சற்று முன்
சினிமா செய்திகள்
நானி இயக்கத்தில் லியோ சிவக்குமார், பிரிகடா இணைந்து நடிக்கும் 'டெலிவரி பாய்'
Updated on : 12 February 2025

அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் ,துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை - இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
'கூரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் எஸ். . சந்திரசேகரன் பேசும்போது,
பொதுவாகவே ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் ஒரு வசனம். இது வித்தியாசமான படம் .இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத படம்.இந்த வார்த்தைகளை எல்லாருமே சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இது உண்மையிலேயே வித்தியாசமான படம்.நான் உண்மையிலேயே வித்தியாசமானது என்று சத்தியமாக சொல்லக் கூடிய கதை இது. பலவகையில் இது வித்தியாசமான படம்.
இந்த படத்தில் நாய் தான் கதாநாயகன்.ஒரு ஈ பழிவாங்கி ஒரு படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு யானை பழி வாங்கிய வெற்றிப் படத்தை, ஒரு பாம்பு பழிவாங்கிய வெற்றிப் படத்தை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.இதில் மனிதர் மீது ஒரு நாய் பழிவாங்குகிறது. தன்னுடைய போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை படியேறுகிறது.இது ஒரு வித்தியாசம்.
இரண்டாவது, இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை.நடனம் இல்லை.
இதில் நடித்தவர்கள் எல்லாம் பார்த்தால் நாய், நான் ஒரு 80 வயதுக்காரன், ஒய்.ஜி. மகேந்திரன் என் வயதுதான்.இப்படி இதில் நடித்தவர்கள் முழுதும் வயதானவர்கள் .அது ஒரு வித்தியாசம்.
என்னைப் பற்றி எல்லாரும் பேசினார்கள். அது கடவுள் கொடுத்த பரிசு. ஓடிக் கொண்டே இருக்கிறேன், இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். எதையும் பாரமாக தலையில் போட்டுக் கொள்வதில்லை .கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.உடனிருப்பவர்கள் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் .நான் அலுவலக வரும்போது அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஒன்றும் வேலை இல்லை என்றால் கூட அனைவருடனும் பேசிக் கொண்டிருப்பேன். ஏதாவது செய்து கொண்டிருப்பேன்.
ஏனென்றால் வீட்டில் உட்காரக்கூடாது என்று நினைப்பேன்.சக்கர நாற்காலியில் உட்காரும் வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று காலையில் 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடுவேன்.
இந்த விழாவில் எங்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் மேடையில் இருக்கிறார்கள். கொடைக்கானலில் ஜனவரி மாதக் குளிரில் நாங்கள் சென்றோம் .அதுவே ஒரு மறக்க முடியாத அனுபவம்.நடுங்கிக்கொண்டே சென்றோம் படப்பிடிப்பு ஆரம்பித்ததும், அதெல்லாம் போய்விடும்.
இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஜுரம் வந்ததே கிடையாது .அங்கே போனபோதுதான் வந்தது.ஆனால் படப்பிடிப்பு இடத்திற்குப் போனால் எனக்கு எல்லாமும் போய்விடும். அந்த நம்பிக்கையில் தான் அங்கே நான் சென்றேன்.சொன்ன மாதிரியே என்னைத் தண்ணீரில் எல்லாம் குளிக்க வைத்தார்கள், ஜுரம் போய்விட்டது. வியாதி என்பது நம் மனம் நினைப்பதுதான்.
வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொண்டால் கடைசி வரை நன்றாக இருக்கலாம்.என் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும். இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு அது பிடித்திருந்தது.நாய் நீதிமன்றம் செல்கிறது. அதுவே புதிதாக இருந்தது.நான் எழுபது படங்களில் ஐம்பது படங்களில் மனிதன் நீதிமன்றம் சென்றது போல் தான் எடுத்திருக்கிறேன்.நாயோ பூனையோ போனது போல் எடுக்கவில்லை. அதுதான் புதிதாக இருந்தது. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார்கள்.
திரைப்படங்களில் எழுத்தாளன்தான் கதாநாயகனின் குணச் சித்திரத்தையே படைக்கிறான்.இங்கே நாம் நடிகர்களைக் கொண்டாடுகிறோம்.
.கதாநாயகன் அளவுக்கு இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும். அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வேண்டும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று.
சில படங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. எழுத்தாளன் படைக்கும் பாத்திரங்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். இவனைப் போல வாழ வேண்டும் என்கிற மாதிரி முன்னுதாரணமாக அந்தப் பாத்திரம் இருக்க வேண்டும். கத்தி எடு தலையை வெட்டு என்று படம் பார்த்து விட்டு வெளியே செல்கிறவனும் கத்தி எடுத்து கையை வெட்டு, தலையை வெட்டு என்று செய்து கொண்டிருந்தால் இளைய சமுதாயம் என்ன ஆகிறது?. அந்த பொறுப்புணர்வு வேண்டும் .சினிமா என்பது சாதாரணமானதல்ல. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை;துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது.அதை நாங்கள் சத்தமாகத் தீவிரமாகச் சொல்லாமல் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம்.
சில நல்ல படங்கள் இப்போது செய்கிறார்கள். அதை நான் தவறு சொல்லவில்லை. ஆனால் படம் பார்க்க நூறுபேர் வருகிற போது ஒருவராவது மனமாற்றம் அடையும்படி படங்கள் இருக்க வேண்டும்.இது ஒரு வன்முறை இல்லாத படம். ஆனாலும் சக்தி வாய்ந்த படம்.வன்முறை இல்லாத முறையில் தானே நாம் சுதந்திரமே வாங்கினோம்?காந்தியடிகளின் அஹிம்சைதானே வெள்ளையனை விரட்டி அடித்தது.
ஒரு காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று தெரியும். அவன் கற்பழிப்பான், கொலை செய்வான், 10 பேரை வெட்டுவான்.அப்படித்தான் இருந்தது. இப்போது அதையெல்லாம் கதாநாயகர்கள் செய்கிறார்கள். யார் வில்லன் யார் கதாநாயகன் என்று தெரிவதில்லை.படம் பார்க்கும் இளைஞர்களை நாம் எப்படிக் கொண்டு போக வேண்டும்?
அம்மாவைப் பிள்ளை வெட்டுகிறான்.மாமியார் மருமகளும் சேர்ந்து கொண்டு பிள்ளையைக் கொல்கிறார்கள். அப்பாவைக் கொல்கிறார்கள்.சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை .அதை நாம் சரியாகச் செய்தால் இந்த சமுதாயத்தைத் திருத்த முடியும். இயக்குநர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அந்த பொறுப்புணர்வும் கடமையுணர்வும் சமூக உணர்வும் வேண்டும்.
நான் பத்து ஆண்டு காலமாகச் சில படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு திருப்திகரமாக அமைந்த படம் இது. நான் அனுபவித்துச் செய்து இருக்கிறேன்.
இரண்டு மணி நேரம் அழகாக அமர்ந்து பார்க்க வைக்கும் படியான படம்.
மூன்று மணி நேரப் படமாக உருவானது அதை எடிட்டர் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆக்கினார். லெனின் சார் படத்தைப் பார்த்தார் அதில் பத்து காட்சிகளைத் தூக்கிவிட்டு இருபது நிமிடங்களைக் குறைத்து விட்டார். படம் இரண்டு மணி நேரம் தான்.அவ்வளவு நேர்த்தியாக உள்ளது.
ஒரு குடும்பம் மாதிரி இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இதில் நடித்திருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் அந்த பைரவா நாய்தான் .நாங்கள் எல்லாரும் உதிரிப்பூக்கள்தான், துணை நடிகர்கள்தான். இதில் நடித்திருக்கும் நான் உள்பட அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும் ."இவ்வாறு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசினார்.
விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' இரண்டாவது சீசன்!
பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ' சுழல் - தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இந்த விருது பெற்ற தொடரின் முதல் சீசன் அதன் ஒப்பற்ற கதை சொல்லல், கவர்ச்சிகரமான பின்னணி மற்றும் சக்தி வாய்ந்த நடிப்பிற்காக கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில் ஒரு புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் சுழல்- தி வோர்டெக்ஸ் எனும் இணைய தொடரின் இரண்டாவது சீசனில் காளி பட்டிணத்தின் சிக்கலான சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சியூட்டும் மரணத்தை மையமாக கொண்டுள்ளது. அதே தருணத்தில் இதன் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் விவரிக்கிறது. ஆனால் மர்மம் மற்றும் சூழ்ச்சியின் புதிய சுழலுக்குள் நுழைவதற்கு முன் சீசன் 1ன் சஸ்பென்ஸ் நிறைந்த பயணத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
எச்சரிக்கை : ஸ்பாய்லர்கள்...!
நகரத்தையே உலுக்கும் காணாமல் போதல் :
சிறு நகரத்தை சேர்ந்த நிலா என்ற இளம் பெண் திடீரென காணாமல் போவதுடன் கதை தொடங்குகிறது. அவள் தன் காதலரான இன்ஸ்பெக்டர் ரெஜினாவின் மகனுடன் சேர்ந்து காணாமல் போகிறாள்.
இருண்ட ரகசியங்களை வெளிப்படுத்தும் வகையிலான விசாரணை :
இன்ஸ்பெக்டர் சக்கரை ( கதிர்) இந்த வழக்கின் விசாரணைக்கு பொறுப்பேற்கிறார். ஆனால் ஒரு வழக்கமான காணாமல் போனவர் பற்றிய புகாரை விரைவாக... மிகவும் கொடூரமான ஒன்றாக மாற்றம் பெற்று, இருண்ட ரகசியங்களையும், நீண்ட காலமாக புதைக்கப்பட்ட பொய்களையும் அம்பலப்படுத்துகிறது.
குடும்ப உறவுகள் மற்றும் மறைக்கப்பட்ட பேய்கள் :
தேடல் தீவிரமடையும் போது நிலாவின் சகோதரியான நந்தினி ( ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது சொந்த மற்றும் கடந்த காலத்துடனும் , அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வேதனையான உண்மைகளுடனும் போராடுகிறார்.
பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு நகரம் :
இந்தத் தொடர் நகரத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் இயக்கத்தை சிக்கலான முறையில் பின்னி பிணைக்கிறது. அங்கு பழங்கால மரபுகளும், நவீன யதார்த்தங்களும் எதிர்பாராத தருணத்தில் மோதுகின்றன.
கணிக்க முடியாத திருப்பங்கள் மற்றும் முடிச்சுகள் :
பல அதிர்ச்சியூட்டும் திருப்பங்களை கொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் நிலாவின் தலைவிதி மற்றும் உண்மையை கண்டறியும் பயணத்தைப் பற்றி யூகிக்க வைக்கிறது. இதனால் பொய்கள் மற்றும் மறைக்கப்பட்ட நோக்கங்களின் புதிய கோணங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
பரபரப்பான இறுதி கட்டம் :
தொடரின் இறுதி பகுதியை நெருங்கும் போது.. நிலா காணாமல் போனதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிப்படுகிறது. யாரும் எதிர்பாராத வஞ்சகம் மற்றும் துரோகம் நிறைந்த புதிரையும் வெளிப்படுத்துகிறது.
வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான இந்த இணைய தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து எழுதி, உருவாக்கி, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் கே எம் சர்ஜுன் ஆகியோர் இயக்கத்தில் தயாரான இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன்( முத்து) சம்யுக்தா விஸ்வநாதன் ( நாச்சி) மோனிஷா பிளெஸ்சி ( முப்பி), ரினி ( காந்தாரி ), ஸ்ரீஷா (வீரா) அபிராமி போஸ் ( செண்பகம்) நிகிலா சங்கர் (சந்தானம்), கலைவாணி பாஸ்கர் ( உலகு ), அஸ்வினி நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர்.
'சுழல் - தி வோர்டெக்ஸ்' சீசன் 2 பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.
பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை!
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிரடி திரைப்படமான ' சலார் சீஸ்ஃபயர் - பார்ட் 1' ஜியோ ஹாட்ஸ்டாரில் (இதற்கு முன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) 366 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்த சக்தி வாய்ந்த கதையில் நடித்திருந்தனர்.
இதில் உள்ள அதிரடியான சண்டை காட்சிகள் முதல் அதன் தீவிரமான கதை சொல்லும் பாணி வரை ' சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' பார்த்தவுடன் திரைப்பட காட்சிகளை மறு வரையறை செய்து, வெளியான ஒரு வருடத்திற்கு பிறகும் கூட டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நம்ப முடியாத இந்த நீடித்த வெற்றி- மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கும், அவர்களுடைய அசைக்க முடியாத ஆதரவிற்கும் சிறந்த சான்றாகும். இந்த தருணத்தில் அசாதாரணமான இந்த பயணத்தில் பங்கேற்ற 366 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு பிரத்யேக பரிசுகளை அனுப்பி ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அதன் அர்ப்பணிப்பு உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. 'சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' திரைப்படத்தின் மீதான அவர்களின் ஆர்வமும், அன்பும் இந்த திரைப்படத்தை கலாச்சார நிகழ்வாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இது தொடர்பாக 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் பேசுகையில், '' சலார் மீதான ரசிகர்களின் காதலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஜியோ ஹாட்ஸ்டாரில் 'சலார் 1' படத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள். விரைவில் கான்சாரில் கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலும் இது தொடக்கம் தான். 'சலார் 2' படத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். அங்கு புராணக்கதை தொடர்கிறது. அதிரடி மேலும் தீவிரமடைகிறது. கதை இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறது. அடுத்த அத்தியாயம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல எல்லைகளை கடந்து செல்லும் ஒரு மின்னல் போன்ற சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. '' என்றார்.
ரொமான்ஸ் ஜானரில் உருவான '2K லவ்ஸ்டோரி' திரைப்பட வெற்றியை கொண்டாடும் விழா!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.
இந்நிகழ்வினில்…
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு நீங்கள் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. படம் மிக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதே ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
நிறையப் பத்திரிக்கை நண்பர்கள், இந்தப்படம் பார்த்து, சுசீந்திரன் கம்பேக் எனப் பாராட்டினார்கள், அனைவருக்கும் எனது நன்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், அவர் தந்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி, தயாரிப்பாளர் தனஞ்செயன் சார், இந்தத் திரைப்படத்தை 200 தியேட்டர்களுக்கு மேல் கொண்டு சேர்த்தார், அவருக்கு என் நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமான், அவர் தந்த அருமையான பாடல்களுக்கும், இசைக்கும் நன்றி. நிறையப் பேர் ஒளிப்பதிவு, விளம்பர படம் போல் உள்ளதாகப் பாராட்டினார்கள், ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. ஒரு உதவி இயக்குநர் போல என்னுடன் உழைத்த எடிட்டர் தியாகுவுக்கு நன்றி. போஸ்டர் வடிவமைப்பாளர் கார்த்திக்கு நன்றி. இப்படம் நடக்கக் காரணமாக இருந்த திருப்பூர் தமிழ் மணி அண்ணாவுக்கு நன்றி. புதுமுக நாயகன் ஜெகவீர் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார். என் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
நடிகர் ஜெகவீர் பேசியதாவது....
இந்த நல்ல திரைப்படத்தைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. என்னைப் புதுமுகமாக இருந்தாலும் என்னை வரவேற்று வாழ்த்திய அன்பு ரசிகர்களுக்கு நன்றி. என் குரு, என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என் தயாரிப்பாளர் நண்பர் விக்னேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருந்த, தனஞ்செயன் சாருக்கு நன்றி. அற்புதமான இசையைத் தந்த இமான் சாருக்கு நன்றி. படம் பார்த்து ஊக்கம் தந்து பாராட்டிய இயக்குநர் பிரபு சாலமன் சாருக்கு நன்றி. சுமார் மூஞ்சி குமாரான என்னையும், எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்காக உழைத்த அனைவருக்கும், படம் பார்த்துத் தொடர்ந்து பாராட்டி வரும் அனைவருக்கு நன்றி.
நடிகை லத்திகா பேசியதாவது....
"2K லவ்ஸ்டோரி” படத்திற்கு தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்தப்படத்தில் பவித்ரா கேரக்டருக்கு தந்து வரும் பாராட்டுக்களுக்கு நன்றி. முதல் படத்தில் அழகான கேரக்டர் மூலம், அறிமுகப்படுத்திய சுசி சாருக்கு நன்றி. என் கோ ஆக்டர் ஜெகவீருக்கு நன்றி. இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. எங்கள் அனைவருக்கும் இதே ஆதரவைத் தொடர்ந்து தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
நடிகை ஹரிதா பேசியதாவது....
இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணமான பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இங்கே குண்டாக இருப்பது பற்றியும், ஃபிட்டாக இருப்பது பற்றியும், ஒரு கருத்து இருக்கிறது. என் உடலை வைத்து சினிமாவில் நிறைய கமெண்ட்கள் கேட்டிருக்கிறேன், அது மாதிரியான இடத்தில் என்னை மதித்து, எனக்கு சுதந்திரம் தந்து, இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம். என் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. நாயகன் ஜெகவீர் முதல் படம் போலவே இல்லை, அவ்வளவு நன்றாக நடித்துள்ளார். எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டிய ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் லத்திகா, ஹரிதா, பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் 'மதராஸி' பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் N. ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க, பிரம்மாண்டமாக உருவாகும் “மதராஸி” படத்தின், டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாகக் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் மீது, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய டைட்டில் லுக் மற்றும் டீசர், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்கில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள, சிவகார்த்திகேயன் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள், ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த டீசர் தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும், மிகப் பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் அவதாரத்தில், இப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்துள்ளார் வித்யூத் ஜமால். மேலும் பிஜு மேனன், விக்ராந்த், சார்பட்டா புகழ் டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் சார்பில் N. ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை கெவின் குமார் மற்றும் மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கிறார்கள்.
கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லரான 'எமகாதகி' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு!
முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில் ஒரு இளம்பெண்ணின் மரணத்தைச் சுற்றிய காட்சிகளை திகில் கலந்து காட்டும் டீசர், இப்படம் வித்தியாசமான ஹாரர் ஜானரில் ரசிகர்கள் இருக்கை நுனியில் வைத்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
டீசர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளதாக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
“எமகாதகி” படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆஹா ஓடிடி யில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் 'மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்'
இன்று காதலர் தினத்தன்று ஆஹா தமிழ் அதன் புதிய வெப் சீரிஸ் "மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்" மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது.
மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக திரைக்கதை அமைந்துள்ளது.
பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் ஆரம்பமாகிறது . அதனை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசொட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள் .
'டிராகன்' படத்தில் நான் தான் அவருக்கு வில்லன், ஆனால் நல்ல வில்லன் - இயக்குநர் மிஷ்கின்
'ஓ மை கடவுளே' புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிராகன்' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் , கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.
வரும் 21ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 1.3 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், படத்தை மேலும் ரசிகர்களிடம் சென்றடையச் செய்யும் வகையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விக்னேஷ் சிவன் பேசுகையில், ''திரைப்பட விழாவிற்கு வருகை தந்தது போல் இல்லை. பிரதீப், அஸ்வத், அர்ச்சனா மேடம் என இங்கு என்னுடைய நண்பர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
பிரதீப்புடன் இணைந்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக அவரை சந்திக்கும் போது நான் என்னுடைய திரையுலக பயணத்தில் கடினமான சூழலில் இருந்தேன். இருந்தாலும் உடனடியாக என்னை அழைத்து நான் சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையுலகில் திறமையான நடிகர்கள் இருப்பார்கள். நட்சத்திர நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் சிலரை மட்டும் தான் நாம் தொடர்ச்சியாக பின்பற்றுவோம். அவர்களுடைய உடல் மொழி, நடிப்பு , திரை உலகம் சார்ந்த பணிகள்.என சில நடிகர்களை தொடர்ந்து கவனித்து வரும் போது தான் நாம் அவர்களுடைய ரசிகர்களாக மாறி விடுவோம். இதைப்போல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து விடுவார்கள். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக இருந்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அவருடைய ஸ்டைலில் நடிக்கும் போது அதை ரசிக்கும் கூட்டம் உண்டு. இதன் எண்ணிக்கை அடுத்தடுத்து அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் வெளியான பிறகு அதிகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து- ஈகோ இல்லாத எளிமையாய் பழகக்கூடிய இனிய நண்பர். அவருடன் இணைந்து பணியாற்றும் போது எளிதாக இருந்தது. இந்த படத்தின் பாடல்களை எழுதும் போதும் மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களை எழுதும் போது இதயப்பூர்வமாக எழுதுவேன். சில பாடல்களை உணர்வுப்பூர்வமாக சிந்தித்து எழுதுவேன். நான் முதன்முதலில் பாடல் எழுதும் போது, 'வரிகள் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுது' என என்னை சிலம்பரசன் தான் ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு ஒவ்வொரு பாடல் எழுதும் போதும் பாடல் வரிகள் மீது கவனம் செலுத்தி வருகிறேன். அந்த வகையில் இந்தப் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'டிராகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அனைவரும் 21ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ''இன்று நான் எந்த கெட்ட வார்த்தையையும் பேச மாட்டேன். ஒரு வருடம் வரை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தயாரிப்பாளர் அகோரம் சார், அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா என இருவரும்.. அவர்கள் தயாரிக்கும் படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மேலும் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
பிரதீப், புரூஸ் லீ போன்றவர். அவர் இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லை. ஒரு வேளை என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து திரையுலகில் நான் ஒரு யங் ஸ்டாராக பிரதீப்பை பார்க்கிறேன். அவர் ஒரு பிரைட்டஸ்ட் ஸ்டார். அவர் இதற்காக கடுமையாக உழைக்கிறார், உழைத்து வருகிறார்.
இந்தப் படத்தில் நான் தான் அவருக்கு வில்லன். ஆனால் நல்ல வில்லன். படப்பிடிப்பு தளத்தில் நானும், அவனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் போது அவனுடைய அர்ப்பணிப்பை கவனித்து பிரமித்தேன். இயக்குநருக்கான நடிகராக இருக்கிறார். நானும் ஒரு இயக்குநர் என்பதால் இதனை என்னால் உறுதியாக கூற முடிகிறது. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன். கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிக்கும் போது அவரிடம் ஒரு தனித்துவமான உணர்வு வெளிப்படுகிறது. இது அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவியும்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக உழைப்பவர். அவர் இயக்கிய இந்த படம் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் இந்தக் கால இளைஞர்களுக்கான ஒரு நீதியை அவர்கள் விரும்பும் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். இது ஒரு எளிமையான கதை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உந்துதலை வழங்கும் படமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்லூரியில் படிக்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தின் மூலமாக விவரித்திருக்கிறார். சொன்ன விதமும் உற்சாகத்துடன் இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரும் மிக திறமையான படைப்பாளி. இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், ''இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து குறித்து மிஷ்கின் சொன்னது உண்மைதான். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் கறாரான பேர்வழி. ஆனால் ஒருபோதும் சோர்வடையாமல் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களிடமும் காட்சிகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளிப்பார்.
