்வுக் குவியலான காட்சிகளும் பின்னிப் பிணைந்திருப்பது, இப்படிப்பட்ட படங்களை எப்படித் திரையில் காட்டுவது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாக அமரன் அமைந்திருப்பதே, நாம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்கான காரணமாக இருக்கிறது. உண்மை வாழ்க்கை நடந்த காஷ்மீரின்  அதே இடங்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்கிற படக்குழுவின் தீர்மானத்துக்கு படத்தின் வெற்றியில் பெரும் பங்கு உண்டு. படத்தில் உண்மைத்தன்மையைக் கொண்டுவருவதற்காகவும், இது கதையல்ல வாழ்க்கை என்பதை மிகச் சரியாக எடுத்துக்காட்டுவதற்காகவும், கடுமையான வானிலை மாற்றங்களையும், சவாலான நிலப்பகுதிப் பயணங்களையும் நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் சமாளிக்க நேர்ந்தது. 



 



கதை சொல்லப்படும் விதத்தையும் நடிப்பையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா ஆகியோர் பாராட்டியிருப்பது அமரன் பெற்றுவரும் பாராட்டுகளின் உச்சமாகச் சொல்லலாம். இந்தப் படத்தின் ஈர்ப்பு தென்னிந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் பரவியிருக்கிறது. பள்ளிகளில் என்சிசி மாணவர்களுக்காக சிறப்புத் திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கலாச்சார அளவிலும் கல்வி அளவிலும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. 



 



கமல்ஹாசன், ஆர். மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட அமரன், தனக்கான இடத்தைத் தானே நிர்ணயித்துக்கொண்டது. இது இந்தப் படம் செய்திருக்கும் பெரும் வசூல் குறித்தது மட்டும் அல்ல, படத்தை ஓடிடியில் வெளியிடுவதைத் தள்ளிப்போடச் சொல்லி தியேட்டர் உரிமையாளர்கள் கோரியிருப்பதுவும், இப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு மைல்கல்லாய்ச் சான்றளிக்கிறது. ஓடிடியில் வெளியிடும் முன் தியேட்டரிலேயே நாங்கள் பார்க்கிறோம் என்று மக்களே சொல்வது, ரசிகர்களை எந்த அளவுக்கு இந்தப் படம் ஈர்த்திருக்கிறது என்பதன் அடையாளம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா