நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!
நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, '29' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் '29' எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
ரொமாண்டிக் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ், இயக்குநர் ரத்ன குமார், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், படத்தொகுப்பாளர் சதீஷ்குமார், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, நடன இயக்குநர் மாஸ்டர் ஷெரிஃப், இணை தயாரிப்பாளர் பிரதீப் குமார் பூபதி, நடிகர் விது, நடிகைகள் ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் ஃபாத்திமா மற்றும் ஆர். ஜே. அமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், '' நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் எனக்கு சிறப்பானது தான். அதிலும் இந்த '29 ' என் மனதிற்கு நெருக்கமான திரைப்படம். அத்துடன் என்னுடைய கனவு நனவான தருணம் இது. நான் தமிழில் முதல் படத்தில் நடிக்கும் போதே ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றினால் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும் என்பார்கள். அதனால் அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது. அவர்களது குடும்பத்தில் நானும் ஒருத்தியாக இணைந்து இருக்கிறேன். இந்த கதை மீது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சார் ஆகியோர் வைத்த நம்பிக்கைதான் எங்களுக்கெல்லாம் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.
இயக்குநர் என்னை சந்தித்து கதையை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை எப்படி நாங்கள் உணர்ந்து நடித்திருக்கிறோமோ.. அது பார்வையாளர்களாகிய நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறோம்.
இந்தப் படத்திற்கான ப்ரோமோ வீடியோவில்.. நீங்கள் யார்? என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்களாக ஆழமாக கேட்டு கொள்ளும் வகையில் இருக்கிறது. இது ரசிகர்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கிறோம். படத்தைப் பற்றி வரும் நிகழ்வில் அதிகமாக பகிர்ந்து கொள்கிறேன். நன்றி''' என்றார்.
நடிகர் விது பேசுகையில், '' இந்தப் படம் எனக்குள் நான் யார்? என்று கண்டுபிடிப்பதற்கான தூண்டுதலாக இருந்தது. இந்தப் படத்தில் சத்யா எனும் கதாபாத்திரமாக என்னை பார்த்து, தேர்வு செய்து, நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ரத்ன குமாருக்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் என்னை கைப்பிடித்து திரை உலகத்திற்கு அழைத்து வந்தார். இன்று இந்த மேடையில் நிற்பதற்கும் அவரே காரணம். அதனால் அவருக்கும் நன்றி.
இந்தப் படத்திற்காக உருவாக்கப்பட்ட இரண்டு பாடல்களையும் கேட்டு இருக்கிறேன். இரண்டும் அற்புதமாக இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி. அவருடைய குரலை கேட்கும் போதெல்லாம் இசைஞானியின் குரலை கேட்பது போல் இருக்கும். இதனை அவரிடமே தெரிவித்திருக்கிறேன். அவருடைய குரலில் இருக்கும் ஒரு எமோஷன் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவு சம்பந்தமான நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.
29 என்றவுடன் அந்த வயதில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான எண்ணங்கள் ஏற்படும். அவை அனைத்தும் இந்த படத்தில் பிரதிபலிக்கும். அதனால் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்'' என்றார்
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' தயாரிப்பாளர் கார்த்திகேயனை 'டூரிஸ்ட் ஃபேமிலி ' படத்தின் வெற்றி விழா நிகழ்வின் போது சந்தித்தேன். அவர் என்னை தொடர்பு கொண்டு, இந்த படத்தின் கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் பணியாற்றுங்கள் என கேட்டுக்கொண்டார். இயக்குநர் ரத்ன குமாரை 'லவ்வர்' படத்தின் ப்ரீவ்யூ காட்சியை காண அழைப்பு விடுத்தேன். மணிகண்டனை வாழ்த்திட வாருங்கள் எனவும் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் ரத்ன குமாரை எனக்கு பிடிக்கும். அவருடைய சமூக வலைதள பதிவுகளில் அவருடைய ஆளுமையும், தெரிந்தது. எதையும் எதிர்கொள்ள கூடிய தைரியமும் அவரிடம் இருந்தது. அதுவும் எனக்கு பிடித்தது.
கலைஞர்களுக்கு தைரியம் மிகவும் முக்கியம். கலைஞர்களைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் போது தைரியம் வேண்டும்.
இந்தப் படத்தில் அவர் என்ன கதையைச் சொன்னாரோ.. அதுதான் இசை வடிவமாக உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்திற்காக இரண்டு பாடல்களை உருவாக்கி விட்டோம். ஏனைய பாடல்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆல்பமாக இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கும்'' என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ் பேசுகையில், '' எனக்கு இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விதுவை மூன்று வயதிலிருந்து எனக்குத் தெரியும். எனக்கு இருக்கும் ஒரே சகோதரர் அவர்தான். அவர் இந்த மேடையில் ஹீரோவாக அமர்ந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் ஜீ ஸ்குவாட் நிறுவனமும் இணைந்து தயாரித்த படத்தின் மூலம் அறிமுகமாகும் விது நல்ல நடிகனாக உயர்வார் என நம்பிக்கை வந்துவிட்டது.
ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் என்ற எங்களது தயாரிப்பு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் தொடங்கும் போது முதல் படமாக 'மேயாத மான்' எனும் படத்தை தயாரித்தோம். அதனை இயக்கியவர் ரத்ன குமார். இன்று வரை நாங்கள் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் படங்களில் மேயாத மான் படமும் ஒன்று.
அதன் பிறகு நாங்கள் 17 படங்களை தயாரித்திருக்கிறோம். ஆனால் அவருடன் நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அவர் படங்களை இயக்கிய பிறகு கதாசிரியராகவே மாறிவிட்டார்.
இந்தப் படத்தின் கதையை சில ஆண்டுகளுக்கு முன் அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். கேட்கும் போதே மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் தான் வைத்தேன். இந்த கதையை எங்களுடைய நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்து விட்டது . இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு தான் மீதம் உள்ளது. அதையும் விரைவில் நிறைவு செய்து விடுவோம்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனிடம் அறிமுகமாகி பழகத் தொடங்கினேன். அவர் பாரம்பரிய இசை குடும்பத்தை சார்ந்தவர் என்று தெரிந்தவுடன் மேலும் நெருக்கமானேன். இசைக்கலைஞர் என்பதை விட அவர் ஒரு நல்ல மனிதர்.
இந்தப் படத்தை நாங்கள் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறோம். லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவருடைய கல்லூரி கால நண்பரும், அந்த நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் முதன்முதலாக ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட முயற்சி செய்தபோது அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'களம்' எனும் குறும் படமும், ரத்னகுமார் இயக்கிய 'மது' எனும் குறும் படமும் இடம்பெற்றது. அந்த காலகட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ் - லோகேஷ் கனகராஜ்- நலன் குமாரசாமி- அல்போன்ஸ் புத்திரன்- விஜய் சேதுபதி- பாபி சிம்ஹா - சந்தோஷ் நாராயணன்- ஆகியோர் ஒரு குழுவாகவும், நண்பர்களாகவும் தான் இருந்தோம். இன்று வரை ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஆதரித்து வருகிறார்கள்.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தை வழங்குகிறது என்றால் அதற்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. அதனை நாங்கள் தொடர்ந்து தக்க வைப்பதற்காக தரமான படைப்புகளை வழங்கி வருகிறோம். இதற்காக இயக்குநர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், '' 29 வயதிலிருந்து 30 ஆவது வயதை தொட்டால் ஜாதகம் ரிஜெக்ட் ஆகும் . அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகும். இப்போதெல்லாம் இளைஞர்கள் படம் பண்ண வந்து விட்டார்கள் என்று சொல்லி ஸ்கிரிப்டுகள் ரிஜெக்ட் ஆகும்.
நான் 'மது' எனும் பெயரில் குறும்பட ஒன்றை இயக்கினேன். அந்த கதையை தான் ' மேயாதமான்' எனும் திரைப்படமாக ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. என்னை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியது.
சமூக வலைதளங்களில் என்னுடைய புகைப்படத்தை பதிவிட்ட போது சிலர் என்னை மதன் கௌரி என கருதினர். திரையுலகில் எழுத்தாளராக கதாசிரியராக பணியாற்றிய போது சந்திக்கும் நபர்கள் என்னிடம் விஜய் சேதுபதி பற்றியும், கார்த்திக் சுப்புராஜ் பற்றியும், லோகேஷ் கனகராஜ் பற்றியும் தான் விசாரிப்பார்கள். அப்போது எனக்குள் நான் யார்? என்ற கேள்வி எழுந்தது.
என்னுடைய 29 வது வயதில் லோகேஷ் எனும் நண்பன் கிடைத்தான். இந்தப் படத்திற்கு ஏன் 29 என பெயரிட்டேன் என்றால் அந்த வயது தான் முக்கியமானது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு அந்த வயதில்தான் பகிர்ந்து கொள்ள இயலாத எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் தான் 'உங்களை நீங்கள் உள்ளுக்குள் தேடுங்கள் அல்லது புறத்தில் தேடுங்கள்' என்று சொல்லி, சபரிமலைக்கு மாலை போட்டு யாத்திரை சென்று வாருங்கள் என அறிவுறுத்தினார்.
என்னைப் பொறுத்தவரை உடல் தான் கடவுள். மனசு தான் தெய்வம் என்ற கொள்கை உடையவன். சபரிமலை யாத்திரை செல்லும்போது வாழ்க்கை ஏற்றம் இறக்கங்களைக் கொண்டது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
'மேயாத மான்' படத்தில் பணியாற்றியவர்களுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறேன். மேயாத மான் ரொமான்டிக் காமெடி படம் என்றால் .. இந்த' 29' படமும் வித்தியாசமான கேரக்டருடன் கூடிய ரொமாண்டிக் படம் தான்.
என் நண்பன் லோகேஷ் கனகராஜ் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலத்தில் முகாமிட்டிருக்கிறார். அதனால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருடைய நண்பரான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ரானியிடம் இப்படத்தின் கதையை சொன்னேன். முழுவதுமாக கேட்டுவிட்டு எனக்கு சில இடங்களில் நெருடல் இருக்கிறது. அதில் நடிப்பதற்கு மனம் ஒப்பவில்லை என்றார். அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்துவதற்காக விளக்கம் அளித்தேன். ஆனாலும் அவருடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அதுதான் இந்த கதையை ஒரு பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்.. நாம் ஏன் வற்புறுத்த வேண்டும் என நினைத்தேன். அவர்கள் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினேன். அதன் பிறகு படத்தின் தோற்றமே மாறிவிட்டது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் நாயகனான விது ஒரு வளர்ந்த குழந்தை. அவர் 'ஜிகர்தண்டா 2' படத்தில் நடித்திருக்கிறார். ' ரெட்ரோ' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படத்திலும் அவருடைய முகம் தெளிவாக இருக்காது. இந்த படத்தில் தான் அவருடைய முழு உருவத்தையும் ஸ்டைலாக காட்சிப்படுத்தி இருக்கிறோம்.
நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பையனின் கதை தான் இது. ஆனால் மற்றவர்கள் பார்க்க இயலாத கோணத்தில் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் தனுஷ் நடித்த விஐபி படம் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதி இருக்கிறேன் ''என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், '' ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் 'மேயாத மான்' முதல் படம். அதைத்தொடர்ந்து இதுவரை 17 படங்களை தயாரித்திருக்கிறோம். இருந்தாலும் எங்களுடைய மேயாத மான் முதல் படம் என்பதாலும், அதனை தயாரிக்கும் போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் பொக்கிஷமானது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் எங்கள் நிறுவனத்திற்கு எப்போதும் சிறப்பானவர்தான்.
ரத்ன குமார் சிறந்த எழுத்தாளர்- கதாசிரியர்- இயக்குநர். அவர் பேசும் பல விசயங்களில் எனக்கு முரண்பாடு இருந்தாலும்.. அவருடன் சகோதர உறவு உண்டு.
இந்தப் படத்தின் கதையை மேயாத மான் படத்தை முடித்த பிறகு எங்களிடம் சொன்னார். இந்தக் கதையை நடிகர் தனுஷிடம் சொன்னோம். அவரும் கேட்டு மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் என்னால் நடிக்க முடியாது. நான் இப்போது ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருகிறேன் . வேறு யாராவது இளம் வயதினர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.
இந்தக் கதை தனுஷிடம் சொல்லப்பட்டதால் இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் நடிப்புத் திறன் கொண்ட நடிகரும், நடிகையும் இருந்தால்தான் பொருத்தமானதாக இருக்கும் என்றேன். இதற்காகவே சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ரத்னகுமார் விதுவை ஆடிஷன் செய்து அவரை தேர்ந்தெடுத்தார். டபுள் எக்ஸ் படத்திற்கு முன் விது தான் ஹீரோ என்றால் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் 'ஜிகர்தண்டா 2', ' ரெட்ரோ ' படத்தில் நடித்ததற்கு பிறகு தன்னை நடிகனாக வெளிப்படுத்துவதற்கு கடினமாக உழைத்து தகுதிப்படுத்திக்கொண்டான்.
அவனது ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பார்த்துதான் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு சரி என்று ஒப்புக்கொண்டேன்.
ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான உடல் மொழியை வெளிப்படுத்துவதற்காக முயற்சிக்க வேண்டும்.. என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருந்தது. இதனை நான் 'ரெட்ரோ ' படத்தில் நடிக்கும் போது அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை தெரிந்து கொண்டேன்.
இந்தப் படத்தில் விதுவும், ப்ரீத்தி அஸ்ரானியும் நன்றாக நடித்திர