நான் தற்போது ஏராளமான புதுமுக இயக்குநர்களுடன் தான் இணைந்து பணியாற்றுகிறேன். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் படப்பிடிப்பு தளத்தில் இவர் என்னைப் போல் அல்லாமல் அமைதியாக பணிபுரிந்தார். இவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் இனிமேல் நாமும் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் பேசுவதை விட ஒளிப்பதிவாளரை பேசவிட வேண்டும் என கற்றுக் கொண்டேன். இருந்தாலும் அஸ்வத் கடின உழைப்பாளி. அவர் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. சொல்வதில் புதிய அம்சங்கள் இருந்தது. அதில் ஒரு இயற்கையான உணர்வும் இருந்தது. இந்தத் திரைப்படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. இதற்காக இயக்குநர் அஸ்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.ஜி.எஸ் தயாரிப்பாளர்களை நீண்ட நாட்களாகவே எனக்கு தெரியும். அவரகளை நான் தூரத்தில் இருந்தே ரசிக்கிறேன். அவர்களின் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் தரமானதாகவும், வெற்றி பெறக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இணையும்.
நடிகர் பிரதீப் இயக்கத்தில் உருவான 'கோமாளி' படத்தில் நானும் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார். சாப்பிட கூட பல தருணங்களில் மறந்து விடுவார். இதுகுறித்து அப்படத்தின் நாயகனான ரவியுடனும் பேசி இருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் அதற்கு நேர் எதிராக இருக்கிறார். இந்த படத்தில் சரியாக சாப்பிடுகிறார். ஆனால் இடைவேளை இல்லாமல் பணியாற்றுகிறார்.
பிரதீப்பின் நடிப்பு தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் சொன்ன ஒரு விசயம் உண்மைதான். அவர் இயக்குநர்களின் நடிகர். படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் வருவது, இயக்குநரின் கண் பார்வை செல்லும் இடத்தில் நிற்பது, இயக்குநர் என்ன சொன்னாலும் சரி என ஒப்புக் கொள்வது, என பல நல்ல விஷயங்கள் பிரதீப்பிடம் இருக்கிறது.
பெருமைக்காக சொல்லவில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் இப்படித்தான் இருக்கிறார். ரஜினி சார் திரைக்கதை விவாதத்தின் போது தான் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறுவார். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிப்பார். அவர் செய்து கொண்டிருப்பதை தான் பிரதீப்பும் செய்கிறார். இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நடிகராக இருந்தாலும் படம் இயக்குவதை தவிர்த்து விட வேண்டாம். படத்தை இயக்குவதிலும் கவனம் செலுத்துங்கள் பிரதீப். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில், ''இது எனக்கு முதல் மேடை. சற்று பதற்றமாக இருக்கிறது. இந்த விழாவிற்காக நேரம் ஒதுக்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் நடிகை ஸ்ரீதேவியின் நடனத்தாலும், நடிப்பாலும் ஈர்க்கப்பட்டு நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு, இன்று இந்த மேடையில் நிற்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சகோதரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் சிறிய அளவில் தவறான புரிதல் இருந்தது. அவர் கடுமையான உழைப்பாளி. பொறுமை மிக்க இயக்குநர். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கான கேரக்டரை வடிவமைத்திருந்தார்.
பிரதீப் ஒரு இன்ட்ரோவர்ட் பர்சன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகும் போது தான் அவர் ஒரு கதாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமை மிக்க திறமைசாலி என தெரியவந்தது. நட்புணர்வு மிக்கவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. தற்போது அவர் என்னுடைய இனிய நண்பராக மாறிவிட்டார். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர்கள் ரவிக்குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாது. அவர்களின் இயக்கத்தில் நடிக்கவும் விரும்புகிறேன்.
தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இதற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 21ம் தேதி அன்று ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன்," என்றார்.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் டிராகன் திரைப்படத்தில் பணியாற்ற காரணமாக இருந்த என்னுடைய இனிய நண்பர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் நன்றி.
அஸ்வத் மாரிமுத்து இந்த கதையை என்னிடம் முதன்முதலாக சொல்லும் போதே நான் வியந்து விட்டேன். இன்று முழு திரைப்படத்தையும் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் 'டிராகன்' ஃபேவரிட் ஆன படம் என உறுதியாக சொல்வேன். படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு ரசிகர்களுக்கும் ஏற்படும் என நம்புகிறேன். இந்தப் படத்தின் இடம் பெற்ற பாடல்கள் வெளியான போது கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக பணியாற்றிய பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''இது எங்கள் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 26வது திரைப்படம். ரொம்ப ஸ்பெஷலான படம். ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதே தருணத்தில் அர்த்தமுள்ள படைப்புகளை வழங்க வேண்டும் என்ற கனவும் இருக்கும். வெற்றியும், கனவும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்றால் அது கடினம். ஆனால் அது போன்றதொரு கமர்ஷியல் அம்சங்களும், கனவுகளும் இணைந்த படம்தான் 'டிராகன்'.
இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஒரு திரைப்படம் தயாராவது எளிதல்ல, அதன் பின்னணியில் மிகப்பெரிய குழுவினரின் கடின உழைப்பு இருக்கும். இந்தத் தருணத்தில் அந்த குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என மூன்று இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இயக்குநர் மிஷ்கினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் நடிகை கயாடு லோஹரை வரவேற்கிறேன். எங்கள் நிறுவனம் எமி ஜாக்சன் போன்ற ஏராளமான நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீங்களும் உங்களுடைய கடின உழைப்பால் நிறைய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அனுபமா பரமேஸ்வரன் இந்த நிகழ்விற்கு வரவில்லை என்றாலும் படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.
படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தி
மடோனா செபாஸ்டியன் நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் 'ஹார்ட்டின்'
துடிப்புமிக்க இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஹார்ட்டின்'.
தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.
'மகான்', 'பேட்ட', 'ஜில் ஜங் ஜக்' புகழ் சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு 'ஹார்ட்டின்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
இந்த திரைப்படத்திற்கு 'சுழல்' இணையத் தொடர் மற்றும் 'கொலைகாரன்' புகழ் முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'நேரம்', 'பிரேமம்', 'கோல்டு' உள்ளிட்ட சூப்பர் ஹிட் மலையாள படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பை 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' புகழ் பரத் விக்ரமன் கையாள, கலை இயக்கத்தை ஜி துரைராஜ் ('கருடன்', 'அயோத்தி' புகழ்) மேற்கொண்டுள்ளார். 'விடுதலை 2' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்த உத்தரா மேனன் 'ஹார்ட்டின்' படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
திறமைமிக்க கலைஞர்களின் பங்களிப்போடு டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிப்பில் உருவாகி வரும் 'ஹார்ட்டின்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி'
காதலும் இசையும் இணைபிரியாதது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி' ('Buddy').
காதலின் உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் வலியை இதயத்தை தொடும் வகையில் இசை மற்றும் காட்சிப்படுத்தி இருக்கும் 'பட்டி' ஆல்பத்தை வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிக்க சத்தியசீலன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் வரிகளுக்கு பிரியா மாலி இசையமைத்து பாடியுள்ளார்.
'கனா' புகழ் தர்ஷன் மற்றும் 'தியா' புகழ் குஷி ரவி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'பட்டி' ஆல்பத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல ஏபி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
சுதந்திரமான பெண்ணாக வாழும் தீபா பாத்திரத்தை சுற்றி ஆல்பம் சுழல்கிறது. காதலனை பட்டி (Buddy - தோழன்) என்று அழைக்கும் அவளுக்கு பைக் ஓட்டுவது, துல்லிய ஒலிகளை கேட்பது என்றால் கொள்ளை பிரியம். காதலர்கள் இருவரும் ஏற்காட்டுக்கு பைக்கில் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இது அவர்களது வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பது தான் 'பட்டி'.
'பட்டி' ஆல்பத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆரல் ஆர் தங்கம் படத்தொகுப்பை கையாள, பிரவீன் ஜி நடனம் அமைத்துள்ளார்.
வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் பிரியா மாலி இசையில் விவேக் வரிகளில் தர்ஷன், குஷி ரவி நடிப்பில் உருவாகியுள்ள உணர்ச்சிப்பூர்வ இசை ஆல்பமான 'பட்டி' ஏபி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